வாழ்க்கையின் துயரங்களில் ஒன்று சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வயோதிகத்தின் நிழலில் வாழும் ஒரு மதிப்புக்குரியவரைச் சந்தித்து அவர் முழுக்க மனதளவில் உருக்குலைந்து, எந்த தொடர்புமின்றி கடுமையான கருத்துக்களையும் காழ்ப்புணர்வையும் கொட்டுவதை செய்வதறியாது பார்த்து நிற்பதுதான். காலம் மிகமிக வேகமாக ஓவியமொறை நீரில் நனைத்து உருவழிப்பதைப் போல மாற்றிவிடுகிறது. அவரா இவர் எனத் திகைத்து நிற்கிறோம். குறிப்பாக வயோதிகத்தால் மூளையின் முன்பகுதியில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்படும்போது கருணையற்றவர்களாகவும், தன் சிந்தனைக்கு நடப்புலகில் பொருத்தமில்லை என உணராதவர்களாகவும், கற்பனையாலான கூண்டுக்குள் தம்மைச் சிறைவைத்தவர்களாகவும் மாறுகிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது நாம் சொல்வது எதுவும் அவர்களது மனத்துக்குள் பதிவதில்லை என்பதையும் உணர்கிறோம். அது நம்மை வாயிருந்தும் ஊமையாக மாற்றுகிறது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் சிந்திக்கும் பாங்கும் மனநிலையும் மாறுவதைக் கண்டு திகைக்கிறோம். வயோகத்தின்போது மனிதர்கள் கனிவதாக சொல்லப்படுவது எல்லாருக்கும் பொருந்தாது. என் தோழி ஒருவர் தனது வயதான மாமியாருக்கு உடல்நலமில்லாமல் போனபோது அவரது கொடூரமான நடத்தையை, பேச்சைப் பொறுக்கமுடியாமல் தவித்தார். கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார். என்னுடைய நண்பரொருவர் இதற்குத் தீர்வொன்றைச் சொன்னார்: என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் கேட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இதைவிட அவர்களுடன் வாழ்வோருக்கு வேறு தற்காப்பில்லை என்றார் அவர். நாம் இந்தப் பக்கத்தைப் பற்றி அதிகமும் பேசுவதில்லை.
இன்னொரு பக்கம், இதற்கு விதிவிலக்கானவர்களையும் அனுமதினமும் காண்கிறேன். இயற்கை அவர்கள் ஆசீர்வதித்து நமக்கு அணுக்கமானவர்களாக, அன்பானவர்களாக விட்டுவைக்கிறது. ஆனால் கொஞ்சம் பிசகினால் அவர்களை இயற்கை நரகத்துக்குள் தள்ளி நம் கையையும் கோத்துவிடுகிறது. உடலுக்கு வரும் நோயைவிட இது கொடியது. ஏனென்றால் இதற்கு சிகிச்சையில்லை. மேலும் அவர்கள் சிகரத்தின் உச்சத்தில் இருந்து சட்டென கீழே பள்ளத்தில் விழுகிறார்கள். அதைக் காணவே கூடுதல் வருத்தமாக இருக்கிறது. இயற்கை கொடியது என்று தோன்றுகிறது. நமக்கும் இப்படி ஆகிவிடக் கூடாதே எனும் சுயநலமான அச்சமும் ஏற்படுகிறது.