நிர்மலா தேவி ஆரம்பத்தில் மீடியாவிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து இப்போது சி.பி.சிஐடியிடம் அறித்துள்ள வாக்குமூலமும் பெருமளவில் மாறுபடுவது வெளிப்படை. கவர்னர், கவர்னரின் உதவியாளர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், சில அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடப்பட்டுள்ளன. தான் பொய்யாக அத்தகையோரின் பெயரை செல்வாக்குக்காக பயன்படுத்தியதாக இப்போது சொல்கிறார் நிர்மலா தேவி. தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு அதை மாணவிகளிடம் சொல்லியிருக்கலாம், மீடியாவிடம் ஏன் அத்தகைய பெயர்கள் வர வேண்டும்? இந்த முரண் முக்கியம்.
மீடியாவிடம் தன் செல்வாக்கை காட்டும் பொருட்டு பெயர்களை உதிர்த்தாரா?
எனில், சம்மந்தமே இல்லாமல், மீடியாவிடம் ஆளுநர், ஆளுநரின் செயலர் ஆகியோரின் பெயரை சொல்லி
இருப்பாரா? இடையில், அவர் சிறையில் கொல்லப்படலாம் எனும் சேதி ஏன் பரவியது?
இது சி.பி.சி.ஐடி பொய்யாக சமைத்த, வடிகட்டப்பட்ட வாக்குமூலம்
தான். இதில் பழியை மொத்தமாய் இடைத்தரகர்களான நிர்மலா தேவி, கருப்பசாமி மற்றும் முருகன்
மீது போட்டு விட்டு, எல்லா விபச்சார குற்ற விசாரணைகளிலும் நிகழ்வது போல குற்றத்தில்
பலன் அனுபவித்த பெரும் தலைகள் தப்ப விடப்படுகின்றன. இதில் ஒரு சுவாரஸயம் மனித மேம்பாட்டு
அதிகாரி ஒருவருடனான தன் செக்ஸ் அனுபவங்களை நிர்மலா தேவி வெளிப்படையாகவே
பேசி இருப்பது. இப்போதைக்கு இவருக்கு மட்டும் காவல் துறையின் அருளாசி இல்லை எனத் தெரிகிறது.
இந்த குழப்பங்களுக்கு நடுவில் அவரை மட்டும் கடா வெட்டலாம் என அதிகார வர்க்கம் விரும்புகிறது.
தன்னுடன் உறவில் இருந்த சில வக்கீல்கள், சில ஆட்களுடன அவர்
இருந்த விடுதியின் பெயர் ஆகியவை வாக்குமூலத்தில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம்
1) அந்த விடுதி / ஆட்களின் மீது தேவையற்ற பழி வரக் கூடாது என்பதோ 2) சிலரது அடையாளங்கள்
மறைக்கப்பட வேண்டும் எனும் காவல் துறையின் விருப்பமாகவோ இருக்கலாம்.
எனக்கு இதில் மற்றொரு கேள்வி இருக்கிறது. நிர்மலா தன் முதல்
வாக்குமூலத்தில் நூற்றுக்கணக்கான மாணவிகளை தான் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாய் கூறினார்.
இப்போதைய வாக்குமூலத்தில் குற்றம் சாட்டிய நான்கு மாணவிகளை மட்டுமே தூண்டியதாகவும்
அவர்கள் மறுத்ததாகவும் சொல்கிறார். இது உண்மையெனில் அவர் மீதான வழக்கு நீர்த்துப் போய்
விபச்சாரத்துக்கு தூண்டிய ஒன்றாய் மாறுகிறது. அவருக்கு பல்கலைக்கழக ஆட்கள் சிலருடன்
இருந்த பாலியல் உறவை குற்றமாய் பார்க்க முடியாது. ஆக, நிர்மலா
கவர்னர் உள்ளிட்டோரை தற்போது காப்பாற்றுவதற்கு பதிலீடாக இப்போது சி.பி.சி.ஐடி இப்போது
வழக்கை பலவீனமாக்கி நிர்மலாவை காப்பாற்றி உள்ளது எனலாம்.
யோசித்துப் பாருங்கள்:
நூற்றுக்கணக்கான மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுத்தினார் என்பது எங்கிருக்கிறது, நான்கு
மாணவிகளை குற்றத்தில் ஈடுபடுவதற்காய் தூண்டி தோல்வி அடைந்தார் என்பது எங்கிருக்கிறது?
மாணவிகளை ஈடுபடுத்தி அதிகார வர்க்கத்திடம் அனுகூலம் அடைந்தார், அதன் மூலம் தன் கல்லூரிக்கு
அனுகூலங்களைப் பெற்றுத் தந்தார் எனும் குற்றங்கள் ஊழல் குற்றங்கள். இப்போது ஊழல் கறை
முழுக்க துடைத்து அகற்றப்படுகிறது.
ஒருவேளை இப்படி நீர்மோர்
அக்கப்படாமல் இருந்திருந்தால் அந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் மீதும் வழக்கு பாய்ந்திருக்குமா?
அவர்கள் பலியாகப்பட்டிருப்பார்களா? அவர்களும் சுயவிருப்பத்துடன், பணத்துக்காக பாலுறவில்
ஈடுபட்டார்கள் தானே? இதைக் குறித்து ஒரு சட்டநிபுணர் நண்பரிடம் விசாரித்தேன். அவர்
என்ன சொன்னாரெனில் அந்த மாணவிகளை இவ்வழக்கில் அடையாளம் காட்டாமலே சேர்த்துக் கொள்ள
முடியும் (பாலியல் வழக்குகளில் பெண்களின் அடையாளம் தெரியப்படுத்த வேண்டாம் என சமீபத்தில்
சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது). ஒருவேளை இப்பெண்கள் தம் விருப்பப்படி செய்தார்கள்
என்றாலும் 2017இல் குஜராத்
உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின்படி இது குற்றமாகாது. பெண்ணை வற்புறுத்தி ஈடுபடுத்துவது
மட்டுமே குற்றம், தாமாகவே ஒரு பெண் பணத்துக்காக ஈடுபடுவது குற்றமாகாது. ஈடுபடும் ஆணையும்
குற்றவாளி ஆக்க முடியாது.
ஆகையால் இவ்வழக்கை
வலுவாக்கும் ஒரே வழி இதன் பின்னணியில் உள்ள ஊழலை (பணத்துக்குப் பதிலாய் பெண்ணுடலை அளிக்கும்
ஊழல்) வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மட்டுமே. அதை விசாரணை அதிகாரிகள் செய்யாதது அவர்களின்
நோக்கத்தை பட்டவர்த்தமாக்குகிறது.
இது போன்ற வழக்கு விசாரணைகள் அடிப்படையிலேயே பிழையானவை.
சி.பி.சி.ஐடி மாநில அரசின் கீழ் வருகிறது. மாநில அரசு மத்திய
அரசின் கீழ் வருகிறது. மத்திய அரசின் பிரதிநிதி கவர்னர். ஆக சி.பி.சி.ஐடி கவர்னரின்
கீழே இருக்கிறது. உங்கள் குடுமி யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு எதிராக எப்படி
உங்களால் விசாரணை நடத்தி நிரூபிக்க முடியும்?