அன்புள்ள பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே,
என் மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நான் முதலில் இதைக் குறித்து மிகுந்த பயம் கொண்டிருந்தேன். ஆனால் தொடங்கிய பின்பே நான் இதை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் எனப் புரிந்தது. விசாரணை அரங்குக்குள் வரும்போது என் உடல் மெல்ல நடுங்கியது. தன்னிச்சையாகத்தான். என் கைகால்களில் ஏற்பட்ட நடுக்கம் என் குரலையும் பற்றிக்கொண்டது. அச்சத்தினால் வரும் நடுக்கமல்ல. பரவசத்தினால் வரும் நடுக்கம். நான் விசாரணைக் குழுவினரிடம் அல்ல கடவுளிடம் அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றே உணர்ந்தேன். இதுவரை நான் கோயில்களிலும், மதநூல்களிலும், தத்துவங்களிலும்கூட கடவுளைக் கண்டதில்லை. என் வாழ்க்கையின் தேடல் கடவுளைத் தேடுவதிலேயே இயல்பாக ஆரம்பித்தது. உங்கள் முன்வந்து நின்றபோது நான் கைகளைக் கூப்பி பேச்சற்று நின்றேன். நீங்கள் என்னை நகர சொன்னீர்கள். அப்போதுதான் ஏன் விழுந்து கும்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. நான் தரையில் குப்புற விழுந்திட முனைந்தபோது சிலர் வந்து என்னை அழைத்து ஓரமாக நிற்க வைத்தார்கள். மெல்லமெல்ல நீங்கள் என்னிடம் சில சிக்கலான ஆனால் தெளிவான நடைமுறை விதிகள், நம்பிக்கைகள், தர்க்கத்தின்படி இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளே நீங்கள் எனப் புரிய வைக்க முயன்றனர். உங்கள் உடல் அசைவுகள், நீங்கள் என்னைப் பார்த்தவிதம், உங்கள் சொற்தேர்வு, குரலின் மென்மை என்னை மீண்டும் மானுட உலகுக்கு அழைத்து வந்தன. ஆனால் உங்கள் மகத்தான அதிகாரத்தின் அமானுஷ்யதன்மை நான் அங்கிருந்த நேரம் முழுக்க உணரத்தான் செய்தேன். எந்நேரமும் நீங்கள் மெய்யறிவை போதிக்கக்கூடும், தரிசனம் சாத்தியப்படும் என நம்பினேன். அங்குள்ள அதிர்வு என்னை உள்ளுக்குள் உருகவும், உணர்ச்சிவயப்பட்டு நிர்மூலமாக உணரவும் வைத்தது. இதையெல்லாம் என்னிடம் முன்பு யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கும்கூட நான் மிகைப்படுத்தவதாகத் தோன்றினால் அது என் தவறு அல்ல. நமது சமூக அமைப்பில் அதிகார அமைப்புகளுக்கு இணையாக தெய்வ தரிசனத்தைக் காட்ட வேறு எவையும் இல்லை. நான் அத்தனைக் காலமும் இதை நோக்கித்தான் பாய்ந்துகொண்டிருந்தேன் என்பதை அந்தச் சிறிய அரை இருட்டான தூசு மண்டிய அரங்குக்குள் வந்தபோதுதான் உணர்ந்தேன். இருட்டிலே வாழும் ஒரு மனிதன் நாடும் உச்சபட்சமான வெளிச்சம் ஒரு கையெழுத்து இடப்பட்ட சிறு அச்சிட்ட காகிதமே.
என்னை எனக்கே ஆச்சரியப்படுத்த உதவியதற்கு நன்றி. இந்த விசாரணையே எனக்குள் முடுக்கி சுற்றி இறுகிப் போயிருந்த சிடுக்கொன்றை விடுவிக்க உதவியது. அதற்கும் சேர்த்து நன்றி.
("நிழல் பொம்மை" நாவலின் முதல் அத்தியா துவக்கம்)
சென்னை புத்தகக் கண்காட்சி 2025 வெளியீடு -44
ஸ்டால் எண் 540,541
