இந்த ஓண சத்யா எனப்படும் “சாப்பாட்டுக் களேபரம்” நான் ஊரில் இருந்த போது எளிமையாக வேறு விதமாக இருந்தது. அம்மா ஒரு பாயசம் வைப்பார். கூடவே பருப்பு, நெய், பப்படம், ஒரு அவியல். இப்படி எங்களுக்கு ஏற்றாற் போல அது இருக்கும். ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சாப்பிடுவார்கள். இந்த டிவியில் காட்டுகிறாரக்ளே அப்படி ஒரு பெரிய இலையில் இருபது, முப்பது பதார்த்தங்களை பரப்பி அதன் முன் ஒரு பெரிய அரவைக்கல்லைப் போல நாம் உட்கார்ந்து சாப்பிடுவது அதை ஓரளவு கல்யாண சாப்பாட்டின் போது மட்டுமே பார்க்கலாம். அதாவது பத்து பொரியல், கூட்டு, சாம்பார், புளிசேரி, இஞ்சிக்கறி, வாழைக்காயை பொடிசாய் நறுக்கி பொரித்து வெல்லப்பாகில் புரட்டி எடுத்து ரெண்டு துண்டுகள் வைப்பார்களே அந்த ஐட்டம், கடைசியாக போளி, பால் பாயசம். இது தான் எதார்த்தம். ஓணத்துக்கு புதிய துணி கூட நான் எடுத்ததாக நினைவில்லை. தீபாவளிக்கு எடுத்துக் கொள்வேன். நான் சென்னைக்கு வந்த பின் தான் ஓண சத்யாவை பெரிய அளவில் ஓட்டல்காரர்கள் புரொமோட் பண்ணுவதை கவனித்தேன். நானும் குமரொகோம் ஓட்டலுக்கு சென்று வருடத்திற்கு ஒருமுறை ஒரு கட்டு கட்டுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இப்போது பெங்களூரிலும் அதை புரொமோட் பண்ணுகிறார்கள். இன்று கூட ஸொமொட்டோவில் ஆர்டர் பண்ணி வாங்கி வைத்திருக்கிறேன். இனி மேல் தான் சாப்பிட்டுப் பார்க்கணும்.
இதைப் பார்க்கும் போது எழும் சந்தேகம்: இந்த “ஓண சத்யா” என்பதை மக்கள் கேரளாவில் நிஜமாகவே வீட்டில் 20, 30 பதார்த்தங்களுடன் பண்ணி சாப்பிடுகிறார்களா அல்லது இதை ஓட்டல்காரர்களும் மீடியாவும் சேர்ந்து உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்களா? அனுபவமுள்ளவர்கள் சொல்லவும்!
