Skip to main content

ஜெயமோகனின் அறமென்ப



அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஜெ.மோவின் சிறுகதையான “அறமென்ப” படித்தேன். தொழில்நுட்பரீதியாகப் பார்த்தால் இறுதி திருப்பம் மிக நன்றாக வந்துள்ளது. ஜெயமோகனின் அண்மைக்கால கதைகளில் இறுதித் திருப்பம் ஆரவாரமாக உணர்வுப்பிரவாகமாக இருக்கும், ஆனால் இக்கதையிலோ அது நுட்பமாக அமைதியா உள்ளது. 

மற்றபடி அவருடைய “அறம்” தொகுப்பில் வந்த கதைகளின் வரிசையிலே இதையும் வைத்துப் பார்த்தாக வேண்டும். இக்கதைகளை இலக்கிய பிரச்சாரக் கதைகள் எனலாம். முன்பு ஜெயகாந்தன் இவ்வகை கதைகளை - இடதுசாரி சாயலுடன் மதவாத சாய்வை பிரச்சாரம் பண்ணும் ஒலிபெருக்கிகளை - எழுதியிருக்கிறார்; இவ்வகை கதைகளில் ஒன்று எழுத்தாளனின் குரல் அல்லது கதைசொல்லியின் அல்லது நாயகனின் குரல் உரத்து ஒலிக்கும். எல்லா கீழ்மைகளின் நடுவிலும் மனிதன் மகத்தானவன், மனிதம் என்பது ஒருவித அனைத்தையும் கடந்த காலாதீதமான பிரம்மம் எனும் தொனி இருக்கும். ஜெ.மோவின் கதைகளில் இந்த பிரம்மம் அறமாகி விடுகிறது. அது கீழ்மைகள் நடுவே தத்தளிக்கும் மனிதர்களை வழிநடத்துகிறது. “உண்மையை” போதிக்கிறது. இவ்வகை கதைகள் பெருவாரியான எளிய வாசகர்களை போய் சேரக் கூடியவை. ஏனென்றால் மனிதநேயம், மானிட எழுச்சி, பேருண்மை, அறம் போன்ற விழுமியங்களை இவை மிகவும் எளிமைப்படுத்தி, நம்பிக்கையூட்டும் விதமாக பார்சல் பண்ணி தந்து விடுகின்றன. “அறம்” பெற்ற வணிக வெற்றியின் சூத்திரம் இது தான். ஆனால் இலக்கிய வாசகனுக்கு இக்கதைகள் சற்று சுவாசரஸ்யம் தந்தாலும் அடிப்படையில் ஏமாற்றமளிக்கவும் செய்யும். ஏன் எனப் பார்ப்போம்!


ஜெயமோகனின் “அறம்” குறித்த புரிதலே இக்கதைகளில் வெளிப்படுகின்றன. இப்புரிதல் சற்று மேலோட்டமானது. ஏனென்றால் அறம் என்பதை அவர் மேற்கத்திய தத்துவத்தில் இருந்தோ இந்திய தத்துவ விவாதங்களில் இருந்தோ எடுத்துக் கொள்ளவில்லை. காந்தியிடம் இருந்தே பெற்றுக் கொள்கிறார். காந்தி இதை கிறித்துவ போதனைகளில் இருந்து, புதிய ஏற்பாட்டு விவிலியத்தில் இருந்து, எடுத்துக் கொள்கிறார். இது அறம் என்பதை மருட்சிக்கும் உண்மைக்கும், பாவத்துக்கும் புண்ணியத்துக்கும், தவறுக்கும் உண்மைக்கும் இடையிலான தனிமனித தேடலாக சுருக்கி விடுகிறது. பிறழ்வுகளில் இருந்து சமூகத்தை ஒழுக்கம் நோக்கி, உண்மை, நன்னெறி நோக்கி இட்டுச் செல்வதே காந்தியின் அறம். காந்தி தன் அறத்தை ஒருவித தனிமனிதவாதமாக சுருக்கிக் கொண்டார், அவருக்கு இது சரிவர விளங்கவில்லை. இதை அவர் “பகவத் கீதை” எனும் இலக்கிய-தத்துவப் பிரதிக்கு எழுதிய உரையை படிக்கையில் நமக்கு புரியும். கீதை அறத்தை தனிமனிதனின் முடிவுகள், இருப்பு, சமூகத்தின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக்கு இடையிலான ஒரு ஊடாட்டமாக பேசியிருக்கும். ஆனால் காந்தி இதை அப்படியே ஒரு கிறித்துவ போதகரைப் போல தனிமனிதனின் ஊசலாட்டமாக எளிமைப்படுத்தி தவறாக உரையெழுதி இருப்பார். காந்தியின் இந்த தத்துவ போதாமை ஜெயமோகனிடமும் உள்ளது.  இதை நீங்கள் துல்லியமாக புரிந்து கொள்ளும் நோக்கில் நமது இந்திய மரபு அறம் குறித்து சொல்லியுள்ளவற்றை சுருக்கமாக மற்றொரு பதிவில் தருகிறேன். இப்போதைக்கு “அறமென்ப” கதையில் வரும் அறம் என்னவெனப் பார்க்கலாம்.


