நான் எதற்காவது அதிகமாக யாரையாவது ஏமாற்றியதுண்டென்றால் அது இந்த முன்னுரை எழுதும் விவகாரத்திலே. ஒரு கட்டத்தில் இது ஏன் என ஒரு தெளிவு ஏற்பட்டு முன்புரை கேட்பவர்களின் “முடியாது, எனக்கு நம்பிக்கை இல்லை” என சொல்லத் துவங்கி விட்டேன். அது சம்மந்தமாக ஒரு சிறு விளக்கம்:
1) இன்று தஸ்தாவஸியின் The Idiot (அசடன்) நாவலின் பெங்குயின் பதிப்பக பிரதி ஒன்றை வாங்கினேன். அதில் ஹார்வெர்ட் பேராசிரியரான மூன்றாம் வில்லியம் மில்ஸ் டாட் என்பவரின் 12 பக்க முன்னுரை இருந்தது. அதை புரட்டிப் பார்த்ததும் கட்டாயமாக இதைப் படிக்கக் கூடாதென முடிவு செய்து நாவலுக்குள் புகுந்து விட்டேன். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே பல புத்தகங்களைப் படிக்கையில் ஏற்பட்டுள்ளது. முன்னுரை கூறுகிற விசயங்களுக்கும் நாவல், சிறுகதை, கவிதைகளுக்கும் எந்த தொடர்புமே இருக்காது.
2) நாவலுக்கான சில முன்னுரைகள் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பிரம்மாண்டமாக, மூக்கில் விரலை வைக்க செய்யும் விதமாக. ஆனால் நாவலைப் படித்தால் சப்பென்று இருக்கும். கவிதைகளைப் பொறுத்தமட்டில் குருவித் தலையில் கிரீடத்தை தூக்கி வைத்ததைப் போல இருக்கும்.
3) நாம் ஒரு சினிமாவைப் பார்க்கிறோம். அதற்கு முன் யாராவது பத்து நிமிடங்கள் முன்விளக்கம் அளிக்கிறார்களா? ஒரு ஓட்டலுக்கு சென்று பிரியாணி சாப்பிடும் முன்பு அதன் மாஸ்டர் வந்து நின்று அதன் குணநலன்களை விளக்குகிறாரா? ஒரு நண்பரை சந்தித்து உரையாடும் முன்பு அவருடைய பிரச்சாரகர் வந்து நண்பரின் ஆளுமையை விரிவாக சித்திரம் வரைந்து காட்டுகிறாரா? ஒரு ஸ்வீட் கடைக்குப் போனால் யாராவது நம் முன் வந்து சாப்பிட்டுக் காட்டுகிறார்களா? ஒரு போன் வாங்கினால் அதன் செய்விளக்க நூலைக் கூட திறந்து பார்ப்பதில்லை. வாழ்க்கையில் அத்தனை விசயங்களையும் அப்படியே ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளும் நாம் புத்தக வாசிப்பை ஏன் ஏதோ இதய அறுவை சிகிச்சை போல எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்? ஏன் இவ்வளவு முஸ்தீபுகள்? எனக்கு சத்தியமாக புரியவில்லை.
4) மிகவும் அத்தியாவசியம் என்றால் ஒரு நாவலின் வரலாற்றுப் பின்னணியை முன்னுரையில் தரலாம் என சிலர் சொல்லுவார்கள். அதன் மொழி, தொழில்நுட்பம் ஆகியவற்றை புரிந்து கொள்ளத் தேவையான ஒரு விளக்கத்தையும் தரலாம் என்பார்கள். ஆனால் இதையெல்லாம் தேவைப்பட்டால் நாவலுக்குள்ளே கொண்டு வரலாம். அதையும் தாண்டி ஒரு நாவலின் வரலாற்றுப் பின்னணியை அறிய வேண்டுமென்றால் வாசகன் விக்கிபீடியாவில் படித்துக் கொள்ளலாம் எனும் போது முன்னுரை அவசியமில்லாமல் போகிறது. நான் ஒரு நாவலை அல்லது கட்டுரை நூலைப் படித்து பின்னர் அதன் விக்கிபீடியா பக்கத்தை மேய்வதுண்டு. அது நம் கருத்து சரிதான் என ஊர்ஜிதப்படுத்தும் அல்லது இதை ஏன் யாரும் குறிப்பிடவில்லை என கடுப்பேற்றும்.
