Skip to main content

“கந்தாரா” ஏன் ஒரு திருப்புமுனைப் படம்?



“கந்தாராவை” கடந்த மாதமே என் வீட்டருகே உள்ள திரையரங்கில் பார்த்தேன். அண்மையில் வந்த படங்களில் ஒரு சில விசயங்களைப் பொறுத்து இது சற்று முக்கியமானது எனத் தோன்றியது. ஆனால் அப்போதே எழுத அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் இப்போது தாமதமாக எழுதுகிறேன்.
இது ஒரு சாதாரண பழிவாங்கும் கதை தான். அதாவது தப்பு செஞ்சா சாமி வந்து கண்ணைக் குத்தும் என்பார்களே, அதையே சற்று மேம்படுத்தி ஒரு சமுதாயத்துக்கு தனிநபர் துரோகமும் அநியாயமும் இழைத்தால் சாமி வந்து கழுத்தை அறுக்கும் எனக் காட்டியிருக்கிறார்கள். “பிதாமகனை” நிச்சயமாக நினைவுபடுத்தியது. ஆனால் ஒரே வித்தியாசம் “நான் கடவுளில்” கூட தனிநபரின் தார்மீக உணர்ச்சி மீதுள்ள நம்பிக்கை பாலாவுக்கு கடவுள் மீது நிச்சயமாக இல்லை. பாலாவுக்கு என்றில்லை, மதம் சார்ந்த உருவகங்களை பயன்படுத்திய நவீன இயக்குநர்கள் யாருக்கும் இங்கு கடவுள் மீது பிடிப்பில்லை. ஒருவிதமான கலாச்சார பகுத்தறிவாளர்கள் இவர்கள். அதனாலே “பிதாமகன்” சுடுகாட்டில் வளர்ந்த நாகரிகமடையாத, மனவளர்ச்சி குறைவான இயற்கையாக மூர்க்கமும் பலமும் கொண்டவனாக இருக்கிறான். “நான் கடவுள்” ஹீரோவும் கூட கடவுளாக மாறி கொல்வதில்லை. அவன் தன்னை அப்படி நம்பிக் கொள்ளும் மனநலம் பாதிக்கப்பட்டவனாக அல்லது சற்று பிறழ்ந்தவனாக இருக்கிறான். அவன் கொன்று தின்னும் போது நாம் அதை வெளியே இருந்து பார்த்து அருவருப்படைகிறோம், பயப்படுகிறோம்; பிதாமகனில் விக்ரம் வில்லனின் குரல்வளையைக் கடிக்கும் போதும் அப்படியே உணர்கிறோம். தொண்ணூறுகள், ரெண்டாயிரத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு கடவுள் பெயரை சுமந்துள்ள ஹீரோவாக நடித்த ரஜினி தன்னை ஆண்டவன் சொல்றான், ரஜினி செய்யுறான் என்றே சொன்னாரே தவிர நானே கடவுளின் அவதாரமாகிறேன் என்று சொல்லி, நம்மை நம்ப வைக்க முயலவில்லை.
இது தமிழ் சமூகத்தின் பிரத்யேக குணம் அல்ல; இந்தியா சினிமா முழுக்கவே - நான் பார்த்தவரையில் - இப்படித்தான் இருக்கிறது. சுதந்திரத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இங்கு தோன்றிய மேற்தட்டில் பிறந்து வெளிநாட்டில் படித்த ஒரு தலைமுறை மக்கள் பின்பு மத-அரசியல் சீர்திருத்தவாதிகளும் தலைவர்கள் ஆன போதும் அவர்களுக்கு ஒருவிதமான அவநம்பிக்கையுடன் கூடிய மதவாதமே இருந்தது. முழுமையாக தெய்வத்திடம் தம்மை ஒப்புக்கொடுக்கும் எளிமையை, பகுத்தறிவற்ற நிலையை அவர்கள் இழந்திருந்தனர். அந்த காலத்து காந்தி, சாவர்க்கர் இரு வேறுபட்ட ஆளுமைகள் என்றாலும் இருவருமே முழுமையான நம்பிக்கையாளர்கள் அல்ல. அவர்களில் இருந்து இன்றுள்ள மோடி வரை அது தான் நிலை. ஐம்பதுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல நவீன கல்வி அனைவருக்கும் கிடைத்த பிறகு நகரம் சார்ந்த கணிசமான மக்கள் இப்படித்தான் ஆகி விட்டார்கள். அவர்களுக்கு மதத்தில் பிடிப்பும், சடங்குகளில் விருப்பமும் ஓரளவுக்கு நம்பிக்கையும் உண்டு. ஆனால் என் கிராமத்தில் சிலர் திடீரென சாமி வந்து அரைமணி போல துள்ளுவதை, அவரை மக்கள் பக்தியுடன் வணங்குவதைக் கண்டிருக்கிறேன். இதை நீங்கள் நகரத்தில் பார்க்க முடியாது. கிராமத்திலும் இன்று நிலைமை வெகுவாக மாறி விட்டது. சாமியாடிகளை ஒரு நக்கலோடு தான் பார்க்கிறார்கள். நகரத்து பக்தி மனநிலை இப்படி முழுமையான சரணடைதலை ஏற்காத ஒருவித பகுத்தறிவு அல்லது ஐயுறவுவாத தன்மை கொண்டது. இந்த நகரத்து பகுத்தறிவுவாதத்தை தஸ்தாவஸ்கி தன் நாவல்களில் கிண்டடிப்பதை பார்க்கலாம். இதுவே நமது சினிமாவில், இலக்கியங்களில் வெளிப்பட்டது.
