Skip to main content

Posts

Showing posts from November, 2024

கிரிக்கெட்டின் ஸ்டைலிஸ்டுகள்

  நிதீஷ்குமார் ரெட்டியின் மட்டையாட்டம் அம்பத்தி ராயுடுவின் ஆட்டத்தை நினைவுபடுத்துகிறது. அதே பாணியில் உயரத்தூக்கிப் பிடித்த மட்டையை மணிக்கட்டின் சுழற்சியால் மேலிருந்து கீழே கொண்டு வந்து கால்பக்கமாக பந்தை விரட்டுகிறார். குச்சிகளுக்கு குறுக்காக பந்தை விளாசும்போது நளினமான விறகுவெட்டுவதைப் போலிருக்கிறது. குச்சிகளை விட்டு பந்தை ஆவேசமாக கவருக்கு மேல் விரட்டும்போது மணிக்கட்டில் இருந்து வரும் ஆற்றல். யாயுடுவை விட அரைக்குழிப் பந்தை நன்றாக அடிக்கிறார். ஹூக்கும் நன்றாக அடித்தால் இன்னும் சிறந்த மட்டையாளர் ஆகிடுவார். ஆந்திராக்காரர்களும் ஹைதராபாதிகளும் அடிப்படையில் ஸ்டைலிஸ்டுகள்! (மும்பைக்காக ஆடினாலும்) ரோஹித் ஷர்மாவின் சொந்த ஊரும் ஆந்திராதான்.

போரடித்தால் விவாகரத்து செய்கிறார்கள்

“நான் நிறைய பணக்கார ஜோடிகளை, பாலிவுட் செலிபிரிட்டிகளை விவாகரத்து செய்துவைத்துள்ளேன். விவாகரத்து அவர்களிடையே பெருகி வருவதற்கு என்ன காரணம் தெரியுமா? அவர்களுக்கு வாழ்க்கை போரடிக்கிறது. அதனால் விவாகரத்து பண்ணிவிட்டு வாழ்க்கையில் புதுசாக எதையாவது முயன்று பார்க்கலாம் என நினைக்கிறார்கள்.” - (ரஹ்மானின் மனைவி) சாயிரா பானுவின் வக்கீல் வந்தனா ஷா. போரடிக்குதுன்னா பத்து ரூபாய்க்கு பன் வாங்கித் தின்னலாம். அல்லாவிடில் எதாவது புதிய விளையாட்டைக் கற்றுக்கொண்டு ஆடலாம், உழைத்து புதிய திறன்களைப் பெறலாம், ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி முன்னேறலாம், மூட்டை முடிச்சு தூக்கிக்கொண்டு டிரெக்கிங் எனும் பெயரில் எவெரெஸ்ட் சிகரங்களின் உச்சியில் கொடிநாட்ட முயலலாம். இப்படி எவ்வளவோ செய்யலாம். எதற்கு விவாகரத்து பண்ணனும்?  

காதலை நாடி விவாகரத்து செய்யும் அபத்தம்

பசிக்கும் போது சோறு தின்னுகிறோம். தாகமெடுக்கையில் தண்ணீர் குடிக்கிறோம். சோறுண்டாலும் தாகமெடுக்கிறதென்று யாராவது சோற்றின் மீது கோபித்துக்கொண்டு அதை விசிறியடிப்பார்களா? இல்லை, இரண்டும் வெவ்வேறு எனும் தெளிவு நமக்கு சோறு விசயத்தில் உள்ளதைப் போல திருமண விசயத்தில் இல்லாமல் போய்விட்டது. இன்று சுவாரஸ்யமில்லை, மகிழ்ச்சியில்லை எனும் காரணங்களுக்கான மேற்தட்டு நவீன தம்பதியினரில் பெரும்பாலானோர் விவாகரத்தை நாடுகிறார்கள். இது ஒரு பெரும் அபத்தம். கல்யாண வாழ்க்கைக்கும் காதலின் சுவாரஸ்யத்துக்கும் என்ன சம்மந்தம்? சுவாரஸ்யம், மகிழ்ச்சி போன்றவற்றை நாம் அடுத்தவரிடம் இருந்து பெற முடியாது. அதை நாமாகத்தான் உருவாக்க வேண்டும். இன்றைய காதலர்களுக்கு இரண்டே வாரங்களில் காதல் அலுத்துவிடுகிறது. ஏனென்றால் காதலில் சுவாரஸ்யமில்லை. அது சம்மந்தப்பட்ட தனிமனிதரின் செயலில் இருக்கிறது. காதலிலே நீடிக்க முடியாத சுவாரஸ்யம் வருடக்கணக்கில் நீளும் திருமண வாழ்வில் எப்படிக் கிடைக்கும்? இதைத்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எளிமையாக சொல்லி வைத்திருக்கிறார்கள். நவீன மனிதர்கள், குறிப்பாக படித்த மேற்தட்டினர், உறவுகளையும் வாங்கிப் ...

