மொழிபெயர்ப்பு
ஒரு புறம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பெயர்ப்பது. தட்டையான வறட்டுத்தனமான தன்மை
கொண்டது. இன்னொரு புறம் உணர்வெழுச்சியும் அகத்தூண்டலும் மொழியாக்கத்துக்கு ஒரு தனி
ஒளியை, ஆழத்தை, சரளத்தன்மையை அளிக்கும். ஆனால் நல்ல மொழிபெயர்ப்பு இவை இரண்டுக்கும்
இடையே இருக்கிறது. நம் கற்பனையை ரொம்ப பறக்க விடாமல் அதேவேளை ரொம்பவும் ஈடுபாடின்றி
எந்திரத்தனமாய் பதிலி வார்த்தைகளை அடுக்கி செய்யாமலும் ஒரு இடைப்பட்ட வகை ”மிதவாதமான” மொழியாக்கமே நல்லது. இது கவிதைக்கு மிக அதிகமாகவும் புனைவுக்கு
ஓரளவும் பொருந்தும்.
கவிதை
மொழிபெயர்ப்பில் உள்ள முக்கிய பிரச்சனை ஒரு வாசகனின் நிலையில் இருந்து நாம் மொழியாக்கத்தை
வாசகனின் அதே துடுக்குத்தனமான, தைரியத்துடன், ஒரு மனப்பதிவின் அடிப்படையில் செய்வது
தான். அது அழகான அதே நேரம் ஆபத்தான முறை. வாசகனாக நாம் ஒரு படைப்பின் சொற்கள் ஒவ்வொன்றையும்
துல்லியமாக புரிந்து கொள்வதில்லை. பல சமயங்களில் ஒரு சொல்லை ஊகித்து புரிந்து கொள்கிறோம்.
அப்படித் தான் லயித்து வேகமாய் வாசிக்க முடியும். ஆனால் மொழியாக்கும் போது அறுவைசிகிச்சையாளனின்
கூர்மையும் கச்சிதத்தன்மையும் தயாரிப்பும் வேண்டும். ஒவ்வொரு சொல்லையும் மிகச்சரியாக
புரிந்து கொண்டிருக்கிறோமா என சரி பார்க்க வேண்டும். “இன்றிரவு நிலவின் கீழ்” ஹைக்கூ மொழியாக்க நூலை ஒரு வேகத்தில் முடித்த பின் மீண்டும்
அதன் சரித்தன்மையை ஒப்பு நோக்கினேன். அப்போது தான் மொழியாக்கம் கவித்துவமாக சரளமாக
வர வேண்டும் எனும் நோக்கில் சில சொற்களை, வாக்கியங்களை நான் தவறாக புரிந்து கொண்டுள்ளதை
உணர்ந்தேன். எனக்கு ஒரு குழப்பமும், அதனால் ஒரு நெருக்கடியும் ஏற்பட்டது. மூல வரியின்
பொருள் வரும் படி அப்படியே மாற்றினால் கொஞ்சம் தட்டையானது போல் பட்டது. ஆனால் ஏற்கனவே
நான் தவறாய் மொழியாக்கி இருந்தது இன்னும் கவித்துவமாய் பட்டது. ஆனால் நான் தயங்காமல்
தவறான மொழியாக்கத்தை அழித்தேன். மொழியாக்கத்தின் போது இவ்வாறு இரக்கமின்றி நடந்து கொள்ள
வேண்டும்.
சரளத்தன்மையையும்
மொழியின் அழகையும் விட வரிகளின் சரித்தன்மை தான் முக்கியம். மேலும் மொழியாக்கும் முன்
ஒருமுறை ஒரு வாசகனாக அன்றி மொழிபெயர்ப்பாளனாக கவனமுடன் மூலப் படைப்பை படித்து விட வேண்டும்.
