Skip to main content

370 சட்டப்பிரிவு நீக்கம் - என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்?


காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ஒரு நீண்ட வரலாறு கொண்டது. காஷ்மீர் இந்திய அரசமைப்பில் இணைய மறுத்து, தனி நாடாக பிரிந்து போக எண்ணி சுதந்திரம் கோரிய நாற்பதுகளின் முடிவு மற்றும் ஐம்பதுகளின் துவக்கத்தில், .நா இப்பிரச்சனையை ஒரு மனித உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்குமோ என அச்சம் தோன்றிய நிலையில்நமது மைய அரசு ஒரு சமரசமாக இந்த சட்டப்பிரிவை ஏற்றுக் கொண்டது. இதன் படி காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவோ அரசு வேலை பெறவோ முடியாது (பெண்களின் சொத்துரிமை மட்டுமே இந்த சட்டப்பிரிவில் பிற்போக்கானது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்). இது பிற மாநிலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என சிலர் எண்ணினாலும், காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு நாம் அளித்த மதிப்பின் தூல வடிவமாக இது அமைந்தது. மக்களை பிடிவாதமாக ஒரு ஒற்றை தேசியத்தில் இணைக்கக் கூடாது எனும் நல்லதொரு ஜனநாயக விழுமியத்தை இது கொண்டிருந்தது.

 நியாயமாக 370 சட்டப்பிரிவு நல்கும் இத்தகைய சில சிறப்புரிமைகளை பிற மாநிலங்களும் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக இன்று தமிழகத்தில் மைய அரசு வேலைகளில் (ரயில்வே) வேற்று மாநிலத்தவர் சுலபமாக அதிக எண்ணிக்கையில் வேலை பெறுவதை எதிர்க்கிறோம். தமிழக மருத்துவ கல்வி நிறுவனங்களில் இடம் பெற மைய அரசின் தேர்வு ஒன்றை எழுதி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நம் மாணவர்கள் தள்ளப்பட்டதை எண்ணி கலங்குகிறோம். பிற மாநிலத்தவர் நமது மருத்துவ கல்லூரிகளில் அதிக இடம் இதன் மூலம் பெறுவது நடந்தால் நியாயமா என கேட்கிறோம். ஆனால் இந்த சிக்கல்கள் ஏதும் வராத வகையில் காஷ்மீர் மக்கள் இந்த சட்டப்பிரிவு பெற்று இன்று வரை பாதுகாத்திருந்தனர். ஆனால் அதை இன்று அவர்கள் இழந்து விட்டனர். இந்த சட்டப்பிரிவு தான் காஷ்மீர் மக்களின் சுதந்திர தாகத்துக்கு, அவர்களின் போராட்ட உணர்வுக்கு அடித்தளம். அதை தகர்ப்பதன் மூலம் மைய அரசு மக்களை போராடும் திறனற்ற, மாநில தேசியவாத உணர்வற்றவர்களாக, ஒற்றை இந்திய தேசிய அடையாளத்துக்கு கைப்பாவைகளாக மக்களை மாற்ற உத்தேசிக்கிறது. இந்த சட்டப்பிரிவு நீக்கம் என்பது அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மோடியின் அரசு பிற மாநிலங்களின் கட்டுறுதியை எப்படி சிதைக்கப் போகிறது என்பதற்கான ஒரு அபாய சமிக்ஞை இது.

 ஒரு மாநிலத்துக்கு என ஒரு தேசியம் இருக்கலாம் (தமிழ் தேசியத்தைப் போல). அதன் அடிப்படையில் ஒரு மாநிலத்து மக்கள் கூடுதலான சுதந்திரத்தை அமைதியான முறையில் கோரலாம். ஒரு ஜனநாயக அமைப்பு இதை நிச்சயம் அனுமதித்தாக வேண்டும். ஆனால் மத்திய அரசின் இந்த முடிவானது காஷ்மீர் மக்களின் தேசியத்தை வேரோடு அறுத்தெறியும் நோக்கம் கொண்டது. காஷ்மீரின் மக்கள் தொகையில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை குறைத்து, அங்கு வேறு மாநில மக்களை குடியேற்றி குழப்பங்களை உண்டு பண்ணும் விஷமத்தனமே இந்த அரசியல் நகர்வு. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?
அடுத்த சில பத்தாண்டுகளில் காஷ்மீர் மக்கள் இனி தம் மாநிலத்துக்குள் வரும் பிற மக்களை கடுமையாக வெறுத்து அவர்களை மற்றமையாக்கி தாக்குவார்கள். இந்திய அரசபயங்கரவாதமேஇதுவரை அம்மக்களுக்கு ஒரு மற்றமை. இனி அது அனைத்து காஷ்மீரிகள் அல்லாதவர்களும் ஆவார்கள். இது அடுத்த கால் நூற்றாண்டில் காஷ்மீர் மக்களின் வெறுப்பரசியலை மத்திய அரசின் மீதிருந்து எளிய வேற்று மொழி மக்கள் மீது திருப்பி விட இது உதவும். மக்கள் குழப்பத்தில் தத்தளிக்க, மோடியை போன்றோர் அந்த குட்டையில் மீன் பிடிப்பார்கள்.

மோடியின் அரசு இனி அனைத்து மாநிலங்களையும் - குறிப்பாய் தென்னகத்தை - ஒரு மையப்புள்ளியில் திரட்ட, மையவாத அரசியலை அனைத்து தளங்களிலும் முன்னெடுக்க இது உதவும். சமீபத்தில், அணைப் பிரச்சனையில் முடிவெடுக்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து மைய அரசுக்கு மாற்றும் முடிவை எதிர்த்து எம்.பி ரவிக்குமார் மக்களவையில் கவன் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது நினைவிருக்கலாம். இனிமேல் அயல்மாநிலத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட நீங்கள் மத்திய அரசை நாட வேண்டி வரும். மைய அரசு ஒரு பக்க சார்பாய் நடந்து கொள்ளும் பட்சத்தில் அது தமிழகத்துக்கு தீங்காக முடியலாம் என ரவிக்குமார் கூறி இருக்கிறார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என ஒவ்வொன்றாய் மாநில உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசு இப்போது காஷ்மீர் விசயத்தில் ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் வைத்து முதல் ஆணியை அடித்து விட்டது. வரும் ஆண்டுகளில் ஜனநாயகத்தை அது முழுக்க சவ அடக்கம் பண்ணி விடும்.  

இந்த சட்ட நீக்கத்தை அறிமுகப்படுத்தும் முன் காஷ்மீரில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ராணுவத்தை அனுப்பி, 144 தடை உத்தரவை பிறப்பித்து, தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து, இணையத்தொடர்பை துண்டிக்கிறது மைய அரசு. அதற்கான அவசியம் தான் என்ன? ஒரு சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்காவிடில் அதற்கு எதிராக போராடும் உரிமை அவர்களுக்கு இல்லையா? அவர்கள் போராடுவார்கள் என முன்கூட்டியே அறிந்து ஒரு மாநிலத்தின் மீதுசர்ஜிக்கல் ஸ்டிரைக்தொடுப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் அல்லவா!

மோடி அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.


இந்த தேசத்தில் இப்போது வாழ நாம் எல்லாம் வெட்கப்பட வேண்டும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...