எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். குறிப்பாக "சிலுவை ராஜ் சரித்திரம்". அதில் வரும் நகைமுரணான தொனி, பல அபத்தங்களைச் சித்தரித்துக் கடந்துப்போகும் பாணி, அதிலுள்ள மென்மையான பொஹிமியன் தன்மை, ஆழம். அவரது விமர்சனக் கட்டுரைகள் செறிவானவை, கூர்மையானவை. மார்க்ஸிய, சமூகவியல் கோணத்தில் இலக்கியத்தை அணுகுபவர். அவர் காட்டும் சமூக உளவியல் பார்வை என் சிந்தனையை ஒருகாலத்தில் வெகுவாக பாதித்தது. என் ஆரம்பகாலக் கட்டுரைகளில் அவரையும் அவருக்குப் பிடித்தமான, அவர் மொழியாக்கிய எரிக் புரோமையும் மேற்கோள் காட்டி அதன் அடிபடையிலே இலக்கியத்தையும் சமூகத்தையும் அலசியிருக்கிறேன் - குறிப்பாக நிலம், அதனுடன் வேளாண் சமூகம் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு, அதிலிருந்து புலம்பெயரும்போது, சமூக அடுக்குகள் நிலைகுலையும்போது மனிதர்களை அது பாதிக்கும்விதம், அப்பாதிப்பு இலக்கியத்தில் நெருக்கடியாக மாறுவதைப் பற்றி அவர் செய்த விமர்சனம் என் எழுத்துக்குள் தாக்கத்தை செலுத்தியது. அது ஒரு அமைப்பியல் பார்வை எனப் பின்னர் விளங்கிக்கொண்டேன். நான் தெரிதாவைப் படிக்கத் தொடங்கிய பின்னர் அதைக் கடந்துவந்தேன். ஆனால் பாண்டிச்சேரியென்றால், லண்டன் என்றால் சிலுவைராஜ் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியாது.
அவர் தனது புனைவுகளில், தன்னெழுத்தில், கிறித்துவ சாமியார்களை எப்படிப் பகடி பண்ணாமல் விட்டார் என்பது என்னை வியப்புக்குள்ளாக்கும் ஒன்று. அவரளவுக்கு யாரையும் பகடிக்குள்ளாக்காமல் அப்படி விடுவதில்லை. ஆனால் இங்குள்ள சூழல் அப்படியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். அதேபோல பெண்ணுடல் மீதான மோகத்தையும், உடலிச்சையையும் அவர் எழுதி நான் படித்ததில்லை. இந்த சுயத்தணிக்கை அவரது மிக அந்தரங்கமான எழுத்தை புறவயமான நெருக்கடிகளான சாதி, பாகுபாடுகள் ஆகியவற்றுடன் இணைக்க உதவியது த்ன நினைக்கிறேன்
எழுத்தாளர்களின் சுயத்தேர்வு சற்று விசித்திரமானது. அது அரசியல்வயப்பட்டதும் தான்.
அவரது கருத்துக்களையும் புனைவில் அவர் எழுப்பிய சித்திரங்களையும் கூட மறந்துவிடலாம். ஆனால் எழுத்தில் ஒலிக்கும் அவரது மாற்றுக்குரல், எதையும் இன்னொரு விதமாகக் காட்டி அதைவைத்து விளையாடும் கேலியும் கிண்டலுமான மென்மையான குரலை மறக்கமுடியாது. வேறெந்த படைப்பாளியின் எழுத்தைப் படிக்கையிலும் அவரது குரல் என் காதுக்குள் வந்து விழுந்ததில்லை.
மகத்தான படைப்பாளி, சிந்தனையாளர். ஒரு பெருமூச்சுடன் என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.