Skip to main content

Posts

Showing posts from January, 2026

ரஜினியின் தனித்துவமான நடிப்பு

“பாஷா” ரஜினியும், “எஜமான்” ரஜினியும் ஒரே ரஜினி தான் - அவர்கள் இடையே நிறைய நுட்பமான வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பார்வையாளர்களில் எல்லாரையும் திருப்திப்படுத்தும் மாறுபட்ட குணநலன்களும் இருக்கும். இந்த முரண் இயல்புகள் உறுத்தாமல் இருக்க, ரஜினி அப்பாத்திரத்துக்கு என நடையின் வேகத்தில், பார்வையில், சைகைகளின் வீச்சு மற்றும் வேகத்தில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டு வருவார். அதற்கு மேல் முயன்று ஒரு பாத்திரமாகவே ஆக முயல மாட்டார்; ரஜினி தன் ‘நடிப்பை’ நடிப்பாக அல்ல ஒவ்வொரு சந்தர்பத்துக்கும் வினையாற்றுகிற ஒன்றாகப் பார்க்கிறார். இதற்கும் மேலாக அவரது ஸ்டைல், சின்னச் சின்ன சேட்டைகள், நட்சத்திர பிம்பம் கட்டியமைக்கப்படுவதால் அவரது சன்னமான நடிப்பு வெளிப்பாடுகளை நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். கிண்டிலில் "ரஜினிகாந்த்" நூலை வாங்க https://www.amazon.in/dp/B0GDGQ2YQH?fbclid=IwY2xjawPn21dleHRuA2FlbQIxMQBicmlkETFnNkdnMTE1bmVDaHJUbUtTc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHsjGj6zfIg4207UJ3iEOj9DtejPeqRNUjptrKoyquP9RJ18C0qnMkqOeNzss_aem_zjwowo0tzM_mYQ8Jh7zI5g

நிம்மதியும் வாசிப்பும்

வாசிப்பு நிதானமாக, கவனமாக, ஒன்றினுள் துணிந்து ஆழ்ந்து போக அனுமதிக்கிறது, பழக்குகிறது. வாசிக்கும்போது உலகம் முழுக்க நாம் கொள்ளும் மனநிலை, அணுகுமுறை முழுக்க தனித்துவமானது. கிட்டத்தட்ட தியானத்தைப் போன்றது. வாசிப்புக்கு எதிராக உள்ள மனநிலை பரபரவென்று எதாவது ஒரு கவலையில், பயத்தில், உணர்ச்சிக் கொந்தளிப்பில், தவிப்பில் இருப்பது. புலனனுபவத்தை நாடி அதில் மனதைத் தொய்க்க வைப்பது. அதிலும் மனம் இல்லாதபோது அதை உணராதிருப்பது. எதையும் வெளியே நின்று பார்த்தபடி இருப்பது. வாசிப்பு இயற்கையானது அல்ல. ஆனால் ஒருவிதத்தில் அது இயற்கையானதுதாம்தான். வாசிக்கும் ஒருவர் நமக்கு ஆதி இயல்பாக உள்ள ஒரு அகநிலையை மீட்டெடுக்கிறார். அது நமக்குள் வெகு ஆழத்தில் இருக்குள் எங்கோ ஒளி நடுக்கத்தைப் போல இருக்கிறது. நீரில் மிதக்கும் பிரதிபலிப்பைப் போல கிடக்கிறது. அதைத் தொட்டெடுத்ததும் அது நம்மை உள்ளிருந்து ஒளிர வைக்கிறது. மெல்ல மெல்ல 'முழுவதுமாக' நாம் இருக்க உதவுகிறது. ஆக, வாசிப்பை ஒரு 'பின்னோக்கிச் செல்லும் கல்வி' எனலாம் (ஐரோப்பிய கற்பனாவாதிகள் இயற்கையைக் குறித்து நம்பியதைப் போல). தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்களில் ...

