ம.நீ.ம வேட்பாளர் பத்மபிரியாவின் பேட்டியைப் பார்த்தேன்.
1) கட்சிக்கு ஏன் வந்தீங்க என்று கேட்டால் “கட்சியின் கொள்கைகள் பிடித்து வந்தேன்” எனச் சொல்ல வேண்டும். ஆனால் இவர் வெள்ளந்தியாக “கமல் சார் அழைத்தார், சேர்ந்தேன்” என ஒப்புக் கொள்கிறார். நியாயமே! ம.நீ. மய்யத்துக்குத்தான் கொள்கையே கிடையாதே.
2) கமலைப் போன்றே சதா “நான் ... நான் ... நான்” என் ஒரே சுயமுன்னெடுப்பு. ஒரு இடத்தில் கூட இப்போதுள்ள அரசுடன் எப்படி சித்தாந்த ரீதியாக முரண்படுகிறோம், தமது அரசியல் எப்படி வேறுபட்டது எனச் சொல்லவில்லை. கடந்த ஐந்து வருட கால அரசியல் சம்பவங்கள், நிலைப்பாடுகள் பற்றிக் கூட சொல்ல ஒன்றுமில்லை. செய்தித்தாள் கூட வாசிக்காதவர்களே அக்கட்சியில் இருக்கிறார்கள். கமலை போலச் செய்வதே வேட்பாளர்களின் ஒரே கொள்கை.
3) சாதி குறித்து அவர் சொல்வது இன்றைய கணிசமான மேற்தட்டு மாணவர்களிடம் உள்ள கருத்து தான். ஆகையால் எனக்கு இதில் பெரிய ஆச்சரியமில்லை. விண்ணப்ப படிவத்தில் சாதியைக் குறிப்பிடாமல் விட்டால் சாதி ஒழிந்து விடும் என அவர் மட்டும் அல்ல பத்தாம்பசலித்தனமாக சிந்திப்பது, கமலும் தான். இது இரண்டு விசயங்களைக் காட்டுகிறது:
அ) இவர்கள் உச்சிகோபுரத்தில் வசிக்கிறார்கள். மக்களுடன் மக்களாக இல்லை. தம்முடைய சொந்தபந்தம் தாண்டின, சொந்த வர்க்கத்தைக் கடந்த நட்புறவுகள் கூட இவர்களுக்கு இருக்காது. மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து” படத்தில் இளைஞர்கள் தேர்தலில் வென்று சட்டமன்றத்துக்கு செல்வார்கள். அந்த இளைஞர்களும் அரசியல் பேசாமல், சித்தாந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் சும்மா குளம் வெட்டி, பாட்டுப் பாடினால் அது முன்னேற்றம் என நினைப்பார்கள். சூர்யா பாத்திரம் ஆந்திராவை சேர்ந்த ஜார்ஜ் ரெட்டி எனும் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர் தலைவனின் வாழ்க்கையை ஒட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அவனுக்கு எந்த அரசியல் சார்பும் இல்லாதது போல மணி காட்டியிருப்பார். இதைத் தான் மணி, கமல், பத்மபிரியா போன்றவர்கள் ஒரு அரசியல் தகுதியாகவே கருதுகிறார்கள். ஏனென்றால் அரசியல் சிந்தனை ஒருவித சீரழிவாம். அதனாலே எங்காவது கருத்து சொல்லி மாட்டிக் கொள்கிறார்கள். சாதியை விடுங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஏன் பேதியாகிறது எனக் கேட்டால் கூட தெரியாது.