இதன்
இன்னொரு எதிர்நிலை உள்ளது. அது மிக எந்திரத்தனமாய் மொழிபெயர்ப்பது. அதைத் தவிர்க்க
முதலில் படைப்பை நாம் ஆழமாய் முழுமையாய் புரிந்து கொள்ள வேண்டும். அதை ஒத்த ஒரு செண்டிமெண்ட்
மற்றும் எண்ண ஓட்டத்தை நம் மொழியில கண்டடைய வேண்டும். அல்லது மூல எழுத்தாளனின் பாணியில்
இங்கு யார் எழுதுகிறார்கள் எனப் பார்த்து அந்த தொனியை நம் தமிழில் கொண்டு வர வேண்டும்.
மொழியாக்கப் படைப்பில் தமிழ்த்தன்மை ரொம்ப முக்கியம். ஆனால் அதேவேளை தமிழ்த்தன்மைக்காக
இல்லாத ஒன்றை நுழைக்க வேண்டியதில்லை. நம் கவிதைகளில் அதிகம் புழக்கத்தில் உள்ள மொழி
அமைப்புகள், சொற்களை, நம் பேச்சு மொழியின் ரிதமை மொழியாக்க மொழியில் கொண்டு வந்தால்
போதும். சிலவேளை உங்களது மொழியின் தாக்கம் மொழியாக்கத்தில் வந்தால் கூட தவறில்லை. அதனால்
ஒரு சரளத்தன்மை வந்தது என்றால் அதனால் ஏற்படும் அர்த்தப் பிசிறை மன்னித்து விடலாம்.
மொழியாக்கம்
என்பது ஒருவிதத்தில் தேர்வும் தொகுப்பும் தான். அதனால் உங்களது ரசனையும் வாசிப்பு பற்றின
நம்பிக்கைகளும் முக்கியம். இந்த நம்பிக்கைகள் என்பவை சமூகம் பற்றியும் வாழ்க்கை பற்றியும்
உங்களுக்குள்ள நம்பிக்கைகளின் இன்னொரு வடிவம் தான். வெளியே முக்கியமானவர்கள் என அறியப்படுகிறார்கள்
என்பதாலேயே சில எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறார்கள். அப்படி செய்யக் கூடாது. மொழியாக்கம்
என்பது நம் எழுத்தின், வாசிப்பின், நம்பிக்கைகளின் நீட்சியாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்பின்
வழி நீங்கள் ஒரு புதிய கருத்தை அல்லது நுண்ணுணர்வை இந்த சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள்.
ஒரு எழுத்தாளனை அறிமுகப்படுத்துவது அல்ல உங்கள் வேலை. எழுத்தாளன் மூலம் ஒரு புதிய உலகை
இங்கு கொண்டு வருகிறீர்கள். அதே போல் நீங்கள் மொழியாக்கும் எழுத்தாளனை விரிவாய் ஆழமாய்
புரிந்து கொண்டு இங்கு அவனைப் பற்றி எழுதி விவாதிக்க வேண்டியும் உள்ளது. நீங்கள் நீட்சேயை
மொழிபெயர்ப்பதானால் நீட்சே மட்டும் தெரிந்தால் போதாது ஜெர்மானிய தத்துவ மரபு, கிரேக்க
தத்துவம், கிறித்துவம், உளவியல் என பல விசயங்கள் தெரிய வேண்டும். அதைப் பற்றி எல்லாம்
இங்கே தொடர்ந்து பேச வேண்டும். மொழிபெயர்ப்புடன் உங்கள் வேலை முடிவதில்லை. மொழிபெயர்ப்பாளன்
ஒரு கருத்தியல், கலாச்சார போராளி. அவன் மொழிபெயர்ப்பு உரிமை வாங்கி, ஒப்பந்தம் போட்டு,
அந்த காலத்துக்குள் மொழியாக்கி பிரசுரித்து பணம் வாங்கி விட்டு அத்துடன் அதை மறந்து
போகிறவன் அல்ல. அப்படித் தான் இன்று பல தட்டையான எந்திரத்தன மொழியாக்கங்கள் வருகின்றன.
