Skip to main content

Posts

Showing posts from November, 2022

தியாகராஜ பாகவதர்

எனக்கு மிகவும் பிடித்த திரைப்பாடகர் யார்?  அது அவ்வப்போதைக்கு மாறும். இப்போது நான் மிகவும் ரசிப்பது தியாகராஜ பாகவதரை. "தீனகருணாகரனே", " சிவபெருமான் துணை", "வள்ளலைப் பாடும்" இப்படி பல தேன் சொட்டும் பாடல்கள். எவ்வளவு அழகாகப் பாடுகிறார் என ஒவ்வொரு முறையும் வியக்கிறேன். சொல்லப்போனால் இன்றைய திரையிசைப் பாடகர்கள் யாரையும் பாகவதருடன் ஒப்பிட முடியாது. இன்னொன்று இன்றைய திரைப்பாடகர்கள் நிறைய பேர் பாடகர்கள் அல்ல, தாளத்திற்கு ஏற்ப பேசுபவர்கள்.  இன்னொன்று தோன்றியது: கடனில் வீட்டையும் சொத்துக்களையும் இழந்து கோயில் வாசலில் கண்ணற்றவனாக பாடி செத்தாலும் பாகவதரின் பாடல்கள் இத்தனை ஆண்டுகள் ஆகியும் சாகவில்லையே. இன்றும் ஒருவன் காலையில் அவர் பாடல்களை சொக்கிப் போய் கேட்கிறேனே!  ஆனால் இந்த சாகாவரத்தினால் ஒரு கலைஞனுக்கு என்ன லாபம்?

சிறந்த விற்பனை - 'புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்'

  விருது நகர் புத்தகக் கண்காட்சியில் இந்தச் சிறுவர்கள் காலையில பரபரப்பாக உயிர்மை அரங்கில் நுழைந்து எதையோ தேடினர். சற்று நேரத்தில் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி என்ன வேண்டும் என்று கேட்டேன் பச்சை டி ஷர்ட் அணிந்த பையன் ' சார் திருக்குறள் குட்டி புக் இருக்கா ?" என்று கேட்டான். " இல்லையேப்பா..சுஜாதா திருக்குறள் விளக்கவுரைதான் இருக்கு" என்றேன். அப்போது மஞ்சள் சட்டை அணிந்த பையன் " சார் எனக்கு வேற ஒரு புக் வேணும்...ஆனா அது விலை ரொம்ப ஜாஸ்தி...370 ரூபாய் போட்டிருக்கு.."என்றான் ஏமாற்றத்துடன். "அந்த புக்கை எடுத்து வா" என்றேன். உள்ளே ஓடிபோய் எடுத்து வந்தான். அது ஆர். அபிலாஷ் எழுதிய " புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்" புத்தகம். "உங்கிட்ட எவ்வளவு காசு இருக்கு? " என்று கேட்டேன். " இருபது ரூபாய்தான் சார் இருக்கு "என்றான் கூச்சத்துடன். " பரவாயில்லை ..கொடு" என அதை வாங்கிக்கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். அவனால் அதை நம்ப முடியவில்லை. அவன் கண்களிலில் புரூஸ் லீ என்ற கனவு வீரன் மின்னினான்....

