ஒரு நாவலுக்குள் ஒரு தத்துவார்த்த / உளவியல் / சமூகவியல் சரடு ஓடி அது முடிவில் நிறைவை எட்டி ஒரு புரிதலை அளிக்கலாம், ஆனால் அது படைப்பாவது அப்போதல்ல, அதற்கு நிகரான ஒரு எதிர்-சரடும் அதே தீவிரத்துடன் நாவலில் ஓடி முடிவில் முடிச்சிடும் போதே. “அன்னா கரெனினாவில்” இது உண்டு - அன்னாவின் திருமணத்துக்கு வெளியிலான பிறழ் உறவு தவறு எனும் ஒழுக்கவாதம் ஒரு சரடு எனில், அதை நியாயப்படுத்த பல சம்பவங்களை தல்ஸ்யாய் அடுக்குகிறார் எனில், அதற்கு நேர்மாறாக பிறழ்வுகளில், பைத்தியகாரத்தனங்களிலே உண்மை உள்ளது, அதுவே வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது எனும் எதிர்-சரடும் நாவலில் வலுவாக உண்டு. இதனால் தான் அன்னா சாகக்கூடாது, அவள் காதல் ஜெயிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம், ஆனால் அது எப்படி சாத்தியமாகும் எனத் தெரியாமல் தவிக்கிறோம். அதாவது இரு தல்ஸ்தாய் குரல்கள் நாவலில் உண்டு - ஒன்று தல்ஸ்தாய் உடையது, மற்றொன்று தல்ஸ்தாயை முழுக்க மறுக்கும் மற்றொரு தல்ஸ்தோயுடையது. (இருவரில் நாம் பின்னவரையே அதிகம் விரும்புகிறோம்.) தல்ஸ்தாயின் நாவல்கள் ஒரு தெளிவில் அல்ல, தீர்க்கப்படாத கேள்விகளுடனே முடிகின்றன. அதனாலே அவை திரும்பத் திரும்ப விவாதிக்கப்படுகின்றன.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