அது மொழிபெயர்ப்பே அல்ல.
இவை நான்
மொழியாக்கிய ஜான் பிராண்டியின் ஹைக்கூக்கள். அதில் எதிர்கொண்ட சிக்கல்களைப் பாருங்கள்.
மழையில்
விடியலுக்கு முன்னதாய்
நத்தைகள் இடம்பெயரும்
In the rain
Before dawn
Snails migrating
இங்கே “இடம்பெயரும் நத்தைகளா” அல்லது “நத்தைகள் இடம்பெயரும்” என்பதா
அல்லது “இடம் பெயர்கின்றனவா”? ஒவ்வொன்றிலும் பொருள் மாறுகிறது.
மகளும் மகனும் வளர்ந்திட
அவர்களது அறைகள்
நிலவொளியால் நிறைந்து
Daughter and son grown
Their rooms filled
With moon light
இங்கே
filled With moon light என்பது adjective
என்றால் இம்மொழியாக்கம் சரி. ஆனால் வினையை சொல்லும் தொடர் என்றால் “நிறைந்தது” என இருக்க
வேண்டும். எது சரி? சொல்வது எளிதல்ல. இருவாறாகவும் இருக்கலாம். பொதுவாக ஹைக்கூ வினையை
அல்லாமல் ஒரு நிலையை, காட்சியை காட்டுவது என்பதால் நான் “நிறைந்து” என மாற்றினேன்.
இன்னும்
சில கேள்விகள் எனக்கு மொழியாக்கத்தை ஒட்டி உள்ளன. ஒரு படைப்பில் கொச்சையான சொற்கள்,
வட்டார வழக்கு, கெட்ட வார்த்தைகள் வந்தால் அவற்றுக்கு எல்லாம் தமிழில் உள்ள இணையானச்
சொற்களைத் தேடி அளித்து மொழியாக்கலாமா அல்லது தவிர்த்து விட்டு ஒரு பொது மொழியில் பொருளை
மட்டும் தந்து விட வேண்டுமா? வட்டாரத் தமிழில் மொழிபெயர்ப்பதென்றால் எந்த கொச்சையில்
அதை செய்வது? பிராமணக் கொச்சையா, சென்னை கொச்சையா, குமரி மாவட்ட கொச்சையா? கெட்ட வார்த்தையில்
உவப்பில்லாதவர்கள் என்ன செய்வது?
பெருந்தேவி
நல்ல உதாரணம். அவர் புக்காவஸ்கியின் நிறைய கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புக்காவஸ்கி
கொச்சையான விரசமான மொழிநடையில் எழுதுவார். ஆனால் பண்பாட்டளவில் பெருந்தேவி இதற்கு மாறானவர்.
ஆக புக்காவஸ்கியின் வரிகளில் கெட்டவார்த்தை வரும் போது பெருந்தேவி அதற்கு பொருள் மாற்றி
விடுகிறார். இந்த கவிதையை பாருங்கள்:
படைப்புச்
செயல்
தரையில்
உடைந்துகிடக்கும் முட்டைக்காக
ஜூலை
5-க்காக
தொட்டியின்
மீனுக்காக
அறை
9-ல் இருக்கும் முதியவனுக்காக
மதில்மேல்
பூனைக்காக
உனக்காக
புகழுக்காக
அல்ல
பணத்துக்காக
அல்ல
வெட்டிவைத்துக்கொண்டேயிருக்க
வேண்டும் நீ
The
Creative Act
for
the broken egg on the floor
for
the 5th of july
for
the fish in the tank
for
the old man in room 9
for
the cat on the fence
for
yourself
not
for fame
not
for money
you’ve
got to keep chopping
இங்கே
வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என வருவது பிசிறு தட்டுகிறது. அதற்கு என்ன பொருள்?
