(2015இல் அம்ருதா இதழில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு)
இந்த முறை யுவ புரஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியை மேகாலயாவில் உள்ள ஷிலோங்கில் ஏற்பாடு செய்திருந்தது சாகித்ய அகாதெமி. பயண, தங்கும் ஏற்பாடுகள் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது. எனக்கு கடுமையான வேலைப்பளு நடுவில் மற்றொரு வேலையாக அமைந்து விட்டது இப்பயணம்.
ஜனவரி முழுக்க என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கான ஒரு கட்டுரையை எழுதுவதற்காக உழைத்துக் கொண்டிருந்தேன். இருபது பக்க கட்டுரை தான். ஆனால் அதற்கு ஒரு மாதத்திற்கு மேல் தேவைப்பட்டது. பிரசிடென்ஸி கல்லூரியில் இருந்து வெளிவரும் “பனுவல்” எனும் ஆய்வேட்டில் ஒரு ஆங்கிலக் கட்டுரை சமர்ப்பித்திருந்தேன். அதைத் திருத்தித் தரக் கேட்டார்கள். அக்கட்டுரையும் என் ஆய்வோடு சம்மந்தப்பட்டது என்பதால் அதில் முனைப்பாக வேலை செய்தேன். நாலு பக்க கட்டுரை இருபது பக்கங்களாக வளர்ந்தது. அதற்கான மேற்கோள்கள், துணை நூல் வாசிப்பு, தயாரிப்பு, எடிட்டிங் என ஒரு மாதம் எடுத்தது. ஆக எனக்கு கடந்த இரண்டு மாதங்களில் மூச்சு விட நேரமில்லாமல் இருந்தது. பெரும்பாலும் அண்ணா நூலகத்துக்கு சென்று படித்து எழுதுவேன். வேறு எங்காவது போக வேண்டி இருந்தாலும் அரைமணிநேரமாவது நூலகத்துக்கு சென்று என் கட்டுரை வளர்ச்சிக்கு உழைக்காமல் இருக்க மாட்டேன். ஒன்பதாம் தேதி ஷிலோங் செல்ல விமானம் பிடிக்க வேண்டும். ஆனால் ஏழாம் தேதி பெரம்பலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் ஹருகி முராகாமியின் படைப்புலகம் பற்றி பேச வேண்டி இருந்தது. அது முடித்து நள்ளிரவு 3 மணிக்கு வந்து சேர்ந்த பின் அடுத்த நாள் முழுக்க பயணத்திற்கான பொருட்களை வாங்க வேண்டி இருந்தது. அதனால் என் கட்டுரை வேலையை மிக சிரமப்பட்டு ஏழாம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். நான் அதை சமர்ப்பிக்க வேண்டிய தேதி ஏற்கனவே பத்து நாட்கள் தாண்டி இருந்தது. மேலும் தாமதிக்க நான் விரும்பவில்லை. பெரம்பலூரில் காருக்கு போய் சேரும் வரை நான் கட்டுரையை திருத்தி செம்மைப்படுத்திக் கொண்டே இருந்தேன். மேலும் ஒரு மாதமாக நான் கிட்டத்தட்ட தூங்கவே இல்லை எனலாம். எழுத்தையும் ஆய்வு வேலையையும் சேர்த்து பண்ணுவது மிக மிக சிரமம். தூக்கம் தான் அதற்கு பலிகடா.
ஞாயிறு எனக்கு சில புது சட்டைகளும் ஒரு பையும் ஷூவும் வாங்கினேன். வீட்டுக்கு வந்து பையை கட்டி முடிக்க பன்னிரெண்டு தாண்டி விட்டது. தூங்க ஒரு மணீ ஆயிற்று. காலை நான்கு மணிக்கு எழுந்து தயாராகி அரைத்துக்கத்தில் விமானம் பிடிக்க சென்றேன். ஏர் இந்தியா விமானம் இறகுகள் கொண்ட ஒரு பழைய பேருந்து போல் இருந்தது. உள்ளே அவர்கள் கொடுத்த உணவு ரயிலில் தருகிற உணவைப் போன்றே வாந்தியை தூண்டுவதற்காக சிறப்பாக தயாரித்தது போல் இருந்தது. இறைச்சித் துண்டுகள், சாலட், சாண்ட்விச் என குழப்பமான மதிய உணவு. காலை உணவு அதை விட கேவலம். ஆம்லெட். ஆம் வெறும் ஆம்லெட்.
