“குயின்” வெப்ரீசிஸ் (MX player) பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா “என்னை ஏன் எந்த நிபந்தனையும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?” என தவிப்புடன் கேட்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர் அமைதியாக “தாயால் மட்டுமே நிபந்தனையில்லாத அன்பைத் தர முடியும். வேறு எல்லாரிடமும் நமக்கு நிபந்தனைக்குட்பட்ட்டே அன்பு கிடைக்கும்.” என்கிறார். என்னவொரு பளிச்சென்ற, ஆழமான வசனம். இது ஜெயலலிதாவின் ஆங்கிலப் பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட கருத்து தான் என்றாலும் வசனமாக வருகையில், அதுவும் எம்.ஜி.ஆரின் இடத்தில் இருந்து சொல்லப்படுகையில் பிரமாதமாக இருக்கிறது. இது மட்டுமல்ல வேறிடங்களிலும் பல அழகான வசனங்கள் உண்டு. பொதுவாக கௌதம் மேனனின் படங்களில் வசனம் மணிரத்னம்தனமாக இருக்கும், ஆனால் இப்படத்தில் இலக்கியத்தனமாக உள்ளது. ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்துவமான பேச்சு பாணி உள்ளது, அதற்கேற்ற வசனங்களும். கார் ஓட்டுநரால் இந்த மாதிரி தெளிவாக பேச முடியாது, ஆனால் அவர் மிகையாகவும் பட்டும்படாமலும் பேசுகிற பாணியில் சொல்லப்படாத சங்கதிகள் தொனிக்கின்றன. ஜெயலலிதாவின் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரான சிஸ்டர் ஒருவர் பேசுகிற வசனங்களும் அப்படியே தனித்துவமாக பொருத்தமாக உள்ளன. யாரோ திறமையான ஒரு வசனகர்த்தா விளையாடி இருக்கிறார்!
இதை ஒட்டிய பொதுவான ஒரு கேள்வி: அன்னையின் அன்பு பரிபூரணமானதா, நிபந்தனைக்கப்பாற்பட்டதா?
“குயினில்” கூட ஜெயலலிதாவின் அம்மா தனது மகன் மீது தான் கூடுதல் அன்பாக இருக்கிறார்; அதனாலே தொடர்ந்து அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கின்றன. ஆனால் இந்தளவுக்கான அன்பு கூட எம்.ஜி.ஆரிடம் இல்லையே என்பதையே அவரை உடைய வைக்கிறது.
நடப்புலகில், காதலனுடன் ஓடிப் போகும் பொருட்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து, விஷம் ஊட்டி கொல்லும் அன்னையர் இல்லையா? பெற்ற பிள்ளைகளிடம் சின்ன விசயங்களுக்காக கோபம் கொண்டு துரத்தி விடும் பெற்றோர் இல்லையா? ஆணவக் கொலை செய்யும் பெற்றோர்? காதல் தெரிய வரும் முன் வரை தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடி விட்டு அடுத்த நொடி அதே மகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விடும் பெற்றோரை எப்படி புரிந்து கொள்வது? இதையெல்லாம் அரிதான நிகழ்வுகள் என்று கொண்டால் ஒன்றுக்கு மேலான குழந்தைகள் உள்ள வீடுகளில் ஒரு குழந்தை அதிக செல்லத்துடனும் மற்றொன்று குறைவான கவனிப்புடனும் ஏக்கத்துடனும் வளர்க்கப்படுதில்லையா? இந்த தலைப்பில் அண்மையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சியே நடத்தினார்கள். உணவில் கூட பாரபட்சம் காட்டுகிறார்கள் என தாய்மாரை நோக்கி குழந்தைகள் குற்றச்சாட்டு வைத்தார்கள். எத்தனையோ பெண் பிள்ளைகள் தமது அம்மா அண்ணனுக்கோ தம்பிக்கோ காட்டுகிற அன்பில் சிறுபகுதியை கூட தமக்குத் தருவதில்லை என மனம் கசிகிறார்கள். இது பொறாமையாகி வெறுப்பாக மாறி வெளியே ஆண்கள் சற்று கூடுதலாக மதிப்பு பெற்றால் அவர்களை கொலைவெறிக்கு ஆளாக்குகிறது. இந்த பாலின பாரபட்சத்தை எப்படி புரிந்து கொள்வது? அன்னையின் அன்பு கூட நிபந்தனைக்கு உட்பட்டதே என சொல்லத் தோன்றுகிறது.
கடைசியாக, அன்பு நிபந்தனையற்றதாக உள்ளது அத்தனை நல்லதல்ல என்றும் சொல்ல வேண்டும். அப்படியான அன்பு ஒரு சர்வாதிகாரமாக, துயரம் தரும் ஆட்கொள்ளலாக மாறி விடும். அன்பு பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாருக்கும் நிரூபிக்க தேவையில்லாமல், அவ்வப்போது தோன்றி மறைவதாக, தொடர்ச்சியை பற்றி கவலைப்படாததாக, இறுக்கமற்றதாக இருப்பதே சுதந்திரமானது. அன்னையரின் அன்பு ‘நிபந்தனைக்கு உட்பட்டதாக’ இருக்கையில் அவர்கள் அதை ரொம்ப சீரியஸாக எடுக்காமலும் இருக்க வேண்டும். “நீயா நானா” நிகழ்ச்சியில் இன்னின்ன காரணங்களுக்காக இந்த பிள்ளையிடம் கூடுதல் அன்பு காட்டுகிறேன் என தாய்மார் பாரபட்சத்தை நியாயப்படுத்துவதை கவனித்தேன். அந்த நியாயப்பாடே அவர்களுடைய பிரச்சனை, அது அவர்களை அநீதியாக அன்பு காட்டுபவர்களாக மாற்றுகிறது. போகிற போக்கில், முந்தின நொடியை மறந்து விட்டு அன்பு காட்டுகிற அன்னையரால் அனைவருக்கும் அன்னையாக இருக்க இயலும். நிபந்தனைக்கு அப்பாலான ஒரு பரிபூரண அன்பை கட்டமைக்க முயல்கையிலே நமது அன்னையர் பாரபட்சம் காட்டுகிறவர்களாகிறார்கள் என்பது ஒரு நகைமுரண்.
