Skip to main content

அவர் எழுதுவதெல்லாம் குப்பைங்க!


கே.என் செந்தில் மீது ஒரு புனைவெழுத்தாளனாக எனக்கு மதிப்பு உண்டு. ஆனால், அதே நேரம், ஒரு விமர்சகராக அவர் பிளாஸ்டிக் கூடையுடன் காய்கறிக்கடை முன்பு வெண்டைக்காய் பொறுக்கும் பெண்களைப் போல நடந்து கொள்கிறாரே என எனக்கு வருத்தமும் உண்டு. சமீபமாய் விகடன் தடம் பேட்டியில் அவர் சொல்லி இருந்த கருத்து எஸ்.ராவின் சமீபத்தைய புனைவுகள் நீர்த்துப் போனவை என்பது. குறிப்பாகநெடுங்குருதிநாவலைத் தவிர அவரது வேறு நாவல்கள் பொருட்படுத்தத்தக்கவை அல்ல என்று எவர் பின்னர் முகநூலில் கூறிய கருத்துக்களையும் இங்கு நினைவு கொள்கிறேன்.


 இம்மாதிரியான அரிசியில் கல்பொறுக்கும் விமர்சனத்தில் அடிப்படையாகவே ஒரு பிரச்சனை உண்டு. அது படைப்பை ஒரு நுகர்வுப் பண்டமாக காண்கிறது என்பதே அது. ஒரு படைப்பு தனியாக வண்ணத்தாள் அட்டையுடன் நூலாக வரும் பட்சத்திலும் அதை நீங்கள் ஒரு பண்டமாக கருதி மதிப்பிடல் ஆகாது. நமது உன்னதமான விமர்சகர்கள் யாரும் அதை செய்தததில்லை; மேற்கிலும் சிறந்த இலக்கிய விமர்சகர்கள் ஒரு படைப்பை வேலைக்கு ஆகாது எனநிராகரிக்கமாட்டார்கள். இலக்கியம் ஒரு நெடிய உரையாடல்.   ஒவ்வொரு கதை, கவிதை, நூலும் அந்த உரையாடலின் சில வாக்கியங்கள் மட்டுமே. ஒரு உரையாடலின் போது ஒரு நண்பரின் சில வாக்கியங்கள் சரியாக நம்மிடம் தொடர்புறுத்தவில்லை என்றால் அது தரமற்ற வாக்கியம் எனக் கூறி, அவர் நீர்த்துப் போய் விட்டார் என சொல்லுவோமா? மாட்டோம். எழுத்திலும் அது கூடாது

