அன்புள்ள பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே, என் மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நான் முதலில் இதைக் குறித்து மிகுந்த பயம் கொண்டிருந்தேன். ஆனால் தொடங்கிய பின்பே நான் இதை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் எனப் புரிந்தது. விசாரணை அரங்குக்குள் வரும்போது என் உடல் மெல்ல நடுங்கியது. தன்னிச்சையாகத்தான். என் கைகால்களில் ஏற்பட்ட நடுக்கம் என் குரலையும் பற்றிக்கொண்டது. அச்சத்தினால் வரும் நடுக்கமல்ல. பரவசத்தினால் வரும் நடுக்கம். நான் விசாரணைக் குழுவினரிடம் அல்ல கடவுளிடம் அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றே உணர்ந்தேன். இதுவரை நான் கோயில்களிலும், மதநூல்களிலும், தத்துவங்களிலும்கூட கடவுளைக் கண்டதில்லை. என் வாழ்க்கையின் தேடல் கடவுளைத் தேடுவதிலேயே இயல்பாக ஆரம்பித்தது. உங்கள் முன்வந்து நின்றபோது நான் கைகளைக் கூப்பி பேச்சற்று நின்றேன். நீங்கள் என்னை நகர சொன்னீர்கள். அப்போதுதான் ஏன் விழுந்து கும்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. நான் தரையில் குப்புற விழுந்திட முனைந்தபோது சிலர் வந்து என்னை அழைத்து ஓரமாக நிற்க வைத்தார்கள். மெல்லமெல்ல நீங்கள் என்னிடம் சில சிக்க...