"படித்துதான் ஆகணுமா?" - ஒரு மதிப்புரை

என்னுடைய புதிய நூலான "படித்துதான் ஆகணுமா?"விற்கு செந்தமிழ் எழுதியுள்ள அருமையான மதிப்புரை இது. நூலின் சாராம்சத்தை தன் எழுத்தில் அவர் கொண்டு வந்துவிட்டார். படித்துப் பாருங்கள்: "கல்வித்துறையில் இருக்கும் பிரச்சனைகளை பொதுவாகச் சொல்லாமல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தகுதித்தேர்வு, சமூகம் என்று நான்கு பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். கல்வியில் மதத்தின் பங்கு, ஆசிரியர் மாணவர் உறவு, மாணவர்களுக்கான அரசியல், வாசிப்பு பழக்கம், ஆசிரியர்களின் பணிச்சுமை என்று ஆசிரியர், மாணவர், சமூகம் ஆகிய மூன்று தரப்பினரின் சிக்கல்களையும் தீர்வுகளையும் அலசியுள்ளார்.‌ உயர்கல்வி பகுதியில், கல்வித்துறை தனியார்மயமாதலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஆபத்துகளை பல இடங்களில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார். தகுதித்தேர்வு பகுதியில், மற்ற துறை தேர்வுகளிலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வு எப்படி வேறுபட்டிருக்க வேண்டும், தற்போதைய முறையால் என்னென்ன சிக்கல்கள் உள்ளன‌ என்று‌ கூறுவதில் ஒரு பேராசிரியராய் அவரின் அக்கறை கூடுதலாய் வெளிப்பட்டுள்ளது.  வாசிப்பாக இந்நூல் நம்மை தொய்வடைய விடுவதில்லை....

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

  சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (CIBF) சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒன்று என்பதை வெளியில் இருந்து பார்க்கையில் புரிந்துகொள்ள முடியாது. நானே அதை நிதி வீணடிப்பு என்றே ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் இந்த ஆண்டு அதில் கலந்து கொண்டபோது என் எண்ணம் மாறியது. குறிப்பாக அரசின் நடவடிக்கை மீது பதிப்பாளர்களுக்கு உள்ள மரியாதையினால் எழுத்தாளர்களுக்கு சில பயன்கள் கிடைக்கின்றன. ஒரு சின்ன விசயத்தைக் குறிப்பிடுகிறேன் - பதிப்பாளர்கள் முன்வைக்கும் நூல்கள் அரசின் நூற்பட்டியலில் வண்ணப்படங்களுடன் வழவழ தாளில் வெளியிடப்படுகின்றன. இந்த பட்டியல் நூலில் படைப்புகள் அந்தந்த எழுத்தாளர்களின் முகவர்களின் கீழ் பகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளார்கள். இந்த படைப்புகளை நூலில் பார்க்கும் அயல்மொழி, அயல்நாட்டுப் பதிப்பாளர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கிறார்கள். அவர்கள் அப்படைப்புகளை மொழிபெயர்க்க முன்வருகிறார்கள். நீங்கள் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் காட்டி விளக்கினாலும் அவர்களுக்கு உங்கள் படைப்பின் முக்கியத்துவம் விளங்காது. ஏனென்றால் அவர்கள் வேறு ஊரை, மொழியைச் சேர்ந்தவர்கள். தமிழ் இலக்கியத்தில் நடப்பன வெளியாட...

நாவல் எழுத்தில் வந்துள்ள தேக்கம்?

  புத்தகம் என்றாலே பண்டம்தான். அதைப் படைப்பாக்குவது வாசிப்பு. நல்ல வாசிப்பு நல்ல எழுத்தை உண்டாக்குகிறது. நல்ல எழுத்து நல்ல வாசிப்பை ஏற்படுத்துவதில்லை. நான் சொல்வது பரவலான வாசிப்பு கூட அல்ல. சிறுகுழுக்களுக்குள் நிகழும் தீவிர விவாதங்கள், பரிசோதனைகளுக்கான தேடல்கள், கடுமையான ஏற்புகள், மறுப்புகள், பரிசீலனைகள். துரதிஷ்டவசமாக இன்று சிறு வட்டத்துக்குள் நிகழும் கூட்டங்களுக்குள் கூட படைப்புகளை வாசித்து விமர்சிக்கும் திறன் உள்ளவர்கள் வருவதில்லை. அங்கும் அறிமுக வாசகர்களே அதிகம். அவர்களை வழிநடத்த ஆட்கள் மிகமிகக் குறைவு. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் நம் இலக்கிய இதழ்களில் புத்தக மதிப்புரைகள், இலக்கிய விவாதங்களில் வீழ்ச்சியைக் காண ஆரம்பித்தோம். அந்த இடத்தை சமூக, அரசியல், ஊடக விவாதங்கள் எடுத்துக் கொண்டன. பின்னர் சிறுபத்திரிகைகளிலும் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் வெகுமக்கள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்ற விசயங்கள் மீதான விவாதங்கள் நடந்த அளவுக்குக் கூட இலக்கிய விவாதங்கள் இடம்பெறவில்லை என்பது என் புரிதல். மதிப்புரை எழுதுவோரும் ஒன்று தம் ஒருதலைப்பட்சமான கருத்தை எழுதுகிறார்கள், அல்லது போலியாகப் பார...