எஸ்.ராவுக்கே வருவோம். அவர் தொண்ணூறுகளில் எழுதிய கதைகளின் ரசிகனாக நான் இருந்ததுண்டு. பின்னர் ரெண்டாயிரத்தில் அவரது கதைமொழி சற்றே மாறிய போது என்னை அது சட்டென ஈர்க்கவில்லை. நான் திரும்பத் திரும்ப அவரதுதாவரங்களின் உரையாடல்போன்ற தொகுப்புகளையே படித்தேன். ஆனால் பின்னர் அவர் ரெண்டாயிரத்தில் எழுதிய கதைகளின் முக்கியத்துவம் புரிந்தது. எதார்த்த கதைபாணியில் எஸ்.ரா பல நல்ல கதைகளை எழுதினார். இதற்கு அடுத்த காலகட்டம் என 2005க்குப் பிறகிலிருந்து இன்றுவரையிலான அவரது கதைகளைப் பார்ப்போம். இறுக்கமற்ற உணர்த்தித் தளும்பலான ஒரு கதைமொழியை எஸ்.ரா இப்போது எடுத்துக் கொள்கிறார். ஒருவிதத்தில் தற்போது போகன் சங்கர், நரன் போன்றோர் பயன்படுத்தும் கதைசொல்லல் பாணி இது. இதற்குள் எஸ்.ராவின் மாந்திரிக எதார்த்த கதைகளில் இருந்த அதே உலகம், அதே மிகை உணர்ச்சிகள் வந்த போது நமக்கு கொஞ்ச செண்டிமெண்டலாக தோன்றியது. ஆனால் இதே கட்டத்தில் தான்அப்பா புகைக்கிறார்போன்ற அபாரமான கதைகளையும் அவர் எழுதினார் (நான் இக்கதையைப் பற்றியே ஒரு விரிவான கட்டுரை எழுதினேன்).
 எஸ்.ராவின் நாவல்களுக்கும் இதுவே நடந்தது. ஆனால் ஒரு நாவல் வடிவின் சவால்கள் மிகப்பெரிது என்பதால் அதற்குரிய பல சிக்கல்களை அவரது பிற்கால நாவல்கள் கொண்டுள்ளன. “துயில்துவங்கிபதின்வரையிலான 5 நாவல்களில் அவர் எதார்த்த மொழியில் அவரது முந்தைய மாய எதார்த்த உலகின் தனிமையை, கைவிடப்படலை, சொல்ல முடியாமையும் துயரை பல விதங்களில் புதிய களங்களில் வைத்து பேச முயன்றார். சில நாவல்களில் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது, சில நாவல்களில் முடியவில்லை. ஆனால் எஸ்.ராவின் தோல்வி அல்ல இது. மாறாக படைப்பாக்கத்தில் தவிர்க்க இயலாமல் நேரும் தடுமாற்றங்களாகவே பார்க்கிறேன்
ஒரு நல்ல ஊக்கமான மனநிலையில் நீங்கள் ஒரு நல்ல கதையை எழுதிட முடியும்; ஆனால் ஒரு நல்ல நாவல் நல்ல நாவலாக உருக்கொள்ள மன ஊக்கமோ முயற்சியோ போதாது. ஆறில் இருந்து பதினெட்டு மாதங்கள் நீங்கள் ஒரு நாவலில் உழைக்கிறீர்கள் என்றால் அப்போது நீங்கள் தொடர்ந்து ஒரே மனநிலையை தக்க வைக்க முடியாது. அப்போது உங்களை அறியாமலே ஒரு நாவல் சிறப்பாக வெளிப்படும் அல்லது வெளிப்படாது. அது படைப்பாளியின் தவறோ படைப்பின் பழுதோ அல்ல - மொழியில் நிகழும் ஒரு மேஜிக் ஏனோ அமையவில்லை என விளக்கலாம். ஆனால் அது கூட சரியான விளக்கமல்ல.
ஏனென்றால், ஒரு நாவலின் சிறப்பு / சிறப்பின்மை குறித்த எனது மதிப்பீடு எனது நினைவில் இருந்தே வருகிறது. நான்நெடுங்குருதியைபடித்து பத்தாண்டுகள் ஆகிறது என்றால், நான் தொடர்ந்து பத்தாண்டுகளாக அதை சிறந்த நாவலாக கூறி வருகிறேன் என்றால் நான் பாராட்டுவது நாவலையா என் நினைவையா? இப்போது திரும்பப் படித்தால் என் கருத்து மாறாது என என்னால் உறுதியாக சொல்ல முடியுமா? எனக்கும்நெடுங்குருதிபிடித்த நாவலே. ஆனால்துயில்நாவலை எதிர்காலத்தில் ஒருநாள் நான் படித்து மேலானதாக நினைக்க மாட்டேன் என எந்த உறுதியும் இல்லை. ஜெயமோகனின்காடுவெளியான போது நான் அதைவிஷ்ணுபுரத்துடன்ஒப்பிட்டு அதனாலேகாடுஏன் நல்லா நாவல் இல்லை என ஜெயமோகனுக்கு இரு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். அதன் பிறகு நான் அவரது அடுத்தடுத்த நாவல்களைவிஷ்ணுபுரத்துடன்ஒப்பிட்டு மதிப்பிட்டபடி இருந்தேன். ஒருநாள் எனக்கு இது அபத்தமான வாசிப்பு முறை என புரிதல் ஏற்பட்டது. அதற்கு காரணம் கொக்கோ கோலா.

ஆமா, நான் அப்போது தினமும் கோக்கை விரும்பி குடிப்பேன். அதே சுவை, அதே கிக். ஒருநாள் கூட கோக்கின்தரம்குன்றியதில்லை. ஒருநாள் ஒரு நண்பரிடம் கோக் குடித்தபடி (அப்போது தமிழில் வெளியான) புதிய சில நாவல்களைப் பற்றி அடாவடித்தனமாய் விமர்சனம் பண்ணிக் கொண்டிருந்தேன். விளையாட்டாய் போகிற போக்கில்இந்த கொக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு இருக்கும் தர ஒழுங்கு கூட நம் இலக்கியவாதிகளுக்கு இல்லையேஎனச் சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டேன். நான் நினைத்தேன், “என்ன ஒரு அபத்தம்! கோக்கும் இலக்கியமும் ஒன்றா?”. எனக்குள் நுகர்வுப் பண்பாடு உறுதியாக படிந்து போய் இலக்கியத்தையும் நான் சந்தை விழுமியங்களின் படி மதிப்பிடுவதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு நான் இது தரமானது, இது தரமற்றது எனவெண்டைக்காய் பொறுக்குவதைநிறுத்திக் கொண்டேன்.

