Skip to main content

நான் ஏன் கமலஹாசன்களை எதிர்க்கிறேன்?



“நீங்க ஏன் கமலை இவ்வளவு கடுமையாக வெறுக்கிறீங்க?” என ஒரு நண்பர் கேட்டார். (பொதுநலம் கருதி அவருக்கு அளித்த பதிலை இங்கு பகிர்கிறேன்.)


பதில்: “நான் கமலை வெறுக்கவில்லை. சொல்லப் போனால் ஒரு நடிகராக, இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக எனக்கு அவரை பிடிக்கும். சந்தேகமே இல்லை. ஆனால் அரசியலில் குதித்த பிறகே கமல் அதிகமாக சமூகம், அரசியல், பண்பாடு பற்றி உளற ஆரம்பித்தார். அவருடைய பேட்டிகள், டிவிட்டர் களமாடல்கள், பிக்பாஸ் போதனைகள் என. இது அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயத்தை கலைத்து விட்டது. அதாவது எனக்கு இதற்கு முன்பு கமல் என்கிற மனிதன் எப்படி சிந்திப்பான் எனத் தெரியாது; தெரியத் தொடங்கியதும் ஒரு கசப்பு, பயம் வந்து விட்டது. 


அடுத்து, கமலின் அரசியல் சித்தாந்தம். என்னதான் “மையம்” என அவர் வலியுறுத்தினாலும் உண்மையில் அவர் மையத்தில் இல்லை. அவர் வலதுசாரி சிந்தனையின் பக்கத்தில் தோளில் கைபோட்டுக் கொண்டு நிற்கிறார். இதை நீங்கள் சுட்டிக் காட்டினால் அவர் நாளை “பெரியார், நாத்திகம், அம்பேத்கர்” என்றெல்லாம் தயிர்சாதம் கிண்டலாம். ஆனால் அவருடைய கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் அப்பட்டமாக பாஜகவின் சித்தாந்தம், செயல்திட்டங்களுடன் இணக்கமானவை. தாராளமயமாதல், தனியார்மயமாதல், பொதுத்துறைகளை ஒழித்தல், அதிகாரப் படிநிலை, பொருளாதார அசமத்துவம், புதிய கல்விக் கொள்கை, சமூக நலத்திட்ட எதிர்ப்பு அவர் பாஜகவுடன் “கண்மணி அன்போடு காதலன்” எனும் நிலையில் தான் இருக்கிறார். மதவெறி அரசியலை மட்டும் நேரடியாக பேச மாட்டார் அல்லது இதுவரை பேசியதில்லை. ஆனால் “ஹேராமில்” அதற்கான துவக்கப் புள்ளிகளும் உண்டு. மதவாதத்தைப் பொறுத்தமட்டில் அவர் காந்தியத்துக்கும் ஆர்.எஸ்.எஸின் பாசிச சித்தாந்தத்துக்கும் நடுவில் எங்கேயோ சிக்கிக் கொண்டிருக்கிறார். 


ஆம், கமல் பாஜவை விமர்சித்திருக்கிறார். ஆனால் அது சீமான் தெறிக்க விடுவதை போலத் தான் - கட்சிக் கொள்கைகளில் எல்லாம் பல்லிளித்து விடுகிறது. கமல் எப்போதுமே இப்படித் தான் என நினைக்கிறேன். பாஜக அரசு தொடர்ந்து இருமுறை மத்தியில் வென்றுள்ளது அவரைப் போன்ற வேலி ஓணான்களுக்கு ஒரு துணிச்சலை அளிக்க வலப்பக்கமாய் சில அடிகள் எடுத்து வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, அடுத்த பத்தாண்டுகளில் பாஜக தொடர்ந்து வலுப்பெறுமானால் முழுமையான வலதுசாரியாக கமல் உருவெடுப்பார் என நினைக்கிறேன். 