5) முன்னுரைகளை தனியாக விமர்சனங்களாகப் படிக்கும் போது நன்றாக உள்ளன. ஏனென்றால் அவை தம்மளவில் சுவாரஸ்யமாக, ஒரு புதிய வெளிச்சத்தை அளிக்கலாம். தஸ்தாவஸ்கி பற்றி பக்தின் எழுதிய The Problem of Dostoevsky‘s Poetics, ராஜ் கௌதமனின் “புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ்” போன்று சில விமர்சனப் பிரதிகள் தம்மளவில் முக்கிய தத்துவ, சமூகவியல் எழுத்துகள். படைப்பையும் விமர்சனத்தையும் தனித்தனியாக படித்து ரசிக்கலாம், புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நான் விமர்சனத்தை ஒரு துணைப் பிரதியாக அல்ல, நிகர் பிரதியாகவே பார்க்கிறேன். உ.தா., ஹேம்லெட் நாடகம் குறித்து எழுதப்பட்டவற்றை தனியாகத் தொகுத்து ஜாலியாகப் படிக்கலாம். ஆனால் ஹேம்லெட் நாடகத்தைப் படிக்க அவை தேவையில்லை. விமர்சனம் என்பது புனைவுக்கான தர்க்கம் என சிலர் நினைக்கிறார்கள். எனக்கு அது தர்க்கம் எனும் பாவனையுடன் வருகிற புனைவு எனத் தோன்றுகிறது.
6) விமர்சனத்தை ஒரு படைப்புக்கு மட்டுமல்ல வாசிப்புக்கான அங்கீகாரமாகவே மாற்றி விட்டோம் என்பது தான் சிக்கல். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல்கலைக்கழகங்களில் இலக்கியம் கற்பிக்க துவங்கிய போது இலக்கியத்தில் என்ன கற்பிக்க உள்ளது, அது பொழுதுபோக்கு அல்லவா எனும் கேள்வி எழுந்தது. உடனே (மேத்யூ அர்னல்ட், ஐ.ஏ ரிச்சர்ட்ஸ் போன்ற) பேராசிரியர்கள் “இல்லை, இலக்கியம் நல்ல விழுமியங்களை மக்களுக்கு கற்பிக்கும், அவர்களை ஆற்றுப்படுத்தும்” என்றனர். இந்த போக்கு பின்னர் உலகம் முழுக்க பரவியது. பிரித்தானிய காலனியாக இருந்த நம்மிடமும் வந்தது. இப்போது ஒரு நாவலை எடுத்துக் கொண்டு வாசிக்க அமர்ந்ததும் ஒரு முன்னுரையாளர் திரையை விலக்கித் தோன்றி இன்னின்ன சங்கதிகளையெல்லாம் இந்த நாவல் வழியாக கற்றுக் கொள்வீர்கள் எனக் கூறுகிறார். இன்னொருவர் வந்து இது உலக இலக்கியத்தில் மகத்தான இடம் பிடிக்கும் படைப்பு என்கிறார். ஆனால் இதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லாத போது இது வாசிப்புக்கே இடையூறாகலாம். நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து இன்னும் விடுபட்டு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
7) பல் தேய்ப்பது, உண்பது, தூங்குவது, பேசுவது, வாகனம் ஓட்டுவது போன்றே வாசிப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன் நான். ஒப்பிடுகையில் பல் தேய்ப்பதை விட வாசிப்பு சிக்கலானது என்றாலும் சரியான பயிற்சியும் பழக்கமும் இருந்தால் அது பல்தேய்ப்பதைப் போன்றே எளிதாகவும் உடற்பயிற்சி, காதலிப்பது போல சவாலானதாகவும் ஒரே சமயம் இருக்கும். முன்னுரை வாசிப்பை ஒரு “மகத்தான”, “பிரம்மாண்டமான” அச்சுறுத்தும் செயலாக மாற்றி விடுகிறது. கடவுளுக்கும் பக்தனுக்கும் நடுவே வரும் பூசாரியைப் போல முன்னுரையாளர் இருக்கிறார்.
8) முன்னுரையினால் ஒரு கூடுதல் மதிப்பு கிடைத்து விடாதா? கிடைக்காது. புத்தகத்தின் அடிப்படைப் பகுதியாக இல்லாத ஒன்று எப்படி உபரி மதிப்பை அளிக்கும்? புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் உடற்பயிற்சியின் போது கொழுப்பு கரைவதைப் போல நீங்கள் முன்னுரையை உதிர்த்து விடுவீர்கள்.
9) முன்னுரை இலக்கிய ஆசான்களின் கைக்கு வரும் போது அது ஒரு குருபரம்பரையை உருவாக்கும் முயற்சியாகவும் இருக்கிறது. “இவர் எனக்கு நிகராக எழுதுகிறார், என் சீடர் எனும் மதிப்பைப் பெற தகுதியானவர், இவர் நான் மதிக்கும் உலக ஆசான்களுக்கு இணையானவர் (ஆனால் எனக்கு சற்று கீழே இருப்பவர்)” எனும் கோரல்களினால் வாசிப்புக்கு எந்த நலனும் இல்லை. இது இலக்கிய உலகுக்குள் செயல்படும் படிநிலையை சற்று கலைத்து திரும்ப அடுக்கும் வேலை தான். நிறைய இளம் படைப்பாளிகள் எப்படியாவது ஆசான்களின் ஆசியைப் பெற வேண்டும், ஆனால் எப்படி நேரடியாகக் கேட்பது எனத் தெரியாமல் “முன்னுரை கொடுங்க” என வற்புறுத்துகிறார்கள். விமர்சனம், பாராட்டுரை எழுத சோம்பல்பட்டு தள்ளிப் போடுகிறவர் கூட பதிப்பக அழுத்தத்தினால் உடனடியாக எழுதிக் கொடுத்து விடுவார்.
