இன்று என்னை சந்திக்க நண்பர் ஒருவர் இக்கேள்வியை கேட்டார்: autofiction என்றால் என்ன? அதற்கும் புனைவுக்கும் என்ன வித்தியாசம்?
என் பதில்: புனைவு என்றால் பிறருக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனையால் உருவாக்குவது. ஆட்டோபிக்ஷன் என்றால் தனக்கு நடக்காதவற்றை நடந்ததாக கற்பனை பண்ணி எழுதுவது. அத்துடன் அந்த பாத்திரமாகவே சமூகவலைதளம், பேட்டிகளில் டெரராக வாழ்ந்து காட்டுவது. எழுத்திலும் நேரிலும் புனைவாகவே உலக வேண்டும் என்பதால் ஒப்பிடுகையில் ஆட்டோபிக்ஷன் மிகவும் சிரமம்.
நீங்கள் நிஜவாழ்வில் ஒரு எறும்பைக் கூட கொல்லாதவராக, எந்த சாகசமும் இல்லாத வாழ்க்கையை வாழலாம். ஆனால் ஆட்டோபிக்ஷனில் ஹீரோவான நீங்கள் சின்ன வயதில் பெற்றோரால் வதைக்கப்பட்டவனாக, வீட்டை விட்டு ஓடிப் போனவனாக, தன் பிழைப்புக்காக எல்லா விளிம்புநிலை வேலைகளையும் செய்தவனாக இருக்க வேண்டும். பல கொடூரங்களை பால்யத்தில் கண்டவனாக இருக்க வேண்டும். பதின்வயதில் சாராயம், கஞ்சா போன்ற பழக்கங்கள், வன்முறை, கஞ்சா கடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபட்டு பிறகு திருடனாக, ரௌடியாக மாறி, சில வருடங்கள் ஆண் பாலியல் விபச்சாரியாகவும் இருக்கலாம்
. இதெல்லாம் போதவில்லை என்றால் நீங்கள் சில வருடங்கள் மாபியா கும்பல்களில் ஒரு முக்கிய நபராக, அதே நேரம் இலக்கியம், இசை என கலாச்சார நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். கொலை, அடிதடி, பலாத்கார இதையெல்லாம் உணர்ச்சியில்லாமல் டீல் செய்பவனாக இருக்க வேண்டும். முதல்வரில் இருந்து மத்திய அமைச்சர் வரை உங்களால் பலன் பெற்றிருப்பார். ஆனால் நீங்கள் எதையும் கோராமல் இருட்டிலே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இந்த சமயம் உங்களை ஒரு காதல் கடவுளாக வழிபடும் பல பெண்கள் அவன் வாழ்க்கையில் கடந்து செல்வார்கள். நீங்கள் எந்தளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கிறீர்களோ அந்தளவுக்கு இந்த பெண்கள் உங்களிடம் மண்டியிடுவார்கள். இவர்கள் சின்ன சின்ன காரணங்களுக்காக, உங்கள் மீதான காதலுக்காக கொலையுண்டும், தூக்குமாட்டியும், தன்னை எரித்தும் மாண்டு போவார்கள். (கதையில் ஒரு சர்வதேச கோணம் வேண்டுமெனில் நீங்கள் மாபியாவில் இருந்து அல்கொய்தாவுக்கு சென்று, அங்கு அமெரிக்க உளவுப்படை சல்லடை போட்டு தேடும் படுபயங்கர தீவிரவாதியாகியதாக எழுதலாம்.) ஒரு கட்டத்தில் போதும் என முடிவு செய்து தான் சம்பாதித்த அதிகாரம், தொடர்புகளை உதறி விட்டு ஊருக்குத் திரும்பி நீங்கள் ஒரு எழுத்தாளனாவதாக, அங்கு பல சக எழுத்தாளர்களை டீல் செய்து, வாசகிகளுடன் சல்லாபித்து வாழ்வதாக முடிக்கலாம். அல்லது அல்கொய்தாவில் சேரும் இடத்தில் கட் செய்து நீங்கள் ஒரு விளையாட்டு வீரனாக, உன்னத கலைஞனாக, வியாபார காந்தமாக மாறி, உலகின் மிக முக்கியமான பணக்காரனாகி, பின்னர் ஒருநாள் எல்லாவற்றையும் உதறி துறவியாக இமய மலைக்கு செல்வதாக மாற்றலாம். அதிகாரம், பணம், குரோதம், இச்சை எல்லாம் வெறும் மாயை என புரிந்து நீங்கள் ஒரு விழிப்புணர்வை தன் மலைப்பயணத்தில் பெற்று ஆன்ம உச்சம் பெறுவதாக எழுதலாம்.
இப்படி பார்முலாவை சரியாக கையாண்டால் சிறப்பான ஆட்டோபிக்ஷன் ரெடி.
அவ்வப்போது வாசகர்களில் உங்கள் எந்த நூலில் சொந்த அனுபவம் முழுமையாக வந்துள்ளது எனக் கேட்பார்கள். அப்போது, “என் சொந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது, நிஜத்தை எழுதினால் என்னைக் கொன்றே விடுவார்கள், ஆனால் இன்னின்ன நூல்களில் லேசாய் உண்மை ஒளிந்துள்ளது, நீங்களே கண்டுபிடியுங்கள்” என பூடகமாக பேச வேண்டும். தலையை பிய்த்துக் கொள்ளும் வாசகர்கள் உங்களைப் பற்றின பல புரளிகளை கூடுதலாக பேசி வளர்த்து தாமும் ஆட்டோபிக்ஷன் படைப்பாளி ஆவார்கள்.
