Skip to main content

ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை




லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம்.


 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே என்று இறுக்கமாக பந்தை வீசி எல்.பி.டபிள்யூ முறையில் தூக்க முடியும். இந்தியா போன்ற வறட்சியான ஆடுதளத்தில் பந்தை ஒரு பக்கம் சொரசொரப்பாக தக்க வைத்து சற்று கூடுதல் வேகத்தில், சரியான நீளத்தில் வீசி ரிவர்ஸ் பண்ணவும் முடியும்.

 இப்போது நடந்து வரும் ஆட்டத்தொடரில் அவர் scrambled seam பந்து வீச்சிலும் கலக்குகிறார். பந்து உள்ளே வருவது போல மட்டையாளனுக்கு போக்கு காட்டி அதை அழகாக வெளியே எடுத்து சென்று விக்கெட் வீழுத்துகிறார். இது போக இரண்டாவது டெஸ்டில் ஆடுதளம் மிக தட்டையாக, பவுன்ஸ் இல்லாமல் இருக்க (அவ்வப்போது தட்படவெட்பம் காரணமாக ஸ்விங் மட்டுமே ஆக) ஆண்டர்ஸன் வெரைட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் - ஒரே ஓவரில் ஐந்து விதமான பந்துகளைக் கூட வீசுகிறாரே இவர் என மஞ்சிரேக்கர் வர்ணனையில் மெச்சினார். அது உண்மை தான் - குறிப்பாக பந்து ஸ்விங் ஆகாத போது ஆண்டர்ஸன் பந்தின் வெளிப்படும் இடமான point of releaseஐ மாற்றுவது அபாரமாக உள்ளது. சில பந்துகளை கிரீஸில் வைடாக ஓடி வந்து அகலமான கோணத்தில் இருந்து வெளியிடுகிறார். அப்படி வரும் பந்துகள் ஒன்று உள்ளே வரும். அல்லது நான்காவது ஸ்டம்பில் விழுந்து நேராக செல்லும். முன்பு தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர் மெக்கயா நிட்டினி இதையே தன் ஒரே வித்தையாக வைத்திருந்தார். நேராக பவுன்ஸ் ஆகிப் போகும் பந்தை வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைப்பார். ஆண்டர்ஸனும் அப்படித்தான் புஜாரா, ரஹானே இருவரையும் வீழ்த்தினார். அப்படித்தான் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்தார்.


ஆண்டர்ஸனின் பந்து உள்ளே வருவதாக ஏற்படும் தோற்றம் காரணமாக மட்டையாளர்கள் இயல்பாகவே ஸ்டம்புக்கு குறுக்கே வந்து விடுகிறார்கள். நான்காவது ஸ்டம்பே தமது மூன்றாவது ஸ்டம்ப் என ஒரு தோற்றப்பிழை ஏற்பட வைடான பந்துகளை விரட்டி சென்று தடுத்தாட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார்கள். இத்தகைய மட்டையாளர்கள் ஏற்கனவே மோசமான ஆட்டநிலையில் இருப்பவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தம்முடைய கால்பாடத்தின் போதாமையை ஈடுகட்ட அவர்கள் மூன்றாவது ஸ்டம்பில் நின்று கொள்ள விழைகிறார்கள். அதுவே அவர்களுக்கு எமனாகவும் முடிகிறது. (இந்த உத்தியை பிற இங்கிலாந்து வேகவீச்சாளர்களும் முயன்றார்கள், ஆனால் யாராலும் ஆண்டர்ஸன் அளவுக்கு கச்சிதமாக முன்னெடுக்க இயலவில்லை.)


 இந்த back and across கால்பாடத்தின் ஒரு பிரச்சனை off பகுதியில் சரளமாக ஆடவும், pull ஷாட்டுகள் ஆடவும் அது தடையாகிறது, நீங்கள் முழுக்க கால்பக்கம் பந்தை தட்டி விட்டு ஓடும் படி உங்களை கட்டுப்படுத்துகிறது என்பது. கோலி, புஜாரா, ரஹானே என மத்திய வரிசை வீரர்கள் ஏனோ இந்த கையைக் கட்டி வாயைக்கட்டி ரன் அடிக்கும் பாணியை பயன்படுத்தி அதனால் நஷ்டமடைகிறார்கள். வி.வி.எஸ் லஷ்மண் குறிப்பாக இதை கோலி கைவிட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.


லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கோலி நன்றாகவே ஆடினாலும் அவருக்கு ஒரு சரளத்தன்மை இருக்கவில்லை. குறிப்பாக உள்ளே வரும், கால்பக்கமாய் சரியும் பந்தை கோலி முன்பு பின்னங்காலுக்குப் போய் அபாரமாக டைம் பண்ணி பவுண்டரிகளாக விளாசுவார். ஆனால் இந்த இன்னிங்ஸில் அவர் அத்தகைய பந்துகளை தொடவே இல்லை. கவர் டிரைவ் சுலபத்தில் அடிக்க முடியக் கூடிய off ஸ்டம்பில் விழும் முழுநீளப் பந்துகளைக் கூடத் தொடவில்லை. முழுநீளத்தில் நேராக உள்ளே வரும் பந்துகளை மிட் விக்கெட், மிட் ஆனுக்கு அடிப்பதைத் தவிர அவரால் வேறேதும் பண்ண முடியவில்லை. அதாவது வீட்டின் கதவை ஆணிகள் அடித்து மூடிவிட்டு உடம்பை கஷ்டப்பட்டு ஜன்னல் வழி நுழைத்து தினமும் வெளியே போய் வருவதைப் போன்றது இது. யார் இந்த கால்பாடத்தை நம் இந்திய மட்டையாளர்களுக்கு பரிந்துரைப்பது எனத் தெரியவில்லை. முன்பு மே.இ தீவுகளில் நடந்த டெஸ்ட் தொடரில் துவக்க மட்டையாளராக களமிறங்கிய ராகுல் இதே போல குறுக்குமறுக்காக கால்பாடம் கொண்டாடி ரொம்பவே சொதப்பினார். அதோடு பாயிண்ட் பகுதியில் இருந்து மட்டையை சுழற்றி உள்ளே கொண்டு வந்து தடுத்தாடும் ஒரு புதிய ஸ்டைலை முயன்று பார்த்து ரொம்ப கொடூரமாக அவுட்டானார். அதன் பிறகு அணியில் தன் இடத்தை இழந்த நிலையில் ராகுல் இந்த குழப்பங்களை விட்டொழித்து இப்போது முன்னுக்கும் பின்னுக்குமாக பந்தின் நீளத்துக்கு ஏற்ப நகர்கிற கால்பாடத்தை பின்பற்றுகிறார். அதனாலே அவர் இப்போது நடந்து வரும் ஆட்டத்தொடரில் அவ்வளவு சரளமாக ஆடுகிறார். இன்னொரு பக்கம் ரோஹித் தன் கால்பாடத்தைப் பற்றி ரொம்ப கவலைப்படாமல் வெளியே விழும் பந்துகளை விடுவதில் மட்டும் கவனம் செலுத்து மிச்ச பந்துகளை அடித்தாடுகிற எளிமையான பாணியை பின்பற்றுகிறார். மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில் கால்பாடமானது இப்படி ரன் அடிப்பதற்குத் தோதாக இருக்க வேண்டுமே ஒழிய, அவுட் ஆகக் கூடாது ஆண்டவரே எனும் கணக்கில் இருக்கக் கூடாது. அதுவும் இயல்பிலேயே அப்படியான கால்பாடம் கொண்டவர்கள் என்றால் பிரச்சனை இல்லை, கோலி, ரஹானேவைப் போன்ற இயல்பான அடித்தாடும் வீரர்கள் மாதமொரு முறை தம் ஸ்டைலை மாற்றுவது அபத்தம்.