நலத்திட்ட எதிர்ப்பாளர்கள்

வலதுசாரி பார்வையுடன் எழுதப்பட்ட ஒரு மோசமான கட்டுரை. நலத்திட்டங்களால் தமிழ்நாட்டு பொருளாதாரம் அழிவில் இருப்பதாக கட்டுரையாளர் சொல்வது உண்மையல்ல. வேறு எந்த மாநிலத்தையும் விட ஆரோக்கியமான நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட பலமடங்கு அதிகம். அது மட்டுமல்ல, நலத்திட்டங்கள் மக்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதால் மக்கள் செலவு செய்கிறார்கள், இதனால் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுகிறது, பொருளாதாரம் வருகிறது என்று சொன்னவர் முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம். அதை இம்மாதிரி வலதுசாரிகள் ஏற்பதில்லை. அவர்கள் அதிக வரி போட்டு மக்களை வாட்டி, மொத்தப் பணத்தையும் பிடுங்கி கடனாகவும், கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களாகவும் தனியாருக்குக் கொடுப்பதைக் கொண்டாடுவார்கள். அதனால் நாட்டுக்கு கிடைக்கும் லாபம் என்ன, எவ்வளவு வருவாய் எனக் கேட்க மாட்டார்கள். இங்கிருந்து கடனாகப் பெற்ற பணத்தை வெளிநாடுகளில் முதலீடு பண்ணுகிறேன் என்று பணத்தை வெள்ளையாக்குவதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். நலத்திட்டங்களை மட்டும் 'இலவசம்' என விமர்சிப்பார்கள்.

நாக்கைக் குறித்த ஒரு புனைகதை

  நண்பர்: நீங்க என்னதான் சொல்லுங்க பாஸ் விஷ்ணுபுரம் கட்சியைப் போல வராது. நான்: ஏன் பாஸ்? நண்பர்: ஐந்து பேர் நாவல் எழுதுகிறார்கள் என்றால் சுலபத்தில் தலா நான்கு விமர்சனங்கள் உடனடியாக வந்துவிடும். நான்: அதான் எப்படி? ஒரு மதிப்புரை வாங்கவே நிறைய காத்திருக்க வேண்டியிருக்கே... நண்பர்: அவங்களே மாறி மாறி எழுதிப்பாங்க. உலகத்தரம்னு சொல்லுவாங்க. நீங்க யாரைப் பத்தியாவது அப்படிச் சொல்லுவீங்களா? உங்களுக்கு பிரண்டா இருக்கிறது வேஸ்டு. நான்: அதுக்காக ஆன்மாவைப் பணயம் வைக்க மாட்டேன் ... நண்பர்: இருங்க இருங்க. இன்னும் முடியல. வெளிநாட்டுப் பயணம், விஷ்ணுபுரத்தின் துணைக் கட்சிகளின் விருதுகள் இப்படி ஏராளமான வாய்ப்புகள். நான்: அதுக்கும் எழுத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நண்பர்: நீங்க ஒரு எழுத்தாளரா உருவாக பல வருடங்கள் எழுதணும். அப்பவும் கண்டுக்க மாட்டாங்க. ஆனால் ஜெயமோகனுக்கு கடிதம் மட்டும் எழுதிப் பாருங்க, தமிழ் விக்கியில் மாய்ந்து மாய்ந்து உங்களைப் பற்றி குறிப்பு வரும். நான்: தமிழ் விக்கிக்கு எந்த மரியாதையும் இல்ல. வாசக மனத்தில்தான் எழுத்தாளனுக்கு எப்போதுமான இடம். அதுக்காக கட்சியில் உறுப்பினர் ஆக முட...