ஏன் ஒருவரை மதிப்பிட இந்த கட்சிக் கொள்கை, அரசியல் நிலைப்பாடு முக்கியம் என நீங்கள் நினைக்கலாம். கமல் ஒரு புதிய குரல், எந்த ஊழல் பின்னணியும் இதுவரையிலும் இல்லாதவர், அவருக்கு வாய்ப்பளித்தால் எல்லாரையும் போலத் தான் அவருடைய அரசியலும் இருக்கும்? “எல்லா அரசியல்வாதியும் அடிப்படையில் ஒன்றே, கொள்கைகள் சும்மா பெயருக்குத் தான்” என நானும் ஒரு காலத்தில் நம்பினேன். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, குடியுரிமை திருத்த மசோதா என பாஜக தாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நாசக்கார கொள்கையாக, வாக்குறுதியாக நிறைவேற்றிய போதே நான் விழித்துக் கொண்டேன். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றல்ல, எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றல்ல என எனக்கு அப்போது விளங்கியது.

 ஒரு கட்சிக்குள்ள பிரத்யேக சமூக பொருளாதார கலாச்சார சித்தாந்தம், நம்பிக்கை, திட்டங்களே அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகான முடிவுகளை, நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன, இந்த அரசியல் சட்டதிருத்தங்கள், முடிவுகள் நம் வாழ்க்கையை தலைகீழாகி புரட்டிப் போடும் எனப் புரிந்து கொண்டேன்.

 நம் அன்றாட வாழ்க்கையில் எங்கே அரசியல் இருக்கிறது, அரசியல் வெறும் பேஸ்புக் அக்கப்போருக்கானது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை ஏற்படுத்திய விலை ஏற்றம் உங்களுடைய வாழ்க்கையை துளியேனும் பாதிக்கவில்லை என நீங்கள் உறுதியாக சொல்ல முடியுமா? “மோடி எங்களுக்காக ராமர் கோயில் கட்டி விட்டார்” என்கிற பாசத்துக்காக நீங்கள் ஒருவேளை மகிழ்ச்சியாகவே இருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளலாம். ஆனால் எதார்த்தத்தை மறுக்க முடியாது. பாஜக-அதிமுக கோட்டையான கோவையிலே மக்கள் ஜி.எஸ்.டியினால் நொந்து போயிருப்பதாகப் படித்தேன். ஆனால் நீங்கள் பாஜகவினரை குற்றம் சொல்லவே முடியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் தந்துள்ளதையே நிறைவேற்றினார்கள். அதை சரிவர புரிந்து கொள்ளாமல், விமர்சிக்காமல், எதிர்க்காமல் வாக்களித்த, அல்லது ஊமையாக இருந்த நாம் அல்லவா இந்த கொடுமைகளுக்கு பொறுப்பு!

 

காலம் மாறி விட்டது. இனி அரசியல் உங்கள் அன்றாடத்தின் பகுதியும் தான். பாராளுமன்றத்தில் நடப்பவை உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் குறைய காரணமாகும். ஒரே இரவில் நீங்கள் லாக் டவுன் என்ற பெயரில் வீட்டுச்சிறை வைக்கப்படுவீர்கள். வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் உங்கள் கண்முன்னால் பல்லாயிரம் மைல்கள் நடந்து மடியும் போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க நேரிடும். ஒரு ஆவணத்தை தாக்கல் செய்யும் போது ஏற்படும் பிழையால் உங்கள் குடியுரிமை மறுக்கப்படலாம் (அஸ்ஸாமில் முன்னாள் முதல்வருக்கே நடக்கும் போது ஏன் எனக்கும் உங்களுக்கும் நடக்கக் கூடாது). ஒரு கருத்தை எழுதியதற்காக நீங்களோ உங்கள் பிள்ளைகளோ கைது செய்யப்படலாம். இதற்கெல்லாம் காரணம் நாம் தான் - நாம் உஷாராக, கவனமாக, பொறுப்பாக இல்லை, அதனால் இந்திய ஜனநாயக அமைப்பு எனும் “கங்கையில்” “சாக்கடை” கலந்து விட்டது. 


