என் நண்பர் ஒருவர் தொழில்முறை சினிமாக்காரர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் எடுத்தார். அவர்களின் தொழில்நேர்த்தி, கடப்பாடு பற்றி வியந்தார். தொடர்ந்து பத்து மணிநேரம் லைட் பாய்கள் நின்று வேலை பார்ப்பது, அனைவரும் நேரத்துக்கு வேலைக்கு வருவது போன்றவற்றை கூறி நம் எழுத்தாளர்கள், இலக்கிய ஆட்களுக்கு இந்த மாதிரியான மனநிலை இல்லை. நாம் அடிப்படையில் சோம்பேறிகள் என்றார். இது உண்மை தான். நான் முன்னர் "இன்மைக்காக" ஒரு நண்பரிடம் ஒரு அஞ்சலிக்கட்டுரை எழுதித் தரக் கேட்டேன். அவர் நான்கு வரிகள் எழுதி அனுப்பினார். நான் இன்னும் சில வரிகள் எழுதுங்கள் என்றேன். அவர் கூட ஒரு வரி எழுதி அனுப்பினார். ஆனால் ஒரு பத்தியை எப்படி ஒரு கட்டுரை என்று போடுவது? கடைசியில் இறந்து போனவரின் கவிதை ஒன்றையும் சேர்த்து கொஞ்சம் நீளமாக்கி பிரசுரித்தோம்.