Skip to main content

Posts

Showing posts from March, 2021

அன்னையின் அன்பு

“குயின்” வெப்ரீசிஸ் (MX player) பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா “என்னை ஏன் எந்த நிபந்தனையும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என தவிப்புடன் கேட்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர் அமைதியாக “தாயால் மட்டுமே நிபந்தனையில்லாத அன்பைத் தர முடியும். வேறு எல்லாரிடமும் நமக்கு நிபந்தனைக்குட்பட்ட்டே அன்பு கிடைக்கும்.” என்கிறார். என்னவொரு பளிச்சென்ற, ஆழமான வசனம். இது ஜெயலலிதாவின் ஆங்கிலப் பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து தான் என்றாலும் வசனமாக வருகையில், அதுவும் எம்.ஜி.ஆரின் இடத்தில் இருந்து சொல்லப்படுகையில் பிரமாதமாக இருக்கிறது. இது மட்டுமல்ல வேறிடங்களிலும் பல அழகான வசனங்கள் உண்டு. பொதுவாக கௌதம் மேனனின் படங்களில் வசனம் மணிரத்னம்தனமாக இருக்கும், ஆனால் இப்படத்தில் இலக்கியத்தனமாக உள்ளது. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்துவமான பேச்சு பாணி உள்ளது, அதற்கேற்ற வசனங்களும். கார் ஓட்டுநரால் இந்த மாதிரி தெளிவாக பேச முடியாது, ஆனால் அவர் மிகையாகவும் பட்டும்படாமலும் பேசுகிற பாணியில் சொல்லப்படாத சங்கதிகள் தொனிக்கின்றன. ஜெயலலிதாவின் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரான...

ஆட்டோபிக்‌ஷன் எழுதுவதன் சூட்சுமம்

இன்று என்னை சந்திக்க நண்பர் ஒருவர் இக்கேள்வியை கேட்டார்: autofiction என்றால் என்ன? அதற்கும் புனைவுக்கும் என்ன வித்தியாசம்? என் பதில்: புனைவு என்றால் பிறருக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனையால் உருவாக்குவது. ஆட்டோபிக்‌ஷன் என்றால் தனக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனை பண்ணி எழுதுவது. அத்துடன் அந்த பாத்திரமாகவே சமூகவலைதளம், பேட்டிகளில் டெரராக வாழ்ந்து காட்டுவது. எழுத்திலும் நேரிலும் புனைவாகவே உலக வேண்டும் என்பதால் ஒப்பிடுகையில் ஆட்டோபிக்‌ஷன் மிகவும் சிரமம். நீங்கள் நிஜவாழ்வில் ஒரு எறும்பைக் கூட கொல்லாதவராக, எந்த சாகசமும் இல்லாத வாழ்க்கையை வாழலாம். ஆனால் ஆட்டோபிக்‌ஷனில் ஹீரோவான நீங்கள் சின்ன வயதில் பெற்றோரால் வதைக்கப்பட்டவனாக, வீட்டை விட்டு ஓடிப் போனவனாக, தன் பிழைப்புக்காக எல்லா விளிம்புநிலை வேலைகளையும் செய்தவனாக இருக்க வேண்டும். பல கொடூரங்களை பால்யத்தில் கண்டவனாக இருக்க வேண்டும். பதின்வயதில் சாராயம், கஞ்சா போன்ற பழக்கங்கள், வன்முறை, கஞ்சா கடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு பிறகு திருடனாக, ரௌடியாக மாறி, சில வருடங்கள் ஆண் பாலியல் விபச்சாரியாகவும் இருக்கலாம் . இதெல்லாம் போதவில்லை என்றால் நீங்...

