சமீபத்தில்
படித்ததில் இரு கட்டுரைகள் கவர்ந்தன. ஒன்று காட்சிப்பிழையில் “மெட்ராஸ்” பற்றி ஸ்டாலின்
ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை. ஆழமான பார்வை கொண்ட கட்டுரை.
இன்னொன்று
செல்லமுத்து குப்புசாமி இம்மாத “உயிர்மையில்” எழுதியுள்ள இணைய வர்த்தகம் பற்றினது.
இணைய வர்த்தகத்தால் வழக்கமான சில்லறை வியாபாரிகளும் கடைகளும் பாதிக்கப்பட மாட்டார்கள்
என்பது குப்புசாமியின் கட்டுரையின் மையச் சரடு. இணைய வர்த்தகம் புது வாடிக்கையாளர்களை உருவாக்குகிறது.
நூறு பேர் இருந்த இடத்தில் ஆயிரம் பேரை கொண்டு வருகிறது. அதாவது நம்மில் ஒருவருக்குள்
ஒரு வழக்கமான வாடிக்கையாளன் இருக்கிறான் என்றால் இணைய வர்த்தகம் நம்மை இரண்டாக உடைத்து
அதில் ஒன்றை இணைய வாடிக்கையாளராகிறோம் மாற்றுகிறது. ஆக நாம் இரண்டு மடங்காக இந்த வர்த்தகத்தில்
பங்கெடுக்கிறோம். இணையம் வந்த போது பத்திரிகைகளும், டிவியினால் செய்தித்தாள்களும் அழியும்
என்றார்கள். ஆனால் இங்கு பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் பெருகியிருக்கின்றன. அது போல்
இணைய வாசிப்பினால் இலக்கிய நூல்கள் வாங்குகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது
(அவர்கள் வாசிக்கிறார்களா என்பது வேறு விசயம்). T20 வந்த போது டெஸ்ட் அழியும் என்றார்கள்.
ஆனால் டெஸ்டும் அதைப் பார்க்கிறவர்களும் அப்படியே தான் இருக்கிறார்கள். கிரிக்கெட்
அஞ்ஞானிகளில் கோடிக்கணக்கான பேரை T20 தன் புது வாடிக்கையாளர்களாக்கி இருக்கிறது. இப்படி
ஒரு புது முறை வர்த்தகத்துக்குள் வரும் போது அது லாபத்தை மட்டுமல்ல வாடிக்கையாளர்களையும்
பெருக்குகிறது. இதில் ஒரு சுவாரஸ்யமான விசயம் இலக்கு நாம் தான் என்பது. ஜராசந்தனை பிளந்தது
போல் நம்மை துண்டு துண்டாக்கி பல்வேறு வணிகங்களில் ஈடுபடும் வாடிக்கையாளராக்க இன்றைய
சூழலுக்கு முடியும். எவ்வளவு வாங்கினாலும் நம் பசி அடங்குவதில்லை. சூதாட்டத்துக்கு
இணையான ஒரு சுவை நமக்கு இதில் இருக்கிறது. பிளிப்கார்ட் எப்படி வளர்ந்தார்கள் என்பது
பற்றின ஒரு சுவையான பதிவும் இக்கட்டுரையில் உள்ளது. Big Billion Day அன்றைக்கு நான்
கூட இணையத்தில் நீச்சலடித்து சில பொருட்களை பொறுக்கினேன். சல்லிசாக வாங்கி விட்டோம்
எனும் திருப்தி பெற்றேன். அவ்வளவு குறைவாக தராவிட்டால் நான் அப்பொருட்களை வாங்கி இருக்க
மாட்டேன். ஏனென்றால் அப்பொருட்கள் எனக்கு அத்தியாவசியம் அல்ல. தேவையில்லாத பொருளை நமக்கு
அத்தியாவசியமானதாக உணர வைப்பதில் இணைய அங்காடியின் தந்திரம் உள்ளது. நாம் அதற்காக ஏங்குகிறோம்,
ஏக்கத்தை நியாயப்படுத்த காரணங்களை கற்பிக்கிறோம், காசு திரட்டி வாங்குகிறோம். பிறகு
மீண்டும் மற்றொரு ஏக்கம்.
இறுதியாக,
வால்மார்ட் வந்தால் சில்லறை வணிகம் என்னவாகும்? பாதிக்கப்படுவார்கள் நிச்சயமாய். ஆனால்
ஒரேயடியாய் காணாமல் போக மாட்டார்கள். இப்போதும் ரெண்டு ரூபாய்க்கு தேங்காய் பத்தை வாங்குகிறவர்கள்
இருக்கிறார்கள் தானே. தள்ளுவண்டியில் வரும் தக்காளியை வாங்க என்னைப் போன்றவர்களும்
தவறுவதில்லை. இந்தியா ஒரு கடல். அங்கு நீங்கள் ஒரு பாறாங்கல்லை தூக்கிப் போட்டாலும்
சின்ன ஏப்பம் விட்டு வயிறை அகட்டி சுணங்காது ஏற்றுக் கொள்ளும்.