செம்மொழி விருது

  //குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்.முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளியாகும் தலைசிறந்த படைப்புகளுக்கு, ஆண்டுதோறும், 'செம்மொழி இலக்கிய விருது' என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதிசெய்யும் விதமாக, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். - முதல்வர் ஸ்டாலின்// நல்ல முன்னெடுப்பு. ஆனால் செம்மொழி அடையாளம் இதன் தேசிய, உலகளாவிய விரிவை அனுமதிக்காமல் குறுக்கி விடுகிறது. இந்திய அளவிலான இலக்கிய விருதென்றோ சர்வதேச விருதென்றோ முன்வைத்திருக்கலாம். இன்னும் பெரிய அளவில் தாக்கம் இருக்கும். சொல்லப்போனால் தேசிய விருதுடன் நின்று விடாமல் நாம் சர்வதேச விருதுகளை உருவாக்க வேண்டும். செம்மொழி போன்ற அரசியல் கட்டமைப்புகளை மீற வேண்டும். ஏனென்றால் எந்த சர்வதேச விருதுக்கும் இத்தன்மை இராது. நோப...

அரசியல் சினிமாவில் இருந்து கட்சி சினிமா - புதிய போக்கு

சுதந்திரப் போராட்டத்தின்போது நாடகக் கலைஞர்கள் பிரச்சாரத்துக்குப் பயன்பட்டார்கள். அச்சூழலில் பிரச்சார நாடகங்களுக்கு மக்களிடையே மவுசிருக்கும் என்று தெரிந்தேதான் சில குழுக்கள் அத்தகைய நாடகங்கள் பக்கமாக நகர்ந்தார்கள். அதன்பிறகு திராவிட அரசியல் தேர்தல் களத்தில் வெல்ல நாடகங்களும் சினிமாவும் பெருமளவில் உதவின. அல்லது இந்நாடகங்களும் சினிமாக்களும் வெல்ல திராவிடக் கொள்கைகளின் புகழும் மக்கள் ஏற்பும் உதவின. இந்த பரஸ்பரச் சார்பு கவனிக்கத்தக்கது. இதுவே பின்னர் மாறப் போகிறது. (அதாவது இன்று மாறியுள்ளது) இதன் பிறகு நமது தேசிய (காங்கிரஸ்), துணைத்தேசிய (உள்ளூர் கட்சிகள்) அரசியல் களங்கள் பெரும்பளவில் நிலைப்பெற்ற தடத்திலே ஓடின. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களின் பிரச்சாரத்தையே நம்பியிருந்தன. எழுபதுகளில் இந்திரா காந்திக்கு எதிரான ஜனதா தளத்தின் போராட்டங்களில் கூட சினிமாவும் நாடகமும் பெரிய பங்காற்றவில்லை, மாணவர் அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளுமே அப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர் என நினைக்கிறேன். அடுத்து, உலகமயமாக்கல் வரும்போது இந்தியாவை ஒரு வளரும் தேசமாக முன்வைக்க சினிமா உதவியது என்றாலும் அது கட்சிப் பிரச...

ஏன் வாசிக்க வேண்டும்? கிண்டில் பதிப்பில் இருந்து

  இந்நூலைப் பொதுவான வாசிப்பு, இலக்கியம் சார்ந்த வாசிப்பு, தத்துவம் சார்ந்த வாசிப்பு, உளவியல் சார்ந்த வாசிப்பு, புத்தகத் தேர்வு என ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். பொதுவான வாசிப்பு பகுதியில் வாசிப்பு குறித்து பரவலாய் எழுப்பட்டும் கேள்விகளுக்கு என் தரப்பு பதில்களைத் தந்துள்ளேன், பல சிக்கல்கள் குறித்த என் பார்வையை பதிவு செய்திருக்கிறேன், ஏன் மக்கள் கழிப்பறையில் உட்கார்ந்து படிக்க விரும்புகிறார்கள் போன்ற வினோதமான உளவியல் கோணங்களையும் அலசியிருக்கிறேன். இலக்கிய வாசிப்பு பகுதியில் இலக்கிய வாசிப்பு இன்று எப்படி உருமாறி உள்ளது, இன்று ஒரு இலக்கிய வாசகனுக்கு எழும் சிக்கல்களை எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது எனப் பேசியிருக்கிறேன். தத்துவ, உளவியல் பகுதிகளில் இந்த இரு துறை சார்ந்த நூல்களை எப்படி வாசிப்பது என்பதைப் பற்றி பேசியிருக்கிறேன். https://www.amazon.in/dp/B0GF7G4JHX

