Skip to main content

பேஸ்புக் எனும் சாத்தான் (1)

பேஸ்புக்கை சாபம் விட்டு நான் ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன். இதுவும் அப்பட்டியலும் சேருகிறது என்றாலும் என் சமீபத்தைய அனுபவங்கள் தந்த ஊக்கத்தில் கொஞ்சம் அதிக உணர்ச்சிவசத்தில், கூடுதல் ஆத்மார்த்தமாய், இம்முறை சாபமிடுகிறேன். சமகாலத்தின் மிகப்பெரிய உளவியல் நோய் பேஸ்புக்கில் காட்டிக் கொள்வதே, அதனால் அல்லலுற்று பின்னர் டிக்டாக் போன்ற பெரிய கொடூரங்களில் தன்னை இழப்பதே. மேலும் கிட்டத்தட்ட தினமும் டி-ஆக்டிவேட் பண்ணி திரும்ப திரும்ப பேஸ்புக்கில் எட்டிப் பார்த்து இருக்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவிப்பது மது / சிகரெட் போதையை விட பேஸ்புக் எவ்வளவு ஆபத்தானது எனக் காட்டுகிறது. பேஸ்புக் தான் நம் யுகத்தின் மிகப்பெரிய சாத்தான்.

ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, மாரடைப்பு ஆகியவற்றை விட கூடுதலாய் மக்களை இன்று பாதிக்கும் நோய் மன அழுத்தம் என ஒரு உளவியலாளர் ஒரு டெட் டாக்கில் பேசுவதைக் கேட்டேன். நான் தற்போது பணிபுரியும் கல்வி நிறுவனத்தில் இன்று அதிக பிரசித்தமான துறையாக உளவியல் துறை உள்ளது; அதில் அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள்; அதிக மாணவர்கள் உளவியல் படிக்க விரும்பி சேர்கிறார்கள்; அதிக இளைஞர்கள் இன்று உளவியலாளர்களை நோக்கி தினமும் படையெடுக்கிறார்கள், சிகிச்சை பெற. இன்னொரு பக்கம், மது மற்றும் போதை மருந்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 13-20 வயதுக்கு உட்பட்டோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அடுத்த கால்நூற்றாண்டில் மிக மிக பிஸியான மனிதர்களாக உளவியல் மருத்துவர்கள் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. உலகமே ஒரு பெரிய மனநல சிகிச்சை மையமாக மாறி வருகிறது. அதில் கணிசமானோர் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் குடியிருப்போர். உளவியலாளோர் நிச்சயம் ஒரு பெரிய தொகையை பேஸ்புக்குக்கு கப்பம் செலுத்த வேண்டும். ஏன் என சொல்கிறேன்.
நான் இத்தனைக் காலமும் முகநூலை நாம்சரியானவிதத்தில் பயன்படுத்தினால் எந்த சிக்கலும் இல்லை என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அது முழுக்க எனது தனிப்பட்ட சமூகவலை தள பயன்பாட்டையும் எனது நண்பர்களின் பயன்பாட்டையும் அடிப்படையாய் கொண்டு உருவான நம்பிக்கை. அது எவ்வளவு தவறானனது என தற்சமயம் உணர்ந்து வருகிறேன். ஏன் என சொல்கிறேன்.
சென்னைக்கும் பெங்களூருக்கும் வித்தியாசங்கள் அதிகம். இரு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த சென்னை (இன்று கூடத் தான்) ரொம்பவே இயல்பான நகரம். அங்கு மெய்நிகர் உலகம் இவ்வளவு தீவிரமாய் இல்லை. ஆனால் பெங்களூர் நிஜத்தை விட அதிகமாய் இணையத்திலே இருக்கிறது. இங்கு அன்றாட உலகம் கூட மெய்நிகர் உலகின் நீட்சியாகவே உள்ளது. இது ஒரு மிகை காஸ்மோபொலிடன் நகரம். இங்கு மன உளைச்சலும் பதற்றமும் பாதுகாப்பின்மையும் அதிகம். இந்த மன இயல்புகளே கார்ப்பரேட்டுகளின் விளைநிலம்