ஆ) சாதி என்பது விண்ணப்ப படிவத்திலே மட்டும் இருக்கிறது என நினைப்பது சாதிய மரபு, சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவற்றை பின்பற்றி சாதிக்குள்ளேயே வாழ உதவுகிறது. அதாவது உண்மையில் இருந்து தப்பித்து செல்ல இது ஒரு எளிய உத்தியாகிறது. சாதியை மற்றமையாக்க உதவுகிறது. கமலின் மகளின் பெயர் ஸ்ருதி ராஜலக்ஷ்மி. தாத்தா, பாட்டியின் பெயரை பேரன், பேத்திக்கு வைப்பது ஒரு சாதீய சமூகப் பழக்கம். அதே போலத்தான் என்னதான் சிக்கன் சாப்பிட்டாலும் தன்னுடைய கணிசமான நண்பர்களை பிராமணர்களாகவே கமல் வைத்திருக்கிறார். என்னதான் பிராமணர்களை கிண்டலடித்தாலும் பிராமணப் பின்புலம் கொண்ட நாயக பாத்திரம் ஏற்பதில் அவருக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. உ.தா., “தசாவதாரம்” படத்தை எடுத்துக் கொள்வோம். அதில் கமல் பல சாதிப் பின்புலம் கொண்ட பாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று பிராமண பாத்திரம் - ரங்கராஜன் நம்பி. அவருக்கு மன்னன் மரண தண்டனை அளிக்கும் போது வரும் பாடல் “கல்லை மட்டும் கண்டால்...”. இப்பாடலில் வரும் இவ்வரியை கவனியுங்கள்:
“ராஜலெட்சுமி நாயகன் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்”
தன் சொந்த தாய் தந்தையரின் பெயரை ஏன் கமல் இந்த பாத்திரத்துக்கு மட்டும் சூட்டுகிறார். ஏன் தாழ்ந்த சாதிப் பாத்திரத்துக்கு அதை செய்யவில்லை? சரி அது ஒரு பிராமணப் பாத்திரம், அதனால் அப்பெயர்கள் என்றால் ஏன் கமலின் சொந்த பெற்றோரின் பெயர்கள்? அங்கே வருகிறது அவரது சாதிப் பாசம் - அவர் அப்பாத்திரத்துடன் தன்னை நேர்வாழ்வில் அடையாளப்படுத்த விரும்புகிறார்.
எதற்கெடுத்தாலும் தன் அப்பா, தாத்தா என ஏன் ரீல் ஓட்டுகிறார் கமல்? ஏனென்றால் அந்த பிடிப்பு அவருக்கு உவகை அளிக்கிறது. குடும்பம் தான் சாதியின் அடிப்படை, அதை ஒழிக்க வேண்டும் என பெரியார் சொன்னது இதனால் தான். இப்படியானவர்களுக்கு சாதியை விட முடியாது. சாதியை விட வேண்டுமென்றால் சொந்தங்களிடம் இருந்து விலக வேண்டும், கோயில் சம்பிரதாயங்களை விட வேண்டும். Who Were the Shudhras நூலில் முன்னுரையில் அம்பேத்கர் தெளிவாக சொல்லுகிறார் - ‘சாதியினால் பலன் அடைகிறவர்கள் வைதீக இந்து மதப் பிரதிகளை, வைதீகத்தை எதிர்க்க மாட்டார்கள்’ என்று. ஏனென்றால் அவர்களுக்கு அது தேவையில்லை. அல்லது குறைந்தது சமூக அரசியல் அக்கறை இருக்கக் கூடியவர்கள், வாசிப்பும், புரிதலும் கொண்டவர்கள் என்றால் ஒரு பொதுநோக்கின் பொருட்டு வைதீகத்தை எதிர்ப்பார்கள் (திராவிட மரபில் நேர்ந்ததைப் போல). கமல்களும், பத்மபிரியாக்களும் வைதீகத்தில் ஊறிப் போனவர்கள். அவர்கள் சான்றிழைக் கடந்து யோசிக்காதது சாதி நெருப்பு அவர்களை தீண்டியதே இல்லை என்பதால் தான்.
4) என்னதான் சுயசிந்தனை படைத்தவர்கள் ஆரம்பத்தில் ம.நீ.மய்யத்தில் சேர்ந்தாலும் கமல் தன்னைப் போன்ற பால்புட்டிகளுக்கே (தடவல் மாஸ்டர் சிநேகன், ஶ்ரீப்ரியா, பத்மப்ரியா) வேட்பாளராகும் வாய்ப்பளிக்கிறார். எந்த அரசியலும் தெரியக் கூடாது, சித்தாந்த புரிதல் இருக்கக் கூடாது, எதிர்த்து கேள்வி எழுப்பக் கூடாது, தன்னை சதா புகழ வேண்டும் என்பதே கமல் இவர்களுக்கு வைக்கும் அளவுகோல். அதில் தேறி முதல் மதிப்பெண் பெற்றவரே பத்மபிரியா.
5) பத்மபிரியாவுக்கு தமிழிலும் பேச வரவில்லை. ஆங்கிலத்தையும் தப்பு தப்பாக பயன்படுத்துகிறார். இவர் ஒரு ஆசிரியையாக இருந்தார் என நினைக்கும் போது பக்கென்கிறது.
6) ஆர்.எஸ்.எஸ் ஆட்களிடம் இருந்து சித்தாந்தத்தை உருவி, அவர்களுடைய சங்கி மனநிலையை மட்டும் தக்க வைத்தால் மக்கள் நீதி மய்யம் வந்து விடும். சிம்பிள் பார்முலா!