இனி இது திரும்பத் திரும்ப நடந்து மோசமாகாதிருக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. நம்மால் ஆட்சியை தீர்மானிக்க முடியாது, ஆனால் விமர்சிக்க, எதிர்க்க, கருத்துக்களை நம் அளவில் திசைதிருப்ப முடியும். ஒரு சின்ன கல்லை எடுத்துப் போட முடியுமெனில் அதை செய்வோம். அதனாலே பாஜக கூட்டணியை, அவர்களைப் போன்றே கொள்கை கொண்ட மாற்று மூன்றாம் அணி கட்சிகளை நாம் புறக்கணிக்க / எதிர்க்க வேண்டும்.


கமல் குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம் வழங்குவது பற்றிப் பேசும் போது ஒரு விபரீதமான கருத்தை சொன்னார்: எப்படி சினிமாவில் லைட் பாய்க்கு ஒரு சம்பளம் ஹீரோவுக்கு ஒரு சம்பளம் என இருக்கிறதோ அப்படியே குடும்பத் தலைவிகளுக்கும் சம்பளம் வழங்குவோம் என்றார். இந்த லைப் பாய் சம்பள விவகாரம் மிக அபத்தமானது. விளக்குகிறேன்:

 சினிமாவுக்குள் ஊதிய விசயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆனால் கமல் அதை ஆதரிக்கிறார். இது சரி என்றால் ஒரு நாயகனுக்கு நூறு கோடி சம்பளமும் நடிகைக்கு சில லட்சங்கள் சம்பளமும் கொடுப்பது நியாயமாகி விடும். இது சரி என்றால் விவசாயிகள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை பண்ணுவதும், அவர்களுடைய விளைச்சலை விற்கிற தரகர்கள், முதலாளிகள் செழிப்பதும் நியாயமாகி விடும். இது சரி என்றால், நம்முடைய சாதி அமைப்பும் நியாயமாகி விடும். இது சரி என்றால் ஒரு தனியார் நிறுவனத்தில் எந்த வேலைப் பாதுகாப்பும் இன்றி மிகக்குறைந்த ஊதியத்துக்கு மக்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதும் சரி என்றாகி விடும். இது சரி என்றால் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் சரி ஆகி விடும். இது கமல் போகிற போக்கில் தவறி சொல்லிய கருத்தல்ல - அவருடைய “பேசும் படத்தைப்” பாருங்கள்; வாய்ப்பு கிடைத்தால் மார்க்ஸியம் பேசும் கீழ்த்தட்டினர் சட்டவிரோதமாக மேற்தட்டு முதலாளிகளின் இடத்தை எடுத்துக் கொள்வார்கள், திருடுவார்கள், பணக்காரர்களின் வீட்டில் தங்கி, அவர்களுடைய ஆடையை அணிவார்கள், ஏனென்றால் அவர்கள் அயோக்கியர்கள் என சித்தரித்திருப்பார்; துவக்க காட்சிகளில் நாயகனின் அறையில் கார்ல் மார்க்ஸின் படம் தொங்குவதை கவனியுங்கள். இப்படித் தான் அவர் கம்யூனினஸத்தையே அபத்தமாக புரிந்து கொள்கிறார். அவருடைய எல்லா படங்களையும் பாருங்கள் - ஏழைகள், கீழ்த்தட்டினர், கீழ்சாதியினர், வேலைக்காரர்கள் சதிகாரர்களாக இருப்பார்கள். இப்படியான ஒருவர் ஒரு குடும்பத் தலைவியின் வீட்டு பணிக்கு ஊதியம் கொடுப்பதை வீண் செலவு என்கிறார். அதற்குப் பதிலாக அவர்களே சுயமாக சம்பாதிக்கும் பட்சத்தில் வேலைகளை அளிப்போம் என்கிறார். அதுவும் அவர்களுடைய கல்வித் தகுதியை பொறுத்து. நான் கேட்கிறேன், அவர்கள் என்ன இப்போது வேலை கிடைக்காமலா வீட்டில் அடங்கிக் கிடக்கிறார்கள்? இல்லை. அவர்கள் சுதந்திரமாக வெளியே சென்று வேலை பார்க்க முடியாதபடி இந்த குடும்ப அமைப்பு இருக்கிறது. கமலின் தீர்வு என்ன பண்ணுகிறதென்றால் 1) குடும்ப சுரண்டலை நியாயப்படுத்துகிறது, 2) குடும்ப வேலைகளையும் பார்த்த பிறகு அப்பெண்கள் கூடுதலாக கைத்தொழில் போன்ற பணிகளையும் செய்து சம்பாதிக்கட்டும் என்கிறது. என்ன ஒரு திமிர்த்தனம்! அயோக்கியத்தனம்! இது போன்ற பெண் விரோதக் கருத்துக்களை அவர் பிக்பாஸில் உளறும் போதும் உதிர்த்திருக்கிறார். அதை கவனியுங்கள். கமலுடைய தயாரிப்பு நிறுவனத்தில் செய்த வேலைக்கான ஊதியம் இன்னும் தரப்படவில்லை என கௌதமி சொன்ன போது அதற்கு உலகநாயகன் அளித்த பதிலைப் பாருங்கள். இதோடு பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில்  குற்றவாளிகளின் சார்பாக அவர் பேசியிருப்பதைப் பாருங்கள். இந்த புள்ளிகளை இணைத்தால் உங்களுக்கு கமல் குறித்த துல்லியமான சித்திரம் கிடைக்கும். 