கார்ப்பரேட்டுகள் நீங்கள் மிகுந்த பரபரப்புடன், பாதுகாப்பின்மையுடன் இருப்பதை விரும்புகின்றன. அப்போதே நீங்கள் அதிகம் பொருட்களை வாங்குகிறவராய், அதிகம் நுகர்கிறவராய், அதிகம் வேலையிடத்தில் செலவழிப்பவராய் இருப்பீர்கள். நீங்கள் எந்தளவுக்கு பரஸ்பரம் பேசி பழகுகிறவராய், எந்தளவுக்கு குறைவாய் ஆரோக்கிய உணவை கொண்டு, எந்தளவுக்கு குறைவாய் செக்ஸ் வைத்துக் கொண்டு உள்ளீர்களோ அந்தளவுக்கு அதிகமாய் கார்ப்பரேட்டுகள் பயன்பெறுகின்றன. இதை கார்ப்பரேட்டுகள் நேரடியாய் ஒப்புக் கொள்ளப் போவதில்லை - ஆரோக்கிய வாழ்க்கை முறையையும் ஒரு நுகர்வுப் பொருளாய் கார்ப்பரேட்டுகள் உள்வாங்கிக் கொண்டு பணம் பண்ணும்
இன்றைய நுகர்வுலகம் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட் - அதில் மேல் தட்டில் பிட்ஸாவும் பேஸ்புக்கும் டிக்டோக்கும் உண்டென்றால் கீழ்த்தட்டில் பச்சை காய்கறிகள், பழங்கள், உடற்யிற்சி, யோகா, உளவியல் நூல்கள் ஆகியவை இருக்கும். எது நோய்களை உருவாக்குகிறதோ அதுவே நோய்க்கு மருந்தையும் விற்கிறது. இதுவே கார்ப்பரேட் தந்திரம்.
ஆக, இன்றைய வாழ்க்கை முறைக்குள் நீங்கள் பாதுகாப்பாய் பேஸ்புக்கை பயன்படுத்துவது கிட்டத்தட்ட அசாத்தியம் எனும் முடிவுக்கு நான் இன்று வந்து சேர்ந்துள்ளேன். இது குறித்து, இருவிதமான உளவியல் பார்வைகள் உண்டு. American Academy of Pediatrics ஒரு எச்சரிக்கையை சில வருடங்களுக்கு முன்பு விடுத்தது - பேஸ்புக் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் மன அழுத்தத்தில் போய் விழுவது கிட்டத்தட்ட நிச்சயம் என அது கூறியது. 2017இல் ஹாங்காங் ஷூ யாங் பல்கலைக்கழகம் இந்த ஆய்வு முடிவை மறுத்தது - பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களால் மனநோய் வருவதில்லை, மாறாக, மனநோய் வரும் சாத்தியம் கொண்ட ஆளுமையாளர்களே இந்த வலைதளங்களால் பாதிக்கப்படுவார்கள் என்றது இந்த ஆய்வு. சுருக்கமாய், கோழியில் இருந்து முட்டையா, அல்லது முட்டையில் இருந்து கோழியா? எது நிஜம்? நடப்புலகம் நிஜமா அல்லது பல்வேறு நிஜங்களில் ஒன்று மட்டுமே நடப்புலகமா

பேஸ்புக்கை ஏன் சீரியஸாக எடுத்துக் கூடாது? அங்கு நமக்கு கிடைக்கும் நட்பு வட்டங்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூகத் தொடர்புகள் அதிகமாக ஆக, நம் வாழ்வின் மகிழ்ச்சியும் மேம்படும் என மகிழ்ச்சி குறித்த ஆய்வு செய்த உளவியலாளர்கள் மீள மீள சொல்கிறார்கள். தனியாய் ஒரு அறையில் இருந்துவேதாந்த சாரம்மட்டும் படிப்பதை விட கூடவே கொஞ்சம் பேஸ்புக்கும் படித்தால் உங்கள் வேலையும் நடக்கும் உலகமும் நம்முடன் இருக்கும். நேரமும் வீணாகாது, மகிழ்ச்சியும் சமூக வலைதள தொடர்புகளால் பன்மடங்காகும். பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து பெட்டியை தூக்கி குழந்தையை இடுப்பில் வைத்து கதவைத் திறந்து வெளியே செல்லும் பலருக்கும் இக்கேள்வி முதுகுக்குப் பின் வேதாளமாய் தொங்கியபடி இருக்கும். பேஸ்புக் எந்த விதத்தில் குறைபட்ட உலகம் சொல்லுங்கள்? அதை சரியாய் நிதானமாய் அளவாய் பயன்படுத்தலாமே? அதைப் போய் ஏன் சாபம் விடுகிறீர்கள்?