மரணம் - மெய்யறிவு - சர்வாதிகாரம்

நாம் தனியாக இருக்கிறோம் என்பதே அறுதியான உண்மை - அதை நாம் உறுதிப்படுத்தும் தத்துவ அலகாகவும் மறப்பதற்கான சிறிய போதையாகவும் உறவுகள், நட்பு, காதல், சமூகமாக்கம் தேவையாகிறது. அவர்களில் மிக மிக அணுக்கமானவர் காலமாகும்போதே நாம் எவ்வளவுத் தனிமையாக இருக்கிறோம் எனத் தீவிரமாக சில கணங்கள் உணர்கிறோம். மீண்டும் உறவு போதைக்குள் விழுந்து தனிமையின் மறதி மட்டுமே தரத்தக்க தன்னுணர்வுக்குள் சிக்குகிறோம். மரணத்தை வாழ்வில் நேரில் காணுறும்போது இந்த இருமை கிடைக்காமல் தத்தளித்து காணாமல் போகிறோம்.  இதனாலே காலனை தெய்வமாக வழிபடும் மரபு நமக்கு இருந்திருக்கிறது. பௌத்தத்தில் வலுவாகவே இன்னும் இருக்கிறது. அங்கு மரணத்தை அனுதினமும் நினைப்பது மெய்யறிவுக்கான மார்க்கம். இந்து மதத்தில் நசிகேதன் வாழ்வின் உண்மையை அறிய காலனிடமே சென்று மண்டியிடுகிறான்.  இதற்கு வெளியேதான் மெய்யறிவுக்கு எதிரான போலி எந்திரமய உலகம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது மரணத்தைக் குறித்து யோசிக்க நம்மை அனுமதிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கச் செய்கிறது. எந்தளவுக்கெனில் இன்று சில நொடிகளிலே மரணத்தைக் கடந்துவிட இவ்வுலகம் நம்மைத் தூண்டுகிறது. அனுதினமும் பார்க்கிற...

மொழிபெயர்ப்பில் சாருவின் ஔரங்சேப்

சாருவின் "ஔரங்சேப்" நாவலை தமிழில் அது தொடராக வெளிவந்தபோது படித்து சிறுகுறிப்புகளை எழுதினேன். தொடரென்பதால் அது தேவைக்கதிகமாக நீண்டுவிட்டது என அதை நாவலாக அச்சில் படிக்கையில் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் தமிழில் மிகத்தனித்துவமான சுவையான நாவல் அது. மேலும் ஆங்கில மொழியாக்கத்துக்காக சாருவும் மொழிபெயர்ப்பாளர் நந்தினியுமாக அதன் அளவை வெகுவாக சுருக்கினார்கள். இந்நாவலைப் பொறுத்தமட்டில் மிக மிகக் கடினமான காரியம் இது. என்னதான் பதிப்பகம் அளித்த அழுத்தம் காரணமாக அவர்கள் அதைச் செய்தாலும் பெரிதும் நேர்மறையானப் பலனை இந்தச் சுருக்கம் அளித்துள்ளது. ஆங்கிலத்தில் நாவல் இன்னும் செறிவாகிவிட்டது. அதேநேரம், ஆங்கில மொழியாக்கம் என்னைப் பெரிதும் கவரவில்லை. சாருவின் மொழியழகு, குறிப்பாக சாருவுக்கே உரித்தான சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, அதன் ஒலி லயம், சகஜத்தன்மை போய் பொது ஆங்கிலத்தில் நந்தினி மொழியாக்கிவிட்டார் மொழிபெயர்ப்பாளர். இது இன்று ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள போக்குதான் என ஆங்கிலப் பதிப்பக முகவர்களுடன் பேசும்போது புரிந்துகொள்ள முடிகிறது. ஆங்கில வாசகர்களுக்கு உறுத்தாமல் இருக்கவேண்டும் என நினைத்து ர...

