புத்தகம் என்றாலே பண்டம்தான். அதைப் படைப்பாக்குவது வாசிப்பு. நல்ல வாசிப்பு நல்ல எழுத்தை உண்டாக்குகிறது. நல்ல எழுத்து நல்ல வாசிப்பை ஏற்படுத்துவதில்லை. நான் சொல்வது பரவலான வாசிப்பு கூட அல்ல. சிறுகுழுக்களுக்குள் நிகழும் தீவிர விவாதங்கள், பரிசோதனைகளுக்கான தேடல்கள், கடுமையான ஏற்புகள், மறுப்புகள், பரிசீலனைகள். துரதிஷ்டவசமாக இன்று சிறு வட்டத்துக்குள் நிகழும் கூட்டங்களுக்குள் கூட படைப்புகளை வாசித்து விமர்சிக்கும் திறன் உள்ளவர்கள் வருவதில்லை. அங்கும் அறிமுக வாசகர்களே அதிகம். அவர்களை வழிநடத்த ஆட்கள் மிகமிகக் குறைவு. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் நம் இலக்கிய இதழ்களில் புத்தக மதிப்புரைகள், இலக்கிய விவாதங்களில் வீழ்ச்சியைக் காண ஆரம்பித்தோம். அந்த இடத்தை சமூக, அரசியல், ஊடக விவாதங்கள் எடுத்துக் கொண்டன. பின்னர் சிறுபத்திரிகைகளிலும் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் வெகுமக்கள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்ற விசயங்கள் மீதான விவாதங்கள் நடந்த அளவுக்குக் கூட இலக்கிய விவாதங்கள் இடம்பெறவில்லை என்பது என் புரிதல். மதிப்புரை எழுதுவோரும் ஒன்று தம் ஒருதலைப்பட்சமான கருத்தை எழுதுகிறார்கள், அல்லது போலியாகப் பாராட்டுகிறார்கள் அல்லது நூல்களின் கருத்துக்களையும் கதையையும் தொகுத்து எழுதுகிறார்கள். கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் கூட இன்று நூல்கள் நிராகரிக்கப்படுவதில்லை - வாசிப்புத்தன்மைக்காக மட்டுமே மறுக்கப்படுகின்றன. இதுவும் நம் வாசிப்பில் நேர்ந்துள்ள வீழ்ச்சிதான். 60-70களில் துவங்கி 90கள் வரையிலும் வெவ்வேறு விதமான மதிப்புரைகள், அளவுகோல்களின்படி செய்யப்பட்ட விமர்சனங்கள் அதற்கு அடுத்த இரு பத்தாண்டுகளில் மறைந்துவிட்டன. இந்த விமர்சகர்களை நாம் கேலி செய்தும், நிராகரித்தும் ஒழித்துவிட்டோம். இவர்களுடைய வழித்தோன்றல்கள் இன்று இலக்கியத்தில் அனேகமாக இல்லை. மீதமுள்ளோர் அன்றாட அரசியலைக் குறித்தும், கோட்பாட்டு அரசியலை வைத்தும் எழுதுகிறார்கள். ஏனென்றால் நம் சமூகச் சூழல் தீவிர இலக்கிய உரையாடல்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவற்றின் இடத்தில் நம் சூழல் வெகுஜனத்தன்மை கொண்ட எளிய உரையாடல்களைக் கொண்டு வந்தது. தீவிர எழுத்தாளர்களும் பதிப்பாளர்களாக, கல்ட் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களாக, பேச்சாளர்களாக, அரசியல்வாதிகளாக மாறிவிட்டதில் அவர்களைப் பின் தொடர்ந்து போகவே அடுத்த தலைமுறையும் விரும்புகிறார்கள். இது ஏற்படுத்திய இடைவெளி மிகப்பெரியது. இதன் விளைவாக இன்று எழுதும் நாவலாசிரியர்களுக்கு எப்படி, எதை எழுதுவது, எதை லட்சியமாக வைத்து எழுதுவது என ஒன்றும் புரியவில்லை. அவர்கள் உலக இலக்கியம் படித்தும் எழுத வருவதில்லை. ஒரு வெற்றிடத்தில் இருந்து வருகிறார்கள். நம் இலக்கிய வரலாற்றில் வேறென்றுமே இல்லாத ஒரு நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.
ஆகையால் இலக்கியம் பண்டமாக்கப்படுவது, அதன் தரம் குறைவதைப் பற்றி கவலைகள் அவசியமில்லாதவை. நமக்குத் தேவை நல்ல வாசிப்புக் கூட்டங்கள், நல்ல படைப்பாளிகளுக்கு அங்கீகாரம், பொருளாதார ஆதரவு, நாவலுக்கான நிதி நல்கைகள், தீவிர விவாதங்கள், உலக இலக்கிய உரையாடல்கள், மொழிபெயர்ப்புகள், ஊடக கவனம். நல்ல நாவல்கள் தாமாகவே தோன்றி நிலைகொள்ளும்.