ஆழ்படிமமும் இந்து மரபும் - ஆசானின் பொய்ப்பிரச்சாரம்

  ஆசான் பல ஆண்டுகளாக திரும்பத் திரும்ப சொல்லி வரும் ஒரு கருத்து இந்து மதமே நமது பண்பாட்டை கட்டிக் காக்கிறது, நமது கோயில் வழிபாட்டு பண்பாட்டுக்குள்ளே ஆழ்படிமங்கள் உள்ளன, பகுத்தறிவுவாதிகள் இந்த மரபை தாக்குவதன் வழியாக ஆழ்படிமங்களை இல்லாமல் பண்ணி, இந்தியாவின் ஆன்மாவை அழித்து விடுவார்கள் என்பது. இப்போது “படிமங்களின் உரையாடல்” என இதையே திரும்பவும் எழுதியுள்ளார். எந்த தர்க்க நியாயமும் இல்லாத கற்பிதம் இது. ஏனென சொல்கிறேன்.  ஆழ்படிமம் / தொல்படிமம் (archetype) என்பதை உளவியலில் முக்கியமான ஒரு கருத்தாடலாக உருவாக்கியவர் கார்ல் யுங். அவர் எங்குமே ஆழ்படிமத்தை மதத்துக்குள் செயல்படும் படிமங்களாக பார்க்கவில்லை. மாறாக அவர் ஒரு தனிநபரின் நனவிலியின் வெளிப்பாடாக கனவுகள் செயல்படும் என பிராயிட் சொன்னதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று சமூகத்துக்குள் மக்களின் நனவிலியின் ஆழ்படிமங்கள் மூலம் வெளிப்படலாம் - ஆழ்படிமத்தைக் கொண்டு தர்க்கத்துக்கு புறம்பான சில உணர்வுபூர்வமான எண்ணங்களை, நம்பிக்கைகளை நாம் பரிமாறலாம் என அவர் நம்பினார். இவற்றுக்கு எந்த தர்க்கச் செறிவும், குறிப்பிட்ட பண்பாட்டுக்கு மட்டும் உரித்த ...

இட ஒதுக்கீடு பற்றின பொதுப்புத்தி அபத்தங்களும் பத்மப்ரியாக்களும்

“திறமை இருப்பவர்கள் படித்து மேலே வந்துவிடலாம். பல உயர்சாதி மக்களால் திறமை இருந்தும் வேலைக்கு வர முடியவில்லை. பலர் திறமையே இல்லாமல் இட ஒதுக்கீட்டால் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டுமா எனக் கேட்டால் பலரும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். இடஒதுக்கீடு ரொம்ப காலத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது. அது ஏன் இன்னும் மாற்றப்படவில்லை? 90 மார்க் எடுக்கும் ஒரு மாணவன் உயர்சாதி என்பதாலேயே நீங்கள் இடம் கொடுக்கவில்லை எனில், அது ஏற்றத்தாழ்வு இல்லையா?” - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மப்ரியா பத்மப்ரியாவின் இந்த கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று ஏற்கனவே ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தேன். ஏனென்றால், ஒரு ஆசிரியனாக பல உயர்சாதி, மேற்தட்டு இளைஞர்களிடம் இக்கருத்து உள்ளதை பலமுறை கண்டிருக்கிறேன். “பல உயர்சாதி மக்கள்” திறமை இருந்தும் இட ஒதுக்கீட்டால் வேலையின்றி தவிக்கிறார்கள் என்பது ஒரு ஆதாரமில்லாத, பொதுப்புத்தி கருத்து மட்டுமே. எதார்த்தம் வேறு. கடந்த வருடம் என்னுடைய வகுப்பொன்றில் அம்பேத்கரின் நூலின் அத்தியாயம் ஒன்றை சொல்லித் தரும் போது அதில் உரையாற்ற தலித்தி...

