என் நண்பர் ஒருவர் மலையாள இலக்கியத்தை நன்கு அறிந்தவர். சில மலையாள விமர்சகர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்களுடன் நட்பு பாராட்டுபவர். என்னுடைய மலையாள இலக்கிய பரிச்சயம் துரதிஷ்டவசமாக மொழியாக்கத்தையும் ஒலிநூல்களையும் சார்ந்து உருவானது. எனக்கு மலையாளம் கேட்டால் புரியும், ஆனால் வாசிக்கத் தெரியாது. ஆகையால் நான் என் நண்பரிடம் மலையாள இலக்கியம் குறித்தும், அங்கு வெளியாக முக்கியப் படைப்புகளைக் குறித்தும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்வேன். மலையாள படைப்பாளிகளில் நான் பெரிதும் காதலிப்பவர் பஷீர். அவருடைய படைப்பில் உள்ள கவித்துவம், ஆன்மீகம், களங்கமின்மை, எளிமை, சின்னச்சின்ன நுட்பங்கள், அவருடைய தற்புனைவு (autowriting), பித்து என்னைப் பெரிதும் கவர்ந்த சங்கதிகள். பஷீரை நினைத்தாலே அவரது குரல் எனக்குள் ஒலிக்கும். இதையும் என் நண்பர் அறிவார்.
இப்படி இருக்கையில் ஒருமுறை நான் என் வேலையிடத்தில் ஓய்வு நேரத்தில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். என் நண்பர் “உங்களுக்கு பஷீரைப் பற்றி ஒரு அதிபயங்கரமான கதையைச் சொல்கிறேன்” என்றார். நான் கணினியை மூடிவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டேன். என்னை மறந்து அக்கதையைக் கேட்டேன். அப்போதே எனக்கு அதைக் கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியது. பஷீரின் கிறுக்குத்தனம், எதிர்பாராத நடவடிக்கைகள், மூர்க்கம் ஆகியவை அவரது காமத்தை இன்னொன்றாக மாற்றியது, அவரால் காமத்தில் தன் தேசத்தின், தெய்வத்தின் மீதான பிரியத்தைப் பார்க்க முடிந்தது என எனக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது. அதை என்னால் என் நண்பரிடமோ பிறரிடமோ சொல்ல இயலாது, சொல்லிப் புரிய வைக்க இயலாது என்றும் தோன்றியது. அதைச் சொல்லத்தான் எனக்கு இக்கதைத் தேவைப்பட்டது. ஆகையால் நான் அடுத்த சில நாட்கள் நிறைய ஆய்வு செய்தேன். அந்த வாரத்தின் இறுதியில் தொடர்ந்து ஆறு மணிநேரங்களில் “தேவி” கதையை எழுதி முடித்தேன்.எனக்கு நேரடிப் பரிச்சயம் ஒருவரை, ஒரு நிலத்தை, சூழலைக் குறித்து இல்லாத நிறைய தரவுகளைச் சேகரித்து வரலாற்றுத் துல்லியத்துடன் எழுத நான் செய்த முயற்சி அது. ஆகையால் மிகுந்த ஆவேசமும் தீவிரமும் என்னை ஆட்கொண்டிருக்க மனம் உணர்ச்சிப் பெருக்கில் தள்ளாட எழுதினேன். திருத்தி மீளெழுதும்போது மொத்தக் கதையையும் என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்போது மட்டும் சில பகுதிகளை விட்டுவிட்டு எழுதினேன். பஷீரின் கதைகளிலே அவரது சுசரிதைத்தன்மை அதிகம் என்பதால் அவரது கதைகளைப் படிப்பதும், அவரைக் குறித்த ஆவணப் படங்களும் இக்கதையின் ஆய்வுக்கு வெகுவாக உதவின. ஒரு படைப்பாளியின் அகவுலகை புறவுலகில் அவரது செயல்பாடுகளின் வழியாகவும், புறவுலகத் தோற்றப்பாடுகளைக் கொண்டும் குறிப்புணர்த்துவதே என் உத்தேசம். இதை ஒரு முழுமையான உளவியல் எதார்த்தக் கதையாக நான் எழுதினாலும் கதையைச் சொல்லும் பேராசிரியரின் கண்ணோட்டத்தில் கதை விரிவதால் அதற்குள்ளே அப்பெண்ணின், பஷீரின் சித்திரங்களை உருவாக்க முயன்றேன். என் அதிர்ஷ்டம் ஒருவரது பார்வைக்குள்ளே இருவேறு பாத்திரங்களின் தனித்துவமான பார்வைகளை (தேவியும் பஷீரும்) என்னால் உருவாக்க முடிந்தது. இன்று யோசிக்கையில் மிகுபுனைவு, மாய எதார்த்தம், சிதைவுற்ற கதையோட்டம் ஆகியவற்றைக் கொண்டு இன்னும் சுலபமாக, மனவெழுச்சியுடன் இக்கதையுலகினுள் போயிருக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு இன்னொரு கதைக்கு வைத்துக் கொள்கிறேன்.
இது ஒரு குறுநாவல் அல்ல. நீண்ட சிறுகதைதான். இதன் வடிவம் அப்படியானது.
இக்கதையை எழுதத் தூண்டிய என் நண்பருக்கும், பஷீரின் கதைகளை தமிழாக்கிய ஆளுமைகளுக்கும், நாடகமாக்கிய குழுவினருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கதை வெளியானபோது பரவலாகப் படிக்கப்பட்டு கருத்துக்கள் பகிரப்பட்டன. இக்கதையில் உள்ள ஒரு மாற்றுமொழிச் சூழலைக் குறித்து வர்ணிக்கும் சிலாக்கியமான, கற்பனாதீதமான பகுதிகளும், இதிலுள்ள எக்ஸாட்டி தன்மையும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும்.
ஒரு தனிநூலாக கிண்டில் பதிப்பாக இதோ “தேவி” வெளியாகிறது. இனி மனம் பேதலித்த நிலையில் ஒரு மகத்தான ஆற்றலைப் பெண் வடிவில் காமுறும், காதலிக்கும் பஷீர் உங்கள் கைகளில்.
https://www.amazon.in/dp/B0GFWJNWML
