உடல் சவால் கொண்ட கலைஞர்கள் பங்கேற்ற மிகவும் நெகிழச் செய்கிற,
முக்கியமான கேள்விகளை எழுப்பிய சமீபத்திய “நீயா நானா” நிகழ்ச்சியில் ஒரு பார்வை சவால்
கொண்ட ஆசிரியர் தன்னை ஒத்தோருக்கு வேலை கிடைப்பதில் உள்ள பிரதான சிக்கலைப் பற்றி குறிப்பிட்டார்.
தனியார் துறைகளில் பார்வை சவால் கொண்டோருக்கு வேலை கொடுக்கவே தயங்குகிறார்கள். குறிப்பாக
ஆசிரிய வேலை எட்டாக்கனியாகவே இருக்கிறது, (ஆச்சரியமாக இந்த வேலையில் தான் நான் பார்வை
சவால் கொண்டோரை அதிகமாய் பார்த்திருக்கவும் செய்கிறேன்.) எனக்கே இப்படியான அனுபவம்
ஓன்று உள்ளது.
சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலையில் நான் முதல் மாணாக்கனாய்
தங்கப் பதக்கம் பெற்றேன். என் கல்லூரி மீது மிகுந்த அபிமானம் எனக்கு என்றும் உண்டு.
ஆகையால் அங்கு பணி செய்யவும் ஏங்கினேன். ஒருமுறை விரிவுரையாளர் வேலைக்கான நேர்முகத்தேர்வில்
கலந்து கொண்டு இறுதிப் பட்டியலில் இடம் பெற்றேன். தகுதி, திறமை என முன்னே நின்றது நான்
தான். பட்டப்படிப்பில் நான் பெற்ற மதிப்பெண் சராசரி 70%. ஆனால் என்னை நிராகரித்து விட்டு,
52% மட்டுமே பெற்ற என் நண்பர் ஒருவருக்கு வேலையை கொடுத்தார்கள். என்னால் இந்த நிராகரிப்பை
நீண்ட காலம் ஜீரணிக்கவே முடியவில்லை. புழுங்கிக் கொண்டே இருந்தேன். அன்று அந்த நேர்முகத்
தேர்வை நடத்திய என் பேராசிரியரை சில வருடங்களுக்குப் பிறகு சந்தித்த போது அவர் என்
கையைப் பற்றிக் கொண்டு ”என்னால் தான் உனக்கு வேலை கிடைக்கலேன்னு நினைச்சுக்காதே. தேர்வுக்
குழுவில் இருந்த பிறர் ஊனமுற்ற ஒருவரால் எப்படி வகுப்பை நடத்த முடியும் என தயங்கினார்கள்.
அதனால் தான் உனக்குத் தரவில்லை. மற்றபடி உனக்கு எல்லா தகுதிகளும் உண்டு.” என்றார்.
ஆனால் நான் பின்னர் மூன்று கல்லூரிகளுக்கு மேல் பணி செய்து விட்டேன். இந்த வேலையை ஏன்
என்னால் பண்ண முடியாது என சொன்னார்கள் என நான் வியக்காத நாளில்ல்லை.
ஒரு எழுத்தாளனாய்
மலர்ந்து தேசிய விருதெல்லாம் பெற்ற பிறகு அதே சென்னை கிறித்துவக் கல்லூரியில் என்னை
சிறப்பு விருந்தினராய் அழைத்து உரையாற்ற வைத்தார்கள். காலத்தின் விளையாட்டை எண்ணி நான்
வியந்த வேளை அது. நம்மை நிராகரிக்கும் கரங்களே அள்ளி அணைப்பது அடிக்கடி நடக்கும் ஒன்று.
உடல் சவால் கொண்டோரால் குறிப்பிட்ட சில வேலைகளை செய்ய முடியாது,
ஆனால் பெரும்பாலான வேலைகளை இன்று செய்ய முடியும். நம்மூரில் இன்றும் ஊனம் குறித்து
சில மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.
