இரவு முழுக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஸ்டார்ட் பண்ணப்படுகிறது ஏதோ ஒரு வீட்டில் குக்கர் விசில் பள்ளிக்குத் தயாராகிக் கிளம்பும் குழந்தைகளின் முட்டி வரை சரசரக்கும் பாவாடைகள் எங்கோ ஒரு தட்டு விழுந்து வட்டமடிக்கும் சப்தம் ஒரு காகம் கரைகிறது ஒரு தாத்தா சத்தமாக போனில் பேசிக் கொண்டிருக்கிறார் அவரைக் கடந்து செல்வோர் முணுமுணுக்கும் சப்தம் காலை அவசரத்தில் ஒரு இளம் ஜோடி ஏதோ விளையாட்டாகப் பேசி சிரித்துக் கொண்டு காரைத் திறக்கும் சிறிய ஒலி காலை அவசரத்தின் எரிச்சலில் ஒருவர் தன் மனைவியிடம் காலையுணவு வேண்டாம் என இரையும் போது சாவகாசமாக ஒரு நாளிதழ் வாசற்படியில் விழும் ஒலி ஒரு பெண் தாமதமாக பூஜையை ஆரம்பிக்கும் மணி ஒலி ஒரு பெண் சத்தமாக டிவியை வைத்துக் கொண்டு அதை விட சத்தமாக சிரிக்கிறார் இஸ்திரிக்கடைக்காரர் கிரக் கிரக் என ஓசையெழுப்பியபடி ஒவ்வொரு வீடாக நடந்து கொண்டிருக்கிறார் மழை சடசடவென வந்து குளிரை அதிகரிக்கிறது எதையும் கவனிக்காத ஒரு பூனை மஞ்சள் கண்களால் வெறிக்கிறது எதையும் கவனிக்கும் மற்றொரு பூனை வாலை அசைக்கிறது தெருமுனையில் இரண்டு அழுக்கான நாய்கள் ரோந்து போகின்றன குப்பையைக் கிளற வரும் ஒரு அழுக்கான ம...