இன்று நான் ஒரு படைப்பாளியின் அனைத்து எழுத்துக்களையும் ஒரே வெளிப்பாடு என காண்கிறேன். தராசின்றி, வெறுங்கைகளுடன், அப்படைப்புகளை அணுகி உரையாட முயல்கிறேன். மட்டமான படைப்புகள் கூட எனக்கு திறந்து கொடுப்பதுண்டு. சிறந்த படைப்புகள் அலுப்பூட்டுவதும் உண்டு. தஸ்தாவஸ்கியின் படைப்புகள் அனைத்தையும் படித்தவர்கள் இதை அறிவார்கள். அவர் தனது Poor Folkஇல் இருந்தே முட்டி முட்டி திறக்க முயன்ற உண்மையின் பெருங்கதவுகள் அவரதுகுற்றமும் தண்டனையும்” “கரமசோவ் சகோதரர்கள்போன்ற காவிய நாவல்களில் அகல திறந்து கொண்டன. ஆனால் கால்வாசியே திறந்த நாவல்களும் ஒரு வாசகனுக்கு முக்கியமே. உதாரணமாக, அவரது Double நாவல் எனக்கு சமீபமாக மிகவும் பிடித்துப் போனது; அது மகத்தான நாவல் அல்ல தான், ஆனால் அதனளவில் அது சிறப்பான வாசிப்பனுபவத்தை தந்தது. நான் அதன் நுனியை கிள்ளிப் பார்த்து நிராகரித்து குப்பையில் போட மாட்டேன். ஏனென்றால் நாவல் என்பது வெண்டைக்காய் அல்ல

கடந்த 12 ஆண்டுகளில் மூன்று நாவல்களை எழுதிய பிறகு நான் குறைந்தது மூன்று நாவல்களையாவது தலா முன்னூறு பக்கங்களுக்கு மேல் எழுதி கைவிட்டிருக்கிறேன். இதற்காக நான் செலவிட்ட நேரம் என்று குறைந்தது மூன்று வருடங்கள். ஒவ்வொரு முறை தோற்கும் போது அதுதோல்விஅல்ல என நான் சொல்லிக் கொள்வேன். எழுத்து வடிவங்களில் ஆக சவாலானது நாவல். அதில் நான் தோற்க தோற்க ஒரு கலைஞனாக நிறைய கற்றுக் கொள்வேன். நான் எதிர்காலத்தில் வெற்றிகரமாக எழுதி முடிக்கும் நாவல் ஒன்று சிறப்பாக அமைய இந்த எழுதி முடிக்க முடியாத பிரதிகள் வளமிடும், அடித்தளம் அமைக்கும் என நம்புகிறேன். ஒரு நாவலை வெளியே இருந்து பார்த்து கல்லெறிவது எளிது என்பதை இங்கே வலியுறுத்தி சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு தான் சிறப்பாக திட்டமிட்டாலும், ஒழுங்காக உழைத்தாலும் அது நல்ல நாவலாக அமையும் என உத்தரவாதம் இல்லை - இருட்டில் ஒரு பாலத்தின் சுவரில் ஏறி நடப்பது போலத் தான் நாவலில் உழைப்பது

கே.என் செந்திலிடம் ஒரு வேண்டுகோள்:

ஒரு நாவலை போகிற போக்கில் நிராகரிக்கும் முன், அதற்கான காரணங்களை விரிவாக ஆதாரங்களுடன் தர்க்க ஒழுங்குடன் விளக்குங்கள். இதற்கு அவகாசம் இல்லையென்றால் விமர்சனம் எனும் பெயரில்சர்ஜிக்கல் ஸ்டிரைக்பண்ணாதீர்கள். அதற்கு மோடி இருக்கிறார்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...