10) பதிப்பக எடிட்டர்களே முன்னுரை எழுதுவது அவலமானது. ஏனென்றால் அது என்னதான் நாணயமாக, புறவயமாக இருந்தாலும் ஒரு புரொமோஷன் தொனி வந்து விடுகிறது. புரொமோஷனை புத்தகத்தின் பகுதியாக்குவது தேவையில்லை. அதை வெளியே வைத்துக் கொள்ளலாம். நான் திறந்ததும் முதல் அத்தியாயத்துடன் ஆரம்பிக்கும் திரைமறைவில்லா புத்தகங்களையே விரும்புவேன். எழுத்தாளன், அவனுடைய பிற நூல்கள் பற்றின குறிப்புகள் இல்லாவிடில் இன்னும் நல்லது. ஒரு பூடகத்தன்மை, ஒரு மர்ம தொனி இருக்கும்.
11) புத்தகத்தை வாசிக்க உரை அவசியமில்லை என ஏற்கனவே சொன்னேன். ஆனால் ஒரு எழுத்துமுறையின் நியாயங்களைப் பேச, அது குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்க விமர்சனம், உரை அவசியம். அதாவது வாசிக்க அல்ல, அதைப் பற்றி பேச. இது ஒரு தனி துறை. உ.தா., “தேவதேவனை முன்வைத்து” என ஜெ.மோ முன்பு ஒரு நூல் எழுதினார். தேவதேவன் நவீனத்துவ பாணிக்கு விரோதமாக ஆற்றொழுக்காக, அருவிப் பாய்ச்சலாக எழுதுபவர், அதே நேரம் செவ்வியல் தன்மையுடன் இருப்பவர், பின்நவீன கலகப் போக்குகள் இல்லாதவர். அவரை எங்கே கொண்டு போய் வைப்பது எனும் குழப்பம் உண்டு (இது வாசிக்கும் போது வரும் குழப்பம் அல்ல, அவரைப் பற்றி பேசுகையில் தோன்றும் குழப்பம்). இக்குழப்பத்தை நீக்க அந்நூல் உதவியது. அதே போல நம்முடைய கவிஞர்கள் பலருக்கும், சில புனைவாசிரியர்களுக்கும் (நகுலன், மௌனி) விமர்சன உரைகள் தேவைப்படுகின்றன. அண்மையில் என்னைத் தொடர்பு கொண்ட இளம் வாசகர்கள் பலரும் சாருவைப் பற்றி நான் எழுதிய விமர்சனக் கட்டுரை பிடித்துப் போய் என்னிடம் வந்ததாகக் கூறினர். ஏனென்றால் சாருவைப் பற்றி பேச ஒரு மொழி, தர்க்கம், சில நியாயங்கள் தேவைப்படுகின்றன. அதை ஓரளவுக்கு அக்கட்டுரை வழங்குகிறது. (ஆனால் சாருவை வாசிக்க அது தேவையில்லை.) இது போன்ற கதையாடல்களை நாம் பல முக்கிய படைப்பாளிகளுக்கு உற்பத்தி செய்ய வேண்டும்.
12) ஏன் இப்புத்தகத்தை எழுதினேன் என சுருக்கமாக ஒரு எழுத்தாளன் தன்னுரை எழுதினாலே போதும். அதற்குள் சில பலருக்கு நன்றி சொல்லலாம். ஒரு காதலிக்கு அதில் ஒரு சங்கேதக் குறியை புதைத்து வைக்கலாம். (லஷ்மி சரவணகுமார் பாணியில்) சவடால் விடலாம். பயமுறுத்தலாம். (ஜெ.மோ பாணியில்) ஒரு புனைவை உண்மையின் சாயலுடன் எழுதலாம். நானும் இந்த குற்றங்களை செய்திருக்கிறேன். பின்னால் படிக்க லஜ்ஜையாக இருக்கும். ஒரு சேட்டை என்கிற அளவில் இதையெல்லாம் சரி போகட்டும் என விட்டு விடலாம். ஒரு கட்டுரை நூலென்றால் அதிலுள்ள முக்கிய விசயங்களை தன்னுரையில் தொகுத்துத் தரலாம். அது வாசிப்புக்கு மிகவும் உதவும். ஆனால் முன்னுரைகளை மன்னிக்கவே முடியாது!