கிரேக்க எழுத்தாளரைப் போன்ற பெயர் கொண்ட சேம் கோன்ஸ்டாஸின் உள்ளூர் போட்டி ஆட்டங்களை நேற்று பார்த்தபோதே அவர் இதைத்தான் இன்று பும்ரா, சிராஜுக்கு எதிராகப் பண்ணப்போகிறார் என எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அவர் அதில் வெற்றிபெறுவார் என நான் ஊகிக்கவில்லை. துவக்க மட்டையாளராக அவருக்கு சரியான காலாட்டம் இல்லை, உள்ளே வரும் பந்துக்கு போதுமான தடுப்பாட்டம் இல்லை. அவர் ஒன்று முன்னங்காலுக்கு வந்து சமநிலைத் தவறி ஸ்டம்புக்கு குறுக்கே சரிந்து LBW ஆவார் அல்லது பந்தை மிஸ் பண்ணி பவுல்ட் ஆவார். ஆகையால் அவரது சிறந்த உத்தி அவரது வலிமையான டி20 ஷாட்களை - ரிவர்ஸ் ஸ்கூப், ராம்ப் - ஆடுவதுதான். பந்துவீச்சாளர் இன்னும் முழுநீளத்தில் வீசினால் அவர் ஸ்டம்புகளை விட்டு ஆப் பக்கத்தில் கவருக்கு மேல் அடிப்பார் அல்லது மிட் விக்கெட்டுக்கு அடிப்பார். அடுத்து பந்து வீச்சாளர் அரைக்குழியாகப் போட்டால் பின்னால் சென்று பைன் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்குக்கு புல் / ஹூக் அடிப்பார். சும்மா அழகுக்கு நேராக டிரைவ் செய்யவும் செய்வார். ஒட்டுமொத்தமாக 5-6 ஷாட்களை வைத்து ஓடும் வண்டியே சேம் கோன்ஸ்டாஸ். என்ன பிரச்சினை என்றால் இதை வேகவீச்சாளர்கள் எதிர்பாராமல் திகைத்துப் போவதால் அவர்கள் தொடர்ந்து அவரது வலிமைக்கே பந்துவீசிக் கொண்டிருப்பர். இதுதான் இன்று நடந்தது. இன்று அவர் அடித்த பந்துகளின் நீளத்தையும் திசையையும் பார்த்தால் நான் சொல்வது புரியும். இதுவே இனி எல்லா போட்டிகளிலும் நடக்கும்.
2000இல் இருந்து ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு இது சேவாகின் ஸ்டைல் என்று தெரியும். ஒரே வித்தியாசம் அவர் ஸ்கூப், ரேம்ப் அடிக்க மாட்டார். ஸ்டம்புகளை விட்டு நின்று பந்து விரட்டவோ வெட்டவோ செய்வார். அவரது தடுப்பாட்டம் பலவீனமானது என்பதால் அவரைத் தூக்கிவிடலாம் என நினைத்து அவுட் ஸ்விங் போட முயன்று வேகவீச்சாளர்கள் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு நிலைமை புரியும் முன்பு அரை சதத்தைக் கடந்துவிடுவார், சதமும் அடிப்பார். 10இல் 4 போட்டிகளில் சேவாக் இப்படி ரன் அடித்தால் 4 போட்டிகளில் ஸ்லிப்பிலோ கீப்பரிடமோ கேட்ச் கொடுத்து அவுட் ஆவதால் பந்து வீச்சாளர்களுக்கு போலியான நம்பிக்கையைக் கொடுப்பார். இது ஒரு சுழல் - அவர் அவுட் ஆவதாகக் காட்டுவதாலே அவருக்கு நிறைய அடிக்கும் பந்துகளை வேகவீச்சாளர்கள் கொடுப்பார்கள். இந்தப் பொறியில் சிக்காதவர்களே கிடையாது. ஆனால் சேவாக்கின் ஆட்டவாழ்வின் கடைசிக் காலத்தில் வேகவீச்சாளர்கள் அவருக்கு பந்தை உள்ளே மட்டும் வீசிக் கட்டுப்படுத்தினார்கள் - அதாவது மிடில் ஆண்ட் லெக் ஸ்டம்பில். அதுவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தால் சேவாக் அந்த திசைக்கு வரும் பந்துக்குத் திணறினார்.
எ.பி டிவில்லியர்ஸும் இப்படித்தான். அவரையும் வழக்கமான நீளத்தையும் திசையையும் வைத்துக் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு ஒன்று கால் சுழலை வெளியே வீச வைக்கவேண்டும் அல்லது ரவுண்ட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே கொண்டு வரவேண்டும். அப்போது அவரால் ரேம்ப், ஸ்கூப் அடிக்க முடியாது, விட்டு பந்தை வெட்டவோ தூக்கவோ முடியாது. ஐ.பி.எல்லில் இதை அவருக்கு எதிராக வெற்றிகரமாக முயன்றார்கள். ஆனால் டிவில்லியர்ஸுக்கு இருக்கும் ஷாட்களின் சாத்தியங்கள் கான்ஸ்டஸிடம் இல்லை என்பதால் அவருக்கு ரவுட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே (மிடில் மற்றும் லெக் ஸ்டம்பில்) அரை நீளத்தில் வீசிவிட்டு, எட்டு களத்தடுப்பாளர்களை மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், பைன் லெக், லெக் ஸ்லிப், ஷார் மிட் விக்கெட் எனப் பெரும்பகுதி கால்பக்கமாக நிறுத்தி அவரை அடிக்க விடாமல் தடுத்தாலே அவர் எதாவது ஒரு பந்துக்கு LBW ஆவார்; அல்லது குறைந்தது அவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறாது - பும்ராவைத் தாக்கி நிலைகுலையச் செய்வது. கோலியை விட்டு அவரது தோளை மோதவிடாமல் இந்தியா இந்த வியூகத்தை இரண்டாவது இன்னிங்ஸில் முயலவேண்டும். இன்னொரு யுக்தி பந்தை 6வது ஸ்டம்பில் மிக வைடாக வீசுவது. ஆனால் இது மிகவும் மெதுவாக பந்து நின்று வரும் ஆடுதளங்களில் மட்டுமே எடுபடும்.
ஆனால் இதை இந்தியா உடனடியாக செய்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. அவரது தடுப்பாட்ட control percentage 56 சொச்சமாக குறைவாக உள்ளதால் அவரை ஸ்லிப்பிலே தூக்கலாம் என நம் வேகவீச்சாளர்கள் வெறித்தனமாக நம்புவார்கள். அது ஒரு இன்னிங்ஸில் நடந்தாலும் அவர் அடுத்த இன்னிங்ஸில் திரும்பவும் பொளந்து கட்டுவார்.
அடிக்க விரும்பும் மட்டையாளருக்கு அடிக்க பந்தைக் கொடுக்காமல் இருந்தாலே அவரது பாதி ஆட்டம் காலியாகி விடும்.