இதற்கு இன்னொரு காரணம் நமது வெகுஜன சினிமா எதார்த்தவாத சினிமா என்பது. இங்கு முன்பிருந்தே புராண சினிமா-சமூக சினிமா எனும் இருமை இருந்ததை அறிவோம். அதில் சமூக சினிமா எனும் எதார்த்த சினிமாவே வென்றது. அதில் மிகுபுனைவுக்கு இடமே இல்லை. எதார்த்திற்குள் நின்றபடி ஒரு ஹீரோ நூறு பேரை அடித்துப் போடலாம். ஆனால் அவன் செத்துப் போன பிறகு கடவுள் அவனை மறுபடி உயிர்ப்பித்ததாக எடுக்க முடியாது. பார்வையாளர்கள் சிரித்து விடுவார்கள். எம்.ஜி.ஆரில் இருந்து ரஜினி, அஜித் வரை யாருக்கும் அந்த துணிச்சல் இல்லை. ஏனென்றால் லாஜிக் முக்கியம். ஆனால் “கந்தாரா” முதன்முறையாக இந்த பகுத்தறிவுவாத பாவனையை தூக்கிப் போட்டுவிட்டு மாய எதார்த்த சிறுதெய்வ தொன்ம பின்னணியில் கதையை ஆரம்பித்து அதே பாணியில் முடித்தும் இருக்கிறது.
அதனாலே இது ஒரு breakthrough படம் என நினைக்கிறேன். படத்தின் ஹீரோவிடம் வெளிப்படும் ‘பாசாங்கில்லாத ஆண்மையும்’ நமக்கு தொண்ணூறுகள் வரையிலான படங்களை நினைவுபடுத்துகிறது. ‘பாசாங்கில்லாத ஆண்மை’ என்றால் தான் விரும்பும் பெண்ணை ஒரு பெண்ணாக, பெண்ணுடலாக மட்டும் பார்க்கிற துணிச்சல். ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கண்டு வேட்கை அல்லது காதல் வந்தால் அவன் அவள் கண்களை நோக்கி அல்ல உடலை நோக்கியே தன் உடலால் பேசுவான். அப்படித்தான் ஒரு காலத்தில் நாயகர்கள் இருந்தார்கள். பெண்ணுடலின் கவர்ச்சியான பகுதிகளைப் பார்த்தும் வேண்டியும் தொட்டும் வருடியும் காதலிப்பது இயல்பாக இருந்தது. ஆணின் மார்பும் தொடைகளும் திரையை ஆக்கிரமித்தன. ஆனால் ரெண்டாயிரத்துக்குப் பிறகு நமது காதல் ‘நாகரிகமானது’. அதாவது மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள், ஆனால் திரைக்கலைஞர்கள் தம் நாயகன் நாயகியிடம் நேரடியாக விருப்பத்தை தெரிவிப்பது அத்துமீறல் என நினைத்து தயங்கினார்கள். அது ஒருவித கண்ணிய ஆண்-பெண் உறவுக்கு இட்டுச் சென்று அப்படியே பாசாங்கின் உச்சத்தை இன்று எட்டி விட்டது. அதாவது நாயகி தன்னை self-objectify பண்ணிக் கொண்டிருப்பாள். அதை பார்வையாளர்கள் பார்த்து உள்ளுக்குள் மகிழ்வார்கள். நாயகன் ஒரு கூச்சத்துடன் அவள் கண்களைப் பார்த்து பட்டும்படாமல் பேசிக் கொண்டிருப்பான். சமகால சினிமாவில் பெண்ணுடல் பார்வையாளர்களின் voyeurism செயல்படும் களம். நாயகனுக்கு அது ஒரு புனித களம். ஆனால் “கந்தாராவில்” நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு பெண்ணின் இடுப்பை ஆசையாகக் கிள்ளுகிற நாயகன் வருகிறான். அவனுக்கு அது குறித்த எந்த கூச்சமோ பயமோ இல்லை. கோபத்தில் அவளை நோக்கி அவன் “வேசையே” என்று திட்டுகிறான். அதன் பின்பு சமாதானமாகி முயங்குகிறான். அன்பின் பொருட்டு இது அவளுக்கும் ஒரு பிரச்சினையாகவே இல்லை.