மக்கள் நீதி மய்யம் பார்முலா

ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியாவின் பேட்டியைப் பார்த்தேன். 1) கட்சிக்கு ஏன் வந்தீங்க என்று கேட்டால் “கட்சியின் கொள்கைகள் பிடித்து வந்தேன்” எனச் சொல்ல வேண்டும். ஆனால் இவர் வெள்ளந்தியாக “கமல் சார் அழைத்தார், சேர்ந்தேன்” என ஒப்புக் கொள்கிறார். நியாயமே! ம.நீ. மய்யத்துக்குத்தான் கொள்கையே கிடையாதே.  2) கமலைப் போன்றே சதா “நான் ... நான் ... நான்” என் ஒரே சுயமுன்னெடுப்பு. ஒரு இடத்தில் கூட இப்போதுள்ள அரசுடன் எப்படி சித்தாந்த ரீதியாக முரண்படுகிறோம், தமது அரசியல் எப்படி வேறுபட்டது எனச் சொல்லவில்லை. கடந்த ஐந்து வருட கால அரசியல் சம்பவங்கள், நிலைப்பாடுகள் பற்றிக் கூட சொல்ல ஒன்றுமில்லை. செய்தித்தாள் கூட வாசிக்காதவர்களே அக்கட்சியில் இருக்கிறார்கள். கமலை போலச் செய்வதே வேட்பாளர்களின் ஒரே கொள்கை. 3) சாதி குறித்து அவர் சொல்வது இன்றைய கணிசமான மேற்தட்டு மாணவர்களிடம் உள்ள கருத்து தான். ஆகையால் எனக்கு இதில் பெரிய ஆச்சரியமில்லை. விண்ணப்ப படிவத்தில் சாதியைக் குறிப்பிடாமல் விட்டால் சாதி ஒழிந்து விடும் என அவர் மட்டும் அல்ல பத்தாம்பசலித்தனமாக சிந்திப்பது, கமலும் தான். இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:  அ) இவ...

ஜெயமோகனின் அறமென்ப

அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஜெ.மோவின் சிறுகதையான “அறமென்ப” படித்தேன். தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால் இறுதி திருப்பம் மிக நன்றாக வந்துள்ளது. ஜெயமோகனின் அண்மைக்கால கதைகளில் இறுதித் திருப்பம் ஆரவாரமாக உணர்வுப்பிரவாகமாக இருக்கும், ஆனால் இக்கதையிலோ அது நுட்பமாக அமைதியா உள்ளது.  மற்றபடி அவருடைய “அறம்” தொகுப்பில் வந்த கதைகளின் வரிசையிலே இதையும் வைத்துப் பார்த்தாக வேண்டும். இக்கதைகளை இலக்கிய பிரச்சாரக் கதைகள் எனலாம். முன்பு ஜெயகாந்தன் இவ்வகை கதைகளை - இடதுசாரி சாயலுடன் மதவாத சாய்வை பிரச்சாரம் பண்ணும் ஒலிபெருக்கிகளை - எழுதியிருக்கிறார்; இவ்வகை கதைகளில் ஒன்று எழுத்தாளனின் குரல் அல்லது கதைசொல்லியின் அல்லது நாயகனின் குரல் உரத்து ஒலிக்கும். எல்லா கீழ்மைகளின் நடுவிலும் மனிதன் மகத்தானவன், மனிதம் என்பது ஒருவித அனைத்தையும் கடந்த காலாதீதமான பிரம்மம் எனும் தொனி இருக்கும். ஜெ.மோவின் கதைகளில் இந்த பிரம்மம் அறமாகி விடுகிறது. அது கீழ்மைகள் நடுவே தத்தளிக்கும் மனிதர்களை வழிநடத்துகிறது. “உண்மையை” போதிக்கிறது. இவ்வகை கதைகள் பெருவாரியான எளிய வாசகர்களை போய் சேரக் கூடியவை. ஏனென்றால் மனிதநேயம், மானிட எழுச்சி, பேர...

நான் ஏன் கமலஹாசன்களை எதிர்க்கிறேன்?

