இலக்கிய இதழ்கள் நிறுத்தப்படுவது என்னை பெரிதாய் ஆச்சரியப்படுத்துவதில்லை . உங்களையும் தான் . ஒவ்வொரு இதழ் தொடங்கப்படும் போதும் அதன் நிறுவனர் / ஆசிரியருக்கு ஒரு கணக்கு இருக்கும் , இலக்கு , தேவையின் பொருட்டான கணக்குகள் இருக்கும் . சிற்றிதழென்றால் அது குழுநடவடிக்கையின் நீட்சியாகவே இருக்க முடியும் . குழு நடவடிக்கையென்றால் அரசியல் நடவடிக்கை அல்ல , இலக்கிய ஆர்வம் கொண்டோர் சில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து இதழ் ஒன்றை நடத்துவது , அதன் வழி நாம் நம்பும் வகையில் இலக்கிய தடமொன்றை அமைக்க முயல்வது . அந்த குழு உடையும் போதோ உறுப்பினர்கள் ஆர்வம் இழக்கும் போதோ இதழ் நின்று போகும் . நானே இரு சிறுபத்திரிகைகளை நண்பர்களுடன் இணைந்து சில மாதங்களில் இருந்து ஒன்றரை வருடம் வரை நடத்தி இருக்கிறேன் . இதைப் படிக்கும் உங்களில் சிலர் கூட செய்திருக்க கூடும் . நீங்கள் இணைய இதழாகவே நடத்தினால் கூட அன்றாட வாழ்க்கையின் கட்டாயங்களுக்கு மத்தியில் அதை செய்வது ஒரு கட்டத்தில் உங்களை சோர்ந்து போகவே செய்யும் .