Skip to main content

எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி



எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி

எனக்கு மலையாளத்தில் வாசிக்கத் தெரியாது என்பதால் எம்.டியின் சிறுகதைகளையும் நாவல்களையும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பிலோ ஒலிநூலாகவோ மட்டுமே கேட்டிருக்கிறேன். சில நூல்களுக்கு தமிழில் விமர்சனக் குறிப்பும் எழுதினேன். இளமையில் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது - முதல் காரணம் அவருடைய பாத்திரங்களில் எதாவது ஒரு பாரித்த இழப்புணர்வு இருந்தது. அவர் பீமனை எழுதினாலும் சற்றே சாதாரணமானவராக, குறைகள் கொண்ட மத்திய வர்க்க ஆளின் மனநிலையுடனே படைப்பார்கள். சின்ன பயமொன்று அவரது பாத்திரங்களை எப்போதும் ஆட்கொண்டிருக்கும். அது அவர்களை பலவீனர்களாக்கும். அவரது தறவாட்டு வீடும், அங்கு வாழும் மக்களும் கூட எப்போது வேண்டுமானாலும் மூழ்கலாம் எனும் கப்பலில் செல்லும் பயணிகளைப் போன்றே உணர்வார்கள். எல்லாருமே தப்பித்து ஓடிக்கொண்டிருப்பர். சமூகச் சூழலில் இருந்து, அவமானத்தில் இருந்து, கவலையில், வறுமையில், விதியில் இருந்து. துன்பியல் நாயகர்களின் பலவீனங்களும், இன்பியல் நாயகர்களின் சாதாரணத்தன்மையும் அவரது நாயகர்களிடம் கலந்திருக்கும். அதாவது வேடிக்கையான ஒருவர் நம்மை அழவைப்பதைப் போன்றே அவர்களது நடத்தையிருக்கும். பீமனையும் அப்புண்ணியையும் நான் இப்படியே பார்க்கிறேன். சதியன் சந்துவிடம் கூட இந்த அப்பாவித்தன்மை உண்டு. கொஞ்சம் பிசகினால் நாம் சிரித்துவிடக் கூட பலவீனம் கொண்ட துன்பியல் நாயகன். மிக உயர்ந்த குணங்களும் திறமையும் கம்பீரமும் படைத்தவர்களாக தன் துன்பியல் நாயகர்களை அவர் நாவல்களிலோ சினிமாவிலோ படைத்ததில்லை. அவரது "ஷெர்லாக்" என்றொரு கதையில் நாயகன் தன்னைப் பூனையாகவே உணர்வான். அவன் எவ்வளவு அலட்சியமாக, திமிராக நடந்துகொள்ள முயன்றாலும் அவன் தான் வெறும் பூனைதான் என உணர்ந்து தன்னிலைக்கு மீள்வான், அதை அவர் வாசகருக்கும் உணர்த்தியபடி இருப்பார். இதுவே எம்.டியின் நாயகர்களின் தனிச்சிறப்பு என நினைக்கிறேன்.

எனக்கு அவரது சிறுகதைகளின் கட்டுக்கோப்பு, அதிலுள்ள உருவகங்கள், நளினமான மொழி, அந்நியமாதல் பிடிக்கும். அவரது நாவல்களிலும் இந்த கவித்துமான தன்மையை, துயரக் காவிய தொனியை அதிக உணர்ச்சியில்லாத கட்டுப்பாடான மொழியில் வெளிக்காட்டும் பாங்கு உண்டு. "மஞ்ஞு" போன்ற சிறிய நாவல்களும் சில சிறுகதைகளும் கிட்டத்தட்ட கவிதையைப் போன்றே வடிவம் கொண்டவை.