“நீங்க ஏன் கமலை இவ்வளவு கடுமையாக வெறுக்கிறீங்க?” என ஒரு நண்பர் கேட்டார். (பொதுநலம் கருதி அவருக்கு அளித்த பதிலை இங்கு பகிர்கிறேன்.) பதில்: “நான் கமலை வெறுக்கவில்லை. சொல்லப் போனால் ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக எனக்கு அவரை பிடிக்கும். சந்தேகமே இல்லை. ஆனால் அரசியலில் குதித்த பிறகே கமல் அதிகமாக சமூகம், அரசியல், பண்பாடு பற்றி உளற ஆரம்பித்தார். அவருடைய பேட்டிகள், டிவிட்டர் களமாடல்கள், பிக்பாஸ் போதனைகள் என. இது அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயத்தை கலைத்து விட்டது. அதாவது எனக்கு இதற்கு முன்பு கமல் என்கிற மனிதன் எப்படி சிந்திப்பான் எனத் தெரியாது; தெரியத் தொடங்கியதும் ஒரு கசப்பு, பயம் வந்து விட்டது.  அடுத்து, கமலின் அரசியல் சித்தாந்தம். என்னதான் “மையம்” என அவர் வலியுறுத்தினாலும் உண்மையில் அவர் மையத்தில் இல்லை. அவர் வலதுசாரி சிந்தனையின் பக்கத்தில் தோளில் கைபோட்டுக் கொண்டு நிற்கிறார். இதை நீங்கள் சுட்டிக் காட்டினால் அவர் நாளை “பெரியார், நாத்திகம், அம்பேத்கர்” என்றெல்லாம் தயிர்சாதம் கிண்டலாம். ஆனால் அவருடைய கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் அப்பட்டமாக பாஜகவின் சித்தாந்தம், செயல்திட்...

மணிவண்ணனின் முகமூடிகள்

லஷ்மி மணிவண்ணன் “விஜி வரையும் கோலங்கள்” நூல் வெளியீட்டின் போது பேசிய அந்த அதிபயங்கர பேச்சைக் கேட்டேன். அவர் அண்மைக்காலமாக ஒரு கடும் வைதீகராக மாறி வருகிறார் தான். ஆனால் அவர் அகமலர்ச்சி, பணிவு, ஆன்மீகம், குரு, சரணடைதல் பற்றியெல்லாம் பேசுவதை ஒரு கோர்வையாக ஒரே உரையாடகக் கேட்டது, திக்கென்றாகி நெஞ்சைப் பிடித்துக் கொண்டது இப்போது தான்.  நாட்டார் தெய்வங்கள் சார்ந்து ஒரு நாட்டம் லஷ்மி மணிவண்னனுக்கு இருந்ததை ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை அறிவேன். அது ஒரு வைதீக நாட்டமாகவும் அப்போது முளைவிட்டது. ஆனால் அவர் அந்த சாயல்கள் இல்லாமல் எழுதிய பல அட்டகாசமான கட்டுரைகள், கதைகளைப் படித்தேன். அவரிடம் சில சமயங்களில் பேசவும் செய்திருந்தேன். அவரது இயல்பே எதையும் முரணாக, தற்குறித்தனமாக, விளையாட்டுத்தனமாக, தலைகீழாக பார்ப்பது. அதனால் கலகம், புரட்சி, எதிர்-கலாச்சாரம் மீது கூட அவரால் பிடிப்பு கொள்ள முடியாது. அதன் சாதக பாதகங்களை அறிந்து, அதுவும் ஒரு விளையாட்டே என நினைத்துக் கொள்வார். பதின்வயதில் வைரமுத்துவின் தீவிர வாசகராக ஆரம்பித்து, எதேச்சையாக ஒரு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தீவிர இலக்கியம...

கமல் எனும் 'யூதர்'

பி-டீம், சி-டீம் எல்லாம் விடுங்கள். கொள்கை அளவில் பாஜகவின் தமிழ் வடிவமே மய்யம். இந்த அரசியலை கமல் ஹே ராமிலேயே ஆரம்பித்து விட்டார். "கோட்ஸே கெட்டவன் அல்ல, அதற்காக அவன் முழுக்க நல்லவனும் அல்ல, இந்த காந்தியின் அரசியலினால் பிரிவினை வந்து எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? ஆனால் அதுக்காக காந்தியை நாம் முழுக்க மறுக்கவும் இயலாது, அவர் ஒரு மகாத்மா" என பிடிகொடுக்காமல் வலதுசாரித்தனம் பேசும் படமே அது. அதனாலே தோல்வியுற்றது.  இந்து, இந்தி, இந்திய தேசிய விசயத்தில் மய்யத்தின் அத்தனை கொள்கைகளும் இப்படி வலதுசாரிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குபவையே. அதை சூரப்பா விவகாரத்தில் பார்த்தோம். இப்போது மும்மொழிக் கொள்கையிலும். உளவியல் ரீதியில் பார்த்தால், கமலுக்கு எளிய சாமான்ய தமிழ் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலாச்சாரம், இவற்றை முன்னிறுத்தும் அரசியலுடன் உடன்பட முடியவில்லை எனத் தோன்றுகிறது. 'மனதளவில்' அவர் இம்மண்ணின் மைந்தன் அல்ல. அவருடைய எந்த வணிகப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சொந்தக்காரர்கள் அவருக்கு எதிராக குழிபறிப்பார்கள்,  சொந்த சாதிக்காரர்கள் ஒன்று குறுகின மனப்பான்மை க...

