சாதி ஒழிப்பு படங்கள் சாதி எதிர்ப்பு படங்களாக மாறியதும் சமூகத்தில் கெட்ட சாதி vs களங்கமற்ற நல்ல சாதி என இருமையை உண்டுபண்ணி அதன் அடிப்படையில் வெறுப்பரசியலை உண்டுபண்ணி அதன் மேல் மதவாத அரசியல் சோஷியல் இஞ்சினியரிங் செய்ய உதவும் மூன்றாம் அணி அரசியல் புரோஜெக்ட்களாக மாறின. அதற்கு தெம்பூட்டும் விதமாக சுயசாதிப் பெருமையும் சாதி எதிர்ப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகின. அதற்கு வரலாற்றை திரும்ப சொல்லுதல் எனப் பெயரும் அளித்தோம். இது அடிப்படையில் ஒரு சீரழிவுதான். இதற்கு அந்த காலத்து இடதுசாரி கலகப் படங்களே மேல். அவை எல்லா தரப்புகளையும் உள்ளடக்கி அசல் பொருளாதார, வர்க்கப் பிரச்சினைகளைப் பேசின. அவற்றுக்கு ஆளுங்கட்சி சார்பு அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. புரோஜெக்ட் வேல்யூவும் இருக்கவில்லை. அப்போது இயக்குநர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமாக இருக்கவும், அரசியல் கனவுகள் காணவும் தலைப்படவில்லை. அப்போது அவர்கள் கூட்டம், பேரணி நடத்தவும், அறிக்கை விடவும், அரசியல் செய்திகளை, தலைவர்களை, கொள்கைகளை தம் வியாபாரத்துக்கு பயன்படுத்தவும் இல்லை.
மலினமான அர்த்தமற்ற வணிகப் படங்கள் கூட இவ்வளவு விஷமத்தனமாக இல்லையெனும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. சமூகவலைதள குழுக்களுக்கும் இதில் முக்கிய பங்குள்ளது. மகத்தான விசயங்களை இப்படித்தான் நம் சுயநலத்துக்காக சேற்றில் புரட்டி நாசமாக்குகிறோம்.
தமிழில் இப்படியென்றால், ஒன்றியத்தில் தேசியவாத, மதவாத அரசியலை படமாக்கும் இயக்குநர்களும் இதையேதான் செய்கிறார்கள். இரண்டு தரப்புகளையும் ஆசீர்வதிக்கும் மாயாவியின் கரங்கள் எவருடையவை?