சென்னையில் இருந்து பத்து மணிக்கு தில்லி சென்று சேர்ந்து அங்கிருந்து குவாஹாத்தி விமானத்தை பன்னிரெண்டு மணிக்கு பிடித்து மதியம் இரண்டு மணிக்கு போய் சேர்ந்து விட்டேன். அங்கிருந்து காரில் ஷிலோங் நோக்கி பயணித்தோம். என்னுடன் காரில் ஆங்கில நாவலாசிரியர் ஜீத் தயல் (சிறப்பு விருந்தினர்) வந்தார். வழியில் ஒரு ஓட்டலில் மீன் குழம்பும் சோறும் சாப்பிட்டோம். குழம்பில் புளியே இல்லையே என நான் வருந்தியதற்கு ஜீத் தயல் என்னிடம் “கொஞ்சம் திறந்த மனதோடு இருங்கள்” என்றார். நான் சொன்னேன் “திறந்த மனதோடு இருக்கலாம், ஆனால் திறந்த வாயோடு எப்படி இருக்க?”. எனக்கு அஸ்ஸாம், மேகாலயா பகுதியினரின் உணவு சுத்தமாக பிடிக்கவில்லை. சென்னை பல்கலைக்கழக விடுதியின் உணவு இதைவிட நூறு மடங்கு அதிக சுவையாக இருக்கிறது. உணவகத்தில் நான் தயிர் கேட்க இல்லை என்றார்கள். தயல் சொன்னார் “நீங்க ஒரு டிப்பிக்கல் தமிழர். அவர்கள் தான் சாப்பாட்டை எப்போதும் தயிருடன் முடிக்க வேண்டும் என விரும்புவார்கள்”. இது ஒரு டிப்பிக்கலான ஆங்கில இந்திய எழுத்தாளரின் பார்வை. அவர்கள் எந்த பகுதியையும் பண்பாட்டையும் சேராத, ஆங்கிலத்தில் மட்டும் புழங்கும் ஒரு அமெரிக்க இந்திய மேற்தட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் வழக்கமான மக்கள் திரளை ஒரு விலகின மனநிலையுடன் பார்ப்பார்கள்; சாதாரண விசயங்களைக் கூட விநோதமும் வியப்பும் தோன்ற கவனிப்பார்கள். உதாரணமாக சரவண பவனில் தோசை சாப்பிட்டு விட்டு “சென்னைக்காரர்கள் அத்தனை பேரும் சைவம் சாப்பிடுகிறார்கள்” என நினைப்பார்கள். நான் பொதுவாக தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் வயிறு தொந்தரவு பண்ணினால் மட்டும் தயிர் சாப்பிடுவேன். அத்துடன் அன்று என் வாய் புளிப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
ஷிலோங் நோக்கிய பயணத்தில் இரு பக்கமும் மலைகளை சுரங்க நிறுவனங்களை பெயர்த்துக் கொண்டிருப்பதை பார்க்க வருத்தமாக இருந்தது. அப்பயணம் கொடைக்கானல், ஊட்டி ஏறுவதை போல் அழகாக இல்லை. ஒரு கொலைக்களத்தின் வழி பயணிப்பது போல் இருந்தது. மேகாலயாவின் மலைகளில் 9.22 மில்லியன் யுரேனியம் எனும் உலோகம் உள்ளது. இதை சுரண்டி விற்கத்தான் மத்திய அரசின் துணையோடு கார்ப்பரேட்டுகள் துடிக்கின்றன. அடுத்த பத்து வருடங்களில் ஷிலோங் ஆசிட் வீசப்பட்ட பெண்ணின் முகம் போல் மாறி விடும். இந்த சுரங்க தொழிலால் ஏற்படும் இயற்கை சீரழிவுகள், ஆபத்துகள் கொஞ்சம் நஞ்சமல்ல. நான் ஜீத் தயலிடம் மதுரையில் உள்ள கல்குவாரிகள் மலைகளை பெயர்த்து அழித்ததை மாவட்ட ஆட்சியர் சகாயம் எதிர்த்தது, நீதிமன்றம் அவருக்கு ஆதரவு அளித்தது பற்றி விவரித்தேன். மேகாலயாவில் சுரங்க நிறுவனங்களூக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது என்றாலும் அது அவ்வளவு வலுவாக இல்லை.
ஷிலோங்கில் ஐந்து மணிக்கே இருட்டி விடுகிறது. மக்கள் நான்கரை மணிக்குள் இரவுணவை முடித்து விட்டு தூங்கப் போகிறார்கள். ஓட்டல்களுக்கும் சந்தைக்கும் போகிறவர்களை மட்டுமே இரவுகளில் பார்க்க முடியும். ஏழு மணிக்கு மேல் டாக்ஸி ஓட்டுநர்கள் “நேரமாயிடுச்சு” என பதற ஆரம்பிக்கிறார்கள். பொதுவாக இந்த சீதோஷ்ண நிலை வடகிழக்கு மக்களின் மனநிலையையும் தீர்மானிக்கிறது. அவர்கள் எதிலும் பட்டுக் கொள்ளாமல் கூலாக இருக்க தலைப்படுகிறார்கள். நம்மைப் போல் லேசாக ஒரு வாகனம் இன்னொன்றை உரசினால் சாலையில் நிறுத்தி கத்துகிற சூழலை சுத்தமாக பார்க்க முடியாது. ஊட்டி, கொடைக்கானலோடு ஒப்பிடுகையில் பயணிகளின் வருகையின் குறைவு எனத் தான் நினைக்கிறேன். அங்கு வசிக்கும் பூர்வகுடிகளின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாகத் தான் படுகிறது. எங்கு பார்த்தாலும் மரம், செடி, பாறைகள் இடையே பிண ஊர்வல மாலைகள் உதிர்த்தது போல் சில மனிதர்கள்.
அங்கே காஸி எனும் பூர்வகுடிகள் தாம் அதிகம். அவர்களில் படித்தவர்கள் குறைவு. அப்படி படிக்க விரும்புகிறவர்களும் சென்னை, தில்லி போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்கிறார்கள். இம்மக்களின் சுபாவம் நம்மூர் நரிக்குறவர்கள் போன்றது. பொது சமூகத்துடன் கலக்க மாட்டார்கள். தம் இனத்தை கடந்து யாரிடமும் பேச அக்கறைப்பட மாட்டார்கள். சந்தை கடைகளில் கூட கடைக்காரர்களின் அணுகுமுறை “கூடை வச்சிருக்கிறவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் கொடுக்கிறதில்ல” கணக்கில் தான் இருக்கிறது. பெரும்பாலும் உடலுழைப்பில் இருந்து கடையில் வியாபாரம் வரை பெண்கள் தாம் பார்த்துக் கொள்கிறார்கள். முதுகில் பிள்ளையை சுமந்து கொண்டு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டோ அல்லது எங்காவது நடந்து கொண்டோ இருக்கிற பெண்களை எங்கும் பார்க்கலாம். வடகிழக்கு இளைஞர்கள் பலரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படிக்கையில் சந்தித்திருக்கிறேன். அவர்களில் படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே வெளிமக்களுடன் பழகத் தயாராகிறார்கள். வடகிழக்கினரில் பல இனக்குழுக்கள் உண்டு. இக்குழுக்களுக்கு இடையில் கூட பேசிக் கொள்ள மாட்டார்கள். நம்மூர் சாதி வெறிக்கும் இதற்கும் அதிக வித்தியாசமில்லை. படிநிலை பார்க்காத ஒரு குழு வெறியாக இது இருக்கிறது. ஒரே வித்தியாசம் அவர்கள் பழக இனிமையானவர்கள் என்பது. வாங்க பழகலாம் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். வாசல் வரை நின்று பழகலாம் என்பார்கள். மேலும் சில வடகிழக்கு மக்களுக்கு தாம் இந்தியர் அல்ல, வேறு நாட்டினர் எனும் உணர்வும் உண்டு. அவர்களின் தோற்றம், பண்பாடு சார்ந்து இது நியாயமும் கூட. அவர்களுக்கு தேசிய அளவில் சரியான அங்கீகாரத்தையும் நாம் இன்னும் வழங்கிடவில்லை தான். எல்லாம் சேர்ந்து அவர்களை அந்நியமானவர்களாக மாற்றி விட்டது.