என்னதான் அவர் முற்போக்காளர் என்றாலும், கேரளா முற்போக்கு இடதுசாதி பூமியென்றாலும் தம் நிலங்களையும் பாரம்பரிய வீட்டையும் பூர்வீக சமூக அந்தஸ்தையும் பொருளாதார வலிமையையும் இழந்த ஆதிக்கச் சாதியினரை பொதுச்சமூகத்தின் குறியீடாக மாற்றியதை யாரும் பெரிதாக அங்கு எதிர்த்ததாகத் தெரியவில்லை. இதுவே வங்காளத்தில் பிபூதி பூஷன் வேறொரு வடிவில் எழுதிய சங்கதி. இங்கு தமிழில் நகரமயமாக்கலால் சமூகக் கட்டுமானம் தகர்ந்தபோது அப்படியொரு கதையாடல் உருவாகவே இல்லை. நமது நவீன இலக்கியம் நகரமயமாக்கலைக் கொண்டாடியது, விமர்சித்தது, ஆனால் கிராம வாழ்க்கை குறித்த இழப்புணர்வைப் பேசவில்லை. இம்மாதிரி சமூக மாற்றம் சார்ந்த துயரங்களை எழுதுவதன் பிரச்சினை என்னவெனில் அவற்றை நாம் ஒட்டுமொத்தமான மனித குலத்தின் இருத்தலியல் துயரமாக, இருப்பின் புதிரின் உருவகமாக மாற்றாவிடில் புதிய காலகட்டம் தோன்றும்போது அக்கதைகள் அர்த்தமிழக்கும். மேலோட்டமாகத் தோன்றும். நாலுகெட்டு, காலம், அசுரவித்துக்கெல்லாம் இதுதான் நடந்தது.

நான் என் முப்பதுகளில் எம்.டியைப் படித்தபோது அவர் வெகுசாதாரணமான, உள்ளீடற்ற அதே நேரம் நளினமான ஸ்டைலான எழுத்தாளர் என்று தோன்றியது. அவரது அழகான மொழிநடையில் பிளாஸ்டிக் தன்மை உள்ளதாக, அவரது கதைகளை அவர் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதாக நினைத்தேன். ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி விழுந்ததும் நொறுங்குவதைப் போல அவரது கதைகள் மறுவாசிப்பில் உடைந்து சிதறின. அதனாலே நேற்று மலையாள டிவிகளில் எம்.டியை மகத்தான படைப்பாளி, மேதை என்றெல்லாம் அங்குள்ள ஊடகங்களும் இலக்கியவாதிகளும் புகழ்வதைக் கேட்டபோது அது மிகையென்று தோன்றியது. இவருக்குப் போய் ஏன் இவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்று கேட்கத் தோன்றியது.

எம்.டியிடம் பெரிய பிரச்சினை அவரிடம் தத்துவார்த்தமான தேடலோ எழுத்துக்குள் ஆடையக் கழற்றி வைத்து மூழ்குகிற துணிச்சலோ இல்லையென்பது. தன்னை மிகவும் கண்ணியமாகக் காட்ட அவர் மிகவும் பிரயாசைப்பட்டார் எனத் தோன்றுகிறது. தனிமனிதப் பிறழ்வுகளைச் சமூகச் சரிவுகளுடன் இணைப்பதையும், தனிமனிதத் தனிமையை இதன் வழியாகக் காண்பதையும் ஒழிய அவர் வேறெதையும் செய்யவில்லை. ஆனால் பெருங்கூட்டத்தின் நடுவிலும் கடும் தனிமை இருக்கிறது, பிறழ்வற்றுத் திரிவோர் மிகக்கொடூரமான குற்றங்களைப் புரிகிறார்கள். இதை எம்.டி பார்த்ததில்லை. அவர் கற்பனையான உலகம் ஒன்றை தனக்குள் உருவாக்கி அதற்குள் பதுங்கி வாழ்ந்துவிட்டார், அங்கு அவருக்கு பதிலில்லாத கேள்விகள் இல்லை, சுலபத்தில் தீர்வும் உண்டு. அங்கு இருமை மிகத் தெளிவாக நிறுவப்பட்டிருக்கும். இது முற்போக்குவாதியாக அவருக்கு அறம் சார்ந்த சிக்கல்கள் இன்றி உலகைப் பார்க்க உதவியது. ஆனால் இது பொய்யெனும் சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்த கொஞ்சம் கசப்பான பண்டம் மட்டுமே, அவரைப் போன்ற படித்த மத்திய வர்க்கத்தை ஏமாற்றும் போதை வஸ்து இது. இது நிஜம் அல்ல என்று மலையாளத்தில் யாரும் அவரிடம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

இது முதிர்ந்த வாசகனாக என் பார்வை. ஆனால் இளமைக் காலத்தில் அவர் எனக்குப் பெரும் உவகையைத் தந்தார் என்பது உண்மையே.
அவர் திரைக்கதை எழுதிய படங்களில் "சதயம்", "தாழ்வாரம்", "சுகிர்தம்" பிடித்தமானவை.

அவருக்கு என் அஞ்சலி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...