நிதீஷ் குமார் ரெட்டி கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார்தான் - அவரது நிதானம், பின்னங்கால் ஷாட்கள், அம்பத்தி ராயுடு பாணியில் மட்டையைப் பிடித்து தடுக்கும், அடிக்கும் நளினம், பந்துக்கு சில மைக்ரோ நொடிகள் முன்பே தயாராகும் திறமை, கைகள் பந்தைச் சந்திக்கும் - கிட்டத்தட்ட தோனியிடம் கண்ட - வேகம் என பல விசயங்கள் இன்றைய சதத்தில் கவர்ந்தன. அவரைப் பார்க்க 28 வயதான வீரரின் முதிர்ச்சி தெரிகிறது. 21 வயதைப் போன்றே இல்லை. அவர் சதம் அடித்தபின்னர் ஒரு காலை மடித்து அமர்ந்து பொறுமையாக தலைக்கவசத்தை மட்டை மீது வைத்து அழகு பார்த்து கையை உயர்த்தி கொண்டாடியது கவித்துவமாக இருந்தது. ஏதோ சீரியல் கில்லர் தன் வசமுள்ள எலும்புக் கூட்டை ஒழுங்குபடுத்திப் பார்ப்பதைப் போல அல்லது மனத்தை ஒருமுகப்படுத்தி நிதானமாக இரு என அவர் தனக்கே சொல்லிக்கொள்வதைப் போல.
இன்னொரு பக்கம், நிதீஷ் குமாரின் இந்த பொறுமை ரிஷப் பண்டிடம் இருந்தால் அவர் இந்நேரம் கூடுதலாக பத்து சதங்கள் எடுத்திருப்பார். டி20யில் கேப்டன் கூட ஆகியிருப்பார். கடந்த நியுசிலாந்து தொடரில் பண்ட் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆடினார். ஆனால் அப்போதே அவர் தன் உடற்தகுதியிலும், விளைவாக கீப்பிங்கிலும் திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த ஆஸி பயணத்தின்போது எனக்கு பண்டின் உடற்தகுதி குறிதது கேள்விகள் இருந்தன - அவருக்கு முதுகிலோ முட்டியிலோ ஏதோ பிரச்சினை இருக்கிறது, அதனால்தான் 50 பந்துகளுக்கு மேல் நின்றாட அவர் தயங்கி சீக்கிரமாக அடித்துமுடித்துக் கிளம்ப விழைகிறார். இன்று அவர் ஸ்கூப் அடிக்கப் பார்த்து அவுட் ஆகி கவாஸ்கரிடம் கடுமையாகத் திட்டுவாங்கினார். "முட்டாள் முட்டாள், இப்படியா ஆடுவது? நிலைமையைக் கருத்திற் கொள்ள வேண்டாமா, களத்தடுப்பு அமைப்பைப் பார்க்க வேண்டாமா?" என்றெல்லாம் சீறிய கவாஸ்கர் பண்ட் நியாயமாக ஆஸி டிரெஸ்ஸிங் ரூமுக்கே போகவேண்டும் என்றார். இத்தொடரில் பண்டுக்கு ஓய்வளித்துவிட்டு ஜூரலை ஆட வைத்திருக்க வேண்டும். ரோஹித் நியுசிலாந்து தொடருடன் ஓய்வறிவித்திருக்க வேண்டும். அவர் காயத்தில் இருந்து திரும்பிய பின்னர் ரொம்ப அதிகமான போட்டிகளை ஆடிவிட்டார். என்னதான் அவரே விரும்பியிருந்தாலும் அவருக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்திருக்கவேண்டும். வெற்றிபெறும் நோக்கமன்றி சமாளிக்கும் உத்தேசத்துடன் வீரர்களை அணியில் எடுத்தால் இப்படித்தான் ஆகும்.
கிரிக்கெட் திறமை அளவுக்கு உடற்தகுதி, உடல்-மன ஆற்றல், புத்துணர்ச்சி அவசியமானது. நிதீஷ்குமார் ரெட்டிக்கும் ரோஹித், பண்ட், கோலி, சிராஜுக்கும் அதுதான் வித்தியாசம். பும்ரா என்னதான் களைத்திருந்தாலும் அவரது அணித்தலைமை குறித்த கனவு அவரைச் செலுத்துகிறது. அதனால் வெறியுடன் வீசுகிறார். இத்தொடரில் அவர் பின்வாங்கியிருந்தால் அணித்தலைமையை கில் / ராகுலுக்கு கொடுத்திருப்பார்கள்.
நான்காவது டெஸ்ட் ஆட்டத்தை நிதீஷும் வாஷிங்டனும் ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறார்கள் என்றாலும் நிதீஷால் இன்னொரு ஐம்பது ரன்களை எடுக்க முடிந்தால் மட்டுமே ஆஸி அணி பின்னங்காலுக்குப் போவார்கள். ஆட்டம் டிராவை நோக்கிப் போகும். அல்லது ஆடுதளம் தலைகீழாக மோசமானால் ஆட்டம் முடிவை நோக்கிப் போகும். 350 மேல் ஆஸி அணி எடுத்து இந்தியாவை நாளை மாலைக்குள் கடைசி செஷனில் ஆட வைத்து பந்து மேலும் கீழுமாகச் சென்றால் அவர்கள் வெற்றியடைவார்கள். 270க்குள் இலக்கை இந்தியா விரட்டினால், ஆடுதளமும் தொடர்மழை, வெயிலற்ற மந்தநிலை காரணமாக இப்படியே தட்டையாகத் தொடர்ந்தால் இந்தியா சுலபத்தில் வெல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் கடுமையாகப் போராடும் என்றும், மழையும் கூடத் துணை வந்தால் டிராவுக்கான வாய்ப்பு பிரகாசம் என்றும் தோன்றுகிறது.