வாழ்க்கையை வெட்ட வேண்டும் எனக் கூற முடியாது. அப்படி ஒரு உருவகமாக புக்காவஸ்கி மொழியை
இக்கவிதையில் பயன்படுத்துவது இல்லை. ஆனால் புக்காவஸ்கி நிறைய கொச்சையான நகர்ப்புற கெட்டவார்த்தைகளை
பயன்படுத்துவார். Chopping என்பதற்கு உடலுறவு எனும் பொருள் கொச்சை அகராதியில் (urbandictionary.com)
வருகிறது. முட்டாள்த்தனமாய், கேவலமாய் ஒன்றை செய்வது எனும் பொருளில் உடலுறவைப் பற்றின
கெட்டவார்த்தைகளை பொதுவாய் தமிழில் பயன்படுத்துகிறோம். அதே பொருளில் தான் புக்காவஸ்கியும்
சொல்கிறார்: கண்றாவியாய் ஏதோ ஒரு காரணத்துக்காய் வாழ்ந்து தான் ஆக வேண்டும். இது உடலை
மீது இச்சை கொண்டு அலைவது போல் கேவலமான ஒன்று. புக்காவஸ்கி உடலுறவை பழிக்கிறார் என
அர்த்தமில்லை. ஆனால் நம் பொதுவழக்கில் அப்படியான ஒரு எண்ணம் உடலுறவு பற்றி உள்ளது.
அதனால் கெட்டவார்த்தையால் யாரையாவது வையும் போது வாழ்க்கையின் கீழ்த்தரமான விசயங்களுக்கு
உடலுறவை ஒப்பாக ஆக்குகிறோம். புக்காவஸ்கி எளிய மக்களின் மொழியில் எழுதுபவர் என்பதால்
இந்த பிரயோகத்தை கையாள்கிறார். ஆனால் இதை புக்காவஸ்கியின் அதே தொனியில் உக்கிரத்துடன்
கொச்சையும் தமிழில் சொல்ல மொழியாக்கத்தின் போது ஒரு கெட்ட வார்த்தையை பேச்சு வழக்கு
பாணியில் பயன்படுத்த வேண்டும். அதை நாம் செய்யப் போகிறோமா இல்லையா என்பது நம் தேர்வு.
பெருந்தேவி அதை விரும்ப மாட்டார். பெருந்தேவியின் புக்காவஸ்கி சேரியை சேர்ந்தவர் அல்ல
அண்ணாநகர், பெசண்ட் நகரில் வாழ்பவர்.
ஹெமிங்வேயின்
“நன்கு சுத்தமான வெளிச்சமான அறை” கதையை
மொழியாக்கும் போது அதில் ஓரிடத்தில் பார் பணியாளர்கள் இருவர் அமெரிக்க வட்டார வழக்கில்
பேசுகின்றனர். நான் அவ்விடத்தை குமரி மாவட்ட வட்டார வழக்கில் மாற்றினேன். அதில் ஒரு
சிக்கல். சட்டென ஹெமிங்வேயின் ஒரு அமெரிக்க பண்பாட்டுத் தன்மை கதையில் காணாமல் போய்
விட்டது. பிறகு மீண்டும் பொதுமொழியில் உரையாடலை மாற்றினேன். இந்த பொதுமொழிக்குள் மிகச்சில
கொச்சை சொற்களை தூவலாம். ஆனால் முழுக்க பண்ணக் கூடாது. ஒரு சமநிலை பேண வேண்டும். அப்போது
எனக்கு இன்னொன்று தோன்றியது. நாம் மொழியாக்கும் போது தமிழில் மொழியாக்குவதில்லை. ஒரு
மொழியாக்கத் தமிழ் உள்ளது. அதில் பண்ணுகிறோம். வாசகனுக்கு இது முழுமையான தமிழ் எனும்
எண்ணம் ஏற்பட்டால் அவன் இது மொழிபெயர்ப்பு தானா என சந்தேகிப்பான். அதனால் ஒரு மொழிபெயர்ப்பு
தமிழில் தான் செயல்பட வேண்டி உள்ளது. அதை முடிந்தளவு இயல்பாக்கி சமகாலத்தன்மையுடன்
நம்முடைய தாக்கத்துடன் உருவாக்கலாம். ஆனால் ரொம்ப விலகிப் போக முடியாது. டோக்யோவிலோ
நியூயார்க்கிலோ பேசும் பாத்திரம் ஒன்று சென்னைத்தமிழில் பேச முடியாது. அது ஏற்புடையது
அல்ல.
