Skip to main content

சிறைகளை எப்படி ஒழிப்பது?



பேரறிவாளன் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பரோலில் இருக்கிறார் எனப் படிக்கும் போது என்று அவரும் மிச்ச அறுவரும் விடுதலை ஆவார்கள் என ஏக்கம் வருகிறது. இதைப் பற்றி பேசும் போது நாம் எழுவருக்காக மட்டுமே பேசுவது, அவர்களின் விடுதலைக்காக குரல் எழுப்புவது நியாயம் அல்ல என்றும் தோன்றுகிறது. ஒட்டுமொத்தமாக சிறைகளை தகர்க்கும் நாள் ஒன்று வர வேண்டும். ஒரு நாகரிகமான சமூகத்தில் சிறை என ஒன்று இருக்கக் கூடாது. ஏன் எப்படி என்று சொல்கிறேன்:


1) சிறைத்தண்டனை சமூக ஒழுக்கத்தால், நீதியால் ஏற்க முடியாத செயலுக்கு அளிக்கப்படும் ஒன்று என்றால், அதற்காக ஒருவரை ஒரு ஆய்வக எலியைப் போல மாற்றி சமூகத்தில் இருந்து ஏன் விலக்கி வைக்க வேண்டும்? விலக்குதல் மட்டும் தான் தண்டனையா? சமூகத்தை காயப்படுத்திய ஒருவர் மன்னிப்பை எப்படி பெற முடியும், அச்சமூகத்துக்காக சேவை செய்யாமல் அன்றி?


2) தண்டனை எனும் பெயரில் சிறையில் பல லட்சம் பேரை அடைத்து வைத்து அவர்களுக்கு சமூக மன்னிப்பு, ஏற்பு கிடைக்காமல் பண்ணுகிறோம். 


3)சிறை எனும் பெயரில் லட்சக்கணக்கானோரின் மனித ஆற்றலை வீணடிக்கிறோம். சிறையில் இருந்து நேரத்தை வீணடிக்காமல் அவர்கள் சமூகக்கட்டுமானப் பணிகளில் ஈடுபடலாமே. உ.தா., என்னைப் போன்ற ஒரு ஆசிரியர் குற்றம் இழைத்தால் அவர் வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக பத்து ஆண்டுகளுக்கு பாடமெடுக்கலாம். பேரறிவாளன் போன்றோர் பதிப்புத் துறையில் பணி செய்யலாம். கைதி எனும் அடையாளத்துடன் அரசியல் பிரச்சாரமும் செய்யலாம். ஜெயலலிதா, சசிகலா போன்றோரும் சிறையில் இருக்கையில் தம்முடைய அடையாளம், திறமையைப் பொறுத்து கலை, ஊடகத் துறைகளில் பணியாற்றலாம். கல்வி அறிவற்றவர்கள் (படித்துக் கொண்டே) உடல் உழைப்பில் ஈடுபடலாம். உ.தா., சாலை அமைப்பு, வேளாண் பணிகளில் ஈடுபடலாம். கொலைக்குற்றவாளிகள் தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்யலாம், அவர்களுடைய ஊதியத்தில் 50% அம்மக்களுக்கு போய் சேரும்படி பண்ணலாம். உதா., ஆணவக் கொலைகள், சாதிவெறிக் கொலைகளில் ஈடுபட்டோரை ஒடுக்கப்பட்ட மக்களிடையே சேவை செய்யப் பணிக்கலாம்.   


4) உடனடி ஊதியம் இல்லாமல், வங்கிக்கணக்கோ, அடையாள அட்டைகளோ, சொந்தமாக வீடோ எந்த பொருளோ இல்லாமல் தான் ஒரு கைதி இதைச் செய்ய வேண்டும். அவருக்கு குடும்பம் இல்லை, இச்சமூகமே அவரது குடும்பம், சொந்தபந்தம். கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும். அதாவது கண்ணுக்குப் புலப்படாத சிறை இருக்கும், ஆனால் சிறையில் இருக்கும் தனிமை, வீணாக்கப்படும் உணர்வில்லாமல் தாம் பிறருக்கு பயனுள்ளவிதம் வாழும் திருப்தியும் மகிழ்ச்சியும் இருக்கும்.  


5) இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து அரசுக்கணக்கில் பங்குச்சந்தையில் முதலீடு பண்ணி,லாபத்துடன் இவர்கள் வெளிவரும் போது கொடுக்கலாம்.


6) கைதிகளை மக்களிடம் இருந்து பிரித்து வைக்காமல் மக்களுடனே வாழவும், பணி செய்யவும் அனுமதிக்க வேண்டும். 