1) உடல் சவால்களின் உலகமே நமக்கு இன்னும் பரிச்சயமாகவில்லை.
ஏனெனில், நம் அன்றாட உலகில் அவர்கள் போதுமான படி புழங்குவதில்லை. பார்வை சவால் கொண்டோர்
எனில் நம் கண் முன் வரும் பிம்பம் ரயிலிலும் பேருந்திலும் பாடி பிச்சையெடுப்பவர், ரோட்டோரம்
அமர்ந்து பத்து ரூபாய்க்கு பொருள் விற்பவர் என்பது தானே. இது நம் தவறல்ல. அவர்களுக்கு
போதுமான வாய்ப்புகள் அளித்தால் அவர்கள் நம் கல்வித் தலங்களில், வேலையிடங்களில், நம்
டீக்கடைகளில், நம் ஊடகங்களில் அதிகமாய் தோற்றமளிப்பார்கள். அப்போது அவர்களின் நிலை
நமக்கு இயல்பான ஒன்றாகும். இயல்பாகி விட்டால் அவர்களை ஒதுக்கி வைக்க நினைக்க மாட்டோம்.
இது ஒரு காலத்தில் பெண்களுக்கும், தொண்ணுறுகள் வரை தலித்துகளுக்கும் இருந்த தடை தான்.
அன்று ஒரு பெண் வேலைக்குப் போனால் விசித்திரமாய் பார்த்தார்கள். ஒரு பத்தாண்டில் நிலைமை
தலைகீழாக, இன்று அவர்கள் வேலைக்கு போகாவிட்டால் தான் ஏதோ பிரச்சனை என நினைக்கிறோம்.
தொண்ணூறுகள் வரை தலித்துகள் என்றால் சேரி வாழ் மக்கள், கலவரங்களில் பாதிக்கப்படுவோர்,
விடுதலைச் சிறுத்தைகள் என்றே பிம்பம் இருந்தது; அது இன்று மாறி திறமையாளர்கள், சாதனையாளர்கள்
என உயர்ந்திருக்கிறது; ரஞ்சித் போன்ற சினிமா நட்சத்திரங்களின் வருகை இதற்கு முக்கிய
காரணமானது. இந்த மாற்றங்கள் உடல் சவாலுற்றோரின் உலகிலும் நிகழ வேண்டும் என்பதே என்
கனா.
2) இதே “நியா நானாவில்” பேருந்தில் பயணிப்பதில் பார்வை
சவாலுற்றோருக்கு உள்ள பிரச்சனைகளைப் பற்றிப் பேசினார்கள். அது மட்டுமல்ல நமது பயணத்
தடங்கள், கட்டிட அமைப்புகள் என ஒவ்வொன்றுமே பார்வை சவால் கொண்டோருக்கு திறவாத கதவுகளாகவே
உள்ளன. உங்களில் யாருக்காவது கால் எலும்பு முறிந்து மூன்று மாதம் வேலைக்குப் போகும்
கட்டாயம் ஏற்பட்டால் நான் சொல்வதன் பொருள் சுலபத்தில் புரியும். நம் உலகம் படிக்கட்டுகளின்,
தேவையற்ற ஏராளமான தடுப்பரண்களின் உலகம். கல்வியிடங்களில் உடல் சவால் கொண்டோருக்கு தடையில்லாத
படி இடமும் கட்டிட அமைப்பும் இருக்க வேண்டும் என யு.ஜி.ஸி விதிமுறை உள்ளது, ஆனால் போதுமான
அளவு இதை வலியுறுத்தாததால் கணிசமான கல்வியிடங்களில் இதை பின்பற்றுவதில்லை. அடுத்த முறை
நீங்கள் கழிப்பறை போகும் போது அங்கே ஒரு சக்கர நாற்காலி நுழையுமா என யோசியுங்கள். நுழையாது
எனில் அங்கு நீங்கள் சொல்லும் சேதி என்ன? உடல் சவால் கொண்டோர் கழிப்பறையே போக வேண்டாம்
என்றா சொல்ல வருகிறோம்?