ஓர்ஹன்
பாமுக்கின் “என் பெயர் சிவப்பை” தமிழாக்கும்
போது ஜி.குப்புசாமி ஒரு செவ்வியல் தமிழில் செய்திருந்தார். ஆனால் ஆங்கிலத்தில் படிக்கும்
போது அது நவீன ஆங்கிலமாக இருக்கிறது. அதாவது கதை வரலாற்று காலத்தில் நடக்கிறது. ஆனால்
மொழி நவீனமாய் இருக்கிறது. குப்புசாமியும் ஆங்கிலத்தில் இருந்து தான் தமிழாக்குகிறார்.
ஆனால் தமிழ் ஏன் செவ்வியல் தன்மை கொண்டதானது? இது ஒரு திட்டமிட்ட செயலாகத் தான் பட்டது.
அப்படியான உரிமைகளை மொழிபெயர்ப்பாளன் எடுத்துக் கொள்ளலமா? கூடாது என நினைக்கிறேன்.
காலச்சுவடு
வெளியீடான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு” எனும் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளின் மொழியாக்க தொகுப்பில்
“ஒரு சிறிய நல்ல காரியம்” எனும்
ஒரு கதை உள்ளது. எம்.கோபாலகிருஷ்ணனின் மொழியாக்கம். அதில் சில idiomகளை நேரடியாக மொழிபெயர்ப்பது
பற்றின பிரச்சனை உள்ளது.
உதாரணமாய்
” There's all the rolls in the world in here." என்றொரு வாக்கியம். அதை “இங்கு
உலகிலுள்ள அத்தனை ரோல்களும் உண்டு” என்று மொழியாக்குகிறார். ஆனால் “all the..in the world”
என்றால் நிறைய என்று பொருள். உலகிலுள்ள அத்தனையும் என்றல்ல. இங்கு நிறைய ரோல்கள் உள்ளன
என எளிமையாக இருக்க வேண்டும். இந்த தவறை நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் செய்கிறார்கள்.
அறுபதுகளில் யாரோ மொழியாக்கிய தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்தேன். அதில் it is time என்கிற எளிமையான வாக்கியத்தை
“இது தான் நேரம்” என மொழியாக்கியிருந்தார்.
அதன் பொருள் நேரம் ஆகி விட்டது என இன்று நமக்கு சாதாரணமாக தெரியும். அதே போல் போரும்
அமைதியும் என இருக்க வேண்டுமா போரும் வாழ்வும் என இருக்க வேண்டுமா என்பதும் முக்கியமான
கேள்வி.
மேற்சொன்ன
கார்வரின் கதையில் இன்னொரு இடத்தில் ஒரு கணவனும் மனைவியும் ஒரு பேக்கரி கடைக்காரரை
காண போகிறார்கள். அவர் இவர்களைப் பார்த்ததும் சப்பாத்தி உருளை போன்ற ஒன்றை எடுத்து
வருகிறார். ஆங்கிலத்தில் roller என கார்வர் எழுதுகிறார். இதைத் தமிழில் “உருட்டுக்
கட்டையை கையில் எடுத்துக் கொண்டார்” என மொழிபெயர்த்திருக்கிறார். இது சிக்கலான ஒரு இடம். ஏனென்றால்
உருட்டுக்கட்டை என்றதும் நமக்கு ரவுடிகள் சினிமாவில் வீசும் உருட்டுக்கட்டை தான் நினைவு
வருகிறது. ஆனால் இது அது அல்ல. உருளை எனலாமா? சரியாய் புரியுமா? சப்பாத்தி போடும் உருட்டுக்கட்டை
எனலாமா? ஆனால் பேக்கரிக்காரர் சப்பாத்தி போட மாட்டாரே? பேக்கரியில் பயன்படுத்தும் உருளைக்கட்டை
எனலாம். ஆனால் ரொம்ப நீளமாகி விடும். இது போல் சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டி வரும்.