நான் தங்கி இருந்த ஓட்டலை, ஏற்கனவே உள்ள பைன்வுட் எனும் ஓட்டலின் பகுதியாக புதிதாக கட்டி இருந்தார்கள். ஊழியர்கள் பக்கத்து ஓட்டலில் இருந்தார்கள். உணவு, தண்ணீர் எல்லாம் அங்கிருந்து தான் வரும். இரவு பத்து மணிக்கு மேல் அழைத்தால் யாரும் இருக்க மாட்டார்கள். ஆளரவமற்ற அந்த கட்டிடத்தின் உள்ளே அங்கங்கே சோபாக்கள் போட்டிருப்பார்கள். ஆனால் அவற்றில் யாரும் இன்றி இடுகாட்டு கல்லறைகள் போல் தோன்றும். கீழ்த்தளத்தில் யாராவது பேசினால் மேலே எதிரொலிக்கும். வழக்கமாய் ஓட்டல்களில் ஒலிக்கும் இரைச்சல், காலடி சத்தங்கள் கூட இல்லை. இரவு எட்டு மணியானால் எனக்கு என்ன பண்ண எனத் தெரியாமல் ஆகும். டி.வியை அணைத்தால் கேட்கும் அமைதியின் ரிங்காரம் கொடூரமாக இருக்கும். பக்கத்து அறைகளில் சில எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பேசலாம் என்றால் அவர்களுக்கு ஆங்கிலமோ எனக்கு இந்தியோ தெரியாது. எல்லா எழுத்தாளர்களையும் ஒரே ஓட்டலில் தங்க வைத்திருந்தால் பழக இன்னும் வசதியாக இருந்திருக்கும். ஆனால் இருபது பேருக்கு மேல் ஒரே இடத்தில் தங்க வைக்கும் வசதி ஷிலோங்கில் இல்லை. அதனால் பிரித்து பல ஓட்டல்களிலாய் தங்க வைத்திருந்தார்கள்.
போய் சேர்ந்து மறுநாள் எனக்கு சளி மூக்கையும் நுரையீரலையும் நன்றாக அடைத்துக் கொண்டது. என் மூச்சொலி எனக்கே ரம்பத்தை அறுப்பது போல் கேட்டது. மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு தூங்கிப் போனேன். மதியம் ஆனதும் குளித்து வெளியே போனேன். ஒரு உணவகத்தில் பன்றிக்கறி நூடுல்ஸும், பன்றி சாப்ஸும் வாங்கினேன். சாப்ஸ் என்றால் துண்டுகளை வெங்காயம் போட்டு தாளித்து பொரித்து கொடுப்பார்கள் என நினைத்தால் ஒரு பெரிய வடையை கொடுத்தார்கள். அது மிக சுவையாக இருந்தது. பிறகு போலீஸ் பசார் எனும் சந்தையில் சுற்றி சில பரிசுப் பொருட்கள் வாங்கினேன்.
மாலை 4:30க்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களிடம் சில கார்கள் மட்டுமே இருந்ததால் காகம் குடுவையில் தண்ணீர் குடித்த பாணியில் ஒவ்வொருவராக அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். அதனால் கூட்டம் ஆறு மணிக்கு தான் ஆரம்பித்தது. எதிர்பார்த்தது போல் சுருக்கமாய் எளிமையாய் நடந்தது நிகழ்ச்சி. அழைத்து நம்மைப் பற்றி சின்ன குறிப்பு ஒன்றை வாசித்து பூங்கொத்து மாலை கொடுத்து பிறகு விருதும் அதற்கான காசோலையும் அளித்தார்கள். இரண்டாவதாக பரிசு வாங்க வந்த அபிமன்யு மஹதோ எனும் வங்காளக் கவிஞர் அகாதெமியின் தலைவர் காலைத் தொட்டு வணங்கினார். ஏதோ உணர்ச்சிப் பெருக்கில் செய்து விட்டார் போல. அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் அவர் காலில் விழ முயல அவர் தடுத்துக் கொண்டே இருந்தார். நானும் கேரளாவை சேர்ந்த இந்து மேனனும் மட்டுமே விதிவிலக்கு. ஒருவேளை அவர்கள் அவரை தம் தகப்பன் ஸ்தானத்தில் பார்த்து செண்டிமெண்டலாக வணங்கி இருக்க வேண்டும். அல்லது அவரை தாஜா பண்ணினால் சீனியர் சாகித்ய அகாதெமி கிடைக்கும் என நினைத்திருக்கலாம். எப்படியோ, ரெண்டுமே உண்மையல்ல.