இதைக்
குறித்த பிரக்ஞை வலுப்படுத்துவது அவசியம். இந்த தடைகள் அகன்றாலே உடல் சவால் கொண்டோர்
நம் உலகினுள் பிரவேசிக்க முடியும். அவர்களை பிரவேசிக்க அனுமதிக்காததும் ஒருவித ஒடுக்குமுறை
தான்.
3) “நீயா நானாவில்” பங்கேற்ற ஒரு ஆசிரியரும், கோபிநாத்
வழியாக இயக்குநர் ஆண்டனியும் கூட இதை வலியுறுத்தினார்: “உடல் சவால் கொண்டோருக்கு தனியார்
வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்”. முன்னுரிமை என்பதை விட நியாயமான வாய்ப்பு என்றே
நான் சொல்வேன்.
4) இதை “நீயா நானாவில்” யாரும் குறிப்பிடவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களில், அமைப்புகளில், வணிக தலங்களில் உடல் சவால் கொண்டோருக்கு
அதிக வசதிகள் செய்து தரப்படுகின்றன. மாறுபட்டோரை உள்ளடக்கி செல்ல வேண்டும் எனும்
inclusivist அணுகுமுறை கார்ப்பரேட் கொள்கையில் பிரதானமான ஒன்று. நிலப்பிரபுத்துவ பின்புலம்
கொண்ட எந்த இடத்திலும் தடைகள் அதிகமாகவும், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது தொடர்ந்தும்
நடக்கும்; ஆனால் கார்ப்பரேட்டுகள் மாறுபட்ட இயல்பினரை சுலபத்தில் அரவணைத்துக் கொள்கின்றன.
பாரம்பரிய ரெயில்கள் ஒரு நிலப்பிரபுத்துவ எச்சம் – அங்கு ஊனமுற்றோர் நுழைய முடியாது;
மெட்ரோ ரெயில்கள் கார்ப்பரேட் இயல்பு கொண்டது. அங்கு உடல் சவால் கொண்ட ஒருவர் சுலபத்தில்
பயணிக்க முடியும். ஒரு கோயிலையும் ஹைப்பர் மார்க்கெட் கடையையும் ஒப்பிட்டாலும் இது
விளங்கும்.
இது நவீனம்
தரும் வசதி மட்டும் அல்ல. நிலப்பிரபுத்துவ அமைப்புகள் ஒருவரை உடலின் அடிப்படையில் மதிப்பிடுகின்றன;
ஆனால் கார்ப்பரேட்டோ அவரது இயல்பு, திறமை, தகுதி, ஆளுமை ஆகியவற்றை அவரது உற்பத்தித்
திறனாய் கண்டு அதன் அடிப்படையில் அவரை மதிப்பிடுகிறது. பெண்கள், தலித்துகள் என வேறு
ஒடுக்கப்பட்ட தரப்பினரையும் கார்ப்பரேட்டுகள் மேலாகவே நடத்துகின்றன (அங்கும் ஒரு தலைபட்சமானவர்கள்,
அநீதி செய்பவர்களும் உண்டெனினும்).
“நீயா நானாவில்” பேசிய உளவியலாளர் ஒருவர் எத்தனை
பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என வினவ கிட்டத்தட்ட எல்லாருமே கை உயர்த்தினர்.
ஸ்மார்ட் போன் போன்ற கார்ப்பரேட் தொழில்நுட்ப சங்கதிகள், உபகரணங்கள் இத்தகையோருக்கு
பெரும் விடுதலையை இன்று அளித்துள்ளன.
நமது நிலம், தொல் பண்பாடு, மதம் உள்ளிட்ட எல்லா
நிலப்பிரபுத்துவ கட்டமைப்புகளும் உடல் சவால் கொண்டோருக்கு விரோதமானவை.