Skip to main content

இதற்குத்தானா?

மணமுறிவில் இப்போது புதிய போக்கொன்று உண்டாகியிருக்கிறது. அதை ஒட்டியதுதான் இந்தக் கதை. என் கல்லூரிப் பருவ நண்பரை அண்மையில் சந்தித்தபோது பழைய நினைவுகளைப் பரிமாறிக்கொண்டோம். அவர் மிகவும் சோர்ந்திருந்தார். அவர் பிரம்மச்சாரியாயிற்றே, வாழ்க்கையில் அப்படியென்ன கவலைகள் வந்துவிட முடியும் என்று விசாரித்தேன். அதற்கு அவர் தன் சகோதரியின் மகனுக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றிச்சொன்னார். 

அவரது சகோதரி காலமாகிவிட்ட நிலையில் அவர்தான் சகோதரியின் மகனின் படிப்புச் செலவுகள் முதற்கொண்டு எல்லாத் தேவைகளையும் கவனித்துவந்தார். அவன் இவரது வீட்டில்தான் வளர்ந்துவந்தான். அவனுக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் இணையதளங்களில் பெண் தேடிக் கண்டுபிடித்தார்கள். நன்குப் படித்த அழகான பெண். இருவரும் சந்தித்து எண்ணங்களைப் பரிமாறி மனமொத்துப் போனார்கள். திருமணச் செலவுகளை மணமகன் வீட்டார் பார்த்துக்கொள்வதே அவர்களுடைய சமூக வழக்கம். அதற்காக என் நண்பர் வங்கியில் கடன் வாங்கினார் (அவர் ஏற்கனவே தன் குடும்பத் தேவைகளுக்காக நிறைய கடன் வாங்கி நொடிந்துபோயிருக்கிறார்.). திருமண நாளன்று மணமகனுக்கு அனாமதேய எண்ணில் இருந்து ஆபாசப் புகைப்படங்கள் வந்தன. அதில் மணமகளும் வேறொரு இளைஞனும் கசாமுசாவென்று இருந்தார்கள். மணமகன் கொதித்துப்போய் தன் குடும்பத்தினரும் காட்ட அவர்கள் மணப்பெண்ணை அழைத்து விசாரித்தார்கள். அவள் அது தன் காதலனே என அமைதியாக ஒப்புக்கொண்டாள். அவர்கள் அவளிடம் “உனக்கு வேண்டுமெனில் கல்யாணத்தை இப்போதே ரத்துசெய்து விடுவோம். அல்லது, நீ அவனை மறந்து எங்கள் பையனைக் கல்யாணம் பண்ணி புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதானாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்” என்றனர். அதற்கு அவளோ “நான் அந்தக் காதலை மறந்துவிட்டேன், நான் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்புகிறேன்” என்றாள். அவர்கள் அந்தப் படங்களை போனில் இருந்து அழித்தார்கள். அந்தச் சம்பவத்தையே முழுக்க மறந்தார்கள். கல்யாணம் இனிதே நடந்தது. ஆனால் அடுத்த நாளே பஞ்சாயத்து ஆரம்பித்தது. கணவனின் வீட்டில் தனக்கு வசதிகள் இல்லை, தன்னை வேலைவாங்குகிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என அவள் தன் பெற்றோரை அழைத்துப் பொய்ப்புகார்களாக சொல்லத் தொடங்கினாள். இந்தப் புகார்கள் ஏற்படுத்திய பதற்றத்தில் அவளது அப்பாவுக்கு ஸ்டுரோக் வந்துவிட்டது. ஒரே மாதத்தில் தன்னால் அங்கு வாழமுடியாது எனக் கிளம்பிப் போனாள். அடுத்த இரண்டு மாதங்களில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினாள். செட்டில்மெண்ட் தொகையொன்றும் வேண்டாம், திருமணத்தின்போது கொடுத்த அறைகலன்கள் உள்ளிட்டப் பொருட்களையும் பணத்தையும் திரும்பத் தந்தால், தாமும் தமக்கு மணமகன் தரப்பால் அளிக்கப்பட்ட நகைகளைத் தந்துவிடுவதாகவும் கூறியிருக்கிறாள். விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளாவிடில் வரதட்சணைப் புகார் அளிப்போம் என மிரட்டுகிறாள். நண்பர் சொன்னார், “எங்களால் இதை எதிர்க்கவும் முடியாது, சட்டம் பெண்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது, ம்யூச்சுவலாக முடிக்கவேண்டிய கட்டாயம்.” எவ்வளவோ கனவுகளுடன் பொருளாதார சிரமங்களுடன் நடத்தப்பட்ட கல்யாணம் இப்படி முடிந்துபோய் விட்டது. 


