சர்வோத்தமனின் மதமும் தேசியவாதமும் எனும் கட்டுரை வலதுசாரி பார்வை பற்றின முக்கியமான மாற்றுப்பார்வையை கொண்டுள்ளது. இவ்விவாதத்தில் தரப்புகள் மட்டுமே சாத்தியமாகும். தெளிவான தீர்வுகள், முடிவுகள் இல்லையென நினைக்கிறேன். மதம் தேவையா என்று கேட்டால் தேவை என கண்ணை மூடிக் கொண்டு சொல்வேன். ஆனால் மதத்தை கேள்வியின்றி முழுமையாய் உணர்ச்சிவயப்பட்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என நினைக்கிறேன். மதம் ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றாக இருக்கிறது. இந்தியர்கள் மதத்தை ஒரு இறையியல் அமைப்பாக பார்க்கவில்லை. இங்கு மதம் (இந்து மதம்) இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. 1) சாதிகளை ஒன்றாய் கோர்த்து ஒன்றன் மேல் ஒன்றாய் உருளும் சக்கரங்கள் கொண்ட எந்திரம் போல் செயல்படுகிறது. 2) வாழ்க்கை தர்க்கமும் நியாயமும் அற்ற ஒரு விளையாட்டு, ஒரு நாடகம் எனும் பார்வையை அளிக்கிறது. தரவுகள், சாட்சியங்கள், பகுத்தறிவு அனைத்திற்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை என நாம் நம்ப விரும்புகிறோம். விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் கூட நம்மூரில் இந்த fetish உடனே இருக்கிறார்கள். அதனாலே இந்திய ஜனாதிபதி கூட வாயில் லிங்கம் வரவழைக்கும் பாபாவுக்கு பக்தராக இருந்தார். நம்முடைய சடங்குகள...