அரசியலும் நடத்தையும்

  “அன்பான பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே, என்னுடைய மனப்போக்கையும் செயல்பாட்டையும் அந்தக் காலகட்டத்து உளவியலில் இருந்தும், லோகோஸில் நடந்த மாற்றங்களில் இருந்தும் பிரித்துப் பார்க்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், லோகோஸுக்கு நடந்த உருமாற்றத்தை நீங்கள் அப்போதைய ஒன்றிய, மாநில அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அன்றைய தேசிய அரசியலை நீங்கள் அப்போதைய சமூகப் பொருளாதார சிக்கல்களில் இருந்து விலக்கி வைக்க முடியாது. நான் என்னை எவ்வாறு பார்த்தேன் என்பது எந்தளவுக்கு என்னுடைய அனுபவங்களும் சூழலும் இருந்தன என்பதற்கு இணையாக என்னைப் போன்ற மக்கள் எப்படி தம்மைப் பார்த்தார்கள் என்பதுடனும் சம்பந்தப்பட்டது. இதை நான் என்னை நியாயப்படுத்தவோ, மதிப்பீட்டில் இருந்து தப்பிக்கவோ சொல்லவில்லை. அன்றைய ஒவ்வொரு மாற்றமும் என்னைப் பாதிப்பதை நான் “நேரடியாகவே உணர்ந்தேன். அரசியலை செய்தித்தாள், டிவி செய்தித்தொகுப்பு வழியாக அறியும் காலம் முடிந்துவிட்டது, இனி நானே அரசியல் என உணர்ந்தேன். என்ன பிரச்சினை எனில் நானே அரசியல் ஆகும்போதும் அதன் மீது நான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறேன் என உணர...

வளைவதன் நுட்பங்கள்

  எது நம்மை அதிகாரத்தின் முன் சட்டெனப் பணிந்து வணக்கம் போட, முதுகு வளைய வைக்கிறது? என்னுடைய பதில் நம் அதிகார ஆசை என்பதே. அதிகார ஆசை எப்போதும் ஆசையாக வெளிப்படாது. அது அச்சமாகவே முதலில் தோன்றும் எனத் 'தோன்றுகிறது'. நாம் எதையோ இழந்துவிடுவோம், மறுக்கப்படுவோம் எனும் அச்சம் கூட ஒன்றைப் பெற வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என்பதம் எதிர்மறையான வெளிப்பாடுதான். எது நம்மை அதிகாரத்தின் இருண்ட குகையின் வாயில் முன்பு தலையைக் குனிய வைக்கிறது? பழக்கம். இதுதான் ஆகச் சுவாரஸ்யமானது. அன்றாட உலகம் ஒருவித ராணுவப் பயிற்சி முகாம் போலச் செயல்படுகிறது. குடும்பம், வேலையிடம், வெளியிடங்கள் எல்லாமே. நாம் தொடர்ந்து உடன்பட்டும் இணங்கியும்தான் பிழைக்கிறோம். மொழியை எடுத்துக் கொள்வோம். மொழி கேள்விகளாலும் கோரல்களாலும் ஆனது. வெயில் பொளக்கிறது இல்லையா என்று கேட்டால் ஆமாம் என்போம். வெயில் பொளக்கிறது என்றாலும் தலையாட்டுவோம். இப்படி நம் அன்றாடப் பேச்சே நம்மை அதிகாரத்தின் முன் பணியப் பயிற்சியளிப்பதுதான். அடுத்து, எல்லாருக்கும் நைசாகப் போவதற்காக நாம் கேலி, கிண்டல், சுயகருத்து எல்லாவற்றையும் கழற்றிவைத்து விட்டுப் பேசத் தொடங்...

