பெருந்தேவியின் “பாலியியல்
துன்புறுத்தல்...” என தலைப்பிட்ட, மின்னம்பலத்தில் வெளியான, இந்த கட்டுரை ஒரே மட்டையடி தடாலடியாக உள்ளது.
https://minnambalam.com/k/2018/10/23/20?fbclid=IwAR3PC_b5uM56vF2hCRz9Z1U-2SuKtp2rSovzjnpDt7OUxj1dL1NVw7qheVg
உதாரணமாக அவர் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலை விவாதிக்கும் இந்த இடத்தைப் பாருங்கள்:
//"எல்லா ஆம்பிளைகளுக்கும்… ஒருத்தன்கூட
விதிவிலக்கு இல்லை. அப்பாவை நான் பார்த்ததில்லை. அண்ணா? ஆமா,
ரொம்ப யோக்கியன்தான். …
இந்த மாதிரி பஸ்ஸில வரும்போது அவனையும் பஸ்ஸில பார்த்திருக்கேன். -
இதோ என் மேல சாயறானே அவன் எவ்வளவோ யோக்கியன் - அந்தக் கூடப் பொறந்த அண்ணனோட பார்வை
இதைவிட அசிங்கமா இருக்கும். அவன் என்னென்ன நினைச்சுண்டு என்னைப் பார்க்கறானோ?”
ஊறுபடத்தக்க நிலையில் இருக்கும் பெண்ணின் தன்னிலை இந்த வரிகளில்
காட்டப்படுகிறது. ஊறு உண்டாக்கக்கூடியவர்களில் சொந்தம் / அந்நியம்,
வீடு / வெளி என்ற பேதமேயில்லை.//
ஒரு அப்பா தன் மகளிடமும் அண்ணன் தன் தங்கையிடமும் பாலியல்
அத்துமீறலில் ஈடுபடலாம். ஏனென்றால் அதுவே ஆணின் அடிப்படை இயல்பாம்.
இதை மேலும் நீட்டிக்கொண்டு போனால் எல்லாம் தகப்பன்களும்
அண்ணன்களும் potential abusers என ஆகிறது. சரி உண்மை எனில் இதற்கு
ஒரே தீர்வு தான்: ஹிட்லர் பாணியில் நம்மூரின் எல்லா ஆண்களையும் கேஸ் சேம்பரில்
வைத்து கொன்று விடலாம். ஒரு வருடத்துக்கு ஒரு கோடி ஆண்கள் என கணக்கு
வைத்துக் கொண்டால் விரைவில் ஆணினத்தையே அழித்து விடலாம். அதோடு பெண்களும்
சுதந்திரம் அடைந்து விடுவார்கள்.
நம் பெண்ணியவாதிகளின் எதிர்மறை மனோபாவத்தை,
tunneled visionஐப் பார்த்தால் எனக்கு இதைத் தவிர வேறொன்றுமே தோன்றவில்லை.
ஜெயகாந்தனின் மேற்சொன்ன நாவலில் தன்னை பலாத்காரம் செய்தவனை நோக்கி
அப்பெண் ஈர்க்கப்படுவதைப் பற்றி, இதை ஒத்த மற்றொரு கதையான “அக்னி
பிரவேசத்தில்” அவள் தாய் அந்த குற்ற நிகழ்வைப் பற்றி விசாரிக்கும்
போது அவள் பபிள் கம் மெல்லுவதைப் பற்றி ஏன் பெருந்தேவி எழுதவில்லை?
பெண் தன்னிலை என்பது ஒற்றை பட்டையானது தானா?
பெண் என்பவள் தொடர்ந்து உருமாறும் தன்னிலை இல்லையா? ஆண்-பெண் எனும் பால்நிலைகளை உடலாக மட்டுமே காண வேண்டுமா?
இக்கேள்விகள் இன்றைய பின்நவீன சுழலில் முக்கியமானவை. தன்
பிரச்சார வசதிக்காக பெருந்தேவி காலாவதியான ஆரம்ப கால பெண்ணியத்தின் ஆண்-பெண் இருமை
கதையாடலை இன்று பயன்படுத்தலாமா? பெண்ணாய் பிறந்தவள் ஒடுக்கப்படுபவள், ஆணாய் பிறந்தவன்
என்றால் அவன் நிச்சயம் அப்பெண்ணை ஒடுக்குவான் என யோசிப்பது ஒரு தட்டையான பிற்போக்கு
சிந்தனை அல்லவா?
தன் metoo பிரச்சார தேவைக்காக பெருந்தேவி ஆரம்பகால பெண்ணியவாதிகளின்
பாணியை கையில் எடுப்பது வருந்தத்தக்கது. ஆண்-பெண் உறவாடல்கள் நுணுக்கங்களும் சிக்கல்களும்
நிறைந்தவை, தொடர்ந்து உருமாறுபவை, ஒரு துன்புறுத்தலான உறவில் கூட துன்புறுத்துபவனும்
பாதிக்கப்படுபவரும் ஒரே தன்னிலையில் தொடர்ந்து இருப்பதில்லை. இதையே ஜெயகாந்தனின் மேற்சொன்ன
நாவலும் காட்டுகிறது. ஆனால் அந்நாவலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை இவ்வளவு
தட்டையாக பெருந்தேவி தன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது நியாயமல்ல.