சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொலைவழக்கின் சாயலில் எழுதப்பட்ட உளவியல் துப்பறியும் நாவல் இது. அந்த கொலைவழக்கு பல சதிக்கோட்பாடுகள் நிறைந்ததாக ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. இவை பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக வெளியில் இருந்து இந்த வழக்குவிசாரணையை கண்காணித்து வந்த சக்திகளால் உற்பத்தி பண்ணப்பட்டவை அவை. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கோணம் இந்த வழக்குக்கு கிடைத்தது. சதிக்கோட்பாட்டுகளின் இடையே கொலைக்கான நடைமுறைக் காரணங்கள் எவை என அலசி கண்டெடுக்கிறது இந்நாவல்; நிரப்ப முடியாத இடைவெளிகளை தன் கற்பனையால் உணர்ச்சிகளால் நம்பிக்கைகளால் அது நிரப்புகிறது.
குற்றவுணர்வு குற்றத்தில் இருந்து பிறக்காமல், மாறாக அதுவே ஒரு மனிதனை எப்படி குற்றத்தை நோக்கி செலுத்துகிறது? குற்றவுணர்வில் இருந்து விடுதலை என்பது சகமனிதனை அரவணைத்துக் கொள்ளும் போது கிடைக்குமா? இந்நாவலின் நாயகன் குற்றவாளியைத் தேடிச் செல்லும் போதும் இந்த கேள்விகளே அவனுக்கு இக்குற்றத்தின் தீர்வுக்கான சாவியாக கிடைக்கிறது. தன் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு துருப்பாகவும் இந்த விசாரணை அமைகிறது. குற்றவாளி, பாதிக்கப்பட்டவள் இருவரையும் துப்பறிவாளன் தனக்குள் எப்படி ஆவாஹிக்கிறான் என்றும் இந்நாவல் பேசுகிறது.
இந்நாவல் கொலையான பெண்ணின் கொலைக்குப் பின்னான இருத்தலில் இருந்து தன் வாழ்வை மீளுருவாக்க, வடிவமைக்க, நிறமூட்ட அவள் கொள்ளும் தவிப்பில் இருந்தும் கதையை சொல்லுகிறது. கொலைக்காக தவறாக கைதாகி உயிரைக் கொடுத்தவனின் ஆன்மாவின் பாதங்களில் தன்னை இது சமர்ப்பிக்கிறது.