முன்னுரை எனும் அபத்தம்

நான் எதற்காவது அதிகமாக யாரையாவது ஏமாற்றியதுண்டென்றால் அது இந்த முன்னுரை எழுதும் விவகாரத்திலே. ஒரு கட்டத்தில் இது ஏன் என ஒரு தெளிவு ஏற்பட்டு முன்புரை கேட்பவர்களின் “முடியாது, எனக்கு நம்பிக்கை இல்லை” என சொல்லத் துவங்கி விட்டேன். அது சம்மந்தமாக ஒரு சிறு விளக்கம்: 1) இன்று தஸ்தாவஸியின் The Idiot (அசடன்) நாவலின் பெங்குயின் பதிப்பக பிரதி ஒன்றை வாங்கினேன். அதில் ஹார்வெர்ட் பேராசிரியரான மூன்றாம் வில்லியம் மில்ஸ் டாட்  என்பவரின் 12 பக்க முன்னுரை இருந்தது. அதை புரட்டிப் பார்த்ததும் கட்டாயமாக இதைப் படிக்கக் கூடாதென முடிவு செய்து நாவலுக்குள் புகுந்து விட்டேன். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே பல புத்தகங்களைப் படிக்கையில் ஏற்பட்டுள்ளது. முன்னுரை கூறுகிற விசயங்களுக்கும் நாவல், சிறுகதை, கவிதைகளுக்கும் எந்த தொடர்புமே இருக்காது.  2) நாவலுக்கான சில முன்னுரைகள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பிரம்மாண்டமாக, மூக்கில் விரலை வைக்க செய்யும் விதமாக. ஆனால் நாவலைப் படித்தால் சப்பென்று இருக்கும். கவிதைகளைப் பொறுத்தமட்டில் குருவித் தலையில் கிரீடத்தை தூக்கி வைத்ததைப் போல இருக்கும். 3) நாம் ஒரு ச...

மனுஷ்ய புத்திரன் எனும் ராவணன்

இந்த ஆண்டு மனுஷுக்கும் சற்று சிக்கலானதாக, சவாலானதாக இருந்தது என அறிவேன். லாக் டவுனின் போது உயிர்மை அச்சு இதழை கொண்டு வர இயலவில்லை, அவருடைய அலுவலகத்தை மூடும் சூழல். இருந்தாலும் ஒற்றை ஆளாக பகுதி நேர ஊழியர்களை சிலரை வைத்துக் கொண்டு அவர் உயிர்மை இணைய இதழ், யுடியூப் சேனலை உற்சாகத்துடன் சிறப்பாக நடத்தினார். இந்த புத்தகக் கண்காட்சியிலும் குறைந்தபட்ச முதலீடு, உள்கட்டமைப்பு, நிறைய கட்டுப்பாடுகள் இருந்தும் அவர் எப்படியோ சமாளித்து விட்டார். இந்த நெருக்கடிகள் ஒரு பக்கமிருக்க, அவர் எழுதிக் குவித்த கவிதைகள் தாம் பெரிய ஆச்சரியம். எப்போதெல்லாம் நெருக்கடிகளும் ஏமாற்றங்களும் அதிகமாகின்றனவோ அப்போதெல்லாம் எழுத்தில் தீவிரம் காட்டுவது, அநேகமாய் துரித கவனிப்புக்கு, செய்தித் துணுக்குக்கு மட்டும் தகுதியானவை என நாம் நினைக்கிற எத்தனையோ விசயங்களை கவிதையாக்குவது, கடந்த பத்தாண்டில் எழுதியதை விட எளிமையாக மென்மையாக அதே நேரம் தீவிரமாக எழுதுவது என பலரும் பொறாமைப்படுமளவுக்கு செயல்பட்டிருக்கிறார். பலரும் கடுப்படிக்கும் அளவுக்கு வாசகிகளைப் பெற்றிருக்கிறார். கைவிடப்படும் போது நம்மில் பலரும் எழுத்தை விட்டு விடுவோம், குடியில...

