Skip to main content

கமல் எனும் 'யூதர்'


பி-டீம், சி-டீம் எல்லாம் விடுங்கள். கொள்கை அளவில் பாஜகவின் தமிழ் வடிவமே மய்யம். இந்த அரசியலை கமல் ஹே ராமிலேயே ஆரம்பித்து விட்டார். "கோட்ஸே கெட்டவன் அல்ல, அதற்காக அவன் முழுக்க நல்லவனும் அல்ல, இந்த காந்தியின் அரசியலினால் பிரிவினை வந்து எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்? ஆனால் அதுக்காக காந்தியை நாம் முழுக்க மறுக்கவும் இயலாது, அவர் ஒரு மகாத்மா" என பிடிகொடுக்காமல் வலதுசாரித்தனம் பேசும் படமே அது. அதனாலே தோல்வியுற்றது. 
இந்து, இந்தி, இந்திய தேசிய விசயத்தில் மய்யத்தின் அத்தனை கொள்கைகளும் இப்படி வலதுசாரிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குபவையே. அதை சூரப்பா விவகாரத்தில் பார்த்தோம். இப்போது மும்மொழிக் கொள்கையிலும். உளவியல் ரீதியில் பார்த்தால், கமலுக்கு எளிய சாமான்ய தமிழ் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், கலாச்சாரம், இவற்றை முன்னிறுத்தும் அரசியலுடன் உடன்பட முடியவில்லை எனத் தோன்றுகிறது. 'மனதளவில்' அவர் இம்மண்ணின் மைந்தன் அல்ல. அவருடைய எந்த வணிகப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் சொந்தக்காரர்கள் அவருக்கு எதிராக குழிபறிப்பார்கள்,  சொந்த சாதிக்காரர்கள் ஒன்று குறுகின மனப்பான்மை கொண்டவர்களாகவோ பகுத்தறிவில்லாத மூடர்களாகவோ இருப்பார்கள். ஒரு கிராமத்தில் ஒருவர் கூட ஹீரோவை புரிந்து கொள்ள முடியாதபடிக்கு கீழே இருப்பார்கள். இந்த திரைக்கதை டெம்பிளேட் கமலுக்கு சமூகம் குறித்துள்ள எண்ணப்பாட்டை வெளிப்படுத்துவது. இப்போதும் கூட அவரால் தனக்குத் தெரியாதவர்களிடம், தன் புகழ்பாடி அல்லாதவர்களிடம் சகஜமாக பேச முடியாது. பவுன்சர்கள் இல்லாமல் அவரால் பயணிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினாலே பதற்றம். இதுவே தன் மொழியை, மக்கள் மொழியை பாதுகாக்கும் தெளிவற்றவராக அவரை ஆக்குகிறது. தனக்கு இணக்கமாக இல்லாத மக்களை அவரால் புரிந்து கொள்ளவோ நேசிக்கவோ முடியாது. ஏனென்றால் மக்களைப் பார்த்ததும் இவர்கள் நம்மவர்கள் அல்ல என்றே நினைக்கிறார். அவர்கள் "நான் உங்கள் ரசிகன்" என சரணடையாவிடில் அவர் முகத்தில் புன்னகையே வராது. 

கமல் ஒரு தனியர். எலைட்டிஸ்ட். அந்நியர். இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்கும் குழப்பவாதி. மும்மொழியை விடுங்கள், அவருக்கு - தன்னைத் தவிர -  யார் மொழியைப் பற்றியும் அக்கறை இல்லை. ஏனென்றால் 'மனதளவில்' இது அவரது மாநிலமே அல்ல. கொஞ்சம் மிரட்டினால் நான் வெளிநாடு போகிறேன் கிளம்பி விடுவார். அவர் மனதளவில் தான் ஒரு தமிழ் யூதன் என நினைக்கிறார் எனத் தோன்றுகிறது.(இதை நான் சாதியளவில் சொல்லவில்லை. இது ஒரு கலாச்சார பிரச்சனை.) இவரை நம்பி வாக்களிப்பவர்களை என்ன சொல்வது?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...