ஆஸ்திரேலியா இன்றைய நாளின் கடைசி அரைமணி நேரத்தில் டிக்ளேர் பண்ணி பந்துவசியிருந்தால் ரோஹித்தையும், எண் 3இல் வரக்கூடிய நைட் வாட்ச் மேனையும் தூக்கியிருக்கலாம். ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமாகப் போயிருக்கும். ஆனால் அவர்கள் ஸ்டார்க்குக்கு காயமுற்றிருப்பதால் கமின்ஸையும், போலாண்டையும் வைத்து வீசும் நிலைமையில் இருப்பதாலும், லயனுக்கு பந்து திரும்பவில்லை என்பதாலும், ஆடுதளம் முதல் 50 ஓவர்களுக்கு மட்டையாட சுமாராகவும், அதன் பிறகு வெகு எளிதாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு 300 இலக்கைத் தர விரும்பவில்லை. லயனும் போலண்டும் மரண கட்டை வைத்திட அவர்களையே வீழ்த்த முடியவில்லை எனும்போது ஆடுதளம் எவ்வளவு தட்டையாகியிருக்கிறது என்று தெரியும். இந்தியா மட்டையாடும்போது கூட ரோஹித், பண்ட், ஜெய்ஸ்வால், கோலி ஆகியோர் விக்கெட்டுகளை அள்ளி வீசியிருக்காவிடில் அவர்களும் 450ஐ தாண்டியிருப்பார்கள். இந்த ஆடுதளம் நினைத்தபடி மேலும் கீழுமாக பவுன்ஸ் கொள்ளவோ உடையவோ இல்லை, திரும்பவும் இல்லை. மழை அல்லது சீதோஷ்ண நிலை காரணமாக அது போதுமானபடிக்கு காயவில்லை, கீழ் அடுக்குகள் உறுதியாக உள்ளன என நினைக்கிறேன். ஆடுதள அமைப்பாளர் சிறிது புற்களை விட்டுவைத்திருந்ததாலே இந்தளவுக்காவது விக்கெட்டுகள் விழுந்தன. அல்லது ஆஸ்திரேலியா 650 அடித்திருக்கும். இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கம்போல ஆஸ்திரேலியா மோசமாக ஆடினார்கள் அல்லது பும்ரா மிகப்பிரமாதமாக வீசினார். புதுப்பந்தில் முதல் 30 ஓவர்களில் கிடைக்கும் சீம் அசைவை சிராஜும் நன்றாக பயன்படுத்தி களத்தடுப்புக்கு ஏற்ப வீசினார்கள். ஆனால் 170க்கு 9 விக்கெட்டுகளைக் கொடுக்குமளவுக்கு மோசமான ஆடுதளமல்ல இது. அதை அவர்களே உணர்ந்து 8-11 வரையிலான டெயில் எண்டர்களைக் கொண்டு தடுத்தாடி சுதாரித்தார்கள். இன்னொரு விசயம், கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கு ரோஹித் களத்தைப் பரப்பி ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபமாகக் கொடுப்பதும் ஒரு பிரச்சினை. ரோஹித்தின் தலைமை இப்படித்தான் மரணப்படுக்கையில் கிடப்பவரின் கடைசி மூச்சுக்காகக் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல மசமசவென்றே உள்ளது. ஆட்டத்தை அதன்போக்கில் விட்டு ஊர், உலகம் பற்றியெல்லாம் நினைத்துக்கொண்டு நிற்கிறார். நிலைமை கைமீறிப் போனதும் களத்தடுப்பாளர்களை உள்ளே கொண்டு வந்து தாக்க முயல்கிறார். ஒரு தலைவராகவும் ரோஹித்தின் மிக மோசமான காலகட்டம் இது.
ஆக கமின்ஸும் பந்துவீசி வெல்ல விரும்பவில்லை, ரோஹித்தும் சீக்கிரமாக ஆட்டத்தை முடிக்க சிரத்தையெடுக்கவில்லை. நாளை லயனும் போலந்தும் சற்று வேகமாக அடித்து இலக்கை 350க்கு கொண்டு போக முயல்வார்கள். முதல் ஐந்து ஓவர்களுக்குள் விக்கெட் விழுந்தால் இந்தியாவால் 90 சொச்சம் ஓவர்களில் 340 எடுக்க முடியுமா? முடியும், ஆனால் டிராவுக்கே முயல்வார்கள். இந்தியா மிக மட்டமாக ஆடினால் ஒழிய இந்த ஆடுதளத்தில் இவ்வளவு குறைவான ஓவர்களில் ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியாது.
கடைசி மூன்று விக்கெட்டுகளை இன்னும் சற்று முனைப்பாக பந்துவீசி, களத்தடுப்பு பண்ணி, கேட்சுகளை எடுத்து சுருட்டியிருந்தால் இந்தியா 250-260 இலக்கை சுலபத்தில் அடித்து தொடரில் முன்னிலை பெற்றிருக்கலாம். மடியில் விழுந்த நல்லதொரு வாய்ப்பை தவறவிட்டு விட்டார்கள்.
இந்த போட்டியுடன் ரோஹித் ஓய்வுபெற்று பும்ராவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். ஜாலியாக சோபாவில் சாய்ந்து கடைசி டெஸ்ட் ஆட்டத்தை ரசிக்கவேண்டும்.