பொதுவாக ஆண்கள் தம்மை ஒரு பெண் நிராகரித்துவிட்டுப் போனால் அதை தனிப்பட்ட மதிப்பீடாக எடுத்துக்கொள்வார்கள். “எனக்கு ஏதோ போதாமை இருக்கிறது, அதனால் அவள் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாள், நான் வெறுக்கத்தக்கவன்” என நினைத்து மனமுடைந்து போய்விடுவார்கள். மன அழுத்தம், தாழ்வுணர்வு என அவர்களுடைய வாழ்க்கை அழிந்துபோகும். அந்தக் காயத்தில் இருந்து மீண்டுவர பல மாதங்களோ வருடங்களோ ஆகும். இதற்கு அவர்கள் தனியாகவே வாழ்ந்திருந்தால் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.


விவாகரத்துகள் மண உறவு மோசமான நிலைக்குப்போகும் போது நிகழவேண்டியவை. ஆனால் காதலனைக் கைப்பிடிக்க விவாகரத்தைப் பயன்படுத்தும் புதிய போக்கொன்று வலுவடைந்து வருகிறது. அப்பெண்ணின் காதலன் அவளது பக்கத்துவீட்டிலே இருக்கிறான். அவளது பெற்றோர் அவனை ஏற்காததால் இப்படித் திட்டமிட்டிருக்கிறார்கள். கல்யாணத்துக்கு முந்தின தினம் ஓடிப்போவது, ஊர் ஊராகப் பெற்றோரும் அடியாட்களும் உறவினருமாகத் துரத்துவது பழைய டிரெண்டாகிவிட்டது. இன்று கல்யாணத்துக்குப் பிறகு ஓடுவதுதான் ஸ்டைல். பெற்றோரும் ஊரும்  நீதிமன்றமும் சேர்ந்து காதலர்களைத் துரத்தாமல் மணமகனையும் வீட்டாரையும் துரத்துவார்கள். அதனால் பல லாபங்கள் உள்ளன. இதில் ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அக்காதலன் பதற்றத்தில் புகைப்படங்களை மணமகன் தரப்புக்கு அனுப்பியிருக்கிறான். ஆனால் அவளோ நிதானமாகவே காய் நகர்த்தி வென்றிருக்கிறாள். பிரச்சினை செய்து கல்யாணத்தை நிறுத்தினால் அவளது பெற்றோருக்கு அவப்பெயர் வரும். அவளுக்கும் உதை கிடைக்கும். வேறு வரன் பார்ப்பார்கள். பிரச்சினைகள் தொடரும். அப்படியே ஓடிப்போனால் பெற்றோர் அவளை வீட்டுக்குள் ஏற்கமாட்டார்கள். கல்யாணத்துக்குப் பிறகு பிரிந்துவந்து “புகுந்த வீட்டில் துன்புறுத்துகிறார்கள். சகிக்கமுடியவில்லை” என்று சொன்னாலோ “ஓஓஒ ஒரு தென்றல் புயலாகி வருதே” என்று ஊர் உலகம் வீட்டார் நிச்சயமாக ஒத்துக்கொள்வார்கள். விவாகரத்தானவள் எனபதால் காதலனுடன் அவள் செல்வதை அவர்கள் தடுக்கமுடியாது. பாதை தடையற்றுப் போய்விடும். இதற்காக அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்க்கையைக் கெடுக்கிறோம் என்று யோசிக்க மட்டும் மறுக்கிறார்கள். நாம் மகிழ்ந்திருந்தால் மட்டும் போதும் என சுயநலமாகச் செயல்படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், இது உங்கள் சகோதரனுக்கோ மகனுக்கோ நடந்தால் ஒரு பெண்ணாக உங்களால் தாங்கமுடியுமா? மருமகளைத் துன்புறுத்தித் துரத்திவிட்டார்கள் ஊரே உங்களைப் பழிக்கும்போது நீங்கள் அதை எப்படித் தாங்குவீர்கள்?