7. தண்டனை என்பது தவறுக்கான பரிகாரமாக வேண்டுமே ஒழிய, மனரீதியாக ஒருவரை ஒடுக்குவதாக இருக்கக் கூடாது.


    8. நம்முடனே வாழ்ந்து பணி செய்வதென்றால் அது என்னமாதிரி தண்டனை என நீங்கள் கேட்கலாம். நம்மைப் போல பெற்ற ஊதியத்தை செலவு செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. தேர்தலில் வாக்களிக்கலாமே ஒழிய சொந்தமாக ஒரு போன் நம்பரோ இணையத்தொடர்போ வைத்துக்கொள்ள முடியாது. கார், பைக், போன் வாங்க முடியாது. எதையும் அரசிடம் இருந்து பெற்றே பயன்படுத்தியாக வேண்டும். அவர்களால் பணத்தை இன்னொருவருக்கு வழங்கவும் முடியாது. இதுவே தண்டனை, இது அவர்களை மனதளவில் சுத்தீகரிக்கும் தண்டணையாக இருக்கும்.


9. நவீன உலகில் நமது தன்னிலையானது உற்பத்தி, நுகர்வு சார்ந்த செயல்பாடுகளால் உருவாகிறது. அது சாத்தியமில்லாமல், முழுக்க பிறரின் சமூகத்தின் பொது உற்பத்தி, பொது சமூக நுகர்வுக்கு தன் உழைப்பை செலுத்துவதன் மூலம் நிறைவை உணர்வது மட்டுமே ஒரு கைதிக்கு சாத்தியமாக இருக்கும். 


   10. உணவை வாங்க முடியாது. அதை சமூகமே அவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டும். அதாவது சமூக உணவுக்கூடங்கள் வழியாக. அது சாத்தியப்படாத போது அவர் வீடுவீடாக இரந்து வாங்க வேண்டும். இம்மக்கள் நமக்காக உழைக்கிறார்கள் என்பதால் அதை பிச்சையாக இழிவாக அன்றி கௌரவமான ஊதியமாக கருதி நாமும் உணவளிக்க வேண்டும். இரந்துண்பது ஆன்மீக ரீதியாக மக்களை மேம்படுத்தும் ஒரு பயிற்சி.


11.  குடும்பம், நட்பு, காதல் போன்ற சமூக உறவுகள் கைதிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இதை தன் உடைமையாக கோரல் கூடாது. கருணையுடன் அளிக்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம். ஆக உடலுறவு உண்டு, ஆனால் அந்த ஆணோ பெண்ணோ அதற்கு எதையும் பதிலுக்குப் பெற முடியாது. 


12. இப்படியான ஒரு “திறந்தவெளி சிறை” தோற்றுவிக்கப்பட்டால் சிறைச்சாலை எனும் பெயரில் மனித உரிமை மீறல்கள், மனித ஆற்றல் வீணடிப்பு, மன அழுத்தம், தனிமை, வன்முறை, சித்திரவதை, போதை மருந்து பழக்கம், குற்றவாளிகள் மத்தியிலே இருக்க நேர்வதால் குற்றவாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து அதுவே பின்னர் தொழிலாகிற நிலை ஒழியும்.


13. கைதிகளுக்கு உடனடியாக ஊதியம் அளிக்கத் தேவையில்லை என்பதால் மிகப்பெரிய தொகை ஒன்று அரசிடம் இருப்பாக சேரும். இதைக்கொண்டு சமூக நீதித்திட்டங்களை நிறைவேற்றலாம். திறமைமிக்க மனித ஆற்றலை தேசத்தின் வளர்ச்சிக்கு செலவழிக்கலாம். குற்றவாளிகள் மீது சமூகம் கொண்டுள்ள இழிவான பிம்பம், பயம், வெறுப்பு இல்லாமல் ஆகும். அவர்கள் கைதியாக ஆற்றும் பணியையே வெளியே வந்த பின்னும் தொடர முடியும் என்பதால் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களுக்குத் திரும்பும் தேவையிருக்காது.


14. பணமும், நுகர்வும் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி இருக்கும். சாதி, மதப்பற்றுகள் குறையும். குடும்பத்துடன் இருக்கலாம், ஆனால் பொறுப்புகள் ஏற்க முடியாது என்பது கைதிகளை பணிவு கொண்டவர்களாக்கும். ஆண் கைதிகளின் ஈகோ மறையும். மனம் விரிவடையும். 


15. மரண தண்டனையை நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.


16. சிறைகளை ஒழிக்க சிறந்த வழி அவற்றை சமூகத்தின் நீட்சியாக மாற்றுவதும், தண்டனையை சமூக, தேச, மக்கள் சேவையாக மாற்றுவதுமே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...