என் தருணம் வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வளவு தான். புளகாங்கிதமோ மன எழுச்சியோ கண்ணீர் பெருக்கோ ஒன்றும் ஏற்படவில்லை. ஒருவேளை உலக அழகிப் போட்டி போல் அறிவித்தவுடன் விருதை கொடுத்திருந்தால் பலரும் மேடையில் அழுதிருக்கலாம். ஆனால் இவ்வளவு மாதங்கள் கடந்த நிலையில் பலரும் காசோலை மீது தான் கண் வைத்திருந்தார்கள். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்திருந்தால் விருதாளர்களுக்கு ஒரு உன்னத அனுபவம் கிடைத்த உணர்வு வந்திருக்கலாம். ஆனால் நாற்பது பேர் முன்னிலையில் இது ஏதோ மஞ்சள் நீராட்டு விழா போல் இருந்தது. எப்படியோ தேசிய அங்கீகாரம் என்பது ஒரு பெருமிதம் தானே என நினைத்துக் கொண்டேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் காஸி இனக்குழுவினரின் நடனம் இருந்தது. அது அற்புதமாக வண்ணமயமாக இருந்தது. வாள், கேடயத்துடன் வேட்டையாடும் பாணியிலான நடனம். இன்னொரு நடனத்தில் பெண்கள் இரு கைகளிலும் பீங்கான் கிண்ணத்தை ஏந்தி அதை சுழற்றி கீழே விழாமல் வைத்து ஆடினர். முகத்தில் கூட ஒட்டிக் கொண்டு ஆடினர்.
என்னருகே இருந்த சம்ஸ்கிருத மொழிக்கான விருதைப் பெற்றி பரம்ப ஸ்ரீ யோகம்யியிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். அவர் எழுதுகிற மொழியானது வழக்கில் இல்லாதது. அதற்கு வாசகர்களும் இல்லை. பிறகு எந்த நம்பிக்கையில், மன ஊக்கத்தில் அவர் எழுதுகிறார்? அவர் தன் படைப்புகள் தொடர்ந்து பாடத்திட்டத்தில் வைக்கப்படுவதாக சொன்னார். மேலும் சம்ஸ்கிருதத்தின் மீது தனக்கு அபாரமான காதல் என்றார். அம்மொழியின் சாதிய அரசியல் பற்றின கேள்விகளை விடுத்துப் பார்த்தால் அவரது அர்ப்பணிப்புணர்வு பாராட்டத்தக்கதே. வாசகர்களே இல்லாத மொழியில் எழுதுவது ஒரு அழகான பெண் சாமியாராக போவதற்கு சமம். அது நிச்சயம் பாராட்டத்தக்கது.
கன்னட மொழிக்கான விருதைப் பெற்ற காவ்யா அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதாக சொன்னார். நான் ஆச்சரியப்பட்டதும் உடனே “எனக்கு கல்யாணம் ஆகி விட்டது. அமெரிக்காவில் வசிக்கிறேன்” என திருத்திக் கொண்டார். அடுத்த நாள் நடந்த விருதாளர்கள் பேசும் நிகழச்சியில் அவர் அவ்வாறே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். போடோ மொழியை சேர்ந்த ஷாந்தி பஸுமத்தரியும் தன்னை குடும்பப் பெண்ணாகத் தான் அறிமுகப்படுத்தினார். ஆனால் ஆண் விருதாளர்கள் யாரும் தமக்கு திருமணமான விபரத்தை மேடையில் அறிவிக்கவில்லை. இந்த பெண்கள் எல்லாம் பெண்ணியத்தை கரைத்துக் குடித்தவர்கள். ஆனால் தம் அடையாளமாக கணவனைத் தான் நினைக்கிறார்கள். இந்த நிலைக்கு நாம் அவர்களை மட்டுமே பழிகூற முடியாது தான். இந்தியாவில் படித்த பெண்ணை விட தாலி கட்டின பெண்ணுக்கு தானே மரியாதை! இலக்கிய மேடையில் மட்டும் அது எப்படி வேறுபடக் கூடும்?
வங்காள எழுத்தாளருக்கு விபத்தில் ஒரு கால் முறிந்து போயிருந்தது. நான் அவரிடம் விசாரித்ததும் “உங்களுக்கு துணையாக இருக்க கடவுள் என் காலையும் உடைத்து விட்டார்” என்றார். அவர் பிற்பாடு எனக்கு நல்ல நண்பராகிப் போனார்.
அடுத்த நாள் காலையில் விருதாளர்கள் பேசும் நிகழ்ச்சி சரியாக நேரத்துக்கு துவங்கியது. ஆனால் என்னை அழைத்து வரும் காரை மட்டும் அனுப்ப மறந்து விட்டார்கள். நான் போன் செய்து நினைவுபடுத்திய பிறகு என்னை அழைத்துப் போனார்கள். இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசினார்கள். பேச்சின் பிரதி ஒன்றை பங்கேற்பவர்களுக்கு அளித்ததால் அனைவரும் பேசியதை ஒட்டுமொத்தமாய் தொகுத்து வாசிக்க வசதியாக இருந்தது.