கல்யாணத்துக்குப் பெண் தேடுவோர் பெண்ணின் வீட்டார், சாதி, குடும்பப் பெருமை, அழகைப் பற்றி விசாரிக்காமல், யோசிக்காமல் முதலில் அவளுடைய மனநிலை எப்படியானது என விசாரித்தறிய வேண்டும். அதற்கு அப்பெண் இருக்கும் பகுதியில் சென்று விசாரிக்கவேண்டும். வேற்று ஊரில் இருக்கும்பட்சத்தில் தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து விசாரிக்கவேண்டும். அவளுக்குத் தீவிரமான காதல் இருக்கும்பட்சத்தில் அது நிச்சயமாகத் தெரிந்துபோகும். முடிந்தவரையில் காதலில் இருக்கும் பெண்ணைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால் கல்யாணமானதும் சிலநேரங்களில் பெற்றோர் தமக்குப் பிடிக்காதப் பையனைத் தவிர்க்கும்பொருட்டு நடத்தப்படுகிறது என்பதால் அவசரகதியில் சரியான திட்டமின்றி நடக்கும். எந்த பெரிய எதிர்பார்ப்பையும் வைக்கமாட்டார்கள். கேள்விகளை எழுப்பமாட்டார்கள். முடிவெடுக்கவும் நேரமெடுக்க மாட்டார்கள். பெண்ணைத் தள்ளிவிடும் மனநிலையில் இருப்பார்கள். சில பல காதல்கள் இந்தக் காலத்தில் யாருக்கு இல்லை எனும் மனநிலை இன்று வலுத்துவிட்டது - ஏனென்றால் பெண்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. வரன் வீட்டாரும் இதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் பெரிய தவறை செய்கிறார்கள். நிஜமென்னவென்றால் தீவிரமான காதலில் இருந்து பெண்களால் சுலபத்தில் அறுத்துவிட்டு புதிய உறவுக்குள் வரமுடியாது. ஆண்களுக்கு புதிய உடல் பந்தம் கிடைத்தால் பழையக் காதலை விட்டு சட்டென வந்துவிட முடியும். ஆணுக்கு அது உடல் சம்மந்தப்பட்டது. பெண்களுக்கோ இது உடல், மனம் இரண்டும் சம்மந்தப்பட்ட விசயம். காதலன் கடுமையாக அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில் அவர்கள் கல்யாணமானாலும் மனமுவந்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்களால் மனதளவில் திருமணத்திற்கு இருக்கமுடியாது. பிரச்சினை இத்தகையப் பெண்களைத் திருமணத்துக்குள் தள்ளிவிடும் பெற்றோரிடமும் இவர்களுக்குச் சாதகமாக பாரபட்சமான குடும்பநலச் சட்டங்களிலும் இருக்கிறது. மேலும் இன்று செல்போன் வசதியால் உறவின் அந்தரங்களான தருணங்கள் அனைத்தும் படமாக்கப்படுவதால், காணொளியாகப் பதிவாவதால் காதலன் அதை வைத்து மிரட்டிக்கூட பெண்ணைப் பணியவைக்க முடியும். ஆண்களும் அவர்களின் குடும்பத்தாரும் தான் சாமர்த்தியமாக இருக்கவேண்டும். இந்த இணையதளங்களில் பெண் தேடும் முட்டாள்தனத்தை ஒழிக்கவேண்டும். தெரிந்த பரிச்சயமான வட்டங்களில் பெண்ணை அடைவதே முறையானது. அப்படிக் கிடைக்காவிடில் காத்திருக்கவேண்டும். இதென்ன வாஷிங்மெஷினா, மொபைலா சைனாவில் இருந்து வந்தாலும் வாங்கிப்போட?