என்னுடைய ஊகம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெறுகிற ரஹானே மனதளவில் பலவீனமாக மாறிப் போயுள்ளார். அவருக்கு தன் இடம் குறித்த கவலை அதிகமாகி உள்ளது. ஆக, அவர் ஒவ்வொரு இன்னிங்ஸில் சொதப்பும் போதும் எப்படியாவது ரன் அடிக்க வேண்டும் எனும் பதற்றம் மிக்கவராகிறார். ரஹானேவுக்கு என்றுமே உறுதியான முன்னங்கால் பாடம் இல்லை இருந்ததில்லை. ஆகையால் ஷார்ப்பாக உள்ளே வந்து முழுநீளப்பந்துக்கு அவர் எல்.பி.டபிள்யூ ஆக வாய்ப்பதிகம். அதைத் தடுக்க அவர் வலது பின்னங்காலை நகர்த்தி பந்து உள்ளே வரவிட்டு தடுத்தாடவோ நேராக டிரைவ் பண்ணி ரன் அடிக்கவோ வேண்டும். ஆனால் ரஹானேவுக்கோ முதல் முப்பது பந்துகளுக்கு கால்கள் அசைவதே இல்லை. இதன் விளைவாக off ஸ்டம்புக்கு வெளியே போய் நின்று overcompensate பண்ணுகிறார் - சமையலில் உப்பு கம்மி என்று சொல்லும் போது கூடுதலாக அள்ளிப் போட்டு கரிப்பது போல. அடுத்து, நேராக செல்லும் பந்தை விட முடியாது அதை ஸ்லிப்புக்கு தட்டவும் ஆரம்பிக்கிறார். எப்படியாவது பந்தை ரன்னுக்கு அடிக்க வேண்டும் எனும் ஆவேசமே இதற்குக் காரணம் என வி.வி.எஸ் லஷ்மண் கூறுகிறார்.


கோலி மோசமான ஆட்டநிலையில் இல்லை. ஆனால் அவருக்கு வேறொரு சிக்கல் உள்ளது - கால்சுழல் பந்துகளை அவர் முன்னங்காலை நகர்த்தி விரட்டுவதில்லை. குறிப்பாக டி-20 போட்டிகளின் தாக்கம் காரணமாக, கால்பாடத்தை சிக்கனமாக்கி off பக்கத்திலும் மிட்விக்கெட்டுக்கு மேலாக பெரிய ஷாட்டுகளை அடிக்க முயன்றதன் விளைவாக, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சுழலுக்கு எதிராக அவருடைய கால்பாடம் அநேகமாக இல்லாமல் ஆகி விட்டது. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவின் கூக்ளிக்கு அவர் மிகவும் திணறியதை, சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் மோயின் அலியின் offbreak பந்தை கால்பாடமே இல்லாமல் கவர் டிரை பண்ண முயன்று பவுல்ட் ஆனதையும் பார்த்தோம். அதன் பிறகு அவர் இப்போது மோயின் அலியின் மோசமான பந்துகளை அடிக்கக் கூட திணறுகிறார். பொதுவாக சுழலர்களுக்கு எதிராக மோசமான கால்பாடம் கொண்ட மட்டையாளர்கள் ஸ்விங் பந்து வீச்சையும் கையாள சிரமப்படுவார்கள். அதுவே இப்போது கோலிக்கு இங்கிலாந்தில் நிகழ்கிறது. மற்றபடி பந்தை அடிப்பதில் அவருக்கு இப்போது பிரச்சனை இல்லை. மாறாக தன் குறைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதை சரி செய்வதற்காக overcompensate பண்ணுகிற பிரச்சனை கோலிக்கு உண்டு. அதுவே இங்கிலாந்தில் அவர் செய்து வரும் சர்க்கஸ் வித்தைகளின் காரணம். இதை விட்டு விட்டு முன்னர் போல காலை முன்னே வைக்க வேண்டிய முழுநீளப்பந்துக்கு மட்டும் முன்னே வைத்து துணிச்சலாக விரட்டத் தொடங்கினால் கோலியால் சுலபமாக சதம் அடிக்க முடியும். அவருடைய பிரச்சனை பலவிதமான ஆட்டவடிவங்களுக்கு, சூழல்களுக்கு தன்னை தகவமைக்க முயல்வதனால் நூல் கண்டுக்குள் விழுந்த பூச்சி வெளியேறும் பொருட்டு அதை மேலும் சிக்கலாக்கி, கைகால்கள் மாட்டிக்கொண்டது போல தன் ஆட்டத்தை தானே குழப்பிக் கொண்டது தான்.