உயிர்த்திருத்தல்

  இலக்கிய உலகில் சிலர் நம்மைப் பாராட்டும்போது நாம் வருந்த வேண்டும் - நாம் ரொம்ப நைசாகிவிட்டோம். நம்மால் அவர்களுக்கோ பிறருக்கோ 'தொந்தர்வில்லை', அனுசரித்துப் போகிறோம் எனும்போதே பாராட்டுவார்கள். அது நம் அழிவின் துவக்கம். நமது எழுத்து எதோ ஒரு விதத்தில் வெகுஜனப் பண்பாட்டின் மையத்துக்குப் போய்விட்ட கருத்தியலுடன் இணங்கினால், அது என்னதான் எதிர்ப்பண்பாடாகக் கருதப்பட்டாலும், நாம் உடனடியாக ஏற்கப்படுவோம். அதுவும் நம் அழிவின் துவக்கம்தான். இந்தக் கோணத்தில் பார்த்தால், உயிர்ப்புடன் இருப்பதுதான் மிகப்பெரிய சவால்.

புரொமோஷன் ஜுரம்

  டொனால்ட் டிரம்புக்கும் நமது சினிமா இயக்குநர்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. டிரம்புக்கு பெட்ரோல் கொடுக்காவிட்டால் அவர் அந்நாட்டுப் பிரதமரை / அதிபரைக் கடத்தி வைத்து மிரட்டி ஆட்சியை மாற்றுவார், குண்டுகள் போடுவார், அதைக் குறித்துப் பெருமை பேசி நோபல் பரிசு கோருவார். நம் இயக்குநர்களின் படம் ஓடாது, ஓடவில்லை என்று தெரிந்தால் பட்ஜெட்டின் 10-20% எடுத்து யுடியூபர்கள், சேனல்களிடம் கொடுத்து புரொமோட் செய்து நம்மை மிரட்டிப் பார்ப்பார்கள். அப்போதும் நாம் அசையாவிட்டால் நேர்முகங்களாகக் கொடுத்து தம்மைப் பற்றிப் பீத்தி நம்மை மிரட்டுவார்கள். அப்போதும் நாம் அசையாவிட்டால் பிஹைண்ட் வுட்ஸை தொடர்புகொண்டு தமக்கென்று விருதுகளை வாங்கி அங்கும் பேசி பந்தா பண்ணி நம்மைக் கொடுமைப்படுத்துவார்கள். தமிழ் ரசிகர்கள் பயங்கர பொறுமைசாலிகள். அவர்களை அசைக்கவே முடியாது. சரக்கடித்துக் கொண்டு தூங்கப் போய் விடுவார்கள். இதற்கு நடுவே பலனடைபவர்கள் ஊடகக்காரர்கள்தாம். இவர்கள் புரொமோஷனுக்குச் செலவழிக்கும் பணத்தில் திரையரங்குக்கு வரும் மக்களுக்கு பரிசுச் சீட்டு, குண்டான், குடம், பைக், செல்போன், இலவச சமோசா, டீ கொடுக்கலாம். முதல் மூன்ற...

அந்நியனின் புலம்பல்கள்

  கர்நாடகாவிற்கு வந்து பெங்களூர், மைசூர் என்று அவதிப்படுகையில் இங்கிருந்து எப்படிடா தப்பிப்பது என்று சில நாட்களுக்கு முன் யோசித்துக் கொண்டிருந்தேன். சில உத்திகள் தோன்றின: 1) ரொம்ப மோசமாக வேலை செய்து சீட்டைக் கிழித்து அவர்களே என்னை அனுப்பிவிட வேண்டும். ஆனால் என்னதான் முயன்றாலும் என்னால் கேவலமாக வேலை செய்ய முடியாது. அது என் இயல்பு. கல்லைத் தூக்கு என்றால் மலையையே தூக்குவது என் பிறவி சுபாவம். ஆனாலும் எப்படியாவது முயற்சி செய்ய வேண்டும். 2) கன்னடர்களைப் பற்றிக் கேவலமாக எதையாவது எழுதி அதனால் உள்ளூர்க்காரர்கள் கடுப்பாகி என்னை ஊரில் இருந்தே துரத்த வேண்டும். ஆனால் அது என் இயல்பு அல்ல. இந்த நல்ல மனிதர்களை எப்படித் திட்டுவது? 3) வேலையிலோ வெளியிலோ அறத்தை மீறி எதையும் செய்ய என்னால் முடியாது. பிளேட்டோ சொன்னதைப் போல எந்தத் தவறையும் நாம் நமக்கே முதலில் செய்கிறோம். அது நமக்குத் துன்பத்தையே தருகிறது. நம்மைத் துன்புறுத்துவதை நம்மால் செய்ய இயலாது. அதனால் அறிவு படைத்தவர்களால் தவறு செய்ய இயலாது. 4) அது மட்டுமல்ல தவறு செய்வதற்கு ஒரு முகராசி வேண்டும். நானாகச் செய்தாலும் யாருக்கும் அது தவறாகத் தெரியாது என்...

