விருது நகர் புத்தகக் கண்காட்சியில் இந்தச் சிறுவர்கள் காலையில பரபரப்பாக உயிர்மை அரங்கில் நுழைந்து எதையோ தேடினர். சற்று நேரத்தில் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி என்ன வேண்டும் என்று கேட்டேன் பச்சை டி ஷர்ட் அணிந்த பையன் ' சார் திருக்குறள் குட்டி புக் இருக்கா ?" என்று கேட்டான். " இல்லையேப்பா..சுஜாதா திருக்குறள் விளக்கவுரைதான் இருக்கு" என்றேன். அப்போது மஞ்சள் சட்டை அணிந்த பையன் " சார் எனக்கு வேற ஒரு புக் வேணும்...ஆனா அது விலை ரொம்ப ஜாஸ்தி...370 ரூபாய் போட்டிருக்கு.."என்றான் ஏமாற்றத்துடன். "அந்த புக்கை எடுத்து வா" என்றேன். உள்ளே ஓடிபோய் எடுத்து வந்தான். அது ஆர். அபிலாஷ் எழுதிய " புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்" புத்தகம். "உங்கிட்ட எவ்வளவு காசு இருக்கு? " என்று கேட்டேன். " இருபது ரூபாய்தான் சார் இருக்கு "என்றான் கூச்சத்துடன். " பரவாயில்லை ..கொடு" என அதை வாங்கிக்கொண்டு அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். அவனால் அதை நம்ப முடியவில்லை. அவன் கண்களிலில் புரூஸ் லீ என்ற கனவு வீரன் மின்னினான். நான் ஒரு எதிர்கால வாசகனை அடைந்தேன். " தாங்க்ஸ் அங்கிள்.." என்று உவகையுடன் கூறியபடி அந்தப் பையன்கள் உற்சாகத்துடன் சென்றனர். "சார்" என்ற சொல். "அங்கிள்" என்ற சொல்லாக மாறிய அபூர்வ கணம் இது.
இந்தக் கண்காட்சியில் உயிர்மையின் சிறந்த விற்பனை இதுதான்.
- மனுஷ்யபுத்திரன்
