
அதிகார வர்க்கத்துக்காக நிர்மலாதேவி செய்தது போன்ற குற்றங்களில்
சம்மந்தப்பட்ட பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்படுவது
வாடிக்கை. யாரும் இதைத் தடுக்க முடியாது. இதற்கு முழுப்பொறுப்பை நம் அரசியல் சட்ட அமைப்பை
எழுதினவர்கள் தாம் சுமக்க வேண்டும். நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதை விட அதிகார
ஓரிடத்தில் குவிய வேண்டும், ஆளும் கட்சி நிலையாக இருக்க வேண்டும், மாநிலங்கள் ஒற்றைப்
புள்ளியில் திரள வேண்டும், அவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்படக் கூடாது, பிரிவினை
எண்ணம் வரக் கூடாது என்பதே நம் சட்டத் தந்தைகளின் நோக்கமாய் இருந்தது. ஆகையால் அதிகார
பரவலாக்கத்தை ரத்து செய்து அதிகார குவிப்பை அவர்கள் ஆதரித்தார்கள்.
முழுக்க முழுக்க
அதிகார வர்க்கத்துக்கு சாதகமான, பொதுமக்களுக்கு விரோதமான அரசியல் சட்டம் நமது. மக்களுக்கு
தண்டிக்க கிடைக்கும் ஒரே வாய்ப்பு தேர்தலே. அப்போதும் எதிர்க்கட்சி வந்து முந்தின ஆட்சியாளர்களை
தண்டிப்பார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை. அது மட்டுமல்ல, ஊழல்களில் சரிபங்கை
வகிக்கும் நம் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியாது. அதிகாரிகளே தம்மைத்
தாமே விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாதில்லையா?
இந்த அவல நிலைக்கு ஒரு தீர்வு, இத்தகைய ஆளும் வர்க்கத்துக்கு
எதிரான வழக்குகள் வரும் போது நீதிமன்றத்தின் கீழ் சமூக ஆர்வலர், எதிர்க் கட்சி தலைவர்,
நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை நிர்மாணித்து அதன் கீழ் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐடி
போன்ற அமைப்புகளை கொண்டு வருவது; இந்த அமைப்பில் உள்ள விசாரணை அதிகாரிகளை பதவி நீக்கம்
செய்யவும் அவர்களின் பதவி உயர்வுக்கு தடை விதிப்பதற்குமான அதிகாரத்தை இந்த நீதிமன்றக்
குழுவுக்கு கொடுப்பது – சுருக்கமாய் ஆளும் கட்சியின் கையை சற்றே கட்டிப் போடுவது.
அதுவரை நீதி என்பதே சாத்தியமில்லை.