இவரையா புதிய குரல் என்கிறோம்? சத்தியமாக இல்லை. இவர் இற்றுப் போன பிற்போக்குப் பார்வை கொண்ட ஒரு மிகப்பழைய மனிதர். இவரிடம் இருந்து ஒலிப்பது ஒரு சனாதனக் குரல். இவருடைய சாதியை வைத்து நான் இதை சொல்லவில்லை, கருத்துக்களை வைத்தே மதிப்பிடுகிறேன். இந்த சனாதன சிந்தனையுடன் நவதாராளவாத வலதுசாரிப் பார்வையும் சேர்ந்து கொள்கிறது. கமல் என்னதான் முற்போக்கு வேடம் போட முயன்றாலும் அவரால் பிற்போக்கு வலதுசாரியாகவே செயல்பட முடியும். 


இந்த கட்டத்திலும் இதையெல்லாம் தெரிந்திருந்தும் கமலை ஆதரிக்கிறவர்கள் மறைமுக இந்துத்துவர்கள், நவதாராளாவாத சுரண்டலை விரும்புகிறவரக்ள், சனாதனவாதிகள், திமுக வெறுப்பாளர்கள் அல்லது அவரது தீவிர கமல் ரசிகர்கள். இதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல், திமுகவுக்கு கமலே மேல் என ஜல்லியடிப்பது தான் அயோக்கியத்தனம். ஆம், திமுக தலைமையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் கொள்கை அளவில் திமுக நேரடியாக இப்படியான பிற்போக்குத்தனங்களை ஆதரிக்காது. இலவசங்களை ஒழிப்போம் எனக் கூவியபடி மத்தியில் மோடி செய்வதை போலச் செய்து மோசமான மக்கள் விரோத சட்டங்களை இயற்றாது. என்னதான் குடும்ப அரசியல் என்றாலும் குறைந்தபட்ச ஜனநாயக மாண்புகள் பேணப்படும். ஆனால் கமலைப் போன்றவர்களை நாம் ஆதரித்தாலோ நரேந்திர மோடிகள் தமிழக மண்ணில் வேறு கட்சிப் பெயர்களில் தோன்றி நிலைப்பெற உதவுகிறோம் எனப் பொருள். பல நூறு ஆண்டுகள் இந்த மாநிலத்தை பின்னுக்குத் தள்ளப் போகிறோம் எனப் பொருள்.


தனிப்பட்ட முறையில் எனக்கு கமலின் நடிப்பும் பிடிக்கும். ஆனால் அவரைப் போன்றவர்களின் அரசியலை எதிர்த்தே ஆக வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். தனிப்பட்ட வெறுப்போ மூர்க்கமான திமுக ஆதரவோ அல்ல என் கமல் எதிர்ப்புக்கான காரணங்கள். சித்தாந்தம் மட்டுமே!


எந்த அடிப்படை அறிவும் இல்லாத, பாசிச ஆதரவாளர்கள் மட்டுமே இப்போதைக்கு கமலை ஆதரிக்க முடியும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...