ஆனால் பேஸ்புக் அவ்வளவு சுலபமான ஒரு புலப்பாடு (phenomenon) அல்ல. பேஸ்புக் தற்போது பெரிய அளவில் வளர்ந்து உருமாறி உள்ளது. துவக்க நிலையில் பேஸ்புக் நம் உலகுக்குள் ஒரு சிறிய பாம்பாய் ஊர்ந்து நுழைந்த போது நாம் அதை கவனமாய் கையாள முடிந்தது. தேவையான போது அதைப் பிடித்து ஒரு பையில் அடைக்கவும் அதன் வாயைத் தைக்கவும் நாம் பயிற்சி பெற்றோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கார்ப்பரேட் நுகர்வுவாதத்தின் அசுர வளர்ச்சி நமது வாழ்க்கைப் பார்வையை தலைகீழாய் புரட்டிப் போட்டு விட்டது. பேஸ்புக் உள்ளிட்ட மெய்நிகர் உலகங்கள் இன்று கயிற்றவுகள் ஆகி விட்டன. கயிறு என்று பார்த்தால் அவை பாம்பாகவும் இருக்கலாம் எனும் உண்மை புரியாமல் போகும்; பாம்பென்று நினைந்து பதறினால் பின்னர் நம் மீதே நமக்கு சிரிப்பு வரும். பாம்பு கயிறாகவும் கயிறு பாம்பாகவும் மாறி மாறித் தெரிந்தால் ஒருவேளை ஒன்றன் மற்றொரு நிலை தான் இன்னொன்றோ என நமக்கு கேள்வி எழும். அப்போது நமக்கு பாம்பும் கயிறும் ஒரே சமயம் உண்மை எனத் தோன்றும். இதுவே மிக மிக ஆபத்தான நிலை. அப்படி சிந்திக்கத் துவங்கினால் நாம் உறுதிப்பாடு அற்றவர்களாய் மாறுவோம். மெய்நிகர் என்பதற்கும் மெய் என்பதற்கும் வித்தியாசம் புலப்படாமல் போகும்
பாம்பிடம் அச்சம் தோன்றாது. ஆனால் தெளிவுடன் துணிச்சலாய், “அச்சமில்லை அச்சமில்லைஎனும் திரைவிலகலாக அது இருக்காது. இது கயிறாகவும் இருக்கலாம், ஆனால் மெல்ல நெளிகிறதே, ஒருவேளை பாம்போ, ச்சே இருக்க முடியாது, இவ்வளவு உறுதியாய் கயிறு என்று தெரிந்த பின் எப்படி அது இன்னொன்றாய் இருக்க முடியும்? ஆம் என்றால் கயிறும் கூட ஒரு பொய் அல்லவா? நிஜமும் பொய்யும் ஒரே போல பொய் தானோ?


இந்த குழப்பம் நம்மையும் அறியாது நமது அக உலகுக்குள் ஊடுருவி விட்டது. இந்த சஞ்சலம் நம்மை அன்றாட மெய் உலகில் இருந்து மெல்ல மெல்ல விலக்குகிறது. ரத்தமும் சதையுமான மனிதர்களிடம் எப்படி உரையாடுவது, அவர்களை எப்படி கையாள்வது எனப் புரியாமல், அவர்களைக் கண்டு அஞ்சுகிறவர்களாய் நாம் மாறுகிறோம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...