Skip to main content

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் - 8





எதார்த்தக் கதையுலகை எழுதுவதுராமாயணத்தில்ராவணச் சேனையினர் அனுமனின் வாலுக்குத் தீ வைப்பதைப் போன்றது (ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஏனோ அதுதான்.). அனுமார் அங்கிங்கு தாவி குதித்து மொத்த தீவையும் பற்றி எரிய வைப்பார். இந்த நெருப்பை நாம் எதார்த்தம் என்று கொள்வோமெனில், நம் கதையுலகம்தான் வால். ஒவ்வொரு சொல்லையும், சேதியையும், மதிப்பீட்டையும், திருப்பம், காட்சிச் சித்தரிப்பு, கருத்தையும் ஒரு குறிப்பிட்ட தர்க்கச் சட்டகத்துக்குள் நாம் அதன்பிறகு அடக்க வேண்டி வரும். அது ஒரு பெரும் அவதி. அதாவது தர்க்கப்படி எழுதுவது அல்ல பிரச்சினை. அது ஒரு மெனக்கெடல் மட்டும்தான். எதார்த்தக் கதையை எழுதும்போது நாம் இந்தச் சட்டகத்துக்குள் அங்குலம் பிசகாமல் கச்சிதமாக நிற்பதால் அதன் நெருக்கடியை, செயற்கையான கட்டுப்பாட்டை, அடிமை நிலையை நாம் உணர்வதில்லை

எதார்த்தத்தை மீறி ஒரு நாவலை இப்போது நான் எழுதும்போது எனக்கு ஒன்று விளங்குகிறது - எதார்த்தப் புனைவை எழுதுகையில் நான் சம்பவ வரிசையின் காரண காரிய நியாயத்தையும், நம்பகத்தன்மையையும் மட்டுமே செதுக்கவில்லை, நான் ஒரு துவக்க-முடிவெனும் எல்லைக் கோட்டுக்குள் என் கதையைத் திணிக்கிறேன். சிலநேரங்களில் இந்தச் சட்டகம் அமேசானில் பொருள் வாங்கும் நமக்கு வைத்து அனுப்பப்படும் கெட்டி அட்டைப் பெட்டிகளை நினைவுபடுத்துகிறது. சிலநேரங்களில் ஒரு சிறிய பொருளைக் கூட பெரிய பெட்டிக்குள் வைத்து பெரிய பார்சலாக அனுப்புவார்கள் (பொருளின் பாதுகாப்பை நிச்சயப்படுத்தவும் நம் நன்மதிப்பைப் பெறவும்). எந்த ஒரு சம்பவத்தையும் அதற்கு உரிய இடத்தில் சரியாகப் பொருத்துகிறோம். இப்படிச் செய்யும்போது நாம் வாசகர்களின் பிரக்ஞையையும் தான் இப்படி ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கிறோம்


நிஜ உலகம் இப்படி இல்லையா? இதுஎதார்த்தம்இல்லையா? இக்கேள்விகளுக்குள் நாம் போனாலே எதார்த்த இலக்கியத்தின் பாம்பு வாய்க்குள் மாட்டிக் கொள்வோம். ஏன் ஒரு புனைவு நாம் காணும் புறவுலகை ஒத்திருக்க வேண்டும்? நாம் பார்க்கும் பொருட்களையும் உயிர்களையும், புறக்காலத்தையும் வெளியையும் ஒருங்கிணைத்து ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். இதுவே நமதுபுற எதார்த்தம்’. அடுத்து நாம் எதார்த்தப் புனைவுக்குள் இதையே கற்பனையில் உருவாக்குகிறோம். ஒரு கதையை நிச்சயப்படுத்த அதன் மீதாக ஒரு மீ-கதையை உருவாக்குகிறோம். அதுவே எதார்த்தப் புனைவு. இது ஒரு தேவையில்லாத கட்டுப்பாட்டை நம் கற்பனையிலும் மொழியிலும் புனைவுக்குள் செயல்படும் காலத்திலும், இப்புனைவுக் காலத்தால் கட்டுப்படுத்தப்படும் புனைவு வெளியிலும் திணிக்கிறோம். என்னுடைய ஒரு பாத்திரம் எட்டாவது மாடியில் இருக்கிறது. அவர் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து மாடிப்படிக்கட்டில் இறங்கி வந்து வாயிற் கதவைத் தாண்டிச் சென்று சாலையை அடைய வேண்டும். அல்லது அவர் தன் பால்கனியில் இருந்து கீழே குதித்து தன் மண்டையையோ கைகால்களையோ உடைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் புற எதார்த்தத்தை நாம் ஏன் இலக்கியத்தில் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் இதை மீறி எழுதும்போது மட்டுமே உணர்கிறேன். மற்ற சமயங்களில் இந்தப் புற எதார்த்தத்தின் கட்டுக்குள் இருப்பதை நானே பலமுறை உணர்த்தி என்னை இந்தப் புற நிபந்தனைகளால் ஆன ஒருவராக மீளமீள உணர்த்துகிறேன். இப்படி என் கற்பனையும் என் நம்பிக்கையும் எதார்த்தப் புனைவில் இருந்தும் வருகின்றன. அதாவது நான் எதார்த்த உலகை நோக்கி எதார்த்தப் புனைவெழுதவில்லை, நான் எதார்த்தப் புனைவெழுதும்போதும் படிக்கும்போதும்எதார்த்தம்எனும் ஒரு கருத்தமைவை நம்பவும் ஏற்கவும் அதற்கு ஏற்ப என் மன அமைப்பில் துணிசுற்றி நெருப்பு வைக்கவும் செய்கிறேன்


எதார்த்தத்தின் சங்கிலியை அறுக்கும்போது அது நம் உலகை எவ்வளவு விடுவிக்கிறது என உணர்கிறேன். ஆனால் அதைப் புறவுலகில் செய்வது கடினம். புனைவில் இருந்து அதை ஆரம்பிக்கும்போதே அதன் சாத்தியங்கள் புலனாகின்றன - நமது அரசியல், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் எதார்த்தச் சட்டக்கத்தினுள் மட்டுமே உயிர்க்கக் கூடியவை. பாத்திரங்கள் எதார்த்தத்தை மீறும்போது அவை அரசியலையும் மதிப்பீடுகளையும் பல்வேறு எதிர்மைகளையும் கடந்து அவ்வளவு சுதந்திரமாக உலவுகின்றன


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...