இமையம் எனும் அசுரன்

குவெம்பு விருது பெறும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துக்களும் அன்பும்! தனது எழுத்துக்கலை மீது இத்தனை நுட்பமான அறிவு கொண்ட மற்றொருவரை நான் கண்டதில்லை. அவருடைய எந்த நாவலை வேண்டுமெனிலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் துவக்கம் அவ்வளவு கச்சிதமாக இருக்கும். அதே போலத்தான் கதைக்களனை, அதில் வர வேண்டிய இரண்டாம் நிலை பாத்திரங்களை தேர்வு பண்ணுவது, இவர்களைத் தன் கதையின் அமைப்பின் இன்றியமையாத பகுதியாக்குவது, பிரதான பாத்திரங்களுக்கு நாவலுக்குள் சரியான இடமளிப்பது எனத் திட்டவட்டமாக வகுத்திருப்பார். ஒரு நாவலை நினைத்ததுமே அதன் பாத்திரங்கள் எழுந்து நம் கண்முன் நிற்பது இதனால் தான். இமையத்தின் புனைவுலகம் திரும்பத் திரும்ப நிகழ்த்தப்பட்டு பலமுறை எடிட்டிங் டேபிளில் முடுக்கி செறிவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைப் போன்றது. இதற்கு மேல் ஓர் அங்குலம் கூட வெட்டியெடுக்க இடமில்லை எனும்படிக்கு சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆணழகன் என அவரது நாவல்களின் வடிவத்தை சொல்வேன். இன்னொரு பக்கம் வசனங்களை ஒரு பாத்திரத்தின் பல்வேறு மனோலயங்களை, கதைசொல்லிக்கும் ஒரு பாத்திரத்துக்கும் பிற பாத்திரங்களுக்குமான எல்லைக்கோட்டை அழிக்கும்படியான அபார...

ஆண்-அடிமை யுகத்துக்கான ஆண்கள் தின வாழ்த்துகள்

ஆண்களுக்கு இது நெருக்கடியான காலம். ஆண்களுக்கு இது நிம்மதியற்ற காலம். ஆண்களுக்கு இது அவநம்பிக்கயின் ஊழிக்காலம். ஆண்களுக்கு இது அடிமை யுகம்! முன்பு ஆண்கள் - நமது தந்தையரின், தாத்தாக்களின் காலத்தை சொல்கிறேன் - ஆண்களாக இருந்தால் மட்டும் போதும். அவர்கள் கூடுதலாக எதையும் செய்ய வேண்டி இருக்கவில்லை. சமூகம் எதிர்பார்ப்பதை செய்தால் போதும். அதற்காக அவர்கள் கடும் பாதுகாப்பின்மையை, இழப்புகளை, சமூக ஒடுக்குமுறையை சந்திக்க வேண்டி இருக்கவில்லை. முன்பு அவர்கள் ஆணாக இருப்பது குறித்து குற்றவுணர்வை அடைய வேண்டி இருக்கவில்லை. ஆணாக இருக்க முடியாது என்று சொன்னாலும் அடிப்போம் எனும் சமூகத்தை எப்படி சமாளிப்பது என முழி பிதுங்க வேண்டி இருக்கவில்லை. சமூகம், பொருளாதாரம், சட்டம், ஊடகம் அனைத்தும் தமக்கெதிராக திரண்டு நிற்பதைக் கண்டு இதற்கெதிராகப் பேசினால் கூடுதல் அடிவிழுமோ என அஞ்சவும், கடும் அழுத்தத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தால் நொறுங்கி காணாமல் போய் விடுவோமே என திக்குத்தெரியாமல் நிற்கவும் வேண்டி இருக்கவில்லை. முந்தைய ஆண்களைப் போல மரபின், கூட்டுக்குடும்பத்தின், நிலவுரிமையின் கட்டமைப்புகளுக்குள் பதுங்கிக் கொள்ள இன்றைய ஆ...

தற்காலிகமான நிம்மதி

மாலை பெருங்கூட்டம் சிறிது குறைந்திருந்தது . என்றாலும் பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்தால் கண்ணியமாக ஏற முடியாத அளவுக்கு ஆண்களும் பெண்களும் காத்திருந்தார்கள் . தூரத்தில் பார்வையை செலுத்தி நிற்பது சகுந்தலாவுக்கு அவளுடைய வேதனையை குறைப்பதாக இல்லை . பஸ் வந்தால் அதிக பயணம் செய்யும் நாற்பது நிமிடங்களுக்கு அப்பயண அனுபவங்களைத் தவிர வேறெதன் மீதும் மனம் செல்ல முடியாது . அதிலும் பஸ்ஸில் நிற்க இடமென்றால் முழுக்க முழுக்க அவளுடலைப் பற்றித்தான் கவனம் இருக்க முடியும் . இப்போது பஸ் வந்தால் தாற்காலிக நிம்மதி . ஆனால் ஏழு மணியானாலே அரை மணியாவது காத்திராமல் பஸ் வராது . “ இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும் ”, அசோகமித்திரன்

கணேசகுமாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

தமிழ் சிறுகதைகளை - ஒரு வசதிக்காக - இரண்டாகப் பிரித்தோமெனில் குடும்ப உறவுகள், காதல் போன்ற செண்டிமெண்டலான கதைகள் என்று ஒரு பக்கமும், தனமனித-சமூக உறவின் முரண்களை, அபத்தங்களைப் பேசும் கதைகள் என வகைப்படுத்தலாம். இதில் சமூகத்தின் இடத்தில் இயற்கையை, வரலாற்றை, தொன்மங்களை, வன்முறையை, அறத்தை வைத்துப் பேசிய பரீட்சார்த்த கதைகளும் உண்டு. கணேசகுமாரன் இதற்கு வெளியே நோயாலும், வேறு உளவியல் சிக்கல்களாலும் சிதைவுறும் மனித உடலுக்கும் / சுயத்துக்கும் இருத்தலுக்குமான உறவு குறித்த சில முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறார். அதுவும் குறிப்பாக அவர் தன் அனுபவங்களில் இருந்து எழுதிய, சமகாலத்தவரின் தாக்கம் இன்றி எழுதிய படைப்புகள் எனக்குப் பிடித்தமானவை. குறிப்பாக 'மெனிஞ்சியோமா'. கணேசகுமாரனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!

“கந்தாரா” ஏன் ஒரு திருப்புமுனைப் படம்?

“கந்தாராவை” கடந்த மாதமே என் வீட்டருகே உள்ள திரையரங்கில் பார்த்தேன். அண்மையில் வந்த படங்களில் ஒரு சில விசயங்களைப் பொறுத்து இது சற்று முக்கியமானது எனத் தோன்றியது. ஆனால் அப்போதே எழுத அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் இப்போது தாமதமாக எழுதுகிறேன். இது ஒரு சாதாரண பழிவாங்கும் கதை தான். அதாவது தப்பு செஞ்சா சாமி வந்து கண்ணைக் குத்தும் என்பார்களே, அதையே சற்று மேம்படுத்தி ஒரு சமுதாயத்துக்கு தனிநபர் துரோகமும் அநியாயமும் இழைத்தால் சாமி வந்து கழுத்தை அறுக்கும் எனக் காட்டியிருக்கிறார்கள். “பிதாமகனை” நிச்சயமாக நினைவுபடுத்தியது. ஆனால் ஒரே வித்தியாசம் “நான் கடவுளில்” கூட தனிநபரின் தார்மீக உணர்ச்சி மீதுள்ள நம்பிக்கை பாலாவுக்கு கடவுள் மீது நிச்சயமாக இல்லை. பாலாவுக்கு என்றில்லை, மதம் சார்ந்த உருவகங்களை பயன்படுத்திய நவீன இயக்குநர்கள் யாருக்கும் இங்கு கடவுள் மீது பிடிப்பில்லை. ஒருவிதமான கலாச்சார பகுத்தறிவாளர்கள் இவர்கள். அதனாலே “பிதாமகன்” சுடுகாட்டில் வளர்ந்த நாகரிகமடையாத, மனவளர்ச்சி குறைவான இயற்கையாக மூர்க்கமும் பலமும் கொண்டவனாக இருக்கிறான். “நான் கடவுள்” ஹீரோவும் கூட கடவுளாக மாறி கொல்வதில்லை. அவன் தன்னை அப்பட...