அது ரொம்ப சிரமம்.
நான்
ஹைக்கூக்களை மொழியாக்குகையில் ஏதாவது பூவின் பெயர் வரும். ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு
புரியும். ஆனால் தமிழில் “கிரசாந்தியம்” என்றால் பூ எனத் தெரியாது. அதனால் “கிரசேந்திய மலர்கள்” என நானே புரிதலுக்காக சேர்த்துக் கொள்வேன். வேறுவழியில்லை.
இன்னொரு
கேள்வி வாக்கிய அமைப்பு பற்றியது. உம்பர்த்தோ ஈக்கோவின் இத்தாலிய கதைகள், மார்க்வெஸின்
ஸ்பானிய கதைகளை மொழியாக்கும் போது முக்கிய பிரச்சனை அடுக்கடுக்கான வாக்கிய அமைப்பு
(complex sentence). அது தமிழுக்கு விரோதமானது. தமிழில் அப்படி அடுக்கடுக்காய் ஒரே
வாக்கியத்துக்குள் திணித்து பேசவோ எழுதவோ மாட்டோம். நமது மொழி அமைப்பு வேறு. காரணத்தை
முதலில் சொல்லி விளைவை அடுத்து சொல்வோம். அவர்கள் தலைகீழாக எழுதுவார்கள். ஆக தமிழில்
இதை சரி செய்து முன்னே பின்னே மாற்ற வேண்டும். அடுத்து ஒரு வாக்கியத்தை முடித்து கமா,
அல்லது செமிகாலன் போட்டு இன்னும் பல தகவல்கள், உபரி வாக்கியங்களை அடுக்கிப் போவார்கள்.
அப்படியே தமிழில் பண்ணினால் ஆயில் ஊற்றாத எந்திரம் போல் சத்தம் எழும். ஆக நாம் உடைத்து
தனித்தனி வாக்கியங்களாக தர வேண்டி வரும். இதை எந்தளவுக்கு உடைக்கலாம் என்கிற கேள்வியும்
உண்டு. மொழிபெயர்ப்பாளனின் முடிவு அது.
கீழ்வரும்
பத்தி உம்பர்த்தோ ஈக்கோவின் “கிரானிட்டா” சிறுகதையில் இருந்து:
The unreliable information this man furnished us about
the mysterious prisoner who left these papers behind in his cell, the
obscurity that shrouds the writer’s fate, a widespread, inexplicable reticence
in all whose paths crossed that of the author of the following pages oblige us
to be content with what we know; as we must be content with what is left of the
manuscript—after the voracity of the prison rats—since we feel that even in
these circumstances the reader can form a notion of the extraordinary tale of
this Umberto Umberto (unless the mysterious prisoner is perhaps Vladimir
Nabokov, paradoxically a refugee in the Langhe region, and the manuscript shows
the other face of that protean immoralist) and thus finally can draw from these
pages the hidden lesson: the libertine garb conceals a higher morality.
