மாலை பெருங்கூட்டம் சிறிது குறைந்திருந்தது. என்றாலும் பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்தால் கண்ணியமாக ஏற முடியாத அளவுக்கு ஆண்களும் பெண்களும் காத்திருந்தார்கள். தூரத்தில் பார்வையை செலுத்தி நிற்பது சகுந்தலாவுக்கு அவளுடைய வேதனையை குறைப்பதாக இல்லை. பஸ் வந்தால் அதிக பயணம் செய்யும் நாற்பது நிமிடங்களுக்கு அப்பயண அனுபவங்களைத் தவிர வேறெதன் மீதும் மனம் செல்ல முடியாது. அதிலும் பஸ்ஸில் நிற்க இடமென்றால் முழுக்க முழுக்க அவளுடலைப் பற்றித்தான் கவனம் இருக்க முடியும். இப்போது பஸ் வந்தால் தாற்காலிக நிம்மதி. ஆனால் ஏழு மணியானாலே அரை மணியாவது காத்திராமல் பஸ் வராது.
“இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்”, அசோகமித்திரன்