பிற மொழி எழுத்தாளர்களிடம் உரையாடிய போது முதலில் எனக்கு விநோதமாகப் பட்டது அவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை என்பது. அவர்கள் அதை ஒரு பொருட்டாகவும் நினைப்பதில்லை. உயர்தட்டை சேர்ந்த வட இந்தியர்கள் மட்டுமே தளுக்கான ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். மாறாக தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தாண்டாத எழுத்தாளன் கூட ஓரளவு ஆங்கிலத்தில் பேசுவான். இவர்களுக்கு இரண்டு சொற்களை தொகுத்து பேசக் கூடத் தெரியவில்லை. ஏனென்றால் தென்னிந்தியர்களைப் போல் அவர்கள் ஆங்கிலத்தை அறிவின் அடையாளமாக பார்ப்பதில்லை. அவர்கள் இந்திய மரபையும் தேசியத்தை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் இரண்டையும் சந்தேகத்துடன் பார்க்கிறோம். உதாரணமாய் ஒரு ராஜஸ்தானி கவிஞர் தன் பேச்சையே “நான் ஒரு ராஜஸ்தானி, ஆனால் அடிப்படையில் இந்துஸ்தானி” என பாடித் தான் ஆரம்பித்தார். ஆனால் பொதுவாக எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்கிறது. எனக்கு இந்தி புரியும். ஆனால் பேச வராது. இந்தி தெரிந்திருந்தால் இவர்களோடு பழகவும் புரிந்து கொள்ளவும் வசதியாக இருந்திருக்குமே என ஏக்கமாக இருந்தது.
இந்த எழுத்தாளர்களின் உரையை கேட்ட/படித்த போது சில விசயங்களை கவனித்தேன். ஒன்று கணிசமான பேர்களுக்கு சமூக நோக்கு, அரசியல் பார்வை உள்ளது. இருபது பேரில் என்னையும் சேர்த்து மூன்று பேருக்கு நவீன உலக இலக்கியம், கோட்பாடுகள், பின்நவீனத்துவம் பரிச்சயமாக இருக்கிறது. பிறர் தம் மொழிக்குள்ளாக மட்டும் தாம் வாசித்திருக்கிறார்கள். இன்னொன்று கேரளாவைத் தவிர பிற மொழிகளில் எழுத்தாளர்களின் நிலை ஒன்று தான். தம்மை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை என அறிந்து தான் இயங்குகிறார்கள். இவ்விருது தமக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்கிறார்கள். மொழி, பண்பாடு, படைப்புலகம் மீதான காதலின் பொருட்டு தான் எந்த பிரதிபலனும் இன்றி இந்த இளைஞர்கள் இயங்கி வருகிறார்கள். தமிழில் நாம் தனியாக இல்லை. கிருஷ்ணன் கேரளாவிலும், இந்திய ஆங்கில இலக்கியப் பரப்பிலும் மட்டுமே இருக்கிறார். பிறர் அத்தனை பேரும் குசேலர்கள் தாம்.
மணிப்பூரை சேர்ந்த வாங்தோய் குமான் கேரளாவின் முக்கிய கவிஞரான பவித்திரன் தீக்குன்னி பற்றி குறிப்பிட்டார். அவரது படைப்பு ஒன்றை தீக்குன்னிக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பவித்திரன் தீக்குன்னியின் கவிதைகள் என்.டி ராஜ்குமாரின் மொழியாகத்தில் தமிழில் வெளியாகி உள்ளது. ஆனால் அவரை தமிழில் பலருக்கும் தெரியாது. ஆனால் அவர் கவிதையோ மணிப்பூர் வரை பயணித்திருக்கிறது. பொதுவாக மலையாளிகள் மொழியாக்கம் மற்றும் மீடியா நடவடிக்கைகள் மூலம் தம் எழுத்தாளர்கள் எவ்வாறு முன்னெடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் நம் படைப்புகள் மொழி தாண்டி தாக்கம் செலுத்துகின்றன என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் மிகுந்த மனஎழுச்சி தருகிற விசயம்.
அவதூத் தோங்கரே ஒரு மராட்டிக் கவிஞர். அவர் பேசுகிற போது நாகர்கோவில் சாகித்ய அகாதெமி கூட்டத்தில் என்.டி ராஜ்குமார் அவமானப்படுத்தப்பட்டதை குறிப்பிட்டார். ஒரு இந்திய மொழி கவிஞனாக ஒரு சகபடைப்பாளி இவ்வாறு ஒடுக்கப்பட்டது தனக்கு மிகுந்த மனக்கசப்பும் குற்றவுணர்வும் ஏற்படுத்தியதாக கூறினார். இதற்கு பதில் அளித்த அகாதெமியின் செயலாளர் திரு.ராவ் இது எழுத்தாளர்கள் இடையிலான சச்சரவு, இதற்கு அகாதெமி பொறுப்பாக முடியாது என்றார். ஆனால் இப்பதில் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. எந்த நிகழ்ச்சியின் மீதும் அதை நடத்துகிற அமைப்புக்கு கராறான கட்டுப்பாடு இருக்க வேண்டும். நான் பேசும் போது ஒரு தமிழக கவிஞனுக்கு நடந்த அநீதிக்கு இன்னொரு மொழியின் கவிஞன் எதிர்ப்பு தெரிவித்தது தான் உண்மையான தேசிய ஒருமைப்பாடு என்றேன். அவருக்கு நன்றி சொன்னேன்.
நான் என் உரையின் போது எவ்வாறு பதினைந்து வயதில் இருந்து 26 வயது வரை நான் எழுதியதை எதுவும் பதிப்பிக்கும் ஆர்வம் அற்றவனாக இருந்தேன், பிறகு எப்படி தற்செயலாக கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன், அவ்வனுபவம் எப்படி என்னை நாவல் எழுத்தை நோக்கி நகர்த்தியது என கூறினேன்.