இது நான் மொழிபெயர்த்தது:
”சிறை
அறையில் இந்த காகிதங்களை விட்டுச் சென்ற அந்த புதிரான கைதியைப் பற்றி இந்த ஆள் அளித்த
நம்பதகத்தன்மை அற்ற தகவல்கள், எழுத்தாளனின் நிலை பற்றின இருண்மை, இந்த எழுத்தாளன் கடந்து
வந்த பாதைகள் அனைத்திலும் தொக்கி நிற்கும் விளக்க முடியாத, பரவலான ஒரு மௌனம் காரணமாய்
கிடைத்ததை வைத்து நான் திருப்தி கொள்ள வேண்டியதாகிறது; மிச்சம் கிடைத்துள்ள இந்த பக்கங்களை
வைத்து திருப்தி அடைய வேண்டியிருப்பதால் – சிறைச்சாலை எலிகளின் அடங்காப்பசியை கருத்திற்
கொண்டு – இந்த சூழ்நிலையில் உம்பர்த்தோ உம்பர்த்தோவின் அசாதரணமான கதையைப் பற்றின புரிதல்
வாசகனுக்கு கிடைக்க வேண்டும், அதைக் கொண்டு இந்த பக்கங்களில் மறைந்துள்ள ஒரு பாடத்தையும்
அவன் அறியக் கூடும் (அல்லாத பட்சத்தில் இந்த புதிரான எழுத்தாளன் விளாடிமிர் நபக்கோவாக
இருக்க வேண்டும்; சுயமுரணாக அவரோ லாங்ஹே பகுதியில் ஒரு அகதியாக வாழ்ந்தார். அப்படி
எனில் இந்த கையெழுத்துப் பிரதி அந்த நிலையற்ற எதிர்-ஒழுக்கவாதியின் மற்றொரு முகத்தை
காட்டுவதாக அமையும்): கட்டற்ற பாலியல் சுதந்திரம் எனும் முகமூடியின் பின் அதை விட கராறான
ஒழுக்கவாதம் இருக்கலாமே. .”
இங்கு
இறுதி வாக்கியங்கள் மூலப்பிரதியில் subclauses (உப வாக்கிய சேர்க்கையாக) ஆக உள்ளவை.
நான் அவற்றை எளிமையின் பொருட்டு முழு வாக்கியமாக மாற்றி இருக்கிறேன். ஏனென்றால் தமிழில்
complex sentence எனும் வடிவம் இல்லை. நான் அப்படியே மொழியாக்கினால் படிப்பவர்களுக்கு
தலை சுற்றும்.
அதே கதையில் இருந்து
மற்றொரு வரி:
my eyes barely grazed their cheeks gilded in the slanting sunset
light by a silken transparent down.
“அஸ்தமனத்தின் சாய்ந்த
ஒளிக்கற்றைகளால் தங்கமுலாம் பூசப்பட்ட அவர்களது பட்டு போன்ற, ஒளி ஊடுரவக் கூடிய மென்
மயிர்கள் கொண்ட கன்னங்களில் என் பார்வை சற்றும் படவில்லை.”
இங்கே phrases ஐ முதலில் கொடுத்திருக்கிறேன். பிரதான வாக்கியமான
“கன்னங்களில் என் பார்வை சற்றும் படவில்லை” இறுதியாக வருகிறது. மூல வாக்கியத்தில் இரண்டு வினைச்சொற்கள்
வருகின்றன: grazed, gilded. இதில் எது பிரதானமானது,
எது உபவாக்கியத்துக்கானது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அது போல் slanting என்பது சூரிய அஸ்தமனத்துக்கான அடைச்சொல் (adjective). இதை
பிரதான வினைச்சொல் என நினைத்தாலும் குழம்பி விடும். இவ்வாக்கியத்தில் இன்னொரு
குழப்பம் by a silken transparent
down. அதாவது
அந்திப்பொழுது அவளது கன்னத்தை தங்கமுலாம் பூசுகிறது. கதைசொல்லி அக்கன்னங்களை
பார்க்கிறான். இரண்டு செயல்கள், இருவேறு செய்பவர்கள். ஆனால் கதைசொல்லியின் தரப்பு
தான் பிரதானம். அதனால் தங்கமுலாம் பூசுகிற கன்னத்தை அவன் பார்வை தொடவில்லை என
மொழியாக்கி அந்தியின் செயலை இரண்டாம் பட்சமாய் காட்ட வேண்டும். இல்லாவிட்டால் யார்
என்ன செய்கிறார்கள் – காதலன் தங்கமுலாம் பூசுகிறானா, அல்லது அந்தி அவள் கன்னத்தை
தொடுகிறதா என - குழப்பம் ஏற்படும்.