அடுத்து, ஆண்கள் பெண் துணைக்காக திருமணத்தை மட்டும் சார்ந்திருக்காமல் அதற்கு வெளியே தேடுவதே இன்றைய நிலையில் நலம். சமூகவலைதளம், காதல், நட்பு, சந்திப்புகள் என எத்தனையோ வழிகள் இன்றுள்ளன. திருமணத்தையே தமது எதிர்காலம் என நம்பியிருந்தப் பெண்கள் இன்று அனேகமாக இல்லை. அதிருப்தியுடன் தான் கல்யாணத்துக்குள் வரப்போகிறாள். அவர்கள் அதிகமாக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து கசப்படையவும் வாய்ப்பு கல்யாணத்திலே அதிகம். ஆண்களுக்கு மிக அதிகமான அழுத்தம் கல்யாண வாழ்க்கையிலே ஏற்படுகிறது. ஏதோ தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானத்தில் பயணியைப் போல அவர்களுடைய வாழ்க்கை ஆகிவிடுகிறது. 


ஆண்கள் தமது தகுதியை வளர்த்துக்கொண்டால் பெண் துணையின்றி வாழும் நிலை வராது. நமது நவீனத் தமிழ்க் கவிஞர்களைப் பாருங்கள். பார்க்க சாதாரணமாக இருப்பார்கள். ஆனால் ஆளுக்கு குறைந்தது நான்கைந்து காதலிகளாவது இருப்பார்கள். எல்லாரையும் கவிதை எழுதச் சொல்லவில்லை. எத்தனையோ வழிகள் உள்ளன. பந்தியில் முந்திக்கொண்டு அடுத்தவர் சாப்பிட்டு முடிக்காத இலையின் முன்போய் அவரைத் தள்ளிவிட்டு உட்காராமல், பொறுமையாகத் தேடலாம். அப்படியே பெண் கிடைக்காவிட்டாலும் நல்லதுதான் - உடற்பயிற்சி, விளையாட்டு, புதிய திறன்களைக் கற்பது, பயணம் செய்வது என நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம். 


நேற்று ஒரு நேர்முகத்தைப் பார்த்தேன் - “மாதம் 80,000 சம்பாதிக்கிறேன், ஆனால் கையில் வாங்குவதோ வெறும் 34,000. அதை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தவேண்டியிருக்கிறது சார்” ஒருவர் அலுத்துக்கொண்டார். அப்படி என்ன பிரச்சினை? அவர் தான் வங்கியில் கடன்வாங்கியதால் என்கிறார். ஏன் கடன் வாங்கினார்? “குழந்தைகளின் டியூசன் பீஸுக்கு நான் பணத்தை சேர்த்துவைக்கவில்லை. திடீர்னு எடுக்க கையில் பணமில்லை. பத்து லட்சம் தேவை. அதுக்காக லோன் போட்டேன். வேறு சில குடும்ப செலவுகளும் வர, லோன் டாப் அப் வாங்கினேன்.” என்றார். அடப்பாவிங்களா, தனியாக இருந்திருந்தால், இந்தப் பணத்தை பத்தாண்டுகள் சேர்த்துவைத்தால் அவர் சொகுசாக வாழ்ந்திருக்கலாமே. இதற்காகத்தான் இவ்வளவுப் போராடிக் கண்ணீரும் வியர்வையும் சிந்தி கல்யாணம் பண்ணிக்கொள்கிறோமா? உலகின் மிகப்பெரிய மோசடி என்றால் அது திருமணம்தான். விவாகரத்தானாலும் பிரச்சினை, ஆகாவிட்டாலும் பிரச்சினை.     

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...