அன்று மாலை நானும் வங்காள எழுத்தாளருமாய் ஒரு காரை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றப் போனோம். ஓட்டுநர் ஒரு சுவாரஸ்யமான மனிதர். அவருக்கு ஷிலோங் பூர்வகுடிகள் மீது அப்படி ஒரு துவேசம். நாங்கள் சென்றிருந்த அருவி மற்றும் இயற்கை தலங்கள் ராணுவ குடியிருப்பை தாண்டி அமைந்திருந்தன. நுழையும் போது ராணுவ பாதுகாப்பு வளையத்தை தாண்டி அனுமதி பெற்றாக வேண்டும். ராணுவம் முழுக்க காஸி பழங்குடியினர் தாம். இது வட இந்தியரான அவரை எரிச்சலூட்டியது. “ஒருத்தனுக்கும் இந்தி தெரியவில்லை. ஒன்று அவர்கள் மொழியில் பேசுகிறார்கள். அல்லது ஆங்கிலத்தில் தட்புட் என்கிறார்கள்” என்றபடி சில வசைச்சொற்களை கூறினார். போகிற வழியில் ஒரு பைக் தனியாக நிற்க சில பயணிகள் குழுவாக பேசிக் கொண்டு நின்றனர். “ஒரு வாகனம் இப்படி நிற்கிறதென்றால் எவனோ ஒரு பெண்ணை வனத்துக்குள் தள்ளிப் போயிருக்கிறான் எனப் பொருள்” என்று விட்டு அவர்கள் வனத்துக்குள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என சைகை மூலம் காட்டினார். பிறகு கெட்ட பெண்கள் தாம் இப்படி ஆண்களுடன் தனியாக வனத்துக்குள் போவார்கள், காட்டிலாகா இவர்க்ளை தடுப்பதில்லை என்றார். அவரது எரிச்சலின் பின்னிருந்த பொறாமையையும் தனிமையையும் உடையில் தெரிந்த வறுமையையும் நினைத்துக் கொண்டேன். அவரது கையுறை கிழிந்து இரண்டு விரல்கள் வெளியே தெரிந்தன. அவரைப் போன்ற ஒருவருக்கு இப்படித் தான் வயிறெரியும். தவிர்க்க முடியாது. மேலும் அவர் நிச்சயம் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பார்.
அடுத்த நாள் விடிகாலையில் கிளம்பி குவாஹாத்தி விமான நிலையம் சென்று விமானம் பிடித்து மதியம் ஒரு மணிக்கு கொல்கத்தா தம்தம் விமானநிலையம் அடைந்தேன். சென்னை விமானம் மாலை ஆறுமணிக்கு தான் என்பதால் இடைப்பட்ட நேரத்தில் கொல்கொத்தாவை சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.
கொல்கொத்தா என்னவொரு அழகான நகரம். இருநூறு வருட காலனிய தாக்கம், அதன் பழமையின் எச்சங்கள் தொனிக்கும் கட்டிட அமைப்புகள், சிதைவுறும் மரபின் வசீகரம் நீங்காத நவீன அமைப்புகள் என கொல்கொத்தா ஒரு விநோதமான கலவையாக இருந்தது. கேரளப் பெண்களை விட வங்காளப் பெண்கள் ரொம்பவே அழகு. பெரும்பாலானவர்கள் சிவப்பு வண்ணத்தில் ஆடையணிந்திருந்தார்கள். சிவப்பு போக அதிகம் தென்படும் மற்றொரு நிறம் மஞ்சள். எந்த சுவர், கட்டிடம், பாலம், டாக்ஸி, பேருந்து, விளம்பர தட்டி எடுத்தாலும் மஞ்சள் தான். ஒரு கட்டத்தில் எனக்கு மலக்குவியல் நடுவில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. நிஜமாகவே! தவிர்க்க முடியாமல் கண்ணை மூடிக் கொண்டேன்.
விக்டோரியா ஹாலில் சற்று சுற்றி விட்டு ஒரு டாக்ஸி பிடித்து சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு அழைத்துப் போக சொன்னேன். கொஞ்ச நேரம் அவர் ஊரை சுற்ற என்னை ஒருவேளை லாட்ஜுக்கு கூட்டி செல்கிறாரோ என தோன்ற சாப்பிடுவதற்கான இடம் என வாயையும் வயிறையும் தொட்டு எனக்குத் தெரிந்த இந்தியில் புரிய வைக்க முயன்றேன். அவர் என்னை ஆடம்பரமான பார்க் ஸ்டிரீட்டுக்கு கூட்டி சென்றார். முழுக்க அமெரிக்க பிராண்டட் உணவகங்கள். நான் எனக்கு வங்காள உணவு வேண்டும் என்றதும் தெருவுணவை சாப்பிடுவேனா எனக் கேட்டார். எனக்கு சம்மதம். மீன் குறிப்பாக வேண்டும் என்றேன். அவர் எனக்கு காண்பித்த தெருவோரக் கடையில் சோறும் மீன் குழம்பும் சாப்பிட்டேன். மீனைப் பொரித்து கடுகெண்ணெயும் மஞ்சளும் தூக்கலாக சமைத்திருந்தார்கள். அது போன்ற மீன் உணவை நான் சென்னையில் கூட உண்டதில்லை. எங்கள் ஊரில் சாப்பிட்டிருக்கிறேன். அப்படி ஒரு அபார சுவை. வங்காளத்தில் தெருவோர கடைக்காரர்களுக்கு கூட ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. ஒரு அழுக்கான பனியன் அணிந்த ஒல்லியான தாத்தா எனக்கு உணவு பரிமாறினார். அவரிடம் மீன் வேண்டும் என்றதும் “of course I would give” என்றாரே பார்க்கலாம் வியந்து விட்டேன்.
