| பகவானும் அவர் மாணவ மாணவியரும் ஐரோப்பிய கார்ப்பரேட் சூழலில் என்னாவார்கள்? |
பெருந்தேவி தன் முகநூல் பக்கத்தில் மேற்கத்திய கல்வி நிலையங்களில்
ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துள்ள வரைமுறைகள், நியதிகள்
பற்றி எழுதியிருந்தார். பாலியல், இனவாத துன்புறுத்தல் நிகழக் கூடாது என்பதற்காக இரு
சாராரும் ஒருவித இடைவெளியை தக்க வைக்க வேண்டும் என இத்தகைய நிறுவனங்கள் கோருகின்றன.
Professional relationship (தொழில்முறை உறவு) என்பது வலியுறுத்தப்படுகிறது.
உதாரணமாய், ஒரு மாணவருக்கு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க வேண்டுமெனில்
அப்பாயின்மெண்ட் வாங்கி அவரது அறையில் வந்து சந்திக்க வேண்டும், இருவரும் வெளியே சென்று
உரையாடக் கூடாது, காலாற நடந்து கொண்டே காப்பி அருந்தி வேடிக்கை பார்த்துக் கொண்டே பேசக்
கூடாது, அறையில் பேசும் போது கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள்
உள்ளன. இவை ஆசிரியர்-மாணவர் உறவை பிளாஸ்டிக்காக மாற்றி விடுவதால் எந்த பிசிறுகளும்
பிறழ்வுகளும் நேராமலும் இருக்கும். அதாவது 100 உறவுகளில் பாலியல் தொந்தரவு ஒன்றில்
நிகழலாம். இந்த ஒன்றைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய நடைமுறை.
இத்தகைய நடைமுறை மாணவர்களுக்கு நலம் பயக்குமா? இது இந்திய
சூழலுக்கு உகந்ததா?
1) மேற்சொன்ன நடைமுறை ஐரோப்பிய சூழலுக்கு மிகவும்
பொருந்தும் ஒன்று. உதாரணமாய், ஐரோப்பியர் ஒவ்வொரு நடவடிக்கைக்கும், வேலைக்கும் ஒரு
குறிப்பிட்ட இடம், காலம் ஆகியவற்றை வகுத்திருப்பார்கள். எட்டு மணி நேரத்துக்கு மேல்
அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் தட்ட மாட்டார்கள். விடுமுறையில் வேலை செய்ய மாட்டார்கள்.
வீட்டு வேலையை வீட்டிலும் அலுவலக வேலையை அலுவலகத்திலும் வைத்துக் கொள்வார்கள். அலுவலக
உறவையும் அதற்கு வெளியே உள்ள நட்புகளையும் இரண்டாக கச்சிதமாய் வைத்துக் கொள்வார்கள்.
இந்த compartmentalization உண்மையில் இந்தியாவுக்கு உகந்ததாய் இருக்குமா? பெரும்பாலும்
இருக்காது. Professional relationship என்கிற விசயத்துக்கே நாம் இன்னும் பழகவில்லை.
2) மேலும்
இங்கு ஆசிரியர்-மாணவர் உறவு இங்கு ஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் பொருந்துவதல்ல. அதையும்
கடந்தது. என் முனைவர் பட்ட நெறியாளர் பேரா. அழகரசன் எனக்கு வெறும் நெறியாளர் அல்ல.
நான் என் ஆய்வுக் காலத்தில் அவர் அலுவலகத்திலே பழியாகக் கிடப்பேன். அவர் அறையில் இருந்து
படித்த பழைய சிறுபத்திரிகை இதழ்களும், நூல்களும், அவர் பேச்சில் இருந்து நான் கிரகித்த
சேதிகளும் தான் எனது “ரசிகன்” நாவலுக்கு அடித்தளமாயின. எனக்கு உடல்நலமில்லாமல் போய்
மருத்துவமனையில் கோமாவில் கிடந்த போது அவர் வந்து பார்த்துக் கொண்டார். எவ்வளவோ நாட்கள்
நான் அவரைப் பார்க்க வருவதாய் சொல்லும் போது எனக்காக மதிய உணவை வாங்கி வைத்து விடுவார்.
அவர் உணவிலும் பங்கிட்டு சாப்பிடுவேன். நான் பங்களூருக்கு வேலைக்கு வந்த போது எனக்கு
தானியங்கி சக்கர நாற்காலி தேவைப்பட்டது. அதற்காகும் செலவில் ஒரு கணிசமான தொகையை அவரிடம்
தான் வாங்கிக் கொண்டேன். என் முனைவர் பட்ட ஆய்வுக்கான கட்டணத்தையும் அவரே கட்டி இருக்கிறார்.
இது மட்டுமில்லாமல் மனரீதியாகவும் தொடர்ந்து என்னை பாதுகாத்தும் தட்டிக் கொடுத்து ஊக்குவித்தும்
வந்திருக்கிறார்.
இது போல் எத்தனையோ பேராசிரியர்கள் தம் மாணவர்களுக்கு
உற்ற நண்பர்களாய், தகப்பனாய்,தாயாய், ஆதரவுக் கரங்களாய் இருந்திருக்கிறார்கள். நமது
மரபு அப்படியான ஒன்று. நம் வேலையிடம் என்பது ஒரு நீடிக்கப்பட்ட குடும்பம். சம்பளத்துக்காக
மட்டுமே மனிதர்களுடன் உறவாடுவது ஒரு எந்திரமயமாக்கல் பண்பாட்டின் நீட்சி. அதுவே இன்று
ஐரோப்பாவில் உள்ளது. ஆனால் அதை எதிர்மறையான ஒன்றெனவே நான் பார்க்கிறேன்.