புஜாராவைப் பொறுத்தமட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முட்டிக் காயம் அவருடைய முன்னங்கால் பாடத்தை அனேகமாக இல்லையென்றாக்கி விட்டது. சுழலர்களை இறங்கி வந்து அடிக்கும் போது மட்டுமே புஜாரா கால்களை பயன்படுத்துகிறார். இல்லாத போது குழாயடி சண்டை நடக்கையில் மனைவியின் தோளுக்குப் பின்னால் மறைந்து நின்று எட்டிப் பார்க்கும் மாமாவைப் போன்றே ஆடுகிறார். ஆஸ்திரேலியாவில் அவர் முதல் ரன்னை அடிக்கவே ஐம்பது பந்துகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். சில நேரம் 100 பந்துகளுக்கு மேல் ஆடி 10 ரன்கள் எடுப்பார். ஏனென்றால் முன்னங்காலில் போய் ஒரு முழுநீளப்பந்தை விரட்டும் போது வேகவீச்சாளர் அடுத்தடுத்த பந்துகளை short of the lengthஇல் வீசுவார்கள். அப்போது அவற்றை பின்னங்காலுக்குப் போய் வெட்டியோ punch செய்தோ ரன் அடிக்க முடியும். ஆனால் புஜாரா இந்த ஷாட்களை முழுக்க தவிர்த்து விடுகிறார். ஏனென்றால் கால்பாடம் இல்லாததால் தான் உடம்புக்கு வெளியே கைகளை போகும்படி எம்பி எம்பி அடிக்க நேரிடும், பின்னால் எட்ஜ் கொடுப்போம் என பயப்படுகிறார். அதே போலத் தான் உள்ளே வரும் பந்து அவருக்கு எமனாகிறது. ஆஸ்திரேலியாவில் கூடுதலாக பேட் கம்மின்ஸ் வீசிய ஆறாவது ஸ்டம்பில் இருந்து நான்காவதுக்கு வரும் இன் கட்டர்களுக்கு புஜாரா தொடர்ந்து பின்னால் எட்ஜ் கொடுத்து அவுட்டாகி வந்தார். இதை அவர் இறுதிப்போட்டிகளில் தன் மன உறுதியால் கடந்து சென்றாலும், அடிப்படையான தொழில்நுட்ப சிக்கல் போகவே இல்லை. இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா தான் சந்திக்கும் முதல் இருபது வேகப் பந்துகளை விரட்டுவதற்கு முயல்கிறார். இது ஒரு நல்ல முன்னேற்றம். விளைவாக அவருடைய கால்பாடமும் மேம்படுகிறது. ஆனால் ஆண்டர்ஸனைப் பார்த்ததும் பதறி மீண்டும் “மனைவியின் தோளுக்குப் பின்னால் போய்” தடுத்தடப் பார்க்கிறார். சுலபத்தில் அவுட்டும் ஆகிறார்.


இவர்கள் மத்தியில், ராகுல் தான் சிறப்பான கால்பாடத்தை கொண்டிருக்கிறார். அதுவும் வைடான point of release இல் இருந்து உள்ளே வரும் பந்தை அவர் தடுத்தாடும் போதோ விடும் போதோ மற்றொரு சிறப்பான காரியத்தை பண்ணுகிறார் - மட்டையை உடம்புக்கு முன்னால் வைத்துக் கொள்கிறார். ஆகையால் பந்து நேராக சென்றாலும் எட்ஜ் கொடுக்க வாய்ப்பு மிக மிக சொற்பமே. அதனாலே ராகுலை தடுமாற வைக்க ஆண்டர்ஸனாலே முடியவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...