அங்கிருந்து காளிகாட் காளி கோயிலுக்கு சென்று பார்த்து விட்டு அங்கிருந்து ஒரு டாக்ஸியில் ஏறினேன். ஓட்டுநர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். அவர் ஆங்கில பேராசிரியர்களுக்கு இணையாக ஆங்கிலம் பேசினார். ஆங்கில அறிவை நான் ஒரு தனிச்சிறப்பாக பார்க்கவில்லை. என்றாலும் கீழ்த்தட்டி இருந்து வருகிற ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினால் அவருக்கு நல்ல வாசிப்பு பழக்கமுண்டு என பொருள். பயண வழிகாட்டிகளின் உடைந்த ஆங்கிலத்தை நான் குறிக்கவில்லை. கூர்மையான சரியான சொற்களைக் கொண்டு சீரியசான விசயங்களைப் பேசும் ஆங்கிலம். இத்தனைக்கும் அவர் தனக்கு வங்காளம் மட்டுமே படிக்க தெரியும் என்றார். தினமும் மூன்று பத்திரிகைகள் படிப்பதாய் சொன்னார். விபூதி பூஷன் பந்தோபத்யா உள்ளிட்ட நாவலாசிரியர்களையும் எனக்குத் தெரியாத பல புது எழுத்தாளர்கள் பற்றியும் சொன்னார். தீதி பற்றி விசாரித்தேன். “மொம்தா” ரொம்ப ரொம்ப மோசம் என்றார். அவரது அமைச்சர்களும் குடும்பமும் நாட்டை சூறையாடுவதாய் சொன்னார். ஏற்கனவே வங்காள எழுத்தாளர் அபிமன்யுவும் என்னிடம் இதே கருத்தை கூறி இருந்தார். வங்காளிகள் மம்தா மீது செம கடுப்பில் இருப்பதாய் நினைத்துக் கொண்டேன். அப்படி என்றால் அடுத்த தேர்தலில் லாடம் கட்டி விடுவார்களா? இல்லை, அடுத்ததும் அவர் தான் முதல்வர் என்றார் ஓட்டுநர். எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்து விட்டதால் இனி வங்காளத்துக்கு விடிவே இல்லை என்றார். சரி இவர் எதிர்க்கட்சியாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்து “நீங்கள் கம்யூனிஸ்டா?” எனக் கேட்டேன். “நான் கம்யூனிஸ்டா எனத் தெரியாது. ஆனால் நான் ஒரு இடதுசாரி” என்றார். சரி, இடதுசாரிகளின் ஆட்சி ஏன் மக்களுக்கு பிடிக்கவில்லை எனக் கேட்டேன். எல்லா இடதுசாரிக்ளையும் போல அவரும் பிரச்சனையை தர்க்கரீதியாக அலசி, கராறாக காரணங்களை அடுக்கத் தொடங்கினார்.
இடதுசாரிகள் நிலசீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார்கள். அதனால் அறுபது, எழுபதுகளின் தலைமுறை அவர்கள் பால் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையில் குடும்பம் பெரிதானது. இரண்டு பேர் உள்ள குடும்பத்தில் மூன்றோ நான்கோ பிள்ளைகள் பிறக்க பிரித்தளிக்கப்பட்ட நிலம் போதுமானதாக இல்லை என ஆனது. தாத்தா, பாட்டிக்கு கம்யூனிஸ்டுகள் தமக்கு நிலம் அளித்தது ஒரு கடப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது என்றால் பேரன் பேத்திகளுக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. வேலை வாய்ப்புகள் குறைய நிலத்தின் சிறுபகுதிகளை வைத்து திருப்தி கொள்ள அடுத்த தலைமுறையினரால் முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மீது அவர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது என்றார். நான் நந்திகிராம் வன்முறை, கொலைகள் கேட்க அவர் அன்றைய அரசு தரப்பு நியாயத்தை திரும்ப கூறினார். எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் தவறான கருத்தை பரப்பி பீதியை கிளப்பியதால் ஏற்பட்ட வன்முறை அது என்றார். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அன்று கட்சி ரௌடிகள் மற்றும் காவல் துறை மூலம் பொதுமக்கள் மீது அவிழ்த்து விட்ட வன்முறையை நியாயப்படுத்த முடியாதில்லையா? கடந்த முப்பது வருடங்களில் மக்கள் தொகை பன்மடங்கு வளர்ந்துள்ளதை மற்றொரு காரணமாக சொன்னார். பிகாரிகள் உள்ளிட்ட எல்லைப்புற மாநில மக்கள் வங்காளத்துக்குள் குடியேறி வேலைகளை பறிப்பதும் ஒரு காரணம் என்றார். கம்யூனிஸ்டுகள் வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை கொண்டு போகவில்லை என்றாலும் அவர்கள் அளவுக்கு நாணயமான, ஊழலற்ற தலைவர்களை காண இயலாது என்றார். இது உண்மை தான்.
அவரது குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். ஒரு மகன் மற்றும் மகள் என்றார். மனைவி இறந்து விட்டாராம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய அவரது கனவு என்ன என்றேன். மகனுக்கு கணக்கும் ஆங்கிலமும் நன்றாக வருகிறது. அவனை பொறியியல் படிக்க வைக்க வேண்டும், ஆனால் அதற்கான பொருளாதார சக்தி தனக்குண்டா எனத் தெரியவில்லை என்றார். ஆனால் முக்கியமாக தன் பிள்ளைகள் நாணயமானவர்களாக வளர வேண்டும் என்றார். பிறகு அவர் தனது இளமைப்பருவம் பற்றிப் பேசினார். அப்பா இறந்து விட அவரது குடும்பம் கடுமையான வறுமையில் தவித்தது. அவருக்கு இரு தம்பிகள். அம்மா அவரிடம் “உன்னால் தான் சம்பாதிக்க முடியும். உன் சகோதரர்கள் படிக்கட்டும்” என்றாராம். பதினான்கு வயதில் அவர் வேலைக்கு போக ஆரம்பித்தார். தன்னால் கல்வித் தகுதியின்மையின் தடையை தாண்டி வாழ்க்கையில் வளரவே முடியவில்லை என்றார். அவரது சகோதரர்களில் ஒருவர் இப்போது காவல் துறையில் இருக்கிறார், இன்னொருவர் அரசு வேலையில் இருக்கிறார். காலம் இளமையில் நமது கல்வி வாய்ப்பை பறிப்பதை விட மற்றொரு கொடூரம், அநீதி இருக்க முடியாது. எனக்கு அவர் கதையை கேட்க கண்ணீர் வந்தது. முகத்தை திருப்பிக் கொண்டேன். சற்று நேரம் அவரிடம் பேசவே முடியவில்லை.