கோலியும் அனுஷ்காவும்

இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 ஆட்டத்தில் கோலி சிறப்பாக ஆடினார் (73 ஓட்டங்கள்). ஆனால் ஆட்டத்தை வென்ற பிறகு பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் தன் ஆட்டத்தின் சிறப்புக்கு யாருடைய உதவு, பங்களிப்பெல்லாம் இருந்தது எனும் போது அணியின் பயிற்சியாளர்களை குறிப்பிட்டு கூடவே “அனுஷ்காவும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் உதவியது.” எனச் சொன்னதை நான் ரசிக்கவில்லை. தொழில்முறை வெற்றிகளை தொழில்முறையில் மட்டும் பார்ப்பதே நல்லது, அதை அந்தரங்க வாழ்க்கையுடன் கலந்து தன் குடும்பமும் தன் பயிற்சியாளர்கள், அணியும் ஒன்றே என சமப்படுத்துவது ஒரு மோசமான போக்கு. பொதுவாக ஒரு வீரர் ஓய்வு பெறும் போது தனது பெற்றோர், நண்பர்கள், சிறுவயது பயிற்சியாளர்கள் ஆகியோரை பட்டியலிட்டு நன்றி சொல்வார்கள். சச்சின் ஓய்வு பெறும் போது அவ்வாறு உணர்ச்சிகரமான ஒரு நீண்ட நன்றி நவிலல் செய்தது நினைவிருக்கும். ஏனென்றால் அது ஒரு தனிமனிதனாகவும் அவர் தன் முடிந்து போன ஆட்டவாழ்வை திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம். ஆனால் கோலி செய்வதோ முழுக்க unprofessionalஆன காரியம்.  இதை இப்போதல்ல நீண்ட காலமா...

இந்தியா - இங்கிலாந்து டி-20 தொடர்

முதலாவது டி-20 போட்டியில் ஆடுதளத்தின் மெத்தனமான மிகை துள்ளல் இந்திய மட்டையாளர்களை குப்புற விழ வைத்தது என்றால் இரண்டாவது போட்டியில் குறைவான துள்ளல் கொண்ட, மேம்பட்ட ஆடுதளம் இந்திய அணிக்கு சிறப்பாக மட்டையாட உதவியது. முதல் போட்டியில் சிறந்த திட்டத்துடன் வந்த இங்கிலாந்து அணி செயல்திட்டத்தை பொறுத்தமட்டில் இப்போட்டியில் சொதப்பியது. குறிப்பாக 2-3 ஓவர்களில் அடில் ரஷீத்தை கோலிக்கு எதிராக பந்து வீச வைக்காதது முக்கியமான தவறாகியது. இங்கிலாந்தின் பந்து வீச்சாளர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள் - எந்த நீளத்தில் வீசுவது? குறைநீளமா அல்லது முழுநீளமா? வேகமாகவே மெதுவாகவா? சரியான பந்து விரட்டுகிற நீளத்தில் கட்டர்கள் போடுவதே. அவர்கள் இது குறித்து ஒரு முடிவுக்கு வருமுன்பு இஷான் கிஷனும், ரிஷப் பண்டும் அடித்து காலி பண்ணி விட்டார்கள்.  துவக்க வீரர்களைப் பொறுத்தமட்டில் ரோஹித்தும், இஷானும் சிறந்த ஜோடியாக இருப்பார்கள். ராகுல் ஒரு சிறந்த மட்டையாளர் என்றாலும் டி-20யில் அவர் அநியாயத்துக்கு பொறுமையாக ஆடுவதாக எனக்கு ஒரு வருத்தமுண்டு. ஐ.பி.எல்லில் அவருடைய அணி தொடர்ந்து சொதப்புவதற்கு இந்த எதிர்மறை மட்டையாட்டம்...

