இரவு முழுக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பைக் ஸ்டார்ட் பண்ணப்படுகிறது
ஏதோ ஒரு வீட்டில் குக்கர் விசில்
பள்ளிக்குத் தயாராகிக் கிளம்பும் குழந்தைகளின்
முட்டி வரை சரசரக்கும் பாவாடைகள்
எங்கோ ஒரு தட்டு விழுந்து வட்டமடிக்கும் சப்தம்
ஒரு காகம் கரைகிறது
ஒரு தாத்தா சத்தமாக போனில் பேசிக் கொண்டிருக்கிறார்
அவரைக் கடந்து செல்வோர் முணுமுணுக்கும் சப்தம்
காலை அவசரத்தில் ஒரு இளம் ஜோடி
ஏதோ விளையாட்டாகப் பேசி சிரித்துக் கொண்டு
காரைத் திறக்கும் சிறிய ஒலி
காலை அவசரத்தின் எரிச்சலில்
ஒருவர் தன் மனைவியிடம்
காலையுணவு வேண்டாம் என இரையும் போது
சாவகாசமாக ஒரு நாளிதழ் வாசற்படியில் விழும் ஒலி
ஒரு பெண் தாமதமாக
பூஜையை ஆரம்பிக்கும் மணி ஒலி
ஒரு பெண் சத்தமாக டிவியை
வைத்துக் கொண்டு
அதை விட சத்தமாக சிரிக்கிறார்
இஸ்திரிக்கடைக்காரர் கிரக் கிரக்
என ஓசையெழுப்பியபடி ஒவ்வொரு வீடாக
நடந்து கொண்டிருக்கிறார்
மழை சடசடவென வந்து குளிரை அதிகரிக்கிறது
எதையும் கவனிக்காத ஒரு பூனை
மஞ்சள் கண்களால் வெறிக்கிறது
எதையும் கவனிக்கும் மற்றொரு பூனை
வாலை அசைக்கிறது
தெருமுனையில் இரண்டு அழுக்கான நாய்கள்
ரோந்து போகின்றன
குப்பையைக் கிளற வரும்
ஒரு அழுக்கான மனிதரை நோக்கி
சீறியபடி அவை பின்வாங்குகின்றன
தெருமுனையில் பெரிய வாகனங்கள்
கடந்து செல்லும் ஒலி
மின்சாரம் நிறுத்தப்படுகிறது
சில வினாடிகள்
‘என்னை அழைத்தாயா’ எனக் கேட்டபடி
நிசப்தம் கதவைத் கட்டிக்கொண்டு வருகிறது
பக்கத்து வீட்டில்
உதடுகள் முத்தத்தில் பிரிகின்ற ஒலி
கீழ்வீட்டில்
யாரோ தனியாக விசும்புகிற ஒலி
உளுத்துப் போயிருந்த ஒரு மரக்கிளை
உடைந்து நடுரோட்டில் விழும் ஒலி
ஒரு காகம் அதைச் சுற்று வந்து
கொத்திப் பார்க்கிறது
எங்கேயோ ஒரு வீட்டுக்குள்ளிருந்து
ஒரு நாயின் குரைப்பு அதை
விரட்டுகிறது
முதன்முதலாக நான் அதன் இருப்பை
உணர்கிறேன்.
ஒரு பூனை நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது
தாவி மெத்தென இறங்க
அதன் சென்சர் இயக்கப்பட்டு
அவல ஒலி, ஆபத்துதவிக்கான அழைப்பொலி
கேட்கிறது
யாரும் வராத நிலையிலும் கார்
தன் புகாரை நிறுத்தவில்லை
நாய் இன்னும் சத்தமாக
குரைக்கிறது
அலாரம் ஒலி அந்த அதகளத்தில்
மறைந்து போகிறது.
தெருநாய்கள் பதிலுக்குக்
குரைக்கின்றன
யாரோ கல்லை விட்டெறிகிறார்கள்
யாரோ புரியாத மொழியில் திட்டுகிறார்கள்
மின்சாரம் வருகிறது
அத்தனை சப்தங்களையும், உயிர்ப்பையும்
அழைத்துக் கொண்டு வருகிறது
இந்த சின்னச்சின்ன சலசலப்புகளை
எல்லாரும் மறந்து விட்டு
பரபரப்பில் லயிக்கிறார்கள்
நாயின் குரைப்பு
எப்போதோ நின்று போய் விட்டது
ஆனால் அது ஊளையிடுகிறது
அது ஊரில் எனக்காக காத்திருக்கும்
இதயங்களைப் போல
தனித்திருக்கிறது
அது ஊரில் ஒருநாள் காலையில்
ஒரு ஆட்டோவில் கிளம்பிப் போன நான்
ஏன் இன்னும்
மற்றொரு ஆட்டோவில்
திரும்ப வில்லை என யோசித்தபடி
விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் போல
தனித்திருக்கிறது
அது ஒவ்வொரு அறையாக
என் வாசனையை முகர்ந்தபடி
வாயிலில் வந்து முகவாயை நீட்டியபடி கிடக்கும்
ஒரு நாயைப் போல
தனித்திருக்கிறது.
நான் இருமுறை அதன்
வீட்டைக் கடந்து போகிறேன்
என்னை அது கவனிக்கிறது
என்பதை நான் உணர்ந்ததும்
அதுவும் என்னை உணர்ந்து கொள்கிறது
அது குரைக்கிறது
அச்சத்தில் கோபத்தில் எல்லாவற்றையும் மறந்த ஒரு ஆவேசத்தில்
அடுத்து அது
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தபடி
வானை நோக்கி ஊளையிடுகிறது
தன் ஊனுயிரைக் கலந்து
அது தன் மூதாதைகளிடம்
சொல்கிறது,
இத்தனை பேர் இருக்கும் இந்த ஊரில்
என்னை மட்டும் ஏன் தனித்து
விட்டுப் போகிறார்கள்?
இந்த குட்டைச்சுவர்களை எம்பிக் குதித்தால்
என் தனிமையை கடந்து விடலாம்
ஆனால் என்னால் ஏன் முடியவில்லை?
நான் சென்று
அந்த வீட்டின் உயரமான கேட்டை ஆட்டுகிறேன்
ஓடி வரும் அது
ஒரே தாவலில் குட்டைமதிலின் மீதாக
தன்னை பாதி காட்டிக்கொண்டு
மறைகிறது
அதன் குரைப்பு இடைவிடாமல் ஒலிக்கிறது
ஒரு டென்னிஸ் பந்தைப் போல
ஒரு வீரங்கனையின் குட்டைப்பாவாடையைப் போல
பார்வையாளர்களின் முகங்களைப் போல
அது எழுந்து எழுந்து விழுகிறது
விழும் போதெல்லாம் கூடுதல் மூர்க்கத்துடன்
சில அங்குலங்கள் மேலே
தன்னைக் காட்டிக்கொண்டு உயர்கிறது
நான் சற்று விலகி நின்று
சொல்கிறேன்,
இன்னும் ஒரு சில அடிகளே
வெளியே வந்து விடு
மனிதர்களை நேசிக்கும் போதே
மனிதர்களைக் கடந்து செல்லவும்
கற்றுக் கொள்
தனிமை ஒரு குட்டைமதிற்சுவர்
அதைத் தாண்டி குதித்து
வந்து விடு!