அது போல் சில வாக்கியங்களை அப்படியே மொழியாக்கினால் உத்தேசித்த தாக்கம் ஏற்படாது. அதற்காகவும் உடைக்க வேண்டி வரும். புக்காவஸ்கியின் Aftermath of a Lengthy Rejection Slip எனும் கதையில் இருந்து ஒரு வாக்கியத்தை கீழே
தருகிறேன்:
I ran like hell toward my room hoping that there would be some wine left in that huge jug on the
table.
இனி என்
மொழிபெயர்ப்பு:
”பைத்தியம்
போல் என்
அறை நோக்கி
ஓடினேன். மேஜையில்
உள்ள அந்த
பெரும் குடுவையில்
கொஞ்சமாவது வைன்
மீதமிருக்கும் என
எதிர்பார்த்தபடி ஓடினேன்.”
மூலவாக்கியத்தில்
உள்ள ஒரு பித்து தன்மையை, ஆவேசத்தை காட்ட வாக்கியத்தை உடைத்திருக்கிறேன்.
இறுதிக்
கேள்வி தனித்தமிழில் முழுக்க மொழியாக்கலாமா அல்லது ஆங்கிலச் சொற்களும் கலக்கலாமா என்பது.
“ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்” என்பதை
எப்படி தனித்தமிழில் இயல்பாக சொல்வது? “குறுஞ்செய்தி அனுப்பினான்” என எழுதலாம். அது புழக்கத்தில் உள்ளது. ஆனால் “போன் கீழே
விழுந்து பேட்டரி தெறித்தது” என எழுதலாமா
அல்லது “மின்கலன்” தெறித்தது
என எழுத வேண்டுமா? இரண்டாவது செயற்கையாய் அந்நியமாய் தோன்றுகிறது. அது காரா மகிழுந்தா?
மகிழுந்து சற்றும் புழக்கத்தில் இல்லாத சொல். அதன் ஒலி ஏதோ குறுக்குசந்து என்பது போல்
இருக்கிறது. நான் கார் என்றே எழுதுவேன். மொழிக்கு ஒரு தொனி முக்கியம். ஒரு கொச்சைத்
தன்மை வேண்டுமென்றால், வேடிக்கையாய் வர வேண்டுமென்றால் ஆங்கிலக் கலப்பு உதவும். ஒரு
நவீன நகரத்து பையன் ஒரு பெண்ணிடம் சென்று “உன்னைக் காதலிக்கிறேன்” என்பதை விட “ஐ லவ் யூ” என சொல்லும் போது இன்னும் உண்மையாக சரியாக தொனிக்கிறது.
“உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்” என்பதை
“உனக்காக ரொம்ப ஏங்குகிறேன்” என மொழியாக்கலாம்.
அது கவித்துவமாக இருக்கும். ஆனால் முன்னது போல் கொச்சையாக இராது. எது வேண்டும் என நாம்
தீர்மானிக்க வேண்டும். அது போல் ஒரு கிராமத்து ஆள் “ரேடியோவ போடு” என்பது “வானொலியை இயக்கு” எனக் கூறுவதை விட இயல்பாக இருக்கிறது.
மொழிபெயர்ப்பின்
சவால் இரண்டு மொழிகளை நன்கு அறிந்திருப்பது மட்டும் அல்ல. பிரதானமாய் அது மேற்சொன்ன
பலதரப்பட்ட முடிவுகளை எடுப்பது தான். இந்த முடிவுகள் தான் நம் மொழிபெயர்ப்பு சித்தாந்ததத்தை,
மொழி சார்ந்த நம்பிக்கைகளை தீர்மானிக்கின்றன.
நன்றி: அம்ருதா, நவம்பர் 2014
நன்றி: அம்ருதா, நவம்பர் 2014