Professional ஆசிரியர்கள் அதிகமானால் மேற்சொன்ன
ஆத்மார்த்தமான உணர்வுபூர்வமான ஆழமான ஆசிரியர்-மாணவர் உறவுகள் காலியாகும். பதிலுக்கு
பிளாஸ்டிக்கான, போன் செய்தால் வருகிற பீட்சா போன்ற ஆசிரியர்கள் தோன்றுவார்கள். அவர்கள்
மாணவர்கள் படித்தாலும் படிக்க முடியாத சிக்கல்களில் மாட்டி இருந்தாலும் தலையிட மாட்டார்கள்.
அலுவலக நேரம் கடந்து தம் மாணவர்கள் தூக்குமாட்டி செத்தாலும் அக்கறை இருக்காது, “உங்க
மாணவர் தற்கொலை பண்ணாருங்க” என்றால் “கவுன்சிலரிடம் பேசிக் கொள்ளுங்க. இல்ல என் அறைக்கு
நாளைக் காலை 9: 30க்கு வந்து பார்க்க சொல்லுங்க” என பதிலளிப்பார்கள். நான் இத்தகைய
ஆட்களை மதிப்பதே இல்லை. ஆசிரிய வேலை என்பது வேலை அல்ல. அது ஒரு சேவை, அது ஒரு அற்புதமான
உறவு.
3) இந்தியாவில் மனிதர்கள் தனிமனிதர்கள் அல்ல. நம்மால்
தன் வேலையை தான் மட்டும் கவனிக்கும் பண்பாட்டில் வாழ முடியாது. கூடி வாழ்வதும் கூடி
அழிவதுமே நம் வழக்கம். ஐரோப்பாவில் தனிமனிதர்களே அதிகம். அங்கு 12 வயது குழந்தை கூட
தானே முடிவெடுத்து தானே தன் செயல்களுக்கு பொறுப்பாகும் உறுதியுடன் இருக்கும். ஆனால்
இங்கே கையைப் பற்றி வழிநடத்தவும் தொடர்ந்து அணைத்து ஆறுதல் தரவும் நமக்கு மனிதர்கள்
தேவை. இங்கே அதை ஆசிரியர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தைக்கு
இரண்டாம் தந்தையாக, தாயாக இருந்து வருகிறார்கள். மேற்கத்திய வறட்டுச் சூழலை இந்தியாவுக்கு
கொணர்ந்தால் தமிழகத்து கிராமங்களில் பகவான் போன்ற ஆசிரியர்கள் தோன்றவே முடியாது. மாறாக,
ஐந்து நட்சத்திர விடுதி வரவேற்பாளர் போன்றே ஆசிரியர்கள் இருப்பார்கள் – பிளாஸ்டிக்
புன்னகையுடன் பிளாஸ்டிக் அக்கறையுடன், சதா தான் கண்காணிக்கப்படுகிறோம் எனும் மறைமுக
அச்சத்துடன்.
4) இந்த professional பாணி என்பது இன்றைய கார்ப்பரேட்
யுகத்தின் வியாதிகளில் ஒன்று. கார்ப்பரேட்டுகள் தமக்கு கீழ் செயல்படுபவர்களின் நடவடிக்கைகளை
கராறாய் கட்டுப்படுத்த, பிசிறின்றி ஒருங்கிணைக்க விரும்புகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள்
உங்களது அன்றாட செயல்பாடுகளுக்கு இலக்கணம் வகுப்பார்கள். காற்புள்ளி, அரைப்புள்ளி கூட
பிசகாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பார்கள். சாப்ளினின் “மாடர்ன் ஏஜ்” படத்தின் கீழ்வரும்
காட்சியை பாருங்கள். கார்ப்பரேட்கள் இவ்வாறு தான் ஆசிரியர்களை மாற்ற நினைக்கிறார்கள்.
ஏன் கார்ப்பரேட்டுகள் இவ்வாறு வரையறுக்கின்றன?
கார்ப்பரேட்டுகள் தமக்கு கீழ் பணி செய்யும் மனிதர்களின் நடவடிக்கைகளின் எதிர்பாரா தன்மையை
கண்டு அஞ்சுகின்றன. இந்த எதிர்பாரா தன்மை கார்ப்பரேட் அதிகாரத்தின் மீதான எதிர்ப்பாக
மாறுகிறது. ஆகையால் எதிர்பாரா செயல்பாடுகளை முழுக்க ஒட்டாக நறுக்க வேண்டுமென கார்ப்பரேட்கள்
துடிக்கின்றன. மேலும் மானுட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கார்ப்பரேட்டுகள்
ஒவ்வொறு நொடியையும் லாபகரமாய் மாற்ற நினைக்கின்றன; அதிகாரத்தை செலுத்துகின்றன.
இந்த கார்ப்பரேட் ஒழுக்கவாதம் இன்னும் முழுக்க
செலுத்தப்படாத வேலையிடம் என்பது கல்லூரி, பல்கலைக்கழகமே. ஆனால் எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களும்
“மாடர்ன் டைம்ஸ்” போல ஆகும் என்பதில் ஐயமில்லை.
(தொடரும்)