கதைசொல்லி விபத்தில் அடிபட்ட ஒரு ஏழையை எடுத்து வந்து மருத்துவமனையில் சேர்க்கிறான். அங்கு அற்பமான சில வக்கீல்களின் தூண்டுதலால் பாதிக்கப்பட்டவர்கள் கதைசொல்லிக்கு எதிராகவே வழக்கை திருப்பி அவனே விபத்தை ஏற்படுத்தியவன் எனச் சொல்லி வழக்கு பதிவு செய்ய முனைகிறார்கள். (வழக்கறிஞர்கள் இந்தளவுக்கெல்லாம் கீழே செல்லத் தேவையில்லை, இன்ஷுரன்ஸ் வழியாகவே இழப்பீட்டை பெற்றுத் தரலாம் என்று  பேஸ்புக்கில் இதற்கு மறுப்பு சொல்லப்பட்டது; இந்த தொகை சொற்பமானது, இதற்கு ரொம்ப காலம் எடுக்கும், போலீஸ் வழக்கை நடத்துவதில் அக்கறை காட்டாது என்றெல்லாம் ஜெ.மோ கதைக்குள் நியாயம் தருகிறார். நான் இந்த சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை.) இறுதியில், ஏன் அந்த “ஏழைகள்” பேராசையுடன் இருக்கிறார்கள், அதன் நியாயம் என்னவென புரிந்து கொள்ள முயலும் கதைசொல்லி அதை அப்படியே ஏற்கும் ஒரு இடம் வருகிறது. இது கதையின் அழகான இடம். அவன் அப்போது மிக மகிழ்ச்சியாக விடுதலை பெற்றவனாக உணர்கிறார். கதைக்குள் இது நுட்பமாக அமைந்துள்ளது. மனிதனின் அற்பத்தனங்களும் ஒரு லீலை தான், அதையும் ஏற்று மனிதர்களை நேசிப்பதே அறம் என அவன் புரிந்து கொள்ளுவதுடன் கதை முடிகிறது என நான் ஊகிக்கிறேன் (நல்லவேளை ஜெ.மோ இதை வெளிப்படையாக நம் ‘கன்னத்தில் அடித்து’ சொல்லவில்லை.)


இதை சிறப்பு எனக் கூறும் அதே நேரம், இந்த ‘புரிதலில்’, ‘அகத்திறப்பில்’, ‘தரிசனத்தில்’ ஒரு இருமை வந்து விடுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் - நான் vs சமூகமாகிய மற்றமை. இதனுள் ஒரு மேல்-கீழ் கட்டுமானம் தோன்றுகிறது. நான் புனிதன், மற்றவர் பேதைகள், அபலைகள், கீழானவர்கள், இவர்களை நான் கரைத்தேற்ற வேண்டும் எனும் கோரல் இதற்குள் உள்ளது. இது காந்தியிடம் உள்ள ஒரு எரிச்சலூட்டும் அம்சம். காந்திக்குள் இருக்கும் பாதிரியார் எட்டிப் பார்க்கும் இடம் இது. இதே பாதிரி தான் “அறம்” கதைகளில் ஜெயமோகனின் கதைகளிலும் தோன்றி நம்மை நோக்கி “ஸ்தோத்திரம்” சொல்லுகிறார். காந்தி இவ்வுலகில் உள்ள பிறர் அனைவரும் பாவம் செய்தவர்கள், தானோ பாவம் செய்யாத தூயவன் என நம்புகிறார். சிலநேரம் தனது கீழ்மைகளை உணர்ந்து அவர் உணரும் போது அதையும் வெளிப்படையாக வைத்து தன்னை பாவியாக கண்டு கதறுவதும் உண்டு. இந்த உணர்வுநிலையும் “சோற்றுக்கணக்கு” போன்ற கதைகளில் வெளிப்படுகிறது. இந்த காந்திய அறம் தான் ஜெ.மோவை சமூக முன்னேற்றம், அதற்கு அரசியல் இயக்கங்கள், கொள்கைகளுக்கு உள்ள பங்கு பற்றி பேச விடாமல் தனிமனிதவாதம் சார்ந்து சுருக்க வைக்கிறது. இதுவே, இடஒதுக்கீடு, சமூகநீதிக் கொள்கைகள் பற்றி அவருக்கு தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்ராய்ங்கள் உண்டெனிலும் கதைகளில் ஒரு தனிமனிதன் அல்லது தனிமனிதர்களின் திரட்சியான சாதி சமூகங்களின் வளர்ச்சியாக மட்டுமே சமூக வளர்ச்சியை காணச் செய்கிறது (“வணங்கான்”). சாதியமைப்பை காந்தி எப்படி நியாயப்படுத்தினார் என நாம் அறிவோம். “வணங்கானில்” இந்த அரசியலை ஜெ.மோ புத்திசாலித்தனமாக திணித்து விடுகிறார். மதமாற்றம், சமூகநீதி, நவீனம் ஆகியவை கொண்டு வந்த மாற்றங்களை நைசாக தவிர்த்து விட்டு ஒரு சாதியின் அக-ஊக்கம், உழைப்பு, கூட்டிணைவு மட்டுமே அவர்கள் முன்னேற காரணம் என ஒரு சித்திரத்தை வரைகிறார். இது சாதியமைப்பை நியாயப்படுத்தவும், தனிமனித முனைப்பே முன்னேற்றம், திராவிட அமைப்புகளுக்கும் இதில் எந்த பங்களிப்பும் இல்லை என ‘அரசியல்’ செய்ய அவருக்கு உதவுகிறது. 

இந்த அரசியலை கடந்து பார்த்தாலும், அறம் என்பதை அவர் இப்படி எளிய தனிமனித முனைப்பு, தடுமாற்றம் என சுருக்கி விடுவது இலக்கிய படைப்புக்கே உரித்தான சிக்கல்கள், உள்முரண்களை நோக்கி செல்ல முடியாமல் அவரை தடுத்து விடுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...