புதிய தலைமுறை இணையதளக் கட்டுரை ஒன்று - “கதைத் திருட்டில் தமிழ் சினிமா” – இதுவரை வெளிவந்த பல முக்கிய தமிழ்ப் படங்களின் கதைகள் தழுவல் என்கிறது. சமூக வலைதளங்களில் மேலும் பல தழுவல் படங்களின் பெயர்கள் தரப்படுகின்றன. ஒரு நண்பர் கமலின் அத்தனை நல்ல படங்களும் தழுவல் தானே எனச் சொல்லி ஒரு பட்டியல் அளித்திருந்தார். இதையே பாலு மகேந்திராவுக்கும் சொல்கிறவர்கள் உண்டு. மணிரத்னமும் விடுபடுவதில்லை. “இருவர்” படத்தில் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு வெகுவாய் கொண்டாடப்பட்ட ஒன்று. ஆனால் இப்படத்திலும் மோகன் லால் தன் மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கு பெறும் காட்சியின் ஒளிப்பதிவு செவன் சாமுராய் படத்தின் இறுக்காட்சியை வெகுவாய் ஒத்திருக்கும். தமிழின் மகத்தான படங்களில் ஒன்றான “நந்தலாலா” “கிக்குஜீரோ” எனும் படத்தின் தழுவல் என சர்ச்சை அப்படம் வெளியிடப்பட்ட காலத்தில் எழுந்தது. இப்படியே, நுண்ணோக்கியை இப்படி அருகில் கொண்டு போய்ப் பார்த்தால் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எந்த சாதனையாளர்களும் எஞ்ச மாட்டார்கள். ஆனால் இவ்வாறு காப்பியடிப்பவர்கள் எனும் முத்திரையை ஒரு படைப்பாளி மீது குத்துவதும் முழுக்க நியாயம் அல்ல. கா...