இதற்குத்தானா?

மணமுறிவில் இப்போது புதிய போக்கொன்று உண்டாகியிருக்கிறது. அதை ஒட்டியதுதான் இந்தக் கதை. என் கல்லூரிப் பருவ நண்பரை அண்மையில் சந்தித்தபோது பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொண்டோம். அவர் மிகவும் சோர்ந்திருந்தார். அவர் பிரம்மச்சாரியாயிற்றே, வாழ்க்கையில் அப்படியென்ன கவலைகள் வந்துவிட முடியும் என்று விசாரித்தேன். அதற்கு அவர் தன் சகோதரியின் மகனுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றிச்சொன்னார்.  அவரது சகோதரி காலமாகிவிட்ட நிலையில் அவர்தான் சகோதரியின் மகனின் படிப்புச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளையும் கவனித்துவந்தார். அவன் இவரது வீட்டில்தான் வளர்ந்துவந்தான். அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் இணையதளங்களில் பெண் தேடிக் கண்டுபிடித்தார்கள். நன்குப் படித்த அழகான பெண். இருவரும் சந்தித்து எண்ணங்களைப் பரிமாறி மனமொத்துப் போனார்கள். திருமணச் செலவுகளை மணமகன் வீட்டார் பார்த்துக்கொள்வதே அவர்களுடைய சமூக வழக்கம். அதற்காக என் நண்பர் வங்கியில் கடன் வாங்கினார் (அவர் ஏற்கனவே தன் குடும்பத் தேவைகளுக்காக நிறைய கடன் வாங்கி நொடிந்துபோயிருக்கிறார்.). திருமண நாளன்று மணமகனுக்கு அனாமதேய எண்ணில் இருந்து ஆபாசப் புகைப்படங்கள்...

ராஜ் கௌதமன்

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். குறிப்பாக "சிலுவை ராஜ் சரித்திரம்". அதில் வரும் நகைமுரணான தொனி, பல அபத்தங்களைச் சித்தரித்துக் கடந்துப்போகும் பாணி, அதிலுள்ள மென்மையான பொஹிமியன் தன்மை, ஆழம். அவரது விமர்சனக் கட்டுரைகள் செறிவானவை, கூர்மையானவை. மார்க்ஸிய, சமூகவியல் கோணத்தில் இலக்கியத்தை அணுகுபவர். அவர் காட்டும் சமூக உளவியல் பார்வை என் சிந்தனையை ஒருகாலத்தில் வெகுவாக பாதித்தது. என் ஆரம்பகாலக் கட்டுரைகளில் அவரையும் அவருக்குப் பிடித்தமான, அவர் மொழியாக்கிய எரிக் புரோமையும் மேற்கோள் காட்டி அதன் அடிபடையிலே இலக்கியத்தையும் சமூகத்தையும் அலசியிருக்கிறேன் - குறிப்பாக நிலம், அதனுடன் வேளாண் சமூகம் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு, அதிலிருந்து புலம்பெயரும்போது, சமூக அடுக்குகள் நிலைகுலையும்போது மனிதர்களை அது பாதிக்கும்விதம், அப்பாதிப்பு இலக்கியத்தில் நெருக்கடியாக மாறுவதைப் பற்றி அவர் செய்த விமர்சனம் என் எழுத்துக்குள் தாக்கத்தை செலுத்தியது. அது ஒரு அமைப்பியல் பார்வை எனப் பின்னர் விளங்கிக்கொண்டேன். நான் தெரிதாவைப் படிக்கத் தொடங்கிய பின்னர் அதைக் கடந்துவந்தேன். ஆனால் பாண்டிச்சேரியென்றால...