இப்படி ஒரு ஆணையோ பெண்ணையோ எதார்த்தத்தில் பார்க்க முடியுமா என்றால் முடியாது என்பேன். இன்று உங்கள் காதலியை “வேசையே” என்று அழைத்தால் காதல் முறிவும் செருப்படியும் நிச்சயம். ஆனால் இது ஒரு எதார்த்த காதல் அல்லவே. அதனால் சற்று பின்னோக்கி சென்று இத்தகைய ஒரு காதலனை, காதலியை இயக்குநர் உருவாக்கிக் காட்டுகிறார். அதை இன்றைய பார்வையாளன் மனம் திறந்து கொண்டாடுகிறான்.
இந்த படத்தின் வன்முறையையும் அப்படியே சொல்வேன். எதார்த்த படங்களின் சண்டைக்காட்சிக்கும் ஒரு எல்லை உண்டு. கோபவெறியில் அடித்து மண்டையை உடைக்கலாம், வயிற்றைக் கிழிக்கலாம். தலையை வெட்டி நாட்டி வைக்கலாம். ரொம்ப ஆசைப்பட்டால், ஹீரோ ஒரு சைக்கோத்தனமானவன் என்று காட்டி, அவன் வில்லனின் குடலை அள்ளி வெளியே போடலாம். அல்லது குடலால் கழுத்தை இறுக்கலாம். இதையெல்லாம் நீங்கள் அந்த பாத்திரத்தின் தர்க்க ஒழுங்குக்கு உட்பட்டே செய்ய இயலும். ஆனால் சிறுதெய்வம் வரும் மிகுகற்பனைக் கதையில் எந்த தர்க்கமும் இல்லாத ஒரு வன்முறை சாத்தியம். அது நம்மை முகம் சுளிக்கவோ அருவருக்கவோ அஞ்சவோ அல்ல உணர்வெழுச்சி கொண்டு கத்தி கூப்பாடு போட வைக்கிறது. ஏனென்றால் அது இந்த பௌதீகத்தின் மீது அபௌதீகம் கொள்ளும் வெற்றியாக பார்வையாளனுக்குத் தோன்றுகிறது. சாமியாடி துள்ளும் போது வரும் அதே ஆவேசம் தான்!
இது எதார்த்த படமா மாய எதார்த்த படமா என்றால் மாய எதார்த்த வடிவத்திற்குள் வரும் எதார்த்த படமென்பேன் - “மை டியர் குட்டிச்சாத்தன்” போல. “அவதாரைப்” போல. ஏனென்றால் இதன் கதைத் தர்க்கமானது எதார்த்த கதையில் இல்லை. இதன் துவக்கத்தில் வரும் தொன்மக் கதையில் இருக்கிறது. அந்த தொன்மக் கதையில் ஒரு காட்டு தெய்வம் செய்யும் சத்தியமும் தரும் சாபமும் நிறைவேறும் பொருட்டே எதார்த்த கதை செயல்படுகிறது. இப்படத்தின் மிக உணர்வெழுச்சியான பகுதி முதல் மற்றும் இறுதி 20 நிமிடங்களே. நடுவே வரும் எதார்த்தவாத காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.
அதனால் படத்தின் ஒன்றரை மணிநேரம் சற்று தட்டையாகப் போவது கிளைமேக்ஸின் உக்கிரத்தை, உன்மத்தத்தை தூக்கி விட உதவுகிறது.
ஒரு அற்புதமான கிளைமேக்ஸ் சரியாக எடுக்கப்பட்டு, சரியான இடத்தில் அமைந்தால் எந்த படமும் வெற்றியடையும் என கந்தாராவைப் பார்த்த போது எனக்குத் தோன்றியது.
அப்புறம், இந்த படத்தின் அரசியலுடன் எனக்கும் உடன்பாடில்லை. நமது காட்டிலாகாவும், கார்ப்பரேட்டுகள் காட்டு வளத்தை சுரண்ட சாதகமான சட்டங்களும் பழங்குடிகளைப் பாதுகாக்கும் என நான் நம்பவில்லை. இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் போதாமை அது. அல்லது ஜமீந்தார் எனும் ஒற்றை வில்லனே போதும், அரசாங்கத்தையும் காட்டிலாகா அதிகாரிகளையும் கூடுதல் வில்லனாக்கி கதையைக் குழப்ப வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம். அல்லது அரசுடன் சமாதானமாகப் போவதே தன் படத்தின் வெற்றிக்கு நல்லது எனக் கருதியிருக்கலாம்.
நான் மேலே குறிப்பிட்டுள்ள சங்கதிகள் குறித்த புரிதலோ தெளிவோ ரிஷப் ஷெட்டிக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால் சில நேரம் தன்னையும் மீறி ஒரு திருப்புமுனைப் படைப்பு வெளிப்பட்டு விடும். அது தான் “கந்தாரா!”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...