கொமாலாவில் தமிழ் எழுத்தாளன்

  சென்னைக்கு வந்து புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஆசைதான். மைசூரில் இருந்து கிளம்பி சென்னையை அடைந்து ஒருநாள் சுற்றித் திரிந்து அடுத்த நாள் கிளம்பி வந்து சேர வேண்டும். அதற்கு மூன்று நாட்கள் வேண்டும். ஆனால் கர்நாடகாவில் பொங்கலுக்கு ஒருநாள்தான் விடுப்பு. நடுவே ஒரு சனிக்கிழமை வந்தாலும் அன்று அலுவல்ரீதியான பணியுள்ளது. அதற்கும் அனுமதி பெற்று விடுப்பெடுக்கலாம் என்றாலும்கூட என் இரண்டு புத்தகங்களும் இன்னும் அச்சாகி வரவில்லை. வரவர வாழ்க்கையில் நிராசையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. எதுவும் உருப்படவில்லை, எதிர்காலம் இருட்டாகத் தெரிகிறது. மைசூர் அழகாக இருந்தாலும் "பெட்ரோ பரோமாவில்" வரும் கொமாலாவைப் போல ஒரு இறந்த நகரமாக உள்ளது. எப்போதுமே சிறு உறக்கக் கலக்கத்துடன் பாதி விழிப்புடன் இருக்கும் மக்கள். மூச்சுவிடும் தொனியும் பேசுகிறவர்கள். ஏதோ ரகசிய நடவடிக்கைகளைப் போல சிறிய அளவில் வணிகம், வேலை, உரையாடல் என இருக்கிறார்கள். புத்தாண்டு கூட இங்கு ஏதோ பக்கத்து நாட்டு சுதந்திர தினம் போலத்தான் பார்க்கப்படுகிறது. தசரா அன்று மட்டுமே விழித்துக் கொள்ளும் இந்நகரம் "எங்களை இன்னும் 100 ஆண்டுகள் தூங...

"தேவி" - கிண்டில் பதிப்பு

  என் நண்பர் ஒருவர் மலையாள இலக்கியத்தை நன்கு அறிந்தவர். சில மலையாள விமர்சகர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்களுடன் நட்பு பாராட்டுபவர். என்னுடைய மலையாள இலக்கிய பரிச்சயம் துரதிஷ்டவசமாக மொழியாக்கத்தையும் ஒலிநூல்களையும் சார்ந்து உருவானது. எனக்கு மலையாளம் கேட்டால் புரியும், ஆனால் வாசிக்கத் தெரியாது. ஆகையால் நான் என் நண்பரிடம் மலையாள இலக்கியம் குறித்தும், அங்கு வெளியாக முக்கியப் படைப்புகளைக் குறித்தும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்வேன். மலையாள படைப்பாளிகளில் நான் பெரிதும் காதலிப்பவர் பஷீர். அவருடைய படைப்பில் உள்ள கவித்துவம், ஆன்மீகம், களங்கமின்மை, எளிமை, சின்னச்சின்ன நுட்பங்கள், அவருடைய தற்புனைவு (autowriting), பித்து என்னைப் பெரிதும் கவர்ந்த சங்கதிகள். பஷீரை நினைத்தாலே அவரது குரல் எனக்குள் ஒலிக்கும். இதையும் என் நண்பர் அறிவார். இப்படி இருக்கையில் ஒருமுறை நான் என் வேலையிடத்தில் ஓய்வு நேரத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். என் நண்பர் “உங்களுக்கு பஷீரைப் பற்றி ஒரு அதிபயங்கரமான கதையைச் சொல்கிறேன்” என்றார். நான் கணினியை மூடிவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டேன். என்னை மறந்து அக்கதையைக் க...