தமிழவனின் எழுத்தின் ஆழம்

  தமிழவனின் எழுத்தில் இப்படியான அற்புதமான அவதானிப்புகள் வந்துகொண்டே இருக்கும் - உறவு மாற்றுகளை உருவாக்கி அவற்றின் இன்மையில் தப்பிப்பது நவீன வாழ்க்கையின் அவலங்களில் ஒன்று. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, புரோ, பேப் என எல்லாரையும் அழைப்பது இப்படியானது. இதை அழகாக கலாப்ரியாவின் கவிதையில் பொருத்துகிறார் பாருங்கள்!

தமிழில் சாதி எதிர்ப்பு சினிமா

சாதி ஒழிப்பு படங்கள் சாதி எதிர்ப்பு படங்களாக மாறியதும் சமூகத்தில் கெட்ட சாதி vs களங்கமற்ற நல்ல சாதி என இருமையை உண்டுபண்ணி அதன் அடிப்படையில் வெறுப்பரசியலை உண்டுபண்ணி அதன் மேல் மதவாத அரசியல் சோஷியல் இஞ்சினியரிங் செய்ய உதவும் மூன்றாம் அணி அரசியல் புரோஜெக்ட்களாக மாறின. அதற்கு தெம்பூட்டும் விதமாக சுயசாதிப் பெருமையும் சாதி எதிர்ப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகின. அதற்கு வரலாற்றை திரும்ப சொல்லுதல் எனப் பெயரும் அளித்தோம். இது அடிப்படையில் ஒரு சீரழிவுதான். இதற்கு அந்த காலத்து இடதுசாரி கலகப் படங்களே மேல். அவை எல்லா தரப்புகளையும் உள்ளடக்கி அசல் பொருளாதார, வர்க்கப் பிரச்சினைகளைப் பேசின. அவற்றுக்கு ஆளுங்கட்சி சார்பு அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. புரோஜெக்ட் வேல்யூவும் இருக்கவில்லை. அப்போது இயக்குநர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமாக இருக்கவும், அரசியல் கனவுகள் காணவும் தலைப்படவில்லை. அப்போது அவர்கள் கூட்டம், பேரணி நடத்தவும், அறிக்கை விடவும், அரசியல் செய்திகளை, தலைவர்களை, கொள்கைகளை தம் வியாபாரத்துக்கு பயன்படுத்தவும் இல்லை. மலினமான அர்த்தமற்ற வணிகப் படங்கள் கூட இவ்வளவு விஷமத்தனமாக இல்லையெனும...

அகத்தில் அடிக்கும் புயல்

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்: கடந்த மூன்று மாதங்களில் நான் எழுதும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. சராசரியாக ஒருநாளைக்கு ஆயிரம் சொற்களாவது குறைந்தது எழுதுவேன். மாதத்திற்கு 50,000 சொற்கள்தாம் என் கணக்கு. ஒரு பக்கம் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் என் நாவல்களில் நேரம் செலவிட்டபடி இருப்பேன். முக்கால்வாசி எழுதிய நிலையில் நான்கு நாவல்கள் இப்படி கைவசம் இருக்கின்றன. மிகவும் நேரநெருக்கடியான நாட்களில் கூட சில நிமிடங்களாவது எழுதக் கிடைத்தால் போதும், நிம்மதியாவேன். கூடுதல் நேரம் கிடைக்கும் நாட்களில் அதிகமாக எழுதி ஈடுகட்டுவேன். ஆனால் அண்மையாகத்தான் இது முடியாமல் போய்விட்டது. இது பெரிய உலகப் பிரச்சினையா? ஆமாம், எனக்கு எழுத்துதான் உயிர், உடல், ஆவியெல்லாம். எழுதுவது குறையும்போது என் மூளைக்குப் போகும் பிராணவாயு குறைந்து போகிறது. நான் நடைபிணமாக மாறுகிறேன். அதிகமாக எரிச்சல்படுகிற, மகிழ்ச்சியற்ற மனிதனாகிறேன். காரணம் என் வேலையில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய சிக்கல்கள், நெருக்கடி, பிரச்சினைகள்தாம். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டியிருக்கிறது. எப்போதுமே வேலை...