கல்வி என்பது தனிமனிதனின் முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது. ஆனால் கல்விக்கு பணம் தேவையாக உள்ளது. பணம் இல்லாதவன் முன்னேறவே முடியாமல் போகிறது என்றார் அவர். நான் கல்லூரியில் வேலை பார்க்கையில் வகுப்பில் என்னிடம் படித்த மாணவர்கள் மிக வறுமையான குடும்ப சூழலில் இருந்து வருவதை பார்த்திருக்கிறேன் என்றேன். பலர் காலைப் பொழுதில் செய்தித்தாள் விநியோகிப்பது, பல் பாக்கெட் போடுவது போன்ற வேலைகளை செய்து விட்டு களைத்துப் போய் வகுப்புக்கு வருவார்கள். ஒருமுறை என்னுடைய இஸ்லாமிய மாணவி ஒருத்தியை வெளியில் வைத்து பார்த்த போது அவரது பின்புலம் பற்றி விசாரித்தேன் அவரது அப்பா ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி என்றார். அதைக் கேட்க என் கண்கள் நனைந்து விட்டன. இவரைப் போன்றவர்கள் பட்டப்படிப்பு முடித்ததும் நிச்சயமாய் சமூக தட்டில் அடுத்த படிநிலைக்கு போய் விடுவார்கள் – கீழ்த்தட்டில் இருந்து மத்திய தட்டுக்கு. கல்வியால் மட்டுமே சாத்தியமாகும் வளர்ச்சி இது. கீழ்த்தட்டில் உள்ளவர்க்ளால் சுலபமாக பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆக இயலாது இருக்கலாம்; ஆனால் நிச்சயம் அடுத்த படிநிலைக்கு நகர்வார். சட்டென அக்கடும்பத்தின் சூழல் மாறும். அதிக வசதிகள், வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த பத்தண்டுகளில் அவர்கள் மேல்மத்திய நிலைக்கு நகர்வார்கள் என்றேன். அவர் இதை ஏற்றுக் கொண்டு விட்டு சொன்னார் “ஆனால் பணக்காரர்கள் மட்டும் மிக எளிதாக எந்த முயற்சியும் இன்றி எல்லா வாய்ப்புகளை பெற்று செழிக்கிறார்கள்”. உண்மை தான். இந்திய சமூகத்தின் மிக மோசமான சிக்கல் இது.
அவர் இன்னொரு விசயம் சொன்னார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வளர்ச்சியை பொறுத்தமட்டில் சில தனித்துவமான குறைபாடுகளும் சாத்தியங்களும் இருக்கும். இந்த குறைபாடுகளை ஏற்றுக் கொண்டு தான் வளர்ச்சி பற்றி பேச வேண்டும். தற்போதுள்ள சூழலில் வங்காளத்திற்கு தொழில்மயமாக்கல் தான் விடிவுக்கான ஒரே மார்க்கம் என்றார். ஒரு மாநிலத்தில் வளர்ச்சி அதன் அரசை மட்டும் சார்ந்ததல்ல என அவர் குறிப்பிட்டார். அது மிக முக்கியமான கருத்தாக பட்டது. வளர்ச்சிக்கு பல சமூக, பண்பாட்டு, வரலாற்று காரணங்கள் உண்டு. உதாரணமாய் பிரிவினை நடக்கவில்லை என்றால் மேற்கு வங்கத்தின் நிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் அவர். இந்த உண்மை புரிந்ததால் தான் தமிழக மக்கள் இரு திராவிட கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுக்கின்றன என நினைத்தேன். தமிழர்கள் தமக்குத் தேவையெல்லாம் ஒரு தலைவர் மட்டுமே என அறிந்திருக்கிறார்கள். வளர்ச்சி என்பது பல சமூக காரணிகளால் தீர்மானிக்கப்படுகிற ஒன்று. நேர்மையும் கண்ணியமுமான ஆட்சி என்பது சமூக பண்பாட்டை சார்ந்த ஒன்று. கட்சிகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.
என்னுடன் விருது வாங்கின பத்தொன்பது எழுத்தாளர்களில் யாரும் இவ்வளவு சரளமாக, காத்திரமாக, முதிர்ச்சியாக உரையாடக் கூடியவரகளாக கூடியவர்களாக இல்லை. இவ்வளவு ஆழமாக அரசியல் விவாதிக்க கூடியவர்களாக இல்லை. இது ஒரு மாநிலத்தின் பண்பாடு தனிநபர் ஆளுமையை எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது எனக் காட்டுகிறது. என்னுடன கல்லூரியில் படித்த ஒரு வங்காள நண்பர் சொல்லுவார் அவரது குடும்பத்தில் பெண்கள் ஆண்கள் சமமாக உட்கார்ந்து பத்திரிகை படித்து அரசியல் பற்றி விவாதிப்பார்கள் என்று. மேலும் விருது, எழுத்தாளன் எனும் அங்கீகாரம், படிப்பு இவையெல்லாம் எவ்வளவு மேலோட்டமான அடையாளங்கள் எனவும் இந்த அனுபவம் எனக்கு புரிய வைத்தது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர் சாகித்ய் அகாதெமி விருதாளர்களை விட ஆழமாக விவாதிக்கக் கூடியவராக இருக்கிறார். அறிவுத்தாகத்தை விட மிகப்பெரிய தகுதி வேறென்ன சொல்லுங்கள்?