புதிய தொகுப்பு

  இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கையில் நகைமுரண்தான் இவற்றின் பொதுவான தொனி என்று தோன்றுகிறது. ஆய்வு, கல்விப்புலம், பதிப்புத் துறை, தொல்பெருமை, அறிவியல், பரிசோதனை, வேலை, அறம், நேர்மை என விரியும் கதைகள் இவை. என் கல்லூரிப் பருவம் முதல் முப்பதுகளின் பிற்பகுதி வரையிலும் எழுதிய கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு எனும் அளவில் இக்கதைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைச் சேர்ந்தவை அல்ல. முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன். திட்டமிட்டல்ல. என் இயல்பே பழைய ஒன்றை மறந்து புதிய ஒன்றை நோக்கி நகர்வதுதான். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளிகளின் நடையின் மீதான நினைவுகளோ ஈடுபாடோ பணவீக்கத்தின்போது சம்பளக் காசைப் போல எழுதும்போது காணாமல் போய்விடும். அசோகமித்திரனுக்கு இத்தொகுப்பை நான் அர்ப்பணித்திருப்பதற்கு ஒரு காரணம் இக்கதைகளின் முடிவில் உள்ள நுட்பத்தையும் அமைதியையும் நான் அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன் என்பதே. மேலும் இதிலுள்ள சில கதைகளை எழுதிய காலத்தில் அவரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பும் அமையப்பெற்றது. அதற்காக நான் அவருடைய வாரிசு என்றெல்லாம் கோரிக் கொள்ளவில்லை. ஒரு கடப்பாட்டின் அடி...

"கடவுளைப் போல" - புதிய தொகுப்பு கிண்டிலில்

  கிண்டிலில் வெளியாகும் என் சிறுகதைத் தொகுப்பு. ஏற்கனவே வெளியான கதைகளின் திருத்தப்பட்ட பதிப்பு இது. சில கதைகளின் முடிவை மாற்றியிருக்கிறேன். https://www.amazon.in/dp/B0GFP2PPMM

தமிழ் சினிமாவில் மற்றமை

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் - 8

எதார்த்தக் கதையுலகை எழுதுவது ‘ ராமாயணத்தில் ’ ராவணச் சேனையினர் அனுமனின் வாலுக்குத் தீ வைப்பதைப் போன்றது ( ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஏனோ அதுதான் .). அனுமார் அங்கிங்கு தாவி குதித்து மொத்த தீவையும் பற்றி எரிய வைப்பார் . இந்த நெருப்பை நாம் எதார்த்தம் என்று கொள்வோமெனில் , நம் கதையுலகம்தான் வால் . ஒவ்வொரு சொல்லையும் , சேதியையும் , மதிப்பீட்டையும் , திருப்பம் , காட்சிச் சித்தரிப்பு , கருத்தையும் ஒரு குறிப்பிட்ட தர்க்கச் சட்டகத்துக்குள் நாம் அதன்பிறகு அடக்க வேண்டி வரும் . அது ஒரு பெரும் அவதி . அதாவது தர்க்கப்படி எழுதுவது அல்ல பிரச்சினை . அது ஒரு மெனக்கெடல் மட்டும்தான் . எதார்த்தக் கதையை எழுதும்போது நாம் இந்தச் சட்டகத்துக்குள் அங்குலம் பிசகாமல் கச்சிதமாக நிற்பதால் அதன் நெருக்கடியை , செயற்கையான கட்டுப்பாட்டை , அடிமை நிலையை நாம் உணர்வதில்லை .  எதார்த்தத்தை மீறி ஒரு நாவலை இப்போது நான் எழுதும்போது எனக்கு ஒன்று விளங்குகிறது - எதார்த்தப் புனைவை எழுதுகையில் நான் சம்பவ வரிசையின் காரண காரிய நியாயத...