சிறப்புத் தகுதி ரத்துடன் காஷ்மீரில் தொழில்மயமாக்கம், அதனாலான வளர்ச்சி, மிகப்பெரிய பொருளாதார எழுச்சி நிகழப் போகிறது என கோட்டை கட்டுபவர்களிடம் நாம் கேட்க வேண்டிய ஒரு அடிப்படையான கேள்வி அத்தகைய வளர்ச்சிப் போக்குகள் ஏன் இந்தியாவின் பிற மாநிலங்களில் மோடியின் ஆட்சியின் கீழ் நிகழவில்லை என்பது.
கடந்த சில ஆண்டுகளில் நமது பொருளாதாரம் மிகப்பெரிய சரிவையே சந்தித்துள்ளது; விலைவாசி கடுமையாய் உயர்ந்துள்ளது; படித்த இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் தம் தகுதிக்கு குறைவான வேலைகளில் சேர்கிறார்கள்; மேலும் பலர் வேலை கிடைக்கவில்லை என்பதாலே முதுகலை படிப்பில் சேர்கிறார்கள். வணிகம், விவசாயம் ஆகிய துறைகளில் மக்கள் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். சி.சி.டி சித்தார்த்தாவின் அதிர்ச்சியூட்டிய தற்கொலையை சுலபத்தில் மறந்து விட்டு, காஷ்மீர் மட்டும் சிங்கப்பூர் ஆகி விடும் என நம்மால் எப்படி நம்ப முடியும்.
இந்தியாவின் வேறு பகுதிகளில் நிகழ்த்தாத மந்திர விதையை மோடி காஷ்மீரில் மட்டும் நிகழ்த்தி விடுவாரா? காஷ்மீரில் இந்தியாவின் வணிக நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடியை முதலீடு பண்ணப் போகிறார்கள், என்று பண்ணுவார்கள் என்பதற்கான திட்டமோ புள்ளிவிபரமோ இந்த அரசாங்கத்திடம் உண்டா? இந்த வணிக காந்தங்கள் ஏன் சென்னைக்கோ பெங்களூருக்கோ செல்லாமல், எந்த அடிப்படை வசதிகளோ படித்த தகுதியான ஏகப்பட்ட இளைஞர் படையோ இல்லாத காஷ்மீருக்கு செல்ல வேண்டும்? அப்படியே மோடி காஷ்மீரில் பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து அதை மேம்படுத்த போகிறார் என்றால் அதை ஏன் பிற மாநிலங்களுக்கு அவர் இது வரை பண்ணவில்லை? இல்லை, அடுத்த தேர்தல் வரை வளர்ச்சி எனும் வடையை அவர் வாயிலே சுட்டுக் கொண்டிருப்பாரா? “காஷ்மீர் மக்களுக்கான பிரதிமந்திரி வேலை வளர்ச்சி திட்டம்” என ஒன்றை பிரம்மாண்டமாக அறிவித்து விட்டு அப்படி நைசாக அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வேலை பார்க்க போய் விடுவாரா?
ஒரு அரசின் எதிர்கால செயல்பாட்டை நாம் அதன் இதுவரையிலான “சாதனைகளை” வைத்து தான் அனுமானிக்க முடியும். காஷ்மீரை இந்த அரசு இனி சொர்க்கபுரியாக்கும் என கூறுபவர்கள் இதுவரையில் “அகண்ட பாரதத்துக்கான” மோடி அரசின் பொருளாதார திட்டங்களின் / திட்டமின்மையின் படுதோல்வியை கவனிக்கவில்லை என்றே பொருள்.
முன்னாள் இந்திய தூதர் நிருபமா ராவ் (ஹார்வெர்ட்டில் எல்லாம் போய் படித்தவர்) போன்றவர்களே இப்படியான கற்பனைக் கோட்டையை கட்டுவதைப் பார்க்கும் போது (https://timesofindia.indiatimes.com/blogs/toi-edit-page/paradise-lost-or-regained-kashmir-must-be-drawn-away-from-the-precipice-with-humane-and-judicious-calibration/) இவர்கள் எல்லாம் இந்தியாவில் தான் வாழ்கிறார்களா இல்லை நீரோவின் உடன்பிறப்புகளா எனும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தியாவின் படித்த வர்க்கம் இன்னும் எத்தனைக் காலம் இப்படியான கற்பித பஞ்சுமெத்தைகளில் மல்லாக படுத்தபடி சபாஷ் என மோட்டுவளையை நோக்கி கைதட்டப் போகிறது? மொத்தமாய் தெருவுக்கு வந்த பிறகா?