ஒரு உன்னத கலைஞனுக்கு கிடைத்த விருது!

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதை (“செல்லாத பணம்” நாவலுக்காக) இமையம் பெறுகிறார் என அறிந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அண்ணனுக்கு வாழ்த்துக்களும் பேரன்பும்!  தமிழ் இலக்கிய சூழலில் இமையத்துக்கு என சில தனிச்சிறப்புகள் உண்டு. 1) பேசுபொருளே பிரதானம் எனும் ஒரு நிலைப்பாடு பொதுவாக பல புனைவெழுத்தாளர்களுக்கு உண்டு. நாவல்களின் பின்னட்டையிலும் விமர்சனங்களிலும் யாரும் பயணிக்காத ஒரு புதிய களத்தில் இந்நாவல் புகுந்து புறப்படுகிறது என சிலாகிப்பு இருக்கும். ஆனால் இமையம் அதற்கு ஈடாக புனைவுமொழியின் தொழில்நுட்பம் குறித்த அக்கறைகள் கொண்டவர். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்டு தன் நாவலை திருத்தி கச்சிதமாக உருவாக்குபவர். இது சார்ந்து இளம் எழுத்தாளர்களுக்கு உதவ முன்வருபவர்.  2) இமையத்தின் புனைவுகளில், குறிப்பாக நாவல்களில், பல்குரல் தன்மை உண்டு. இது பலவித பாத்திரங்களை பேச வைப்பதில்லை. மாறாக நாவலுக்குள் இயங்கும் நான்கைந்து முக்கிய பாத்திரங்களின் தனித்துவமான் உலகங்களை அவர்களுடைய உரையாடல்கள், எண்ண ஓட்டங்கள் வழி உருவாக்கி அவை ஒன்றுக்கொன்று சோடை போகாதபடி பார்த்துக் கொள்வது. நாவல் கச்சிதமாக ...

யுவ புரஸ்கார், ஷிலோங் பயணம் மற்றும் சில குறிப்புகள்

(2015இல் அம்ருதா இதழில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு) இந்த முறை யுவ புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியை மேகாலயாவில் உள்ள ஷிலோங்கில் ஏற்பாடு செய்திருந்தது சாகித்ய அகாதெமி. பயண, தங்கும் ஏற்பாடுகள் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. எனக்கு கடுமையான வேலைப்பளு நடுவில் மற்றொரு வேலையாக அமைந்து விட்டது இப்பயணம். ஜனவரி முழுக்க என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான ஒரு கட்டுரையை எழுதுவதற்காக உழைத்துக் கொண்டிருந்தேன். இருபது பக்க கட்டுரை தான். ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்பட்டது. பிரசிடென்ஸி கல்லூரியில் இருந்து வெளிவரும் “பனுவல்” எனும் ஆய்வேட்டில் ஒரு ஆங்கிலக் கட்டுரை சமர்ப்பித்திருந்தேன். அதைத் திருத்தித் தரக் கேட்டார்கள். அக்கட்டுரையும் என் ஆய்வோடு சம்மந்தப்பட்டது என்பதால் அதில் முனைப்பாக வேலை செய்தேன். நாலு பக்க கட்டுரை இருபது பக்கங்களாக வளர்ந்தது. அதற்கான மேற்கோள்கள், துணை நூல் வாசிப்பு, தயாரிப்பு, எடிட்டிங் என ஒரு மாதம் எடுத்தது. ஆக எனக்கு கடந்த இரண்டு மாதங்களில் மூச்சு விட நேரமில்லாமல் இருந்தது. பெரும்பாலும் அண்ணா நூலகத்துக்கு